காங்கிரஸில் மேவானி, கன்னையா: தாக்கங்கள் என்ன?-– ச.கோபாலகிருஷ்ணன்பாரதிய ஜனதாக்கட்சி தலைமையிலான அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி தேசிய அளவில் கவனம் ஈர்த்த கன்னையா குமார் (Kannaiya Kumar) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார். பா.ஜ.க எதிர்ப்பு அரசியல் சக்திகளின் ஆதரவைப் பெற்ற மற்றொரு இளம் ஆளுமையான ஜிக்னேஷ் மேவானி (Jignesh Mewani) 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். குஜராத்தின் வட்காம் சட்டமன்றத் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏவான மேவானி காங்கிரஸில் தற்போது இணைந்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்க முடியாது என்பதால்தான் தற்போது கட்சியில் இணையவில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியத் தலைவராகச் செயல்பட்டவர் கன்னையா குமார். அவர், ஜவாஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும்கூட. பல்கலைக்கழக வளாகத்தில் அவர் ஒருங்கிணைத்த நிகழ்வு ஒன்றில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கன்னையா குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பிஹார் பேகுசராய் தொகுதியில் போட்டியிட்டு நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் கன்னையா. ஆயினும் அக்கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டுவந்தார். மறுபுறம் குஜராத்தில் பட்டியலினக் குடும்பத்தில் பிறந்தவரான ஜிக்னேஷ் மேவானி மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். உனாவில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக அவர் ஒருங்கிணைத்த பேரணி தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. ராஷ்ட்ரிய தலித் அதிகாரி மஞ்ச் என்னும் அமைப்பைத் தொடங்கிப் பட்டியலின மக்களின் நில உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து குரலெழுப்பிவருகிறார்.

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டபோது வட்காம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவளித்தது காங்கிரஸ். எனவே, மேவானி காங்கிரஸில் இணையப்போவது இயல்பான அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரம் இடதுசாரி அரசியல் பின்புலத்தைக் கொண்டவரான கன்னையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அவற்றின் வழியே பா.ஜ.கவுக்கு எதிராக ஒரே அணியில் நிற்கும் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே அடிப்படை சித்தாந்தத்திலும் தேர்தல் அரசியலிலும் இருக்கும் முரண்பாடுகளும் மோதல்களும் ஊடகங்களின் பேசுபொருளாகியிருக்கின்றன.

பா.ஜ.கவுக்கான ஒரே மாற்று காங்கிரஸ்தான் என்பதாலும் நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸைக் காப்பாற்றாவிட்டால் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பதாலும்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பதாகக் கூறியிருக்கும் கன்னையா அவர் ஏன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார் என்பதற்கான காரணத்தைக் கூறவில்லை. அதே நேரம், அக்கட்சிதான் தனக்கு அரசியல் பயிற்சியும் போராடும் வேட்கையையும் அளித்தது என்று நன்றியுடன் நினைவு கூர்ந்திருக்கிறார். பிஹாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலுவான செல்வாக்கு பெற்றிருக்கும் பேகுசராய் மாவட்டத்தில் பிஹத் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கன்னையா குமார். அங்கன்வாடி ஊழியரான தாய் மீனாதேவி உட்பட அவருடைய குடும்பமே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களால் நிரம்பியது. கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே கன்னையாவுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் தாண்டி அவர் காங்கிரஸில் இணைந்திருப்பது இடதுசாரிகளிடம் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் விளைவித்திருக்கிறது. கன்னையா இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் உண்மையாக இருந்தவரல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா விமர்சித்திருக்கிறார். அவர் தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விருப்பங்களுக்காகவே கட்சி மாறியிருப்பதாகவும் ராஜா கூறியிருக்கிறார்.

Jignesh Mewani

தனிநபர்களைவிட சித்தாந்தத்தை முதன்மைப்படுத்தும் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கன்னையாவின் செல்வாக்கின் மீதான மதிப்புடன் அவரை நடத்தியிருப்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பதைக் கட்சியின் பிழையாகப் பார்ப்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. ஆனாலும், இளைஞர்களை அதுவும் இயல்பிலேயே இடதுசாரிப் பின்புலத்தைக் கொண்டவர்களைக் கட்சிக்குள் தக்கவைக்கத் தவறுவதும் இளைஞர்களிடையே கட்சியின் செல்வாக்கு சரிந்துவருவதும் நாட்டின் பிரதான இடதுசாரிக் கட்சிகள் உடனடியாக முகம் கொடுக்க வேண்டிய தீவிரமான பிரச்சினை என்பதை இந்நிகழ்வு மீண்டும் ஒரு முறை உணர்த்தியிருக்கிறது.

மறுபுறம் கன்னையா காங்கிரஸின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டிருப்பது அக்கட்சியின் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்களைத் துணுக்குறச் செய்திருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டாலும் கட்சியின் முடிவுகளில் தன்னுடைய செல்வாக்கைத் தளர்த்திக்கொள்ளாத ராகுல் காந்தியின் சித்தாந்தப் பார்வை இடதுசாரிச் சிந்தனைக்கு நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த இணைப்பில் அவருக்குப் பெரும் பங்கிருப்பதாகப் பார்க்கப்படுகிறது. கன்னையாவின் இணைப்பானது அரசியலில் மையவாதக் கொள்கையையும் பொருளாதாரத்தில் தாராளவாத அணுகுமுறையையும் பின்பற்றிவந்த காங்கிரஸ் இன்னும் தீவிரமாக இடதுசாரி அரசியலுக்கு நெருக்கமாகச் செல்வதன் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், காங்கிரஸானது எப்போதுமே வலது, இடது, மையவாதம் என பல்வேறு சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவர்களை உள்ளடக்கிய கட்சியாகவே இருந்துவந்துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே தீவிர மதவாதிகளும், கடவுள் மறுப்பாளர்களும், சோஷலிஸ்ட்களும், மதநம்பிக்கையையும் ஆட்சியையும் பிரித்துப் பார்க்கும் நவீன-ஜனநாயகச் சிந்தனை கொண்டவர்களும் அக்கட்சியின் உறுப்பினர்களாக இருந்துவந்துள்ளனர். அதற்கு அப்பாற்பட்டும் இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்குமான உறவுக்கு நீண்ட தொடர்ச்சி உள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தீவிர சோஷலிஸ சார்புகொண்டவர். அதுவே மற்றொரு தலைவரான ராஜாஜி காங்கிரஸை விட்டு வெளியேறியதற்குக் கூறிய முதன்மைக் காரணம். இந்திரா காந்தியின் காலத்திலும் காங்கிரஸ் கட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவரான மோகன் குமாரமங்கலம் உள்பட இடதுசாரிப் பின்புலம் கொண்ட தலைவர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர். இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிறப்பித்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு ஆதரவளித்தது. 1973-ல் மோகன் குமாரமங்கலம் எழுதிய ‘காங்கிரஸில் கம்யூனிஸ்ட்கள்’ (Communists in Congress) என்னும் ஆய்வுக் கட்டுரையை காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி மேற்கோள் காட்டியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியாக சுதந்திர இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்திருப்பதோடு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அரசியல் செல்வாக்கைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் 2014 மக்களவைத் தேர்தலிலிருந்து தொடர்ச்சியாகப் பல தேர்தல்களில் தோல்வியடைந்துவருகிறது. தேசிய அளவிலும் மாநிலங்களிலும் அதன் வாக்கு வங்கி கடுமையாகச் சரிந்துவருகிறது. காங்கிரஸுக்குள் இளைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்பதும் இளம் வாக்காளர்களிடையே அக்கட்சியின் ஆதரவுத் தளம் மிகக் கடுமையாக சரிந்துவிட்டதுமே தொடர் தோல்விகளுக்கான முதன்மையான காரணங்களாகக் கூறப்பட்டுவந்தன. இப்போது கட்சி அரசியலைத் தாண்டி ஆழமான சித்தாந்தப் பின்புலத்தை வெளிப்படுத்தியதன் வாயிலாக தேசிய அளவில் கவனம் ஈர்த்த இவ்விரு இளைஞர்களும் காங்கிரஸில் சேர்ந்திருப்பது கட்சியானது சீர்திருத்தப் பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதற்கான அழுத்தமான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

வரும் ஆண்டுகளில் கன்னையா, மேவானி இருவருக்கும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படக்கூடும். அவர்கள் அவற்றில் வெல்லவும் கூடும். கட்சியிலும் அவர்களுக்கு முக்கியப் பதவிகள் அளிக்கப்படலாம். ஆனால், இவை எல்லாம் அவர்களின் தனிநபர் செல்வாக்கு அதிகரிப்பதைத் தாண்டிக் கட்சிக்கும் அவர்கள் முன்னிறுத்தும் பாஜகவுக்கு எதிரான சித்தாந்த அரசியலுக்கும் எப்படிப் பங்களிக்கப்போகின்றன என்பதைப் பொறுத்தே இந்த இணைப்புகளின் முக்கியத்துவத்தை மதிப்பிட முடியும்.

-இந்து தமிழ்
2021.09.30

Courtesy: chakkaram.com

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...