சுவாசம் கேட்கும் தேசம்! – இது யார் தவறு? தி.முருகன்

“கொரோனா இரண்டாவது அலை தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் நமது பொறுமையையும், வலி தாங்கும் திறனையும் சோதிக்கிறது’’ என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. “கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசன் கிடைப்பதை உறுதி செய்வதும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதும் மாநில அரசுகளின் பொறுப்பு’’ எனப் பேசுகிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். “இந்த மரணங்களை யாராலும் தடுக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிறது. அவர்கள் செத்துப்போகத்தானே வேண்டும்’’ என்கிறார் மத்தியப்பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேல். “யாரும் பயப்பட வேண்டாம். கொரோனா மிகச் சாதாரணமான நோய்தான்’’ என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா.

 

 

மருத்துவமனை வாசல்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகளிடமும், தங்கள் அன்புக்குரியவர்களை பலி கொடுத்தவர்களிடமும் இவர்கள் இப்படிப் பேசியிருந்தால், கிடைக்கும் பதில்கள் வேறாக இருந்திருக்கும். கொரோனா முதல் அலையின்போது மக்கள் இறந்ததற்கு வேண்டுமானால் வைரஸைக் குற்றம் சொல்லலாம். இந்த இரண்டாம் அலையில் மக்கள் பலர் மடிவதற்கு மத்திய அரசின் அலட்சியம் மட்டுமே காரணம். திருடர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக இருக்கும் நீதிமன்றம், ‘‘திருடுங்கள், பிச்சையெடுங்கள். எதைச் செய்தாவது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்ஸிஜன் கொடுங்கள்’’ என மத்திய அரசுக்குச் சொல்கிறது. நிலைமையின் தீவிரத்தை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது; ஆட்சி செய்பவர்கள் உணரவில்லை.

டெல்லி, உத்தரப்பிரதேசம் எனப் பல மாநில மருத்துவமனைகளில் பார்க்கும் காட்சிகள், தேசத்தின் ஆன்மாவை உலுக்குகின்றன. ஸ்ட்ரெச்சரில் நோயாளிகளை அழைத்துக் கொண்டு வந்து பல மணி நேரம் காத்திருக்கிறார்கள் உறவினர்கள். மருத்துவமனைகளில் இடமில்லை. “மூச்சுத்திணறலில் ஆக்ஸிஜனுக்காகக் கெஞ்சியபடி அழுகிறார்கள் பலர். என் கண்ணெதிரிலேயே ஐந்தாறு பேர் இறந்துவிட்டார்கள்’’ என்று தழுதழுத்த குரலில் செய்தி சொல்கிறார், ஸ்கை நியூஸ் சேனலின் அலெக்ஸ் கிராஃபோர்ட். இந்தியா எப்படிப்பட்ட துயரத்தில் இருக்கிறது என உலகத்துக்குச் சொன்ன செய்தி அது.

ஒட்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஆக்ஸிஜன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது. சிகிச்சையில் இருப்பவர்களையும் ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இதற்குமேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என டிஸ்சார்ஜ் செய்கின்றன பல மருத்துவமனைகள். 400, 500 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் நகரங்களுக்காவது அவர்களைக் கூட்டிச் சென்று காப்பாற்றலாம் எனத் துடிக்கிறார்கள் உறவினர்கள். ஆக்ஸிஜன் வசதிகொண்ட ஆம்புலன்ஸ்களுக்கும் கடும் தட்டுப்பாடு. வீட்டில்வைத்து பார்த்துக்கொள்ளலாம் என்றாலும், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை. பலர் வாழ்வில் அந்த அதிசயம் நிகழ்வதில்லை.

இறப்பவர்களுக்குச் சுடுகாட்டில் தகன மேடை கிடைப்பதற்கும் பற்றாக்குறை. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களில் பூங்காக்களையும் மைதானங்களையும் தற்காலிகச் சுடுகாடுகளாக மாற்றியிருக்கிறார்கள்.

சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அது துயரம். சிகிச்சை கிடைக்காமலும், ஆக்ஸிஜன் மறுக்கப்படுவதாலும் மக்கள் இறப்பதை எதைச் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. கொரோனாவின் முதல் அலை இந்தியாவில் கட்டுக்குள் வந்தபோது, நாம் கொரோனாவை வென்றுவிட்டதாகக் கொண்டாட்டங்கள் நடத்தினோம். பிரதமர் தொடங்கி எல்லோரும் அதைச் சாதனையாகப் பேசினார்கள். எந்த அறிவியல் ஆய்வும் இல்லாமலேயே, இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் சிறப்பு பற்றி பெருமிதப்பட்டோம். ‘உலகெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை வீரியமாகத் தாக்குகிறது. எச்சரிக்கையாக இருங்கள், முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள்’ என நிபுணர்கள் சொன்னதை அரசும் மக்களும் பொருட்படுத்தவில்லை. விளைவு..? கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமியாகத் தாக்கும்போது, மக்கள் கையறுநிலையில் பரிதவிக்கிறார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகள் என்று எல்லா நாடுகளுமே கொரோனா முதல் அலை தாக்கியபோதே கட்டமைப்புகளில் கவனம் செலுத்தின. மருத்துவமனைகளை விரிவுபடுத்துவது, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது, மருந்துகளைப் போதுமான அளவு உற்பத்தி செய்வது என முன்னேற்பாடுகளைச் செய்தன. இதனால்தான் அடுத்தடுத்த தாக்குதல்களின்போது உயிரிழப்புகளை கணிசமாகக் குறைக்க முடிந்தது.

ஒட்சிசன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஒட்சிசன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது

இந்தியாவிலும் இதைச் செய்ய நிறைய அவகாசம் இருந்தது. சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2020, நவம்பர் மாதம், ‘ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதில் கவனம் செலுத்துங்கள்’ என மத்திய அரசை எச்சரித்தது. பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நோயாளிகள் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. மார்ச் 2-ம் தேதி உலக சுகாதார நிறுவனம், ‘கொரோனா சூழல் காரணமாக ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும், கவனமாக இருங்கள்’ எனப் பல நாடுகளுடன் சேர்த்து இந்தியாவையும் எச்சரித்தது.

எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு… பல மருத்துவமனைகளில் ஒட்சிசன் இல்லாமல் கொரோனா நோயாளிகள் இறந்துகொண்டிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசத்தில் ஒட்சிசன் சிலிண்டர்களைக் கும்பலாகச் சேர்ந்து கொள்ளையிடும் சம்பவங்கள் நடக்கின்றன. தங்கத்தைவிட மதிப்புமிக்கதாக ஆக்ஸிஜன் மாறியிருக்கிறது. ஒட்சிசன் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டிய நிலை.

இந்தியா மூச்சுத்திணறுவது ஏன்? இந்தியாவில் ஒரு நாள் திரவ ஒட்சிசன் உற்பத்தி 7,127 மெட்ரிக் டன். கொரோனாவுக்கு முன்புவரை இதில் வெறும் 800 மெட்ரிக் டன் மட்டுமே மருத்துவமனைகளின் தேவையாக இருந்தது. மீதி, தொழிற்சாலைகளுக்குத் தரப்படுகிறது. பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் ஒட்சிசன் அத்தியாவசியத் தேவை.

2021 பிப்ரவரியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமான பிறகு, ஒட்சிசன் தேவையும் படிப்படியாக அதிகரித்தது. இதை மத்திய அரசு உணரவே இல்லை. ‘இந்தியாவில் ஒட்சிசன் தட்டுப்பாடு இல்லை’ எனக் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் சொன்னது. மருத்துவத் தேவைகளுக்காக சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஒட்சிசன் ஸ்டாக்கில் இருப்பதாகவும் சொன்னது. அந்த நாளில் இந்தியாவில் 12.64 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருந்தார்கள். ஏப்ரல் 26 நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 28 லட்சம். இதனால் தினசரி ஒட்சிசன் தேவை 8 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதாவது, இந்தியாவின் ஒட்டுமொத்த தினசரி உற்பத்தியைவிட, தினசரித் தேவை அதிகமாகிவிட்டது.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொழிற்சாலைகளின் ஒட்சிசன் பயன்பாட்டுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. ‘மருந்து நிறுவனங்கள், அணுமின் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு மட்டுமே திரவ ஒட்சிசன் தர வேண்டும்’ எனக் கட்டுப்பாடு விதித்து, மற்ற எல்லா ஒட்சிசனையும் மருத்துவத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டது. ஏப்ரல் 25-ம் தேதி தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு ஒட்டுமொத்தமாகத் தடைவிதித்து, எல்லா திரவ ஒட்சிசனும் மருத்துவத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தியில் 8,500 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தப்பட்டது. என்றாலும், தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேவை இன்னும் அதிகரிக்கும். அது நிலையை இன்னும் சிக்கலாக்கும். அதனால், அவசரமாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஒட்சிசனை இறக்குமதி செய்யவிருக்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் ஒட்சிசன் உற்பத்தியும், தேவையும் ஒரே சீராக இல்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய எட்டு மாநிலங்களில்தான் 80 சதவிகித ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என தேவை அதிகம் உள்ள இடங்களில் உற்பத்தி இல்லை.

ஒட்சிசனைக் கொண்டு செல்வதும் பிரச்னை. இதற்கென பிரத்யேகமாக உள்ள க்ரையோஜெனிக் டேங்கர் லாரிகளில்தான் கொண்டு செல்ல வேண்டும். அவை மணிக்கு 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. விபத்தில் சிக்கினால் ஆபத்து என்பதால், இரவு நேரங்களில் இயக்க முடியாது. இந்தியா முழுக்க இப்படி 1,172 டேங்கர்கள் மட்டுமே உள்ளன. அதனால் நைட்ரஜன் மற்றும் ஆர்கன் டேங்கர் உள்ளிட்ட இதர டேங்கர்களையும் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல ஏற்றதாக மாற்றிவருகிறது அரசு.

ஒட்சிசனை எடுத்துச் சென்று சேமித்து வைப்பதும் சவாலாக உள்ளது. இவற்றை அடைத்து வைக்கும் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக இருந்தபோது, சிலிண்டர்களை அதிகமாகத் தயாரிக்கச் சொல்லி அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா தொற்று குறைந்ததால் சிலிண்டர் தயாரிப்பு மீண்டும் குறைந்துவிட்டது. இப்போது தேவை பத்து மடங்கு அதிகமாகியிருக்கிறது. அதனால் 1.27 லட்சம் சிலிண்டர்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது அரசு. அவை உடனடியாகத் தயாராகாது என்பதே பிரச்னை.

‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என கொள்ளையடிக்கிறார்கள் பலர். 4,500 ரூபாயாக இருந்த 100 லிட்டர் ஒட்சிசன் சிலிண்டரின் விலை இப்போது 8,000 ரூபாய். முன்பு இதை 200 ரூபாய்க்கு நிரப்பிக் கொடுத்தவர்கள் இப்போது 800 ரூபாய் வரை கேட்கிறார்கள்.

உயிர் வாழும் உரிமையை நமக்கு வழங்குகிறது அரசியல் சட்டம். கண்ணியமாகச் சாகும் உரிமையை வழங்குகிறது நம் மரபு. வருமுன் காக்காத அரசு இருக்கும்போது, இந்த இரண்டும் பலருக்கு வாய்ப்பதில்லை.

*******

அலட்சியம் செய்தனவா மாநில அரசுகள்?

ஒரு மருத்துவமனையின் தேவைக்கு ஏற்றபடி குறைந்த அளவில் ஒட்சிசன் தயாரித்துக் கொடுக்கும் Pressure Swing Adsorption oxygen generator வசதிகளை ஏற்படுத்த முடியும். பெரிய செலவு பிடிக்காத இது போன்ற ஒட்சிசன் உற்பத்திக்கூடங்களை அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் நிறுவியிருந்தால், உயிரிழப்புகள் நிச்சயம் தடுக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தாக்கியபோதே, நாடு முழுக்க 162 மருத்துவமனைகளில் இப்படி ஒட்சிசன் உற்பத்திக்கூடங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.201.58 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபரில்தான் இதற்கு டெண்டர் விட்டது. இவற்றில் இதுவரை 33 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. மீதி இந்த ஏப்ரல், மே மாதங்களில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. “மாநில அரசுகளின் அலட்சியமே இதற்குக் காரணம்’’ என பா.ஜ.க தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், “டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தாமதம் செய்தன” என மாநில அரசுகள் குற்றம்சாட்டுகின்றன. உத்தரப்பிரதேசத்துக்கு இதில் 14 உற்பத்திக்கூடங்கள் ஒதுக்கப்பட்டன. லக்னோ சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் மட்டும் ஒன்றே ஒன்று நிறுவப்பட்டுள்ளது. “நாங்கள் இடம் ஒதுக்கித் தந்தும் அந்த நிறுவனங்கள் வந்து கருவியை நிறுவவில்லை’’ என உ.பி மருத்துவத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதேநிலைதான் பல மாநிலங்களிலும் உள்ளது. டெண்டர் எடுத்த மூன்று நிறுவனங்களில் ஒன்று விதிமீறலில் ஈடுபட்டதால், சமீபத்தில் ‘பிளாக்லிஸ்ட்’ செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், “மேலும் 551 மாவட்ட மருத்துவமனைகளில் இந்தக் கருவிகள் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து நிறுவப்படும்’’ என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

தேவை ஏன் அதிகரித்தது?

தீவிர தொற்று இருப்பவர்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. கொரோனா முதல் அலையின்போது இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கே ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இந்த முறை 54.5 சதவிகிதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இப்போது இந்தியாவில் 28 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இவர்களில் ஐந்து முதல் 10 சதவிகிதம் பேர் ஒட்சிசன் தேவை உள்ளவர்களாக மாறுகின்றனர். மே மாத மத்தியில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்போது தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தேசம் முழுக்க 10 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் 48 லட்சம் நோயாளிகள் நாடு முழுக்க இருக்கக்கூடும். எனவே, இப்போது இருப்பதுபோல இரண்டு மடங்கு ஒட்சிசன் தேவை அதிகரிக்கலாம். அதை கணித்து இப்போதே திட்டமிட வேண்டும்.

பாதுகாப்பாக இருக்கிறதா தமிழகம்?

வடமாநிலங்களின் அதிரவைக்கும் காட்சிகளைப் பார்க்கும் பலரின் மனதில் எழும் முதல் அச்சம், ‘தமிழகத்திலும் இது போன்ற சூழல் வந்துவிடுமா?’ என்பதுதான். ‘தமிழகமும் கேரளமும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் உள்ளன’ என்பதே நம்பிக்கை அளிக்கும் செய்தி.

“தமிழகத்தின் ஒரு நாள் திரவ ஒட்சிசன் உற்பத்தி 400 மெட்ரிக் டன். இதில் மாநிலத்தின் தேவை 240 மெட்ரிக் டன்’’ என ஏப்ரல் 21 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னார். நான்கு நாள்கள் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தின் தேவை இப்போது 310 மெட்ரிக் டன் ஆகிவிட்டது. விரைவில் 450 டன்னாக தேவை உயரும்’ என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்திலிருந்து 80 மெட்ரிக் டன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எழுதப்பட்ட கடிதம் அது. புதுச்சேரியில் 150 மெட்ரிக் டன் தினசரி உற்பத்தியாகிறது. தேவை அதிகரிக்கும்போது தமிழகம் இதைப் பெற முடியும்.


உற்பத்தியை அதிகரிப்பதுபோலவே முக்கியமானது, ஒட்சிசனைச் சேமித்துவைக்கும் கொள்கலன்களின் திறனை அதிகரிப்பது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதை முன்கூட்டியே திட்டமிட்டு அதிகரித்துவிட்டது. தமிழகம் முழுக்க 1,200 மெட்ரிக் டன்னைச் சேமித்துவைக்கும் வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேமிப்பு வசதி 346 மெட்ரிக் டன்னிலிருந்து 882 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுரை, அரசு இராசாசி மருத்துவ மனையின் கொள்கலன் வசதியைத் தனது முயற்சியில் இரண்டரை மடங்குக்கும் அதிகமாக உயர்த்திய வெற்றிக்கதையை சமீபத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பகிர்ந்திருந்தார். 400 படுக்கைகளுக்கு மட்டுமே இருந்த ஆக்ஸிஜன் வசதி இதன் மூலம் 1,100 படுக்கைகளுக்குக் கிடைத்திருக்கிறது. சென்னையில் ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளிலும், பல மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இதேபோல செய்யப்பட்டுள்ளன.

எனினும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒட்சிசன் கிடைப்பதில் பல நகரங்களில் பிரச்னை உள்ளது. இதையும் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை.

 ஏப்ரல் 28, 2021

Source: chakkaram.com

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...