இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூரப்பட வேண்டும்-மரியம் சிக்கந்தர் (Maryam Sikander)


பிப்ரவரி 24, 2021

-

பெப்ரவரி 22: மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு

மௌலானா அபுல் கலாம் ஆசாத் விரக்தியில் இருக்கின்ற அந்தப் படத்தை பார்த்தபோது, முதுகெலும்பில்லாத தோரணையில் அந்த தலைவரை சித்தரிக்க வேண்டும் என்ற முடிவை அதை வரைந்த கார்ட்டூனிஸ்ட்  ஏன் மேற்கொண்டிருப்பார் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். பிரபல பத்திரிகையாளர் இர்ஷாத் ஹைதர் ஜைதியால் வரையப்பட்ட அந்த கார்ட்டூன் 1959 பிப்ரவரியில் உருது இதழான நுகூஷ் பத்திரிகையில் வெளியானது.

தேசப் பிரிவினை குறித்த மனவேதனையில் இருந்த ஆசாத்  1948ஆம் ஆண்டு தில்லி  ஜும்மா மசூதியில் ஆற்றிய உரை குறித்ததாக அந்தப் படம் இருக்கிறது.  ‘உனக்கு நினைவிலிருக்கிறதா? நான் உன்னைப் பாராட்டினேன், நீ என் நாக்கைத் துண்டித்து விட்டாய்; நான் என் பேனாவைத் தேர்ந்தெடுத்தேன், நீ என் கைகளைத் துண்டித்து விட்டாய்; நான் முன்னேற விரும்பினேன், நீ என் கால்களை உடைத்தாய்; நான் திரும்ப முயற்சித்தேன், நீ என் முதுகை உடைத்தாய்… இன்று என்னுடைய இருப்பு உயிரற்றதாக, நம்பிக்கையிழந்து  அழுகையுடன் இருக்கிறது. எனது சொந்த தாய்நாட்டிலேயே நான் இன்று அனாதையாக இருக்கிறேன்.   எனக்கென்று செய்து கொண்ட தேர்வில் நான் தோற்றுப் போய் விட்டதாக அர்த்தமில்லை. எனக்கான கூட்டிற்கு இங்கே இடமிருக்கவில்லை என்றும் நான் நினைக்கவில்லை. இதன் பொருள் என்னவென்றால், உன்னுடைய ஆணவம் நிறைந்த கைகள் என்னைச் சோர்வடையச் செய்திருக்கின்றன. என்னுடைய   உணர்திறன்கள் காயமடைந்துள்ளன, எனது   இதயம் கனத்துக் கிடக்கிறது’ என்று பிரிவினை குறித்து வருத்தமடைந்திருந்த ஆசாத் இந்திய முஸ்லீம்கள் தனது முதுகெலும்பை  உடைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.


The cartoon was published in the February 1959 issue of the Urdu magazine Nukush

அமைதியைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் தில்லி காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக   வளாகத்தை முற்றுகையிட்ட   ஒரு வாரத்திற்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நியாயமான கோபத்துடன் தொடர்ந்து   தெருக்களில்   குவிந்து கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய வீடு என்று நான் அழைக்கின்ற இடத்திலிருந்து 7,500கி.மீ தூரத்தில் லண்டனில் என்னுடைய பிஎச்.டி ஆய்வறிக்கையை எழுதிக் கொண்டிருக்கும் நான் சோம்பலில் இருந்து  விழித்தெழுந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   ஆறு மாதங்களை என்னுடைய களஆய்விற்காக நான் கழித்திருந்த ஜாகிர் ஹுசைன் நூலகத்தின்  ரத்தக்கறை படிந்த தாழ்வாரம் குறித்த   சித்திரத்தை என் மனதிலிருந்து அகற்றுவதற்கு இப்போது அதிகம் சிரமப்படுகிறேன். ஆசாத்தின் அந்தப்  படத்தை அந்த நூலகத்தில் இருக்கின்ற பத்திரிக்கை பிரிவில்  நான் பார்த்திருக்கிறேன்.

ஆசாத் இந்திய அரசாங்கத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் 1920இல் ஜாமியா மிலியா இஸ்லாமியாவை நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை குழுவின் உறுப்பினராகத்   தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931ஆம் ஆண்டில் தராசன சத்தியாக்கிரகத்தின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராக இருந்த ஆசாத் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை, இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை மிகவும் தீவிரமாக முன்னின்று வழிநடத்துபவராக இருந்தார்.   பெரும்பாலும்  முகம்மது அலி   ஜின்னாவால்  ‘காங்கிரஸ் கோமாளி’   என்றே  அழைக்கப்பட்டு வந்த ஆசாத்,  ஹிந்து-முஸ்லீம் நட்புறவின் மீதான தன்னுடைய நம்பிக்கையைத்   தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தார். ‘இந்தியன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்திய தேசியம் என்ற பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்.   இந்தியா என்ற உன்னதமான மாளிகைக்கு நான் மிகவும் இன்றியமையாதவன். நான் இல்லாமல் இந்த அற்புதமான அமைப்பு ஒருபோதும் முழுமையடையாது. இந்தியாவை உருவாக்கிய மிகமுக்கியமான பகுதியாக நான் இருக்கிறேன். ஒருபோதும் இந்தக் கூற்றை நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்’ என்று  1940ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Jawaharlal Nehru with Mahatma Gandhi and Abul Kalam Azad, Wardha, August 1935

ஆசாத், ஜின்னா இவர்கள் இருவரும் வெவ்வேறு உலகக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் தாங்கள் ஆதரித்து வந்த கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களாக இவர்கள் இருவரும் பின்னர் மாறிப் போயிருந்தார்கள்.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அவர்களுடைய ஆடைகளைக் கொண்டு அடையாளம் காண முடியும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நயவஞ்சகப் பேச்சின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, தங்களுடைய சித்தாந்தங்களை மாற்றிக் கொண்டாலும் ஆசாத், ஜின்னா இருவருமே தங்களுடைய  தோற்றத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரிய வரும்.

தார்ஸ் இ நிஜாமி இஸ்லாமிய பாடத்திட்டத்தை நிறைவு செய்து குர்ஆன், ஹதீஸ், தப்சீர், ஃபிக்ஹ் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவரும், இஸ்லாமிய இறையியலை மறுவிளக்கம் செய்கின்ற வகையில் மதரீதியாக ஒருங்கு சேர்க்கப்பட்ட பல நெறிமுறைகளைக் கொண்ட இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியதாக இருந்த முடிக்கப்படாத   நான்கு தொகுதிகளைக் கொண்ட   தர்ஜுமான்-உல்-குர்ஆனை எழுதியவரும், ஷெர்வானி அணிந்தவருமாக ஆசாத்  மதச்சார்பற்ற காங்கிரஸுடன் இணைந்து இந்திய தேசியவாதத்தை ஆதரித்துக் கொண்டிருந்தார். ஆனால் இஸ்லாத்தைப் பற்றிய  நிலைப்பாடு எதனையும் தன்னிடம் கொண்டிராதவரும், சவிலே ரோ சூட் அணிந்து கொண்டிருந்தவருமான ஜின்னாவோ இஸ்லாத்தின் பெயரால் புதியதொரு அரசை   உருவாக்குகின்ற திட்டத்தை முன்வைத்தவராக இருந்தார்.

 மெக்காவில் பக்தி, மதப் புலமை குறித்து அறியப்பட்டிருந்த குடும்பத்தில் 1888ஆம் ஆண்டு ஆசாத் பிறந்தார். சையித் குலாம் முஹியுதீன் என்பது அவரது இயற்பெயர். சயீத் அஹ்மத் கான், ஷிப்லி நோமணி, ஜமாலுதீன் ஆப்கானி போன்ற அறிஞர்களின் படைப்புகளை வாசித்த போது ஆசாத்தின் சிந்தனையில் முதல் மாற்றம் ஏற்பட்டது.   ‘முஸ்லீம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்ற இஸ்லாமியம்’ என்ற கருத்து   ஆரம்பத்தில் அவரை மிகவும்  கவர்ந்தது.   முஸ்லீம்லீக்கில் 1913ஆம் ஆண்டு சேர்ந்த ஆசாத் 1920  வரையிலும்   அதில் உறுப்பினராக   இருந்தார். அந்த காலகட்டத்தில்  மௌலானா ஹுசைன் அஹ்மத் மதானியுடன் 1919இல் இணைந்து ஜாமியத் உல் உலமா இ ஹிந்த் உருவாக்கப்படுவதற்கான உந்துசக்தியாக ஆசாத் இருந்து வந்தார்.

அரபு, பாரசீகம், உருது, துருக்கி மொழிகளை நன்கு அறிந்திருந்த ஆசாத் பிஞ்சிலே முதிர்ந்தவராக   பத்திரிகை தொடர்பான திறன்கள் அனைத்தையும் கொண்டிருந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே தனது முதல் செய்தித்தாள் அல்-மிஸ்பாவை அவர் தொடங்கினார். 1903ஆம் ஆண்டில் ஆசாத்தின் மாத இதழான லிசான்  உஸ் சிட்க் (சத்தியத்தின் குரல்) மிகவும் பிரபலமடைந்திருந்தது.

முஸ்லீம்களின் மறுமலர்ச்சி மற்றும் உலக அளவில் அவர்களின் அரசியலுக்கான சவால்கள் ஆகியவற்றின் மீதே ஆசாத்தின் கவனம் இருந்து வந்தது. பிரிட்டிஷ் எதிர்ப்பு  நிலைப்பாட்டை காரணம் காட்டி அவர் நடத்தி வந்த அல்-ஹிலால், அல்-பாலாக் ஆகிய பத்திரிகைகளை 1914ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது. தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசாத் இந்திய பாதுகாப்புச் சட்டவிதிகளின் கீழ் வங்காளத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். 1920இல் ராஞ்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஆசாத்தின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. காந்தியைச் சந்தித்த அவர் கிலாபத் இயக்கத் தலைவர்களுடன் கைகோர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த ஆசாத் முஸ்லிம் லீக்கிலிருந்து விலகினார்.

 கலாச்சார நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, சுதந்திரம் குறித்த புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட ஆசாத் முழு மனதுடன் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். 1923ஆம் ஆண்டு தில்லி யில் நடந்த காங்கிரஸின் சிறப்பு  அமர்வுக்கு  அவர் தலைமை தாங்கினார்.

Congress leader Maulana Abul Kalam Azad (second right) talking with the British Cabinet Mission, left-right: Lord Pethwick-Lawrence (right) Mr Alexander (left) and Sir Stafford Cripps, 1946

1924 மார்ச் மாதம் ஒஸ்மான்லி கலிபாவை கேமலிஸ்ட் ஒழித்ததன் மூலம் தூண்டப்பட்ட, ஆங்கிலேயர்களுக்கு  எதிராக அனைவரையும் ஒன்றிணைக்கின்ற இஸ்லாமியத்திற்கு எதிரான ஒற்றுமைக்காக அல் ஹிலால்   மற்றும் அல்-பாலாக்  பத்திரிக்கைகளை நடத்தி வந்தது மாறி இப்போது மதச்சார்பற்ற தேசம், மத ஒற்றுமை போன்ற புதிய மரபுத்தொடர்களால் ஆசாத் வாழ்க்கை நிரம்பியது.   1940ஆம் ஆண்டு ஆற்றிய ராம்கர் உரையில் இந்திய வரலாற்றை அவர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர்   நெருக்கமாக   ஒத்து வாழ்ந்த  கூட்டுவாழ்வு  என்றே விவரித்திருந்தார்.

தீவிர அரசியலில் காந்தியின் நுழைவு ஆசாத்தின் அரசியல் பார்வையில் கடல் அளவு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த அதே வேளையில் ஒரு காலத்தில் ‘ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்’ என்று அழைக்கப்பட்ட ஜின்னா முஸ்லீம் தேசியவாதியாக, பிராந்திய தேசியவாதியாக மாறினார். 1929ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் முஸ்லீம் நலன்களைப் பாதுகாப்பதற்கென்று பதினான்கு கோரிக்கைகளை ஆசாத் அறிவித்தார்.   இந்த இரண்டு தலைவர்களில் தங்கள் பார்வையை முழுமையாக உணர்ந்து கொள்வதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது எளிதான பதில்கள் இல்லாத கேள்வியாகவே இருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நாட்டு மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடம் பலத்த எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இந்த சட்டம் ஏற்படுத்தப் போகின்ற தாக்கங்கள் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை  என்றாலும், இந்திய குடிமக்கள் பலரும் அது மிகவும் மோசமானதாகவே மாறக்கூடும்  என்று கவலைப்படுகிறார்கள்.

2020 டிசம்பர் 20 அன்று வெள்ளிக்கிழமை நடந்த தொழுகைக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கானவர்களின் முழக்கங்களுக்கிடையே ஜும்மா மசூதியில் மற்றொரு ஆசாத்   தோன்றினார். பீம் சேனாவின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது கையில் வைத்திருந்த இந்திய அரசியலமைப்பிலிருந்து சில பத்திகளை அப்போது வாசித்தார். அந்த மசூதியில் இருந்துதான்  மௌலானா ஆசாத்   ‘நீங்கள் எங்கே போகிறீர்கள், ஏன் போகிறீர்கள்?  உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள். ஜும்மா மசூதியின் மினார்கள் உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றன. உங்கள் வரலாற்றுப் பட்டியலில் இருந்த புகழ்பெற்ற பக்கங்களை எங்கே நீங்கள் தொலைத்தீர்கள்?  உங்கள் வணிகர் கூட்டம் நேற்று யமுனைக் கரையில் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டது உண்மை இல்லையா?’ என்று பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லீம்களிடம்  தன்னுடைய கேள்விகளை முன்வைத்தார்.

தில்லி ஜும்மா மசூதிக்கு அருகேதான்  மௌலானா ஆசாத்  புதைக்கப்பட்டார். அவருக்கு அருகே ஜும்மா மசூதியைத் தாண்டி பதினாறாம் நூற்றாண்டின் ஆர்மீனிய ஆன்மீகக் கவிஞரான சர்மத் கஷானி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவிற்கு வந்த அவரிடமிருந்த வழக்கத்திற்கு மாறான  மதக் கருத்துக்கள், பேச்சு சுதந்திரத்தால் அவுரங்கசீப் அவரது வாழ்க்கையை முடித்து வைத்தார். அவரைப் பற்றி மிக நேர்த்தியாக தனது ஹயாத் இ சர்மத் ஷாஹீத்தில் ஆசாத் எழுதியுள்ளார்.  அவர் மூலமாகவே  அபுல் கலாம் (பேச்சின் தந்தை) என்றும் ஆசாத் (சுதந்திரம்) என்றும் ஆசாத்   அடையாளம் காணப்பட்டார்.

தலை துண்டிக்கப்படுவதற்கு முன்பாக சர்மத் ‘கூச்சல் எழுந்தது, ஆழ்ந்த   தூக்கத்திலிருந்த நாம் கண்களைத் திறந்தோம்; துன்மார்க்கத்தின்  இரவு நீடிக்கிறது என்பதைக் கண்ட நாம் மீண்டும்  தூங்கிப் போனோம்’ என்ற  பாரசீகக் கவிதையை இயற்றினார். அந்த வாள்  சர்மத் மீது   விழுந்தது. இந்த துயரம் எப்போது முடிவடையும் என்று யாருக்குத் தெரியும்? இந்த கூச்சல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எச்சரித்து மக்களை எழுப்பி துண்டாடப்படாமல் நமது தலைகளைப் பாதுகாக்குமா?   சகோதரர்களே, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். ‘மாற்றத்திற்கு நாங்கள் தயாராக இல்லை’ என்று மட்டும் சொல்லாதீர்கள். தயாராகுங்கள். நட்சத்திரங்கள் வீழ்ந்திருக்கலாம், ஆனால் சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது.  சூரியனிடமிருந்து சில கதிர்களை கடன் வாங்கி, அவற்றை உங்கள் வாழ்க்கையின் இருண்ட குகைகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்ற உணர்ச்சிவசப்பட்ட ஆசாத்தின் வேண்டுகோள்களை ஜும்மா மசூதியின் மினாரெட்டுகள் இன்றும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

மதரீதியாக பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த பாகிஸ்தான் ட்விட்டர் பயனாளிகள்  #ThankYouJinnah  என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தினர். ‘பாகிஸ்தான் உருவாவதை எதிர்க்கின்ற முஸ்லீம்கள் இந்தியாவிடம் தங்களுடைய விசுவாசத்தைக் காட்டி நிரூபிப்பதற்காக தங்களுடைய வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டியிருக்கும்’ என்று ஜின்னாவை மேற்கோள் காட்டி நூற்றுக்கணக்கான சமூக ஊடகப் பதிவுகள் விவரித்திருந்தன.

நமது இதயங்கள் கனக்கின்றன. முதுகெலும்பு நொறுக்கப்பட்ட ஆசாத் மற்றும் இந்தியாவின் மதச்சார்பின்மை பிம்பங்கள் நம்மை உற்றுப் பார்க்கின்றன. மதச்சார்பற்ற இந்தியாவின் முதுகெலும்பை நேர்நிறுத்துவதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்த வேளையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் நினைவாக 2020 ஜனவரி 18 அன்று எழுதப்பட்ட கட்டுரை

மூலம்: In an era of citizenship debates, recalling Maulana Azad and the fight for India’s secular backbone
தமிழில்: தா.சந்திரகுரு

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...