‘காணாமல் போனோர் தொடர்பில் என்னுடன் எவருமே பேசியதில்ல’ – வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ்

டக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வி சுகாதாரம் விவசாயம், மீன்பிடி, கிராமிய உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கைத்தொழில் துறைகளை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பல இக்காலங்களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மாகாணசபை செயற்படாத நிலையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் திணைக்களங்கள் அமைச்சர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மக்களுடன் மிக நெருக்கமாக செயல்படும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் தற்போதைய வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், சிறந்த ஆளுமை உடையவர். யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு மீள கட்டியெழுப்பப்பட்டு வரும் வடமாகாணம் பல்வேறு துறை அபிவிருத்திகளை இலக்காகக் கொண்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் உள்ள நிலையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்து அதன் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள், வாழ்வாதாரத்தில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.

கேள்வி: வட மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கூறுவீர்களா?

பதில்: வடக்கின் அபிவிருத்தி ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக இக் காலங்களில் கல்வி, சுகாதாரம், கிராமிய உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு இந்த வருடத்திற்கான நிதியைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளோடு ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புதல், குறிப்பாக கணிதம்,விஞ்ஞானம்,தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். அந்த வகையில் குறிப்பிட்டளவு ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.  90 ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 200க்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் ஒரு மாத காலத்தில் அந்த நியமனங்கள் வழங்கப்படும் என கூறமுடியும்.

அதிகமாக பின்தங்கிய பகுதிகளில் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புதல், பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

கேள்வி: வடக்கில் சுகாதாரத் துறையில் நிலவும் குறைபாடுகள், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்குவீர்களா?

பதில்: குறிப்பாக வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் ஆளணிப் பற்றாக்குறை,  டாக்டர்கள் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த வருடத்திற்கான திட்டங்களில் அவை உள்வாங்கப்பட்டுள்ளன.

வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஜனாதிபதியுடனும் அது தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அடுத்து வரும் சில மாதங்களில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

கேள்வி:  வட மாகாணத்தில் தொடர்ச்சியாக காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட முடியுமா?

பதில்: ஜனாதிபதியும் பிரதமரும் நீர்ப்பாசன அமைச்சரும் அதற்கான ஒரு விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். இந்த மாதத்தில் அந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் 80 வீதமான மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு அதன் மூலம் தீர்வு கிடைக்கும். அதே போன்று அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் அமைச்சினூடாக வடமராட்சியில் குடிநீர் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்கள் மூலம் யாழ்.குடா நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்கள் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

அத்துடன் கிளிநொச்சிக்கு நீர் வழங்கும் திட்டம், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களுக்கும் நீர் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டம் தொடர்பில் பேசப்பட்டதே அதன் தற்போதைய நிலை என்ன?

பதில்: இல்லை. அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதேவேளை தீவகப் பகுதிகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் அந்தந்த பகுதியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கின்றதா?

பதில்: அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களில் ஒத்துழைப்பு கிடைக்கின்றது என்பதை குறிப்பிட முடியும்.

கேள்வி: குறிப்பாக வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தென் மாகாணத்திற்கு தெரியாத நிலையே காணப்படுகிறது. அது தொடர்பில் நீங்கள் கூற விளைவதென்ன?

பதில்: அதற்கு முக்கிய காரணம் வடமாகாணத்தின் இத்தகைய செயற்திட்டங்கள் தொடர்பில் தேசிய ஊடகங்கள் போதியளவில் வௌிப்படுத்துவதில்லை. குறிப்பாக எனது ஊடகப்பிரிவு மூலம் அவ்வப்போது அனைத்து செய்திகள் தகவல்களும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் அவை எந்தளவு பிரசித்தப்படுத்தப் படுகின்றன என்பது தெரியவில்லை.

கேள்வி: வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகள் தொடர்பில் தெரிவிக்க முடியுமா?

பதில்: வடக்கைப் பொறுத்தவரை சுற்றுலாத்துறை, விவசாயம், கைத்தொழில் துறை, மீன்பிடித்துறை போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறான முதலீடுகள் பெருமளவு வேலைவாய்ப்புகளுக்கும் சந்தர்ப்பமாக அமையும். அவற்றிற்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமாகின்றன.  பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் கொண்டுவரப்பட வேண்டும் அதற்கான தேவைகள் அதிகமாக வடக்கில் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் வடக்கில் முதலீடுசெய்வதற்கு முன்வருவார்களேயானால் அவர்களும் அபிவிருத்தி மற்றும் முதலீடுகளில் பங்களிப்பு செய்ய முடியும் அவ்வாறானவர்களை நாம் வரவேற்பதோடு அவர்கள் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

கேள்வி: பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா?

பதில்: ஆம்! நாம் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் அந்த அபிவிருத்தி திட்டங்களை விரைவாக முன்னெடுக்ககுமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் உல்லாசப் பிரயாணிகள்  வருவதற்கு சுமார் ஒன்பது மணித்தியாலங்களை செலவிட வேண்டியுள்ளது.
ஏற்கனவே விமான சேவைகள் நடைபெற்று அவை நிறுத்தப்பட்டுள்ள  நிலையில் மீண்டும் அதை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

கேள்வி: வடக்கில் தீவகப் பகுதிகளில் சீனாவின் மின் உற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே? அது தொடர்பில் தெளிவு படுத்துவீர்களா?

பதில்: சீனா தனித்து அவ்வாறு மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்திட்டங்களின் கீழ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களில் கேள்வி மனு கோரலில் சீனாவும் உட்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

கேள்வி: வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில், குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?அது தொடர்பில் அவர்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்களா?

பதில்: இல்லை அவ்வாறான பேச்சு வார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.எவரும் என்னிடம் வந்து பேசவுமில்லை. அது தொடர்பில் துறை சார்ந்த அமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கேள்வி: வடமாகாண சபை இயங்காத நிலையில் மக்களுக்கான சேவைகள், அதற்கான  நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன?

பதில்: வடமாகாண சபை செயற்படாத நிலையில் மாகாண சபை மற்றும்  அமைச்சுக்கள் ரீதியான சகல நடவடிக்கைகளையும் ஆளுநரே மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது பாரிய பொறுப்பாக இருந்தாலும்  திட்டங்களை சீராக  முன்னெடுக்க முடிகின்றது.

கேள்வி: நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகித்தபோது உங்கள் கடமைகள், செயற்பாடுகளுக்கு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டது, இங்கு அவ்வாறான நிலை காணப்படுகின்றதா?

பதில்: உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர். மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லை.

கேள்வி: காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீண்ட கால பிரச்சினைகளாக உருவெடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் உங்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா? நீங்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக செயற்பட்ட காலத்தில் சுமார் 12,500 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு வழி வகுத்தமை தொடர்பில் நாம் அறிவோம். அந்த வகையில் மேற்படி விவகாரம் தொடர்பில் தங்களின் பங்களிப்பு என்ன? புனர்வாழ்வளிக்கப்பட்ட அவர்கள் நேரடி புலி உறுப்பினர்கள். எனினும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அவ்வாறு அல்ல. ஏதாவது வகையில் அவர்களுக்கு உதவியவர்களே. அந்த நிலையில் அவர்களின் விடுதலை தொடர்பில் உங்களது பங்களிப்பு என்ன? உங்களால் ஏதாவது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதா?

பதில்: தொடர்பில் இதுவரை எவரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அந்த விடயங்கள் தொடர்பில் நான் அறியாமல் ஒன்றும் செய்ய முடியாது. என்னிடம் எவராவது வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கான கவனத்தை செலுத்த முடியும்.

கேள்வி: அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள்  அரசியல் கைதிகள் அல்ல என்ற ஒரு கூற்றை அரசாங்கம் தெரிவிக்கின்றது. சுமார் இருபத்தைந்து வருடங்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள  இந்த கைதிகளையும் முன்பு செய்தது போல் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யலாமே?

பதில்: இந்த இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. யுத்தத்தின்போது சுமார் மூன்று இலட்சம் மக்கள் இராணுவத்தினரின் பகுதிக்கு வரும்போது அவர்கள் கிட்டத்தட்ட அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள். அந்த வகையில்  அவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதியிடம் அந்த நேரம் நாம் சிபாரிசுகளை முன்வைத்திருந்தோம். அவர் அந்த சிபாரிசை ஏற்றுக்கொண்டு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். சரணடைந்தவர்களுக்கான ஒரு செயற்பாடாக அது காணப்பட்டது.

எனினும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். அதனால் இந்த விடயத்தை நீதிமன்றத்தின் ஊடாக கையாள முடியும். அதனால் தான் அவர்கள் புனர்வாழ்வு என்ற விடயத்தில்  உள்ளடக்கப்படவில்லயென நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அது தொடர்பில் உங்களால் ஏதாவது பரிந்துரைகளை முன் வைக்க முடியுமா?

பதில்: அதைத்தான் நான்  கூறுகின்றேன்.  சரணடைந்தவர்களை எவ்வாறு பராமரிப்பது அல்லது புனர்வாழ்வளிப்பது என்பது ஒரு விடயம். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்பது சட்டத்திற்கு உட்பட்ட விடயம். இது சட்டத்தின் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

கேள்வி: காணாமல்போனவர்கள் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: அது தொடர்பில் இதுவரை என்னிடம் எவரும் பேசவில்லை. எனினும் நான் அரசாங்க அதிபராக பதவி வகித்த காலத்தில் காணாமல் போன சிறுவர்களை தேடி அலைந்த பெற்றோர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான பிரிவு ஒன்றை ஏற்படுத்தி செயற்படுத்தினோம்.

அதன் ஊடாக நாம் செயற்பட்டு  சுமார் 300 சிறுவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தோம். அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி க்கும் அந்த விடயம் தெரியும். காணாமல் போன பலரை அதன் ஊடாக நாம் குடும்பங்களுடன் ஒன்றிணைக்க முடிந்தது.

தற்போது காணாமற்போனோர் சம்பந்தமாக எவரும் என்னிடம் பேசுவதில்லை. எனினும் காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மேற்கொள்ளும் செயற்பாடாகும். அது ஒரு அரசியல் நோக்கமாகவும் காணப்படுகிறது. உண்மையில் அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள்உரிய  தரப்போடு பேச வேண்டும். அது இதுவரை நடைபெறவில்லை.

கேள்வி: வடக்கில் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி கூறுவீர்களா?

பதில்: ஆம். அது தொடர்பில் நான் நேற்றைய தினமும் திறைசேரியின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன்போது ஒரு தொகை நிதிக்கான இணக்கம் காணப்பட்டது.

கேள்வி: தீவகப்பகுதிகளுக்கான படகுச் சேவைகளை முறையாக நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா?

பதில்: ஜனாதிபதியிடமும் இந்த விடயத்தை நான் முன் வைத்துள்ளேன். பழுதடைந்த படகுகளை திருத்தி அரசாங்கத்தின் ஊடாக படகுச் சேவையை நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் யோசனையையும் நாம் ஒரு மாதத்திற்கு முன்பு சமர்ப்பித்துள்ளோம். நேற்றைய தினம் அது தொடர்பிலும் திறைசேரியின் செயலாளரிடம் பேசியுள்ளேன்.

கேள்வி: வடக்கில் சொந்த இடங்களில் குடியேறுவது தொடர்பான காணி பிரச்சினைகள் உள்ளன. காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை எந்தளவில் உள்ளது.

பதில்: பாதுகாப்பு அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தற்போது 8,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: வடக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை போன்ற கைத்தொழில் துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாமே?

பதில்: அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் சுமார் 25 ஏக்கர் காணி திருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. முதலீட்டாளர்களின் வருகையே எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி – நாட்டின் அத்தியாவசிய பொருட்களான உளுந்து, மஞ்சள் என்பன இறக்குமதி தடைசெய்யப்பட்டுள்ளன. எனினும் இவற்றின் விளைச்சல்போதுமானதாகவும் இல்லை. குறிப்பாக வடக்கில் இவற்றை செய்கை பண்ணுவதற்கான ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றதா?

பதில்: – அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வருடத்திலும் சாத்தியமானதாக இவை முன்னெடுக்கப்பட்டன.

கேள்வி: தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய இந்து சமய புராதன இடங்கள் கைப்பற்றப்படும் சம்பவங்கள் இன நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. அது தொடர்பில் அண்மையில் சுமந்திரன் எம் பி யும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தார். அந்த விடயம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அது தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விடயங்கள் அரசாங்கமே அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். எனினும் அது தொடர்பில் எனக்கு எவரும் அறிவிக்கவும் இல்லை.

கேள்வி: வடமாகாண மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது நீங்கள் கூற முனைவது என்ன?

பதில்: வடக்கு மக்களிடம் காணப்படும் மதுபானம், போதைவஸ்து, இளம் வயதினரிடையேயான தற்கொலை முயற்சிகள் என்பவற்றை குறிப்பிட முடியும். அவற்றிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும் சிந்தனை மாற்றம் அதற்கு மிக முக்கியமானது. அதிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் தான் அபிவிருத்தியின் பயன்களை அவர்களால் அனுபவிக்க முடியும்.

கேள்வி: தற்கொலைகளுக்கு முக்கியமான காரணமாக எதை குறிப்பிடுகின்றீர்கள்?

பதில்: அது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த முடிவுகள் வெளியானதும் அதற்கான காரணங்களை கண்டறிய முடியும். எவ்வாறெனினும் அதீதமான கையடக்க தொலைபேசிப் பாவனை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தல், பாடசாலை ரீதியில் எதிர்கொள்ள நேரும் மன அழுத்தங்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையிலான புரிந்துணர்வு இல்லாமை போதை வஸ்து பாவனை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். என்றாலும் தற்போதைக்கு அதற்கான முக்கிய காரணம் என்ன என்பதை எம்மால் கூற முடியாதுள்ளது.

கேள்வி: யுத்தத்திற்குப் பின்னர் கணவனை இழந்த, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் கூறமுடியுமா?

பதில்: யுத்தத்தினாலோ அல்லது இயற்கையாகவோ கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களை நாம் இனங்கண்டு அவர்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவது தொடர்பில் தகவல்களை திரட்டி வருகின்றோம். அவ்வாறான 65,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.ஏற்கனவே சில குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்.

கேள்வி: வடக்கில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன என்பதை கூற முடியுமா?

பதில்: முதலீடுகள் நடைபெறவேண்டும். அதற்காக நாம் முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம். சுற்றுலாத்துறை, மீன்பிடித்துறை, விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

கேள்வி:கல்வித்துறை வளர்ச்சியில் வடமாகாணம் எத்தகைய நிலையில் உள்ளது.

பதில்: ஆம்! வடமாகாணம் அதில் 9 ஆவது இடத்திலேயே உள்ளது. அதற்கு காரணம் வளங்கள் சமமாகப் பகிரப்பட வில்லை. குறிப்பாக நாம் கிராமிய புறங்களில் வளங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் ஆசிரியர்கள் இடமாற்றம்,புதிய ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. யுத்தம் காரணமாக கல்வி செயற்பாடுகள் பின்தங்கி விட்டன.என்று இனியும் நாம் காரணம் கூறமுடியாது. யுத்தம் முடிவுற்று பத்து வருடங்கள் முடிவடைந்து விட்டன. நாம் மிக வேகமாக முன்னேற வேண்டியுள்ளது. அதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.

கேள்வி: தெற்கு மக்கள் வடக்கு மக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற நிலையும் வடக்கு மக்கள் தெற்கு மக்களை பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற நிலை காணப்படுகின்றதே? அது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இந்த விடயத்தில் ஊடகங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. இங்கு வரும் ஊடகவியலாளர்களும் குறிப்பிட்ட சில மக்களிடம் கருத்துக்களைப் பெற்று அதனையே வெளியிடுகின்றனர். வடக்கிற்கு வருகின்ற எனது நண்பர்கள் கூட தொலைபேசி மூலம் என்னோடு தொடர்பு கொண்டு அந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு உதவுங்கள் என்ற வகையிலேயே தெரிவிக்கின்றனர். ஆனால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உள்ளிட்ட ஏனைய விடயங்களை அறிவதில்லை அல்லது வெளியிடுவதில்லை. என்றுதான் கூறவேண்டும்.

கேள்வி: மாகாண சபைகள் குறிப்பாக வடக்கு கிழக்குக் காகவே அறிமுகப்படுத்தப்பட்டன.அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன. மாகாண சபைகள் அவசியம்தானா என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அது சம்பந்தமாக நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில்: மாகாண சபைகளும் மக்களுக்கான சேவையையே மேற்கொள்கின்றன. உண்மையில் அது மக்கள் சேவை பெற்றுக் கொள்ளும் ஒரு இடமாக இருக்க வேண்டும்.வெறும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் இடமாக மட்டும் அது இருக்கக் கூடாது அது எனது கருத்து.

கேள்வி: யுத்தத்தினால் புலம்பெயர்ந்த மக்கள் இன்னும் எந்த அளவில் வெளிநாடுகளில் உள்ளனர் என்பதை கூற முடியுமா?

பதில்: அவ்வாறான ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களுக்கு வரவேண்டி உள்ளனர்.

கேள்வி: அபிவிருத்தி உள்ளிட்ட உங்களது செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புகள் போதியளவு கிடைக்கின்றதா?

பதில்: ஆம் வட மாகாணத்தைப் பொறுத்தவரை அவர்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் எமக்கு அதிகமாக கிடைக்கின்றன. அவர்கள் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றார்கள்.

கேள்வி: கிழக்கு மாகாணத்தில் நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது அதிகமான அழுத்தங்களுக்கு உட்பட்டதை காணமுடிந்தது. அங்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு போதியளவு கிடைத்ததா?

பதில்: உண்மையில் வடமாகாணத்தைப் போல் அல்ல. அங்கு உண்மையிலேயே அதிகமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அரச அதிகாரிகளாக இருக்கட்டும் அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. அது எமது மக்களுக்கான செயற்பாடுகளுக்கு பாரிய அழுத்தமாகவே காணப்பட்டது. வடக்கில் அவ்வாறு கிடையாது இவர்கள் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் என்பதை கூற முடியும்.

நேர்காணல்:
கே. அசோக்குமார்,
லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...