உள்ளும் புறமும் சுற்றி வளைக்கப்படும் இலங்கை!

2019ஆம் ஆண்டு இலங்கையின் இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மிகப்பெரிய பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். அதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் சார்ந்திருந்த பொதுஜன பெரமுன தலைமையிலான பல கட்சிகளின் கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சிபீடம் ஏறியது. கோத்தபாயவின் சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஸ பிரதமரானார்.

 

முதலில் ஒரு விடயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றைய அரசாங்கத்தில் பலவிதமான கருத்துப் போக்குள்ளவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதாவது சிங்கள தேசியவாதிகள், சாதாரண தேசியவாதிகள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள், தாராளவாதிகள் என பல தரப்பட்டவர்கள் இந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கத்தின் பொதுவான போக்கு தேசியவாதமாகவும், ஓரளவு ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் இருக்கின்றது. சாராம்சத்தில் இதுதான் இன்றைய அரசாங்கத்தின் தன்மை அல்லது போக்காகும்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பழம்பெரும் இடதுசாரிக் கட்சிகள் சில இந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், அவற்றால் அரசாங்கத்தின் கொள்கைகளிலோ செற்பாடுகளிலோ தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அவை பலமுள்ளவையாக இல்லை. அதேபோல, வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், அவையும் அரசாங்கத்தின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இல்லை. அதேவேளையில், அமைச்சரவையில் முஸ்லீம் ஒருவர் அங்கம் வகித்தாலும், நாட்டில் உள்ள பிரதான முஸ்லீம் கட்சிகள் எவையும் கூட அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இல்லை.

இத்தகைய சூழ்நிலைகள் காரணமாக, அரசாங்கத்துக்குள் இருக்கும் சில கடும்போக்கு சிங்களத் தேசியவாதிகள் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவும், முற்போக்கு கொள்கைகளுக்கு எதிராகவும் செயற்படுவதற்கு முனைப்புக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கத்தில் உள்ள பெரும்பான்மையோரும் நாட்டின் சாதாரண மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்மைகளைச் செய்ய வேண்டும் எனக்கருதிச் செயற்பட்டாலும், இந்த சிறு எண்ணிக்கையினரான கடும்போக்கு சிங்களத் தேசியவாதிகளின் நிலைப்பாடுகள் அவற்றுக்கு ஊறுவிளைவிப்பனவாக உள்ளன. இதுதான் அரசாங்கத்துக்குள்ளேயே அரசுக்கு உள்ள முதல் எதிரியாகும்.

இதைவிட, இன்றைய அரசாங்கத்துக்கு எதிராக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் என இரு வகையான எதிரிகள் செயற்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்கள் இன்றைய அரசாங்கம் நாட்டின் ஏகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன்தான் பதவிக்கு வந்த அரசாங்கம் என நினைத்து மனம் சோர்ந்து இருந்துவிடவில்லை. ‘அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட இந்த தேச விரோத, மக்கள் விரோத சக்திகள், தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இன்றைய அரசுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உள்நாட்டு சக்திகள் ஒரு பக்கத்தில் இனவாதப் பிரச்சாரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். தென் இலங்கையில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, அதிலிருந்து பிரிந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பன இந்த அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு சிங்கள இனவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு சில இனவாத பௌத்த மத அமைப்புகளையும், தனிப்பட்ட பௌத்த மத குருமார்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மறுபக்கத்தில், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வேறு சில தமிழ் இனவாதக் கட்சிகள் குழுக்களும் கடந்த காலங்களில் ஐ.தே.க. அல்லாத அரசுகள் பதவிக்கு வந்தநேரங்களில் செய்தது போலவே, தீவிரமான தமிழ் தேசியவாதத்தைத் தூக்கிப்பிடித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவர்களில் சில பிரிவினர் வழமைபோல சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்துக்கும் எதிராகப் பிரச்சாரம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, முஸ்லீம் எதிர்ப்பு – இஸ்லாமிய எதிர்ப்பு, என்பனவற்றிலும், கிறிஸ்தவ எதிர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இந்தப் போக்கு ‘வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம்’ என்ற கோட்பாட்டுக்கு எதிராக இருந்தபோதிலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை.

இன்னொரு பக்கத்தில், முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லீம் கட்சிகளும், சில தீவிரவாத முஸ்லீம் இனவாத – மதவாத அமைப்புகளும் இந்த அரசாங்கத்தை முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு அரசாக உருவகப்படுத்துவதில் மிக முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேவேளையில், பெரும்பாலும் தலைநகர் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழுகின்ற பலதரப்பட்ட இந்திய வம்வாவழி தமிழ் மக்களையும், மலையகத்தில் வாழுகின்ற ஒருபகுதித் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சில கட்சிகளின் கூட்டணியான மனோ கணேசன் தலைமையிலான ‘தமிழ் முற்போக்கு கூட்டணி’யும் எப்போதும் போலவே ஐ.தே.க. விரோத அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், இந்த அரச எதிர்ப்புக் கட்சிகள் எல்லாம் ஜனாதிபதித் தேர்தலின்போதும், பொதுத்தேர்தலின் போதும் பெரும்பான்மையான நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்டாலும், இவைகள் தெற்கு, வடக்கு, கிழக்கு, மலையகம் என எல்லாப் பிரதேசங்களையும், எல்லா இன, மத, மொழிப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அரச எதிர்ப்பு என்ற ஒரே நோக்கத்துக்காக தனித்தனியாக இனம், மதம், மொழி சார்ந்து செயற்படுவதுடன், அடிக்கடி கூட்டாகவும் இணைந்து செயற்படுகின்றன என்பதுதான். எனவே தற்போதைய அரசாங்கம் தனக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறதுதானே என்ற இறுமாப்பில் இந்தச் சக்திகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டால் பெரும் தவறிழைத்தவர்கள் ஆவர்.

உள்நாட்டு நிலைமைகள் இவ்வாறு இருக்க, இன்றைய சர்வதேச நிலைமையும் தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கு மிகப் பாதகமாகவே இருக்கின்றது. அந்த உண்மையை மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கூட்டாக ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியதிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேற்கு நாடுகள் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது கோபம் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் அடிப்படையாக உள்ளன

அதில் ஒரு காரணம், மேற்கு நாடுகளால் வளர்த்து விடப்பட்ட விடுதலைப் புலிகளை 2009இல் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தோற்கடித்ததுடன், யுத்தத்தின் கடைசித் தருவாயில் புலிகளின் தலைமைத்துவத்தைக் காப்பாறற சில மேற்கு நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கும் இடமளிக்காமை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கால் பதிக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவும், இலங்கையில் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று, இலங்கை பலவீனமான நிலையில் இருக்க வேண்டும் என்பதே மேற்கு நாடுகளின் விருப்பமாகும். அதற்கு மகிந்த தலைமையிலான அன்றைய அரசும், ராஜபக்ஸ சதோதரர்களின் இன்றைய அரசும் இடம் கொடுக்காதபடியால்தான் ஐ.நா. மனித உரிமைப் பேரவை போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடப்படுகின்றன.

இன்னொரு காரணம், இலங்கையில் உருவான ஐ.தே.க. அல்லாத அரசுகளுக்கு மேற்கு நாடுகள் சிறீமாவோ பண்டாரநாயக்க காலத்திலிருந்தே பொருளாதார உதவிகள் அளிக்க மறுத்து வந்திருக்கின்றன. மறுபக்கம், இலங்கைக்கு பாரம்பரியமாக உதவி அளித்து வந்த ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளையும் ஆக்கிரமித்து சின்னாபின்னப்படுத்தி பலவீனப்படுத்தியுள்ளதுடன், இலங்கைக்கு உதவக்கூடிய இன்னொரு நாடான ஈரான் மீதும் பொருளாதாரத் தடை விதித்து வைத்திருக்கின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு உதவக்கூடிய சக்திவாய்ந்த நாடுகளாக சீனா, இந்தியா, ரஸ்யா, யப்பான் என்பனவே இருக்கின்றன.

இந்த நான்கு நாடுகளில் இந்தியாவும் யப்பானும் அமெரிக்காவின் அரசியல் – இராணுவக் கூட்டணியில் உள்ள நாடுகள். எனவே, அவைகளின் இலங்கைக்கான உதவி வரையறைக்குட்பட்டதாகும். (மனித உரிமைப் பேரவைத் தீர்மான வாக்கெடுப்பின் போதும் இது வெளிப்பட்டது) இந்த நிலைமையில் உலகளாவிய கொரோனா தொற்று இலங்கையையும் கடுமையாகப் பாதித்துள்ள நிலைமையில், இலங்கை தனது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்;த்தி செய்யவும், வெளிநாடுகளில் பெற்ற கடன்களுக்கான வட்டிiயும் முதலையும் திருப்பிச் செலுத்தவும், தன்னலமில்லாமல் இலங்கைக்கு உதவக்கூடிய ஒரேயொரு நாடு சீனா மட்டுமே. அதனால் இலங்கை தனது பாரம்பரிய நட்பு நாடான சீனாவிடமிருந்து உள்கட்டுமான செயற்திட்டங்களுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் கணிசமான பணத்தை குறைந்த வட்டியில் பெறவேண்டிய நிலைமை உருவானது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் உருவான இந்த நெருக்கமான நட்புறவை மேற்கு நாடுகளும் இந்தியாவும் அறவே விரும்பவில்லை. மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் அதிகரித்த பிரசன்னம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்துக்கான யுத்ததந்திரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் எனக் கருதுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவைத் தனது எதிரி நாடாகக் கருதுவதால், இலங்கையில் சீனா செல்வாக்குப் பெறுவதை அது விரும்பவில்லை. அதனால் இந்த நாடுகள் எல்லாம் சீனாவுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அதனுடன் சேர்த்து இலங்கையையும் குறிவைத்து வருகின்றன.

இன்றைய உலகு என்பது மிகவும் சுருங்கிவிட்டதுடன், பூகோளமயப்பட்டும் உள்ளது. எனவே உலகளாவிய சீன எதிர்ப்புச் சக்திகள் ஒன்றிணைந்து உள்ளதுடன், தமக்குப் பிடிக்காத நாடுகளையும் சீனாவின் அணியில் வைத்து நோக்குகின்றன. அப்படி நோக்கப்படும் நாடுகளில் இலங்கையையும் அவை உள்ளடக்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் இலங்கை தனது பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளுக்கு எதிரான அணியில் இணைந்து நிற்பதைத்தவிர வேறு வழியில்லை.

அதேநேரத்தில் இன்னொன்றையும் நாம் நோக்க வேண்டும். இலங்கையில் இன்றைய அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கும் வலதுசாரி, பிற்போக்கு, இனவாத சக்திகளுக்கும், இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிராக அணி திரண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இடையில் அரசியல் ரீதியான இணைப்பொன்றும் உள்ளது. அவர்களது பிரச்சாரங்களை உற்றுநோக்கினால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் என்னதான் மக்கள் விரோதிகள் இரும்புக் கோட்டை போலத் தோன்றினாலும், சின்னஞ்சிறிய ஒரு நாட்டின் மக்கள் கூட, ஒற்றுமையாக உறுதியாக ஒரு மனிதனைப்போல எழுந்து நின்றால், அந்த மக்களையும் அவர்களது நாட்டையும் எவராலும் தோற்கடிக்க முடியாது. இதற்கு கியூபா முதல் வியட்நாம் வரை எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

எனவே, உள்ளும் புறமும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள இலங்கையும் அதன் மக்களும், உருக்குப் போன்ற ஒற்றுமையைத் தமக்குள் கட்டி வளரப்பதுடன், சர்வதேச அரங்கில் தமக்கு உதவக்கூடிய உண்மையான நண்பர்களையும் இனம்கண்டு அவர்களுடன் நட்புணர்வை வளர்க்க வேண்டும். இதை அடைவதற்கு இனவாதமோ, சிறுபான்மை இனங்களின் உரிமைகளை மறுதலிப்பதோ, ஜனநாயகத்தை மீறுவதோ வழியாகாது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேசபக்தியும், இன ஒற்றுமையும், ஜனநாயக வழிமுறையுமே ஒரே மார்க்கமாகும்.

 Courtesy: Vaanavil 124 April 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...