மார்ச் 23ஆம் திகதி ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, மேற்கு ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலகின் பலம் வாய்ந்த வலதுசாரி முதலாளித்துவ நாடுகளால் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. தீர்மானத்தை எதிர்த்து 11 நாடுகள் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதாவது, 47 நாடுகளில் அரைவாசிக்கும் குறைவான 22 நாடுகளின் ஆதரவுடன்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தீர்மானம் கொண்டு வந்தவர்களின் நோக்கம் உண்மையில் தோல்வி கண்டுள்ளது.

தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகளும், அதை ஆதரித்து வாக்களித்தவர்களும், மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளும், அவற்றிற்கு வால்பிடிக்கும் பிற்போக்கு நாடுகளுமாகும். அதேநேரத்தில் தீர்மானத்தை எதிர்த்த நாடுகளில் சீனா, ரஸ்யா, கியூபா, வெனிசூலா போன்ற சோசலிச நாடுகளும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளும் உள்ளடங்குகின்றன.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளில் இந்தியா, யப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் முக்கியமானவை. இந்தியாவின் முடிவு இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழ் நாட்டிலும் வாழும் பிற்போக்குத் தமிழ் தேசியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக்
கொடுத்துள்ளது.

ஏனெனில், தமிழ் நாட்டில் தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அதிமுகவுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள மோடியின் அரசாங்கம் சந்தர்ப்பவாத ரீதியில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் எனப் பலர் நம்பியிருந்தனர். பாராளுமன்ற சந்தர்ப்பவாதிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஸ்ணன் கூட இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் என்றால், தமிழ் தேசியர்களின் எதிர்பார்ப்பு எப்படியிருந்திருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஆனால், இந்திய முதலாளித்துவ விஸ்தரிப்புவாத அரசைப் பொறுத்தவரையில், ஒரு மாநிலத் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, அயல் நாடொன்றைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது அதன் பூகோள அரசியலுக்கும், யுத்த தந்திரத்துக்கும் முக்கியமானது என்பதை உணர்ந்தபடியால்தான், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த விடயம் கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டு வானத்தை அளவிடும் தமிழ் தேசியர்களுக்கு ஒருபோதும் விளங்கப் போவதில்லை.

இந்தத் தீர்மான வாக்களிப்பின் போது இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. அதாவது, 47 நாடுகளில் 9 நாடுகள் ஆசிய நாடுகள். ஆனால் அமெரிக்க கைப்பொம்மையான தென் கொரியாவைத் தவிர வேறெந்த ஆசிய நாடும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை. வருங்கால உலகம் ஆசியாவில்தான் தங்கியிருக்கிறது என்ற யதார்த்தத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, தற்பொழுதே உலகம் மேற்கு கிழக்காக பிரிந்து நிற்பது துல்லியமாகத் தெரிகிறது.

‘இலங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் அரச படைகள் போர்க் குற்றங்களை இழைத்துள்ளன’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. அதன் மூலம் தம்மை பெரிய மனித உரிமைவாதிகளாகக் காட்டிக்கொள்ள முயல்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

மேற்கு நாடுகள் உண்மையில் மனித உரிமைகளினதும், ஜனநாயகத்தினதும் பாதுகாவலர்கள் என்றால், முதலில் அமெரிக்கா வியட்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், லிபியாவிலும், சிரியாவிலும் வேறு பல நாடுகளிலும் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற மனிதப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் முதலில் விசாரிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த நாடுகளான பிரித்தானியா தனது காலனி நாடுகளில் மேற்கொண்ட கொடுமைகளையும், மேற்கு ஜெர்மனியின் நாஜிகள் மேற்கொண்ட நாசகாரச் செயல்களையும், கனடா தனது நாட்டில் பழங்குடியினருக்கு எதிராக இன அழிப்பு, சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் கூட விசாரிக்க வேண்டும்.

அப்படி தம்மைத் தாமே விசாரிப்பதற்கு இந்த நாடுகள் ஒருபோதும் தயாரில்லை. தாமே வரலாறு காணாத கொடுமைகளை மனித குலத்துக்கு எதிராக இழைத்துவிட்டு, சினனஞ்சிறிய நாடான இலங்கை பாசிசப் பயங்கரவாத பிரிவினைவாத இயக்கம் ஒன்றை பல வருட முயற்சியில் வெற்றிகரமாக ஒழித்துக்கட்டியதைச் சாக்காக வைத்து தமது அந்தரங்க அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு போடும் நாடகமே இந்த மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள்.

நாளைக்கே இலங்கை இந்த ஏகாதிபத்திய – முதலாளித்துவ நாடுகளுக்கு இசைவான ஒரு தளமாக தனது நாட்டைப் பயன்படுத்த அனுமதிக்குமாக இருந்தால், இந்த இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எல்லாம் அவர்களே குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விடுவார்கள்.

இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை இவர்கள் கொண்டு வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இலங்கை இவர்களது ஆதிக்கத்துக்கு கட்டுப்பட மறுப்பது. இரண்டாவது, ஒரு சுதந்திரமான நாடு என்ற வகையில் சகல நாடுகளுடனும் சமமான நட்புறவைப் பேண விரும்புவது. மூன்றாவது, ஒரு நீண்டகால நட்பு நாடென்ற வகையிலும், தன்னலம் கருதாது உதவி செய்து வருகின்ற நாடு என்ற வகையிலும் சீனாவின் பொருளாதார உதவிகளைப் பெறுவதை விரும்பாதது என்பனவற்றுடன் இன்னொரு காரணமும் இருக்கிறது.

அதாவது, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகளில் இரண்டு நாடுகளான கனடாவிலும், பிரித்தானியாவிலும் கணிசமான புலம்பெயர் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் சிலர் இந்த நாடுகளிலுள்ள பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து வேலை செய்வதுடன், அங்குள்ள தமிழர்களின் வாக்குகளையும் இக்கட்சிகளுக்குப் பெற்றுக் கொடுக்கிறார்கள். உதாரணமாக, சுமார் 3 கோடி சனத்தொகை கொண்ட கனடாவில் 3 லட்சம் பேர் வரையிலான தமிழர்கள் வாழ்கிறார்கள். அதாவது, மொத்த சனத்தொகையில் 3 வீதம் பேர். எனவே, இந்தத் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கமும் இந்தத் தீர்மானங்களில் உள்ளடங்கி இருக்கிறது.

எது எப்படியிருப்பினும், இத்தகைய தீர்மானங்களை வைத்துக்கொண்டு இலங்கையை மிரட்டலாமே தவிர, தங்களது நோக்கங்கள் எதனையும் அவர்களால் நிறைவேற்ற முடியாது. இந்தத் தீர்மானங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவை கடந்த காலங்களில் பல்வேறு நாடுகள் குறித்து நிறைவேற்றிய பல தீர்மானங்களைப் போலவே கடதாசிகளில் மட்டுமே உயிர் வாழப்போவன. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் நாம் சொல்ல வேண்டிய சில விடயங்கள் உள்ளன. இலங்கை அரசாங்கம் இலங்கையில் வாழ்கின்ற சகல இனங்களையும், சகல மதங்களையும், சகல பிரதேசங்களையும் சேர்ந்த மக்களது உரிமைகளை மதித்துப் பேணுவதுடன், அவர்களைப் பாகுபாடின்றி சமமாக நடத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலமே இந்த மாதிரியான தேவையற்ற ஏகாதிபத்தியத் தலையீடுகளைத் தவிர்க்க முடியும்.

Courtesy : வானவில் இதழ் 123 ( 26 March 2021)