உயர்நீதிமன்ற நியாயன்மார்களே… நீங்கள் எந்தக் கிரகத்தில் இருக்கிறீர்கள்?

 

 

ய்யா நியாயன்மார்களே… இங்கே பொறுப்பற்று இருப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தானா?

`இந்த நாட்டின் கடைசி நம்பிக்கை, நீதிமன்றங்கள்தான்’ என்று அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால், அந்த நம்பிக்கையும் பொய்த்துவிடுமோ என்கிற பதைபதைப்பையும் அவ்வப்போது பல்வேறு சம்பவங்கள் ஏற்படுத்தத்தான் செய்கின்றன. முக்கியமான சில வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மற்றும் வழங்கப்படாமலே இருக்கும் தீர்ப்புகள்தான் இத்தகைய பதைபதைப்புகளுக்குக் காரணம்.

அதேபோல, சில வழக்குகள் ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்யப்படும்போதும் பதைபதைப்பு அதிகரிக்கவே செய்கிறது. அதைவிடக் கொடுமை, தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு எதற்காகத் தொடரப்பட்டதோ… அதே காரணத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சில வாரங்களுக்குப் பிறகு நம் நீதிமன்றங்கள் சாட்டையைச் சுழற்றுவதுதான்!

“தமிழகத்தில் கொரோனா பரவுவதற்குக் காரணமே தேர்தல் ஆணையம்தான். கடந்த சில மாதங்களாகவே பொறுப்பற்ற முறையில்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுவருகிறது. இதற்காகத் தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும் தவறில்லை”

– இப்படியெல்லாம் கடந்த 26-ம் தேதியன்று கொந்தளித்து தீர்த்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

அய்யா நியாயன்மார்களே… இங்கே பொறுப்பற்று இருப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தானா?

`நான் மாவீரன்’ என்றபடி மேடையில் 56 இன்ச் மார்புடன் (இதுவும் பொய்யாம்… 50தான் என்று ஆராய்ச்சிகள் வேறு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன) தேர்தல் மேடைகளில் மாஸ்க் இன்றி நடமாடினாரே நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

அமுல் பேபி கணக்காகக் கல்லூரிகளிலும், அரசியல் மேடைகளிலும், கிராமப்புறங்களிலும் புகுந்து புகுந்து புறப்பட்டு, `காளான் பிரியாணி கலக்கலாயிருக்கு’ என்று வில்லேஜ் குக்கிங்கை புகழ்ந்து தள்ளியபடி ஓட்டு வேட்டையாடிய ராகுல் காந்தி, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

`நான் விவசாயி மகன்… அய்யய்யோ விவசாயி மகனுங்கோ…’ என்றபடி வீதி வீதியாக வெத்துநடை போட்ட எடப்பாடி பழனிசாமி, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

`ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தரப்போறாரு’ என்று கூட்டத்தைக் கூட்டி ஊரெல்லாம் டப்பாங்குத்து டான்ஸ் போட்ட மு.க.ஸ்டாலின், உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

`நான் தமிழனுங்கோ… அய்யய்யோ நான் மட்டும்தான் தமிழனுங்கோ’ என்று ரவுசு காட்டிய செந்தமிழன் சீமான், உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

`நாளை நமதே’ என்று எம்.ஜி.ஆரின் வசனத்தை ஊர் முழுக்க முழங்கியபடி மக்களுக்கு நீதி கேட்கிறேன் என்று `மய்யமா’கவே நடமாடிய உலகநாயகன் கமல்ஹாசன், உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை.

இதைத் தவிர இன்னும் பற்பல வேடங்களுடனும், வசனங்களுடனும் வீதி உலா வந்த பெருநில, குறுநில, சிறுநில `மன்னர்’களையெல்லாம் உங்களுக்குத் தெரியவில்லை.

விதிகளைக் காற்றில் பறக்கவிட்ட இதுபோன்றவர்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒட்டுமொத்தமாகக் கண்களை மூடிக்கொண்ட மத்திய-மாநில அரசாங்க இயந்திரங்கள், உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

`கடைசியில் இம்புட்டுக்காண்டி ஈ செத்துக்கிடக்கிறது மட்டும் உங் கண்ணுக்கு தெரியுதா?’ என்று `வைகைப் புயல்’ வடிவேலு கேட்பதுபோல… அப்பிராணியாக நிற்கும் தேர்தல் ஆணையத்தை நோக்கி கொலை வழக்கு போட்டாலும் தப்பில்லை… நீங்கள் எந்தக் கிரகத்திலிருக்கிறீர்கள் என்றெல்லாம் சாட்டையைத் தூக்குகிறீர்களே… இது நியாயமா நியாயன்மாரே?

தேர்தல் ஆணையத்தின் லகானை தங்களின் கைகளில் வைத்திருக்கும் ஆளும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு, ஆணையத்தை மட்டும் சாடுவது ஏன்? அரசாங்கம் நினைத்திருந்தால், தேர்தலையே தள்ளி வைத்திருக்கலாம்; ஆன்லைன் பிரசாரம் மட்டுமே என்று மாற்றுத் திட்டங்களை முன்னெடுத்திருக்கலாம்; இன்னும் பலமாதிரி யோசித்திருக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அரசாங்கம் சொல்வதை செய்யக்கூடிய வெறும் ஒரு சாதாரண ஏஜென்ஸியாக இருக்கும் தேர்தல் ஆணையத்தின் மீது மட்டும் சாட்டை வீசுவது ஏன்?

சரி, இதெல்லாம் போகட்டும். இந்த மாதிரி அநியாயங்கள் நடக்கின்றன. இது கொரோனா பரவலை தமிழகத்தில் அதிகப்படுத்திவிடும் என்று ஒரு வழக்கறிஞர் தேர்தல் பிரசார நேரத்தில் உங்கள் நீதிமன்ற படியேறி பொதுநல வழக்குத் தொடுத்தாரே, அதுவும்கூடவா உங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

`கொரோனா தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தேர்தல் பிரசார ஜோரில் இவை அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. குழந்தைகளை முத்தமிடுவது, முதியவர்களைக் கட்டிப்பிடிப்பது என்று வேட்பாளர்கள் கண்மூடித்தனமாக நடக்கிறார்கள். ஏற்கெனவே, வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனாலெல்லாம் பாதிக்கப்படப்போவது மக்களே. எனவே, வேட்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்‘

– என்பதுதான் அந்த வழக்கு.

அன்று, நீங்கள் என்ன செய்தீர்கள் நியாயன்மாரே?

வழக்கை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், உச்சபட்ச அதிர்ச்சியையும் அல்லவா கொடுத்தீர்கள்.

`இதைப் பொதுநல வழக்காக ஏற்க முடியாது. உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ள வழக்கு இது. இதைத் தாக்கல் செய்த மனுதாரர், ஒரு வருடத்துக்குப் பொதுநலவழக்கு தொடரத் தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறி தள்ளுபடி செய்தீர்கள்.

“பொதுநலவழக்கு தொடர்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை. அந்த உரிமை இந்த வழக்கில் தடைசெய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. பிரசாரத்துக்குப் போகும் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. ஆனால், யாருமே கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் பிரச்னையே. நாளைக்கு வெற்றிபெற்று மக்கள் பிரதிநிதிகளாக நாட்டை ஆள நினைப்பவர்கள்தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்தகையோருக்கு மக்கள் மீதுதான் முதலில் அக்கறை இருக்கவேண்டும். ஆனால், அவர்களிடம் அதெல்லாம் இல்லவே இல்லை. பிரசாரம் என்கிற பெயரில் கூட்டத்தைக்கூட்டி, சமூக இடைவெளியைச் சுத்தமாக இல்லாமல் செய்தனர். இத்தகைய சூழலில், கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சியாகவே வழக்கறிஞர் பால்ராஜ் பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். ஆனால், அதில் பொதுநலமில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓராண்டுக்கு பொதுநல வழக்கு தொடரக் கூடாது என்று தடை விதித்திருப்பதும் சரியானதல்ல!” – பால்ராஜ் வழக்குக் குறித்த தீர்ப்புக்குப் பிறகு வழக்கறிஞர்கள் பலரும் இப்படி புலம்பியது உங்கள் காதுகளுக்குக் கேட்டிருக்காது. காரணம், அவர்களெல்லாம் வாயை மூடிப் பேசினார்கள். பின்னே, நீதிமன்றத்துக்கு எதிராகப் பேசி, அது பிரச்னையாகிவிடுமே என்கிற பயம்தான் காரணம். நாளை பின்ன தொழில் நடத்த வேண்டுமே!

சரி, உங்கள் கூற்றுப்படியே உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்றே வைத்துக் கொள்வோம். அந்த வழக்கைத் தொடர்ந்த பால்ராஜ் என்பவர் காங்கிரஸ்காரர். அவர் அரசியல் உள்நோக்கத்துடனேயேதான் அந்த வழக்கைத் தொடர்ந்தார் என்றே முடிவுக்கு வருவோம். தன்னுடைய வழக்கு தள்ளுபடியானது குறித்தோ, ஓராண்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்தோ இதுவரையில் பால்ராஜ் வாயே திறக்கவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு ஓடிகூட தீர்வு தேடியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. எல்லாமே உள்நோக்கம் என்றே ஒதுக்கித் தள்ளிவிடுவோம். ஆனால், மாண்புமிகு நீதியரசர்கள் என்ன செய்திருக்க வேண்டும். எத்தனையோ விஷயங்களை பேப்பரில் பார்த்ததுமே தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி உத்தரவெல்லாம் போடுகிறீர்களே… அதே வகையில் இந்த வழக்கையும் கையில் எடுத்திருக்கலாமே.

இந்த வழக்குத் தொடரப்பட்ட சூழலில் தினம் தினம் பேப்பர், டி.வி, யூடியூப் அனைத்திலும் பால்ராஜ் முன்வைத்த அதே கோரிக்கைக்கு ஆதாரமான நிஜகாட்சிகள் பொங்கத்தானே செய்தன. தினம் தினம் நீங்கள் சாலைகளைக் கடந்து நீதிமன்றத்துக்குச் சென்ற வழியெங்கும் டிராஃபிக் ஜாம் செய்த அரசியல் கட்சியினரின் பிரசாரக் காட்சிகள் நிறைந்துதானே கிடந்தன.

உலக நாயகன் கமலஹாசன், குழந்தையைத் தூக்கி முத்தமிட்ட காட்சி; எடப்பாடி பழனிசாமி குழந்தையைக் கொஞ்சி குஷியுடன் பெயர் சூட்டிய காட்சி; மு.க.ஸ்டாலின், வீதிகளில் நடந்து சென்று கைகுலுக்கி கலகலப்பூட்டிய காட்சி… என யூடியூப் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன கொரோனா விதி மீறல்கள்?

சரி, தமிழ்நாட்டில்தான் தேர்தல். இந்த விதிமீறல்களுக்காகத் தேர்தல் ஆணையத்தையே சுட்டுப் பொசுக்கலாம். ஆனால், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் இங்கெல்லாம் என்ன நடந்தது. கொத்துக்கொத்தாக மக்கள் மடிகிறார்களே… இதற்கெல்லாம் யார் காரணம்?

தேர்தலை நடத்தவிட்டது யாருடைய குற்றம்?

கும்பமேளா என்கிற பெயரில் கூட்டம் கூட்டமாக கும்மியடிக்கவிட்டது யாருடைய குற்றம்?

கடந்த ஆண்டு கண்மூடித்தனமாக முடிவெடுத்து ஒரே இரவில் ஒட்டுமொத்த இந்தியாவையும் முடக்கியதுபோல அல்லாமல், முன்யோசனைகளோடு திட்டமிட்டு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தாதது யாருடைய குற்றம்?

ஆக்சிஜன்கள் தேவைப்படும் என்பதை உணர்ந்து, அதற்கான வேலைகளைச் செய்யாமல், டெல்லி மாநில அரசின் ஆட்சி அதிகாரங்களை கவர்னரின் கைகளுக்கு மாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்தது யாருடைய குற்றம்?

குற்றங்களின் பட்டியலை இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர்களை நோக்கியெல்லாம் உங்கள் சாட்டை ஏன் சுழலவில்லை?

சொல்லுங்கள் நியாயன்மாரே… சொல்லுங்கள்!

Source: chakkaram.com

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...