யுகமாகி நிற்கிறார் லெனின்-ஜி.ராமகிருஷ்ணன்மாமேதை லெனின் பிறந்து 151ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்து 96 ஆண்டுகள் ஆகின்றன. லெனின் மறைவுக்குப் பிறகான இக்காலத்தில் உலக அளவில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு நூற்றாண்டின் வரலாற்றில் லெனின் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. அது அழிக்க முடியாதது. எதிர்காலத்திலும் பல மாற்றங்களுக்கு வித்திடக் கூடியது. ஆம், தோழர் லெனின் வியத்தகு மாமனிதர்.

1920ஆம் ஆண்டில் ஏப்ரல் 22 அன்று தமது பிறந்த நாளை யாரும் கொண்டாடக்கூடாது என லெனின் உத்தரவிட்டார். ஆனாலும் அதையும் மீறி பிறந்த நாள் வாழ்த்துக்கூட்டங்கள் ரஷ்யாவில் நடைபெற்றன. அத்தகைய ஒரு கூட்டத்தில் பேசிய புகழ்பெற்ற எழுத்தாளரும் லெனினுடைய நண்பருமான மக்சிம் கார்க்கி, “சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதானதல்ல, அவர்களுடைய சிறப்புகள் ஒரு சில மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும், லெனினுடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்” என்றார். லெனின் வாழ்ந்த போதும் அவர் இறந்த பிறகும், அவரைப் பற்றியும் அவருடைய பங்களிப்புகள் பற்றியும் ஏராளம் எழுதப்பட்டுள்ளன, பேசப்பட்டுள்ளன.

 

மார்க்சிய ஒளியில்…

ஒரு செல் உயிரியிலிருந்து குரங்கு வரையிலும், குரங்கிலிருந்து மனிதனும் உருவான பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை சார்லஸ் டார்வின் உலகிற்கு அளித்தார். மனிதகுல வரலாற்றில் உருவான முதலாளித்துவம் பற்றி அலசி ஆய்வுசெய்து, முதலாளித்துவம் வீழ்ச்சியடைவதும் தொழிலாளி வர்க்கம் வெற்றிபெறுவதும், தவிர்க்க முடியாதது என மாமேதைகள் மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பட்டனர். இந்த அறிக்கையின் வெளிப்பாடாக உருவானதுதான் மார்க்சியத் தத்துவம்.

முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரி லாபத்தை அபகரிக்கின்றனர் என்ற மார்க்சின் கூற்றை, முதலாளி வர்க்கத்தை மார்க்ஸ் கையும் களவுமாக பிடித்தார்’ என்று வர்ணனை செய்து, மிக எளிமையாக விளக்கினார் லெனின்.

முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி சமூகமயமாகி வருகிறது; அதேநேரத்தில் அதன் பயன் மேலும் மேலும் தனியுடைமை ஆக்கப்படுகிறது, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சி வெற்றிபெறுவதற்கான அடிப்படை இதுதான்” என்று மார்க்சியத் தத்துவம் கூறுகிறது. இந்தத் தத்துவத்தை உலகில் நடைமுறைப்படுத்திய பெருமை லெனினைச் சாரும். ஏற்கனவே ரஷ்யாவில் மார்க்சிய குழுக்கள் உருவாக்கப்பட்டன என்றாலும், பல குழுக்களை இணைத்து 1898ஆம் ஆண்டு ரஷ்ய ஜனநாயக தொழிலாளர் கட்சியை லெனின் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து 1917ல் நவம்பர் 7 புரட்சி வரையில் லெனின் ஆற்றிய பணிகள், அவரது தலைமையிலான போல்ஷ்விக் கட்சி நடத்திய போராட்டங்கள் உலக வரலாற்றின் போக்கையே மாற்றின.

தோழர் லெனின் ரஷ்யாவில் அன்று நிலவிய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஆய்வு செய்து கட்சிக்கான திட்டத்தை உருவாக்கியதோடு பல நூல்களையும் எழுதினார். நேரடியாக விவசாயிகளை – தொழிலாளிகளை அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டார். இக்காலக்கட்டத்தில் அவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை ரஷ்ய விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி; செய்ய வேண்டியது என்ன, அரசும் புரட்சியும், ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு நடைமுறை உத்திகள் போன்ற பல நூல்கள். 

பண்பாட்டுத் தளத்திலும்…

1905ஆம் ஆண்டு முதலாம் ரஷ்யப் புரட்சியின் தோல்வியிலிருந்து படிப்பினையாக நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்க உழைப்பாளிகளைத் திரட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பு காட்டியது. வர்க்கப் போராட்டத்தில் மட்டுமல்ல; ரஷ்யாவில் அன்று இருந்த எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகளோடு தொடர்பு கொண்டு பண்பாட்டுத் தளத்தில் அவர்களை ஊக்குவிப்பதில் லெனின் முனைப்பு காட்டினார். சமூக மாற்றத்தில் எழுத்தாளர்கள் உருவாக்கிய இலக்கியத்தின் பாத்திரத்தை லெனின் வெகுவாகப் பாராட்டினார். மாபெரும் எழுத்தாளர் டால்ஸ்டாயின் படைப்புகளைப் பற்றி கூறுகிறபோது, ‘ரஷ்யப்புரட்சியின் கண்ணாடி டால்ஸ்டாய் என்றார். அதைப்போலவே கார்க்கியையும் ஊக்குவித்தார். கார்க்கியின் தாய் நாவலைப் படித்து பலர் கம்யூனிஸ்ட்டுகளாக மாறியது என்பது ரஷ்யப்புரட்சியின் வரலாறு.

ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வு

முதல் உலக யுத்தம் வெடித்தபோது ஐரோப்பிய நாடுகளில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்தந்த நாட்டில் அதை உள்நாட்டுப்போராக மாற்ற வேண்டும், உலக யுத்தம் எ ன்பது உலகச் சந்தைகளை பங்கிட்டுக் கொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே நடக்கக்கூடிய மோதலே என்று லெனின் மதிப்பீடு செய்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தில் இந்தக் கருத்தை முன்வைத்தார். துரதிருஷ்டமாக ஜெர்மனி உள்ளிட்ட சில கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கருத்தை ஏற்கவில்லை.

இப்பின்னணியில்தான் ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்ற நூலை லெனின் எழுதினார். மார்க்ஸ் ஏங்கெல்ஸ் காலத்திலேயே ஏகாதிபத்தியம் உருவாவதற்கான அறிகுறிகள் இருந்தாலும் ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியைப் பற்றி அவர்களால் குறிப்பிட இயலவில்லை. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியை ஆய்வு செய்து, முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என்ற முடிவுக்கு லெனின் வந்தார். ஏகாதிபத்திய நாடுகளுக்குள் மோதல் ஏற்படுகிற போது உலக முதலாளித்துவ சங்கிலியில் பலவீனமாக உள்ள ரஷ்யாவில் அந்தச் சங்கிலியை உடைத்து நொறுக்கி, அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து, அதன்படி போல்ஷ்விக் கட்சி லெனின் தலைமையில் மாபெரும் புரட்சியை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தது.

உணவு, சமாதானம், நிலம்

1917ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூடியது. ஆயுதம் தாங்கிய புரட்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று கட்சி முடிவு செய்தது. அக்கூட்டத்தில் கமனேவ், ஜிகனேவ், டிராட்ஸ்கி ஆகிய மூவரும் மாற்றுக் கருத்து கூறினார்கள். எனினும் அக்டோபர் 25 (பிற்காலத்தில் நவம்பர் 7) அன்றைய நாளே புரட்சியை துவக்குவதற்கான பொருத்தமான நாள் என்று லெனின் வழிகாட்டுதலால் முடிவு செய்யப்பட்டு மாபெரும் புரட்சி நடைபெற்றது. அரண்மனைகளையும் அதிகாரங்களையும் கைப்பற்றிய பிறகு அன்றைய இரவு சோவியத் வீரர்களும் தோழர்களும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், புரட்சியின் தீர்மானத்தை எழுதிக்கொண்டிருந்தார் லெனின். உணவு, சமாதானம், நிலம் ஆகியவையே ரஷ்யப்புரட்சியின் அடிப்படை முழக்கங்கள் என தீர்மானமாக வரையறை செய்தார்.

புரட்சிக்குப் பிறகு, புரட்சியை வீழ்த்துவதற்கு முதலாளித்துவ சக்திகளும் எதிர்ப்புரட்சி சக்திகளும் மேற்கொண்ட எண்ணற்ற தடைகளை, தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்து, சோவியத் ஒன்றியத்தில் ஒரு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க லெனின் தீவிரமாகப் பணியாற்றினார். உலகம் முழுவதும் முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சிய அந்தக் காலக்கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தில் மட்டும் புதிதாக சோசலிச பொருளாதாரக் கட்டுமானத்தை நிர்மாணிப்பதற்காக அயராது உழைத்தார் லெனின். ஒவ்வொரு நெருக்கடியையும் தீர்ப்பதற்கு பொருத்தமான ஆய்வுகளை மேற்கொண்டு கொள்கை அடிப்படையிலான – கோட்பாடு அடிப்படையிலான தீர்வுகளை நடைமுறைப்படுத்தியதில் லெனின் வெற்றிகண்டார். மின் உற்பத்தி, கனரகத் தொழில்கள், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

இன்றும் வழிகாட்டுகிறார்…

இன்றைக்கு கொரோனா பாதிப்பால் உலகமே துயரத்தின் பிடியில் சிக்கியிருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு அடிப்படையான காரணம் முதலாளித்துவ சமூக பொருளாதார கட்டமைப்பில் எந்த நாட்டிலுமே பொது சுகாதார கட்டமைப்பு வலுவானதாக இல்லை. சுகாதாரம் என்பது பெருமளவிற்கு தனியார் முதலாளிகள் – கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோசலிசத்தை உயர்த்திப்பிடிக்கும் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா போன்ற நாடுகளும் சரி, இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தலைமையிலான கேரள, இடது ஜனநாயக முன்னணி அரசும் சரி, பொது சுகாதார கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பதன் விளைவாகத்தான் கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கின்றன. இதற்கு அடிப்படையானது, 1917 புரட்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் பொது சுகாதார கட்டமைப்பை லெனின் உருவாக்கினார் என்பதுதான். அத்தகைய, பொது சுகாதாரம் உள்ளிட்ட சோசலிச பொருளாதாரக் கட்டுமானத்தை லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் பாதுகாத்து வளர்த்தெடுத்தார்.

சோவியத் ஒன்றியத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், சோவியத் ஒன்றியம் நடைமுறைப்படுத்திய பொது சுகாதாரத்துறை கட்டமைப்பு உள்ளிட்ட சோசலிசக் கட்டுமானம் என்ற வழிகாட்டுதல்தான் இன்றைக்கு சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகள் கொரோனா போன்ற பெருந்துயரத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை அளித்துக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல.

முதலாளித்துவத்திடம் தீர்வு இல்லை

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் பின்பற்றிவரும் கொள்கைகளால் அவை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடிக்கும் வெற்றிகரமாக தீர்வுகாண முடியவில்லை. ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு அவர்கள் பயணப்படுகிறார்கள். இதன் விளைவாக மேலும் மேலும் லாபத்தை, மூலதனத்தைக் குவிப்பதற்காக உழைக்கும் வர்க்க மக்கள் மீதான சுரண்டலை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிறது முதலாளித்துவம். அனைத்தையும் தன் வசமாக்குவது என்ற ஏகாதிபத்திய கட்டத்தை நோக்கி முதலாளித்துவம் பயணப்படுகிறது. இதைத்தான் லெனின் தீர்க்கமாக வரையறை செய்து சொன்னார்.

இத்தகைய சுரண்டலுக்கு எதிராக உலகம் முழுவதிலும் இந்தியாவிலும் உழைப்பாளி வர்க்கம் வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்றைக்கு நவீன தாராளமய கொள்கைகளின் கொடிய சுரண்டல் முறைக்கு எதிராக தீர்மானகரமான போராட்டத்தை உழைக்கும் மக்கள் நடத்தி வருகிறார்கள்.

சோசலிசத்தை எட்டுவது எளிதானதா?

இந்தப் போராட்டத்தின் இலக்கு, மனிதனை மனிதன் சுரண்டுகிற கொடூரமான முதலாளித்துவ சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை அடியோடு தகர்த்து சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற சமூகத்தை – சாதி, மத வேறுபாடற்ற சமூகத்தை – பூமியிலேயே ஒரு பொன்னுலகை – படைக்கிற சோசலிசத்தை நோக்கி பயணிப்பது தான். ஆனால் இன்றைய முதலாளித்துவ உலகில் அந்தப் போராட்டம் அவ்வளவு எளிதானதா? என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கு தோழர் பிடல் காஸ்ட்ரோ பதிலளிக்கிறார் : 

1998ஆம் ஆண்டு வெனிசுலாவில் முதன் முறையாக தோழர் சாவேஸ் மகத்தான வெற்றிபெற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவிற்கு கியூபாவின் புரட்சித் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ சென்றிருந்தார். அங்கு அவர் உரையாற்றும்போது, சோசலிசத்தை கட்டமைப்பது என்பது எளிதானதல்ல; அதுபற்றி உழைப்பாளி மக்களுக்கு – தொழிலாளி வர்க்க மக்களுக்கு நுட்பமாக கற்றுத் தர வேண்டியது அவசியம். அவர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி வலுப்படுத்துவதன் மூலம் அந்த இலக்கை எட்டும் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிடல் காஸ்ட்ரோ தனக்கு நேர்ந்த அனுபவங்களை சுவாரசியமான முறையில் குறிப்பிட்டார்: “நான் கியூபாவில் புரட்சிக்குப் பிறகு ஒரு கிராமத்திற்குச் சென்றேன்.

மக்களைச் சந்தித்தேன். இங்கே இருக்கக்கூடிய நிலங்கள், கரும்பு வயல்கள் எல்லாம் முதலாளிகளுக்குச் சொந்தமாக இருக்கிறது, அதை நாம் மக்களுக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டேன்; உடனே எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். ஹவானாவில் சில அடுக்குமாடி கட்டிடங்கள் அமெரிக்க முதலாளிகளுக்குச் சொந்தமாக இருக்கிறது, அவற்றைக் கைப்பற்றி தொழிலாளிகளுக்கு குடியிருப்புகளாக கொடுத்துவிடலாமா என்று கேட்டேன்; ஆஹா, உடனே அளித்துவிடுங்கள் என்று சொன்னார்கள். காசு கொடுத்தால்தான் கல்வி, காசு கொடுத்தால்தான் மருத்துவம் என்ற நிலையை மாற்றி, அனைத்தையும் பொதுக் கல்வி, பொது சுகாதாரம் என மாற்றிவிடலாமா என்று கேட்டேன்; நல்லது தலைவரே, உடனே செய்துவிடுங்கள் என்றார்கள். சரி, நமது நாட்டிற்கு சோசலிசத்தை கொண்டுவந்துவிடலாமா என்று கேட்டேன், அய்யோ அதை மட்டும் கொண்டுவந்துவிடாதீர்கள் என்று சொன்னார்கள். அந்தளவிற்கு சோசலிசம் மீது முதலாளித்துவ ஊடகங்களும் பிரச்சாரங்களும் உலக மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து வைத்திருக்கின்றன. எனவே உலக மக்களின் வாழ்வு மலர உண்மையான ஒரே தீர்வு எல்லோருக்கும் எல்லாமும் பொதுவாக்குகிற சோசலிசம்தான் என்ற சிந்தனையை வலுவாகக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்” என்று பிடல் காஸ்ட்ரோ கூறினார்.

2008ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்தியம் இன்னும் மீண்டுவரவில்லை. வளர்ச்சி பெருமளவு குன்றி உள்ளது. பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களை காப்பாற்றுவதில்தான் முதலாளித்துவ அரசுகள் தீவிரமாக உள்ளன. இதன் விளைவு உலகம் முழுவதும் பல நாடுகளில் பொதுசுகாதாரம் திவால் நிலைமைக்கு சென்றுவிட்டது. நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் காரணமாக மக்கள் நலன் கைவிடப்பட்டுவிட்டது.

அதனால்தான் இன்றைக்கு முதலாளித்துவ அரசுகள் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளத் திணறி வருகின்றன. ஆனால் இந்த நெருக்கடியை உறுதியோடு, சரியான திட்டமிட்டலோடு, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எதிர்கொண்டு வருகிற சோசலிச நாடுகள் மீதும் அவை பின்பற்றி வரும் மார்க்சியத் தத்துவத்தின் மீதும் உலக மக்களின் பார்வை திரும்பியுள்ளது. இத்தகைய சிந்தனைக்கு அடிப்படையானது மார்க்சியத் தத்துவத்தை கூர்மைப்படுத்தி நடைமுறையில் செயல்படுத்திக் காட்டிய மாமேதை லெனின் ஆற்றிய மகத்தான பணியே. அந்த அடிப்படையில் இன்றும் என்றென்றும் உலக மக்கள் மனங்களில் யுகமாகி நிற்கிறார் லெனின்.

 Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...