1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சியின் 50வது ஆண்டு -சுப்பராஜன்

 


-சுப்பராஜன்

1971 ஏப்பிரல் கிளர்ச்சியில் தோல்வியுற்ற பின்னர் சரணடைந்த ஜே.வி.பியினரது இளம் உறுப்பினர்கள்

ஜே.வி.பி’ என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜனதா விமுக்தி பெரமுன என்ற அமைப்பு 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கையில் நடாத்திய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடைபெற்று 50 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்தக் கிளர்ச்சியின் நினைவு தினத்தை அந்த இயக்கம் வருடாவருடம் நினைகூர்ந்து நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அதன் பின்னர் அவர்களது தலைவர் ரோகண விஜேவிரவின் மரணத்தில் முடிவடைந்த இன்னொரு கிளர்ச்சியை அந்த இயக்கம் 1988 – 88 காலகட்டத்தில் நடாத்தியிருந்த போதிலும், அந்தக் கிளர்ச்சி பற்றி ஜே.வி.பி பெரிதாக நினைவு நிகழ்ச்சிகள் எதையும் நடாத்துவதில்லை.

எனவே இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமும் ஜே.வி.பியின் 1971ஆம் ஆண்டுக் கிளர்ச்சி பற்றி ஆராய்வதே. அப்படி ஆராய்வதற்கு ஒரு நோக்கமும் இருக்கிறது. அதாவது ஜே.வி.பி 1971இலும் 1988 – 89 காலகட்டத்திலும் நடாத்திய ஆயுதக் கிளர்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்ததுடன், பெருமளவு அழிவுகளைக் கொண்டு வந்தவையாக இருந்த போதிலும், அவை பற்றி அந்த இயக்கம் எந்தவிதமான சுய – விமர்சனமும் இன்றியே அவற்றைக் கொண்டாடி வருகின்றது.


மரணித்துப்போன தனது உறுப்பினர்களுக்காக அந்த இயக்கம் நினைவஞ்சலி செலுத்துவதில் தவறு சொல்வது நமது நோக்கமல்ல. ஆனால் தான்விட்ட அரசியல் மற்றும் நடைமுறைத் தவறுகளை அவ்வியக்கம் சுயவிமர்சன ரீதியில் பார்க்காமல் செயற்படுவதும், அந்தப் பாதையிலேயே இன்றும்கூடப் பயணிப்பதும்தான் பாரதூரமான தவறாகும்.

எனவே அவர்களது தவறைச் சுட்டிக்காட்டுவதும் – குறிப்பாக 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் அனுபவங்களை நினைவுகூர்வதும், இன்றைய சந்ததிக்கு இதைத் தெரிவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஜே.வி.பியின் 1971 ஆயுதக் கிளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்கு முன்பாக அந்த இயக்கத்தை ஸ்தாபித்த ரோகண விஜேவீரவின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்பது பயனுள்ளது.

விஜேவீரவின் தந்தையார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவரும், தென் மாகாணத்திலுள்ள அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியில் பல தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவருமான டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க அவர்களின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர். சின்ன வயதில் விஜேவீரவுக்கு ஏதாவது சுகவீனம வரும் நேரங்களில் அவரது தகப்பனார் டொக்டர் விக்கிரமசிங்க அவர்களிடமே அவரைக் கொண்டுபோய் காட்டுவது வழமை. அதற்கு தோழர் விக்கிரமசிங்க பணம் எதுவும் பெறுவதும் இல்லை.

இந்த உறவு காரணமாக தந்தையின் வழியைப் பின்பற்றி விஜேவீரவும் தனது மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் அரசியலால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாக அவருக்கு சோவியத் யூனியனின் பட்ரிஸ் லுமும்பா பல்கலைக்கழகத்தில் (இது ஏகாதிபத்தியவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கொங்கோவின் தேசபக்த விடுதலைப்போராளி பட்ரிஸ் லுமும்பாவின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்பதற்காக ஆயிரக்கணக்கான ஆசிய – ஆபிரிக்க மாணவர்களுக்கு வருடந்தோறும் புலமைப்பரிசில் வழங்கப்படுவது வழக்கம்) உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் கிடைத்தது.

ஆனால் அங்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போது அது இடைநிறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்குக் காரணம் அப்போது நடைபெற்ற சோவியத் – சீன தத்துவார்த்த விவாதத்தின் போது, விஜேவீர சீன நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்ததுதான் என்று கூறப்பட்டது.

நாடு திரும்பிய விஜேவீர இலங்கையில் பிரேம்லால் குமாரசிறியை பொதுச்செயலாளராகவும், நா.சண்முகதாசனை தேசிய அமைப்பாளராகவும் (பின்னர் ஒரு கட்டத்தில் பிரேம்லாலை திட்டமிட்டு கட்சியிலிருந்து வெளியேற்றிய சண்முகதாசன், 1969இல் நடைபெற்ற கட்சியின் 9ஆவது தேசிய மாநாட்டில் சர்வ அதிகாரங்களும் கொண்ட பொதுச்செயலாளராகத் தன்னை நியமித்துக் கொண்டார்) கொண்டு செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சீனசார்பு அணியினருடன் தன்னை இணைத்துக்கொண்டு, அதன் வாலிப அணியில் தீவிரமாக வேலைசெய்யத் தொடங்கினார்.

ஆனால் சீனசார்புக் கட்சிக்கு விஜேவீர மீது தொடர்ந்தும் சந்தேகம் இருந்துகொண்டே வந்தது. அதாவது அவரை சோவியத் யூனியனின் உளவு ஸ்தாபனமான கே.ஜி.பிதான் தமது கட்சியைச் சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு அனுப்பி வைத்துள்ளது என்ற கருத்து அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் சிலரிடையே ஏற்பட்டிருந்தது. அப்படியான சந்தேகம் வரும் வகையில் விஜேவீரவும் மிகவும் தீவிரமாக நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று அக்கட்சியின் அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்புரட்சி பற்றிப் பேசினாலும் அதற்கான நடைமுறைத் தயாரிப்புகள் எதிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்பதை விஜேவீர வாலிப அணிகளிடையே மறைமுகமாகப் பிரச்சாரம் செய்ததுடன், கட்சியில் முக்கிய பதவி வகித்த சண்முகதாசனின் ஓரளவு ஆடம்பரமான வாழ்க்கையையும் விமர்ச்சித்து வந்தார். அத்துடன் இன்னொரு முக்கியமான கருத்தையும் – அதாவது சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையில் சண்முகதாசன் போன்ற ஒரு தமிழரின் தலைமையில் புரட்சி செய்வது நடைமுறைச்சாத்தியமற்றது என்ற கருத்தையும் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்த நிலைமையில் 1965இல் கட்சியின தேசிய வாலிப மாநாடு பதுளையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கான தயாரிப்பு வேலைகளில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் எல்லாப் பிரதேசங்களுக்கும் விஜேவீர நேரடியாகச் சென்று செயல்பட்டார். அவரது நோக்கம் இந்த மாநாட்டின் மூலம் கட்சியின் வாலிப அணியான ‘இலங்கை வாலிப சங்க சம்மேளன’த்தின் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றுவதாக இருந்தது.

மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரிட்ட சிங்கள தேசியவாதி புரன்அப்பு மீது சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியையும் விஜேவீரவே ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வு பிற்காலத்தில் அவர் சிவப்புக் கொடியை ஏந்திக்கொண்டு, மார்க்சிச சுலோகங்களை உச்சரித்த போதிலும், நடைமுறையில் ஒரு சிங்களத் தேசியவாதியாகச் செயல்பட்டதற்கான ஒரு முன்னோடி சமிக்ஞை என்று கூறலாம்.

ஆனால் விஜேவீரவின் பொதுச்செயலாளர் கனவு நனவாகவில்லை. தனது அதிகாரத்துக்கு சாவல் விடுபவர்களை காலத்துக்காலம் மிகவும் தந்திரமாக ஓரம்கட்டுவதில் வல்லவரான சண்முகதாசன், திட்டமிட்ட முறையில் விஜேவீர பொதுச்செயலாளர் பதவிக்கு வராமல் தடுத்துவிட்டார். அவர் கம்பஹாவைச் சேர்ந்த டி.ஏ.குணசேகர என்பவரை வாலிப சம்மேளனத்தின் தலைவராக ஆக்கியதுடன், கேகாலையைச் சேர்ந்த ஏ.ஆர். எட்மண்ட் என்பவரைப் பொதுச்செயலாளராகவும் ஆக்கிவிட்டார். அதுமாத்திரமல்லாமல் விஜேவீர ஒரு சிங்கள இனவாதி என்ற பிரச்சாரத்தையும் முடுக்கிவிட்டார்.

இந்தச் சூழ்நிலைகள் காரணமாக விஜேவீரவை சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒதுங்க வைத்தது. அதன் பின்னரே அவர் தனது சொந்த அரசியல் இயக்கத்துக்கான – ஜே.வி.பியை அமைப்பதற்கான முடிவை எடுத்தார்.

1966ஆம் ஆண்டுமுதல் விஜேவீர தீவிரமான அரசியல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் அவர் செய்தது சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த வாலிபர்களைத் தனது பக்கம் இழுத்ததுதான். அதற்காக அவர் சில தந்திரோபாயங்களைக் கையாண்டார். சண்முகதாசன் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசியல் வேலைகள் சம்பந்தமாகச் சென்றால், கட்சிக்கு ஆதரவான பொதுமக்களின் வீடுகளிலோ அல்லது கட்சி உறுப்பினர்களின் வீடுகளிலோ (அவர்கள் வசதியானவர்களாக இருந்தாலும் கூட) தங்குவதில்லை. அவர் அநேக்மாக வாடிவீடுகளில்தான் (Rest House or Guest House) தங்குவது வழமை. அதற்குப் பெருந்தொகை பணச்செலவு பிடிக்கும். எனவே விஜேவீர என்ன செய்தார் என்றால், சண்முகதாசன் தங்கிய வாடிவீடுகளுக்குச் சென்று அங்கு அவரது செலவு விபரங்களைத் திரட்டி வந்து, தொழிலாளர்களிடமும் கட்சி உறுப்பினர்களிடமும் சேர்க்கும் சந்தாப் பணத்தை அவர் இவ்வாறுதான் ஊதாரித்தனமாகச் செலவு செய்கிறார் என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டார்.

அடுத்ததாக, சண்முகதாசன் போன்ற ஒருவர் எவ்வளவுதான் அழகாக மார்க்சியம் பேசினாலும், அவர் ஒரு தமிழராக இருப்பதால் சிங்கள மக்கள் அவரது தலைமையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்தார்.

அத்துடன் சண்முகதாசன் சோவியத்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பார்த்து ‘திரிபுவாதிகள்’, ‘பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகள்’ என விமர்ச்சித்தாலும், சண்முகதாசனும் அதேவகையான தொழிற்சங்கவாத சீர்திருத்தவாத வேலைகளில்தான் ஈடுபட்டிருக்கிறார், அவர் ஒருபோதும் ஆயுதப்புரட்சியில் ஈடுபடப் போவதில்லை எனவும் விஜேவீர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்தப் பிரச்சாரங்கள் சண்முகதாசன் அணியில் இருந்த சிங்கள இளைஞர்களைக் கவர்ந்து இழுத்ததுடன், சாதாரண சிங்கள இளைஞர்களையும் கவர்ந்தது. அதனால் 1966இல் வடபகுதியில் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தால் ஆகர்சிக்கப்பட்டுத் தமிழ் இளைஞர்கள் அந்தக் கட்சியை நோக்கி வந்த அதேநேரத்தில், சிங்களப் பகுதி இளைஞர்கள் அக்கட்சியை விட்டு விலகி விஜேவீரவின் ஜே.வி.பியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர்.

இது சண்முகதாசனின் கட்சியை எவ்வளவு தூரம் பாதித்தது என்றால், கம்பஹா மாவட்டத்தில் இருந்த அவரது வாலிபர் சங்கங்களில் 15 வரை விஜேவீரவுடன் சேர்ந்து கொண்டதுடன், அவர் நியமித்த அவரது வாலிப சம்மேளனத் தலைவர் டி.ஏ.குணசேகரவும் இறுதியில் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டார். (1970இல் சண்முகதாசன் கட்சியின் சார்பாகப் போட்டியிட இருந்த கம்பஹாத் தொகுதியின் நீண்டகாலப் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.டி.பண்டாரநாயக்கவை சண்முகதாசன் திட்டமிட்டு கழுத்தறுத்து அவரது அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியதால் அவரும் பின்னர் ஜே.வி.பியுடன் இணைந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது)

விஜேவீர தனது ஜே.வி.பி இயக்கத்தை ஸ்தாபித்ததும் இரண்டு முக்கியமான வேலைகளைச் செய்தார். ஒன்று, இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக அவர்களை வென்றெடுக்கும் பொருட்டு 5 பாடத்திட்டங்கள் அடங்கிய அரசியல் வகுப்புகளை ஏற்பாடு செய்தார். இரண்டாவது தனது உறுப்பினர்கள் மூலம் பொதுமக்களிடம் பாவனையில் இருந்த சட்டபூர்வ – சட்டவிரோத துப்பாக்கிகள் எல்லாவற்றையும் சேகரித்ததுடன், தனது உறுப்பினர்களுக்கு அவற்றின் மூலம் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கினார். கூடுதலான இளைஞர்கள் ஏழை விவசாயிகள் நிறைந்த தென் மாகாணம், வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், ஊவா மாகாணம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் போன்ற பகுதிகளில் இருந்து திரட்டப்பட்டனர்.

ஜே.வி.பியின் 5 அரசியல் வகுப்புகளில் ஒன்று பொருளாதாரம் பற்றியது. (இந்தக் கட்டுரையாளர் வவுனியாவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கோழி வளர்ப்பது பற்றிய கருத்தரங்கம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட ஜே.வி.பியின் அரசியல் வகுப்பில் நேரடியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது) அதில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சிங்கள மக்களின் முன்னோடிகள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு – குறிப்பாக பிரித்தானிய – எதிராகப் போரிட்ட வரலாறும் உணர்ச்சி மிகுந்த பாணியில் சித்திரிக்கப்பட்டது.

இந்த வகுப்புகளில் மிக முக்கியமான ஒரு வகுப்பு ‘இந்திய விஸ்தரிப்புவாதம்’ பற்றியது. உண்மையில் இந்தப் பதம் சீனாவின் ஊடகங்களால்; 1962இல் நடைபெற்ற இந்திய – சீன எல்லை யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். அந்தச் சொற்பதத்தை இலங்கையில் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்தியாவுக்கு எதிரான தமது பிரச்சாரங்களில் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதின் நோக்கம், இந்தியா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பின்பற்றி வந்த தேச விஸ்தரிப்புவாதக் கொள்கையை விமர்ச்சிப்பதற்காகவே.

ரோஹண- விஜேவீர, லயனல் போபகே ஆகியோர் வெலிகடை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

ஆனால் முன்னர் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த விஜேவீர அந்தச் சொற்பதத்தை வேறு நோக்கத்துக்காக – அதாவது தனது சிங்களக் குறுந்தேசியவாத நோக்கத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். அவர் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், அதேநேரத்தில் 20ஆம் நூற்றாண்டின் நவீன கொத்தடிமைகளாகவும் இருந்த இந்திய வம்சாவழி மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குற்றம்சாட்டுவதற்காக அதைப் பயன்படுத்தினார். அதாவது இந்தியாவுடன் எவ்வித பௌதீகத் தொடர்புகளும் அற்ற, அதேநேரத்தில் வெறும் கலாச்சார மற்றும் உணர்வுரீதியிலான தொடர்புகளை மட்டும் வைத்திருந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பார்த்து ‘இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கைக்கூலிகள்’ என மிகவும் அபாண்டமான, மன்னிக்க முடியாத ரீதியில் ஜே.வி.பி குற்றம்சாட்டியது (அதனால்தான் பிற்காலத்தில் இ.சந்திரசேகரன் என்ற இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவரை ஜே.வி.பி தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து, அவர் மலையக மக்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்த போதும், இன்றுவரை மலையகப் பகுதிகளில் ஜே.வி.பியால் செல்வாக்குப்பெற முடியாமல் இருக்கின்றது).

தமிழ் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறமுடியாவிட்டாலும் சாதாரண சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஜே.வி.பியின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதற்கு இன்னொரு காரணம் 1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஜே.வி.பி சிறீலங்கா – சமசமாஜ – கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டமைப்பான ‘மக்கள் முன்னணி’க்கு வேலை செய்திருந்ததால், அதன் மூலம் ஐ.தே.கவுக்கு எதிரான மக்கள் மத்தியில் அது பரவலான தொடர்புகளைப் பெற்றிருந்தது. அத்தேர்தலில் மக்கள் முன்னணி பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியீட்டியிருந்தது. ஆனால் ஜே.வி.பி தேர்தலில் வேலை செய்திருந்தாலும் அதன் தலைமையின் முழுநோக்கமும் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவே இருந்தது.

ஜே.வி.பியின் இந்த நோக்கம் குறித்தும், அதற்காக அது செய்துவரும் தயாரிப்புகள் குறித்தும் அரசாங்கமோ, ஏனைய அரசியல் கட்சிகளோ பாரதூரமாக எடுக்காமல் இருந்து வந்தன. ஆயுதப்போராட்டம் குறித்து தீவிரமாகப் பேசிவந்த சண்முகதாசன் கூட அதைப் பெரிதாக எடுக்கவில்லை. அவர் ஒருமுறை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசும்போது, அவரிடம் ஜே.வி.பியின் வளர்ச்சி பற்றி சில மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சொன்ன பதில், ‘ஜே.வி.பியினர் ஒரு கல்லைக் கூடத் தூக்கியெறிய லாயக்கற்றவர்கள்’ என்பதாகும்!

அதேபோல அவர் யாழ்ப்பாணத்தில் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றில் பேசும்போதும் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்து. அதற்கும் அவர் சொன்ன பதில், ‘தென்னிலங்கையில் ஜே.வி.பி என்றொரு இயக்கம் பலமானதாக இல்லை. முதலாளித்துவப் பத்திரிகைகள்தான் எமது செல்வாக்கை மட்டம் தட்டுவதற்காக ஜே.வி.பி பற்றிய செய்திகளை ஊதிப் பெருப்பித்து செய்தி வெளியிடுகின்றன’ என்பதாகும்!!

ஆனால் பொலிசார் ஜே.வி.பி மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்து வந்தனர். அதனால்தான் ஜே.வி.பி ஒரு திட்டமிட்ட முழுமையான தாக்குதலை நடாத்துவதற்கு சில நாட்கள் முன்னதாக – அதாவது 1971 ஏப்ரல் 02ஆம் திகதி வெள்ளவாயாவில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டுத் கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீரவையும் அவருடன் பயணித்த சிலரையும் பொலிசார் கைதுசெய்தனர்.

தமது தலைவர் விஜேவீர கைதுசெய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன், ஏனைய தலைமை உறுப்பினர்கள் தாம் திட்டமிட்டிருந்த நாளுக்கு முன்னதாகவே ஏப்ரல் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், அதாவது 05ஆம் திகதி அதிகாலை பொலிஸ் நிலையங்கள் மீது தமது தாக்குதலை ஆரம்பித்தனர். ஜே.வி.பியின் பிரதான இலக்கு பொலிஸ் நிலையங்களாகவே இருந்தன. அரசு இயந்திரத்தின் பிரதான அங்கம் ஆயுதப்படைகள்தான் என்ற மார்க்சிய தத்துவத்தைப் படித்திருந்த விஜேவீர, அதிலும் ஆயுதப்படைகளிலும் இராணுவம்தான் பிரதானமானது என்பதை எப்படி மறந்தார் என்பது புரியவில்லை.

அதுமட்டுமல்ல, அவர் முதலாளித்துவ அரசு இயந்திரம் குறித்து சிறுபிள்ளைத்தனமான புரிந்துணர்வைக் கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு உதாரணம், நாட்டின் ஏனைய பகுதிகளில் தனது இயக்கம் தாக்குதலை நடாத்த, தலைநகர் கொழும்பை இலங்கை அரச இயந்திரத்தின் பிரதான அங்கமான இராணுவம் கைப்பற்றித் தம்மிடம் ஒப்படைக்கும் என்று நம்பியிருந்ததுதான். முதலாளித்துவ அரசின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றுவது என்பது, இராணுவச் சதியே தவிர மக்கள் புரட்சி அல்ல என்பது ஜே.வி.பிக்குத் தெரியவில்லையா அல்லது அவர்களும் ஒரு சதி நடவடிக்கையின் மூலம்தான் ஆட்சியைக் கைப்பற்றலாம் என நம்பியிருந்தார்களா என்பது தெரியவில்லை.

ஆரம்பத்தில் ஜே.வி.பியின் தாக்குதலால் அரசாங்கம் நிலை குலைந்தது போலத் தோன்றினாலும், விரைவிலேயே அரசு தன்னைச் சுதாரித்துக்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மாகோவிலும் கேகாலையிலும் மட்டுமே ஜே.வி.பியினர் பொலிஸ் நிலையங்களை ஒரு கிழமை வரையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்தக் கிளர்ச்சியின் போது சுமார் 6,000 வரையிலான ஜே.வி.பியினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சரியான தொகையை ஜே.வி.பி, அரசாங்கம் உட்பட எந்தவொரு அமைப்பும் இதுவரை சரியாகக் கணக்கிட்டதாகத் தெரியவில்லை. (ஜே.வி.பி 1988-89 காலகட்டத்தில் மேற்கொண்ட இரண்டாவது கிளர்ச்சியின் போது தலைவர் விஜேவீர மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் உட்பட சுமார் 60,000 பேர் வரை பிரேமதாச அரசாங்கத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்!).

ஜே.வி.பியின் 71ஆம் ஆண்டுக் கிளர்ச்சியை அடக்குவதற்காக சிறீமாவோவின் அரசாங்கத்துக்கு அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி ஹெலிகொப்ரர்களையும், சில இராணுவ வீரர்களையும் உடனடியாகவே அனுப்பி வைத்தார்.

இந்தக் கிளர்ச்சிக்கு வட கொரியா ஜே.வி.பிக்கு ஆயுதங்கள் வழங்கயதாக ஒரு கட்டுக்கதையை ஐ.தே.கவும், அரசாங்கத்தினுள் இருந்த வலதுசாரிகளும் அவிழ்த்துவிட்டனர். அந்த நேரத்தில் தண்ணீர் எடுப்பதற்காக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த ஒரு வட கொரியக் கப்பலே ஆயுதங்களைக் கொண்டு வந்ததாக வதந்திகள் பரப்பினர். அதற்கு இன்னொரு காரணம் ஜே.வி.பியினர் கொழும்பிலிருந்த வட கொரியத் தூதரகத்திடமிருந்து சில திரைப்படங்களைப் பெற்று அதைத் திரையிட்டுத் தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியிருந்தனர்.

இன்னொரு பக்கத்தில் சீனாவையும் இந்தக் கிளர்ச்சியில் சம்பந்தப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விஜேவீர ஆரம்பத்தில் சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததால் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டது. அதன் காரணமாக சீனசார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நா.சண்முகதாசன், அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஆரியவன்ஸ குணசேகர, மலையக தோட்டத் தொழிலாளர் செங்கொடிச் சங்க தலைவர்களில் ஒருவரான ஓ.ஏ.இராமையா உட்படப் பலரைப் பொலிசார் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்தனர். வேறு பலரைத் தேடியும் வந்தனர்.

ஆனால் ஜே.வி.பியின் கிளர்ச்சி ஒரு எதிர்ப் புரட்சி நடவடிக்கை எனக் கண்டித்து சீனப் பிரதமர் சூ என் லாய் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததுடன், அந்த நேரத்தில் இலங்கைக்கு உதவும் பொருட்டு 15 கோடி ரூபாவை வட்டி இல்லாக் கடனாகவும் வழங்கியது.

இந்தக் கிளர்ச்சியைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்குள் இருந்த வலதுசாரி அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தலைமையிலான ஒரு குழுவினர் சிறீமாவோவை பதவியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றவும் திட்டமிட்டிருந்தனர். அவர்கள், ‘இந்த நெருக்கடியான நேரத்தில் சிறீமாவோ போன்ற ஒரு பெண்மணியால் நாட்டை நிர்வகிக்க முடியாது. பீலிக்ஸ் போன்ற உறுதியான ஒருவர்தான நாட்டை நிர்வகிக்கத் தகுதியானவர்’ என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். ஆனால் சிறீமாவோ தலைமையிலான முற்போக்கு சக்திகள் அதற்கு இடம் கொடாமல் அந்த முயற்சியை முறியடித்து விட்டனர்.

உண்மையில் விஜேவீர தன்னை மார்க்சிஸ – லெனினிஸவாதி என்று சொல்லிக்கொண்டாலும், அவர் இரண்டு விதமான சக்திகளால் பயன்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. விஜேவீர சோவியத் யூனியனில் இருந்து திரும்பித் தனது ஜே.வி.பியைத் தொடங்கிய காலம் இலங்கையிலும் உலகம் முழுவதும் சோவியத் அதிபபர் குருசேவின் நவீன திரிபுவாதத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, மாஓசேதுங் சிந்தனை எல்லோரையும் தீவிரமாக ஆகர்சித்திருந்த காலம்.

அதை முறியடிப்பதற்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி விஜேவீரவைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதற்கான சில சான்றுகள் உள்ளன. விஜேவீர தனது கட்சியின் சித்தாந்தமாக மார்க்சிஸ – லெனினிஸத்தை ஏற்பதற்குப் பதிலாக சேகுவாராவின் தத்துவங்களையே பின்பற்றினார். அதில் கவர்ச்சி ஏற்படுத்துவதற்காக தானே சேகுவேராவின் தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டார். மாஓசேதுங் சிந்தனை மக்கள் யுத்தப்பதையை வலியுறுத்துவது. சேகுவேரா ஒரு உண்மையான புரட்சிவாதியாக இருந்தபோதும் அவரது பாதை ஓரளவு குட்டி முதலாளித்துவ வீர சாகசச் செயல்களை ஒத்தது. அதனால்தான் மாஓசேதுங் சிந்தனையைப் பின்பற்றுபவர்களைத் திசைதிருப்புவதற்காக சோவியத் யூனியன் அந்தக் காலகட்டத்தில் சேகுவேராவின் ‘பொலிவியன் டைரி’யைத் திட்டமிட்டு வெளியிட்டது.

அடுத்ததாக, தொழிலாள வர்க்கமே ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைமைச் சக்தி என்பதும், தொழிலாளி – விவசாயி ஐக்கியமே புரட்சியின் அடிப்படை உந்து சக்தி என்பதுமே உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு. ஆனால் ஜே.வி.பி இளைஞர்களே புரட்சியின் அடிப்படைச் சக்தி என்ற குட்டி முதலாளித்துவச் சித்தாந்தத்தைப் பின்பற்றினார்கள். உண்மையில் இளைஞர்கள் எந்தவொரு விடயத்திலும் உற்சாகமான ஒரு சக்தியாகத் திகழுவார்கள் என்ற போதிலும், இளைஞர்கள் என்றொரு தனியான வர்க்கம் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.

இவற்றைவிட, ஜே.வி.பிக்கும் ஐ.தே.கவுக்கும் இடையிலான தொடர்பும் சந்தேகத்துக்கு உரியது. ஏனெனில் 1970 தேர்தலில் சிறீலங்கா – சமசமாஜ – கம்யூனிஸ்ட் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு உழைத்த ஜே.வி.பி, தேர்தல் முடிந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே, அரசாங்கம் மக்கள் மத்தியில் எதுவித வெறுப்பையும் சந்தித்திராத சூழலில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது சந்தேகத்துக்கு உரியது.

அத்துடன் 1971 ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கூட்டம் ஒன்றில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே.க தலைவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தான் இன்று ஒரு இளைஞனாக இருந்தால் ஜே.வி.பியில்தான் இருப்பேன் எனப் பேசியிருந்தார். அந்தப் பேச்சை அன்று ஜே.ஆரின் குடும்பப் பத்திரிகையாக இருந்த லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தது. அதே செய்தியை ஜே.வி.பி கிளர்ச்சியை ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஏப்ரல் 02ஆம் திகதி ;டெய்லி நியூஸ்’ மீண்டும் மறுபிரசுரம் செய்தது!

1971 ஏப்பிரல் கிளர்ச்சிக்கு முன்னதாக 27.02.1971 இல் கொழும்பிலுள்ள ஹைட் பார்க்கில் ரோகண விஜேவிர உரையாற்றுகிறார்

ஒரு பத்திரிகை, அதுவும் வலதுசாரிகளின் ஒரு பத்திரிகை தீவிர இடதுசாரிகள் என்று சொல்லப்படும் ஜே.வி.பியைப் புகழ்ந்து இலங்கையின் படு வலதுசாரிப் பிற்போக்குவாதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆரின் பேச்சை சில நாட்களுக்குள் இரண்டு தரம் திரும்பத் திரும்பப் பிரசுரித்ததின் மர்மம் அல்லது நோக்கம் என்ன? (ஜே.ஆர். 1977இல் ஆட்சிக்கு வந்ததும் விஜேவீரவையும் ஏனைய ஜே.வி.பித் தலைவர்களையும் உடனடியாகச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

அதுமாத்திரமில்லாமல் ஜே.வி.பியின் 71ஆம் ஆண்டுக் கிளர்ச்சியில் ஐ.தே.கவுக்கு இன்னொரு வகையிலும் பங்கு இருந்தது.

1965இல் ஐ.தே.க டட்லி சேனநாயக்க தலைமையில் ஏழு கட்சி ஆட்சி அமைத்தபோது, விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கென ‘விவசாயப்படை’ என்ற போர்வையில் ஐ.தே.கவுக்கு ஒரு குண்டர் படையை அமைத்தது. அதற்குப் பொறுப்பாக முன்னாள் இராணுவ கப்டனான செனவிரத்ன என்பவரை நியமித்தது. அந்த அரசில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளும் அங்கம் வகித்ததால், தமிழ் பகுதிகளில் அந்தப் படையில் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

1970 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அந்தப் படையைக் கலைத்த ஐ.தே.க அரசாங்கம் அதில் இணைந்திருந்த அனைவருக்கும் தலா 500 ரூபா வழங்கி சிங்களப் பகுதிகளில் ஐ.தே.கவுக்கும், தமிழ் பகுதிகளில் தமிழ் காங்கிரசுக்கும் (தமிழரசுக்கட்சி ஆறுமாதங்களுக்கு முன்னர் அரசிலிருந்து விலகியிருந்தது) தேர்தல் வேலை செய்யம்படி ஆலோசனையும் வழங்கி வீட்டுக்கு அனுப்பியது.

ஆனால் நடந்தது என்னவென்றால், ஐ.தே.க ஆதரவாளரான கப்டன் செனவிரத்ன கணிசமான சிங்கள விவசாயப்படை உறுப்பினர்களையும் சேர்த்தக்கொண்டு ஜே.வி.பியில் சேர்ந்து கொண்டார். அதில் சேர்ந்துகொண்ட அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

முடிவாகத் தொகுத்துப் பார்த்தால் ஜே.வி.பி என்னதான் தன்னை ஒரு மார்க்சிசக் கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அது ஒரு சிங்கள தேசியவாத குட்டி முதலாளித்துவக் கட்சி என்பதே உண்மையாகும். அதுமாத்திரமல்லாமல் அது முன்னர் சோவியத் திரிபுவாதிகளாலும், ஐ.தே.க பிற்போக்குவாதிகளாலும் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்சியுமாகும். அது வருங்காலத்தில் ஏகாதிபத்தியத்தாலும், மீண்டும் ஐ.தே.கவினாலும் பயன்படுத்தப்படலாம் என்பதை அதன் பிந்தைய வரலாறும் எடுத்துக் காட்டுகிறது.

இந்த வரலாற்றுப் படிப்பினைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, ஜே.வி.பியை அதற்கு உரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு உண்மையான மார்க்சிஸ – லெனனிஸவாதியினதும் கடமையாகும்.

(இக்கட்டுரை ஏப்ரல் கிளர்ச்சியின் 43வது நினைவுதினத்தை முன்னிட்டு வானவில் பத்திரிகையின் 40வது இதழில் வெளியானது)

Source: chakkaram.com April 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...