கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனியாகாது! அரசாங்கம் அளித்துள்ள விளக்கம் -சங்கீர்த்தன்


See the source image 

 Photo: Colombo Port City Project

சீனாவின் உதவியுடன் கொழும்பில் உருவாக்கப்பட்டு வரும் ‘துறைமுக
நகரம்’ குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி. என்பன
பலவிதமான பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டுவரும் சூழலில், அதுபற்றி
அரசாங்கத்தின் விளக்கத்தை நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட்
கப்ரால் நிதியமைச்சில் ஏப்ரல் 16ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பில் முன்வைத்துள்ளார். அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:
கொழும்பு துறைமுக நகரம் ஒருபோதும் சீனாவின் காலனியாகக்
கொண்டுவரப்படமாட்டாது. அதற்கு நீதிமன்றமும் அனுமதி வழங்காது.
அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்பட வேண்டிய தேவை
அரசாங்கத்துக்குக் கிடையாது. நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சட்டத்துக்கு உட்பட்டதாகவே
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இருக்கும். குறுகிய அரசியல்  நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தவறான குற்றச்சாட்டுகளை சில அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர்.அவர்கள் அதை நிறுத்த வேண்டும்.


கொழும்பு துறைமுக நகரத்துக்கான செயற்திட்டம் 2014 முதல்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2018 ஜனவரி 3ஆம் திகதி துறைமுக நகரம்
தொடர்பிலான நடவடிக்கைகளை உள்ளடக்கிய பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


கொழும்பு காலிமுகத் திடலுக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் 644
ஹெக்டயர் பரப்பளவு மணலால் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செயற்திட்டப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் இலங்கையின் மொத்தப்
பரப்பளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம்
இலங்கையின் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது என 2019ஆம்
ஆண்டு ஓகஸ்ட் 2ஆம் திகதி அப்போதைய உள்ளுராட்சி சபைகள்
மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன விசேட வர்த்தமானி
மூலம் அறிவித்துள்ளார்.



துறைமுக நகரத் திட்டம் பற்றிய இரண்டாவது பத்திரம் 2021 ஜனவரியில்
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், செயற்திட்ட பூர்த்திக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சட்டமூலம் கடந்த 8ஆம் திகதி
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கொழும்பு
துறைமுக நகரம் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் 2014ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக பாராளுமன்றத்தைத் தொடர்புபடுத்தி முறையாக
முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.


சங்கீர்த்தன் சங்கீர்த்தன் கீர்த்தன் கீர்த்தன் கொழும்பு துறைமுக நகர
பொருளாதார ஆணைக்குழுவை அமைப்பதற்கான நீதியமைச்சின்
சட்டமூலம் சபை முதல்வரினால் கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றில்
சமர்ப்பிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தகம், கப்பல் தொழில் முகாமைத்துவ செயற்பாடுகள், கரைகடந்த வங்கித்தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளிநாட்டவர்களை பணிக்கு
அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் செயற்பாடுகள்,
பிராந்திய விநியோக செயற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு
துறைச் சேவைகளை மேம்படுத்துவது என்பன ஆணைக்குழுவின்
நோக்கங்களாகும்.


இச்சட்ட மூலம் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால்
இலங்கையின் பொருளாதாரம் மந்தகதியில் இருப்பதால் நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கிறது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார விசேட ஆணைக்குழுவை ஸ்தாபிக்காமல் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க முடியாது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் இத்தகைய முறைகள் காணப்படுகின்றன.


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் இருக்கும்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 5 முதல் 7 வரை இருக்கும். ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தும்
அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.கொழும்பு துறைமுக நகரம் ஆசியப்
பிராந்தியத்தின் பிரதான வலயமாகக் காணப்படுவதால் ஒருசில
வரிச்சட்டங்கள் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளில் இருந்து
நீக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் வருவாய்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகக் குறிப்பிட முடியும்.


கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு
பெரும் உந்துசக்தியாக இருக்கும். அமைக்கப்படவுள்ள விசேட பொருளாதார
ஆணைக்குழுவை கண்காணிக்கும் பொறுப்பு கணக்காளர் நாயகத்துக்கு உண்டு. அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக
ஆணைக்குழு தன்னிச்சையாகச் செயற்பட முடியாது. மத்திய வங்கியினதும்,
பாராளுமன்றத்தினதும் ஆலோசனைகளுக்கு அமையவே செயற்பட முடியும்.
கொழும்பு துறைமுக நகரத்தில் 83 ஆயிரம் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இத்துறைமுக நகரம் சீனாவின் காலனியாக இருக்கும் என்பது முற்றிலும் தவறானதாகும். இத்துறைமுக நகரம் தொடர்பில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி மற்றும் விசேட ஆவணங்கள் எவற்றிலும் எந்த இடத்திலும் சீனாவின் காலனியாக இது இருப்பதற்கான அம்சங்கள் நேரடியாகவோ
அல்லது மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை.


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள்
உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தை சீனாவின் காலனியாக்கும் சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது. ஏனெனில் சீனாவின் காலனித்துவ அம்சங்களை உள்ளடக்கி சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில்
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறுகிய அரசியல் நோக்கங்களை
அடிப்படையாகக் கொண்டவை.


ஊடகங்களுக்கு மத்தியில் சீன காலனித்துவ ஆட்சி குறித்து கருத்துரைப்பவர்கள் உயர்நீதிமன்றத்தில் அதுபற்றிய தர்க்கத்தை
முன்வைக்கமாட்டார்கள். போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்
அரசியல்வாதிகள் முதலில் விசேட பொருளாதார ஆணைக்குழு சம்பந்தமாக
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தைப் படித்துப் பார்த்து தெளிவு பெறுவது அவசியமானது

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...