மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் விதண்டாவாதம்!

இலங்கையின் தற்போதைய அரசாங்கம்  இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்களினதும் மதங்களினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மோசமாக மீறி வருகிறது என மேற்கு நாடுகளும், ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையும், மேற்கு நாடுகளின் தாளத்துக்கு ஏற்ப ஆடும் பல்வேறு சர்வதேச ‘மனித உரிமை’ அமைப்புகளும் சர்வசதா வாய் ஓயாமல்பிரச்சாரம் செயது வருகின்றன.இந்த நிலைமையில், இலங்கையில் மத, இன, சமூக ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்களைக் கைது செய்து இரண்டு வருடங்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் மார்ச் 9ஆம் திகதிபிறப்பித்திருந்தது. இந்தச் சட்டத்தின்படி, எவராவது வார்த்தைகள் மூலமோ,எழுத்து வடிவிலோ அல்லது காட்சிப்படுத்தல் மூலமோ இன, மத,சமூகங்களுக்கிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்தி, மோதல்களைத் தூண்டினால், அவர்களைக் கைது செய்து ஒரு வருட காலத்துக்கு புனர்வாழ்வளிப்பதற்கு வகை செய்யப்பட்டிருந்தது. தேவையேற்படின் புனர்வாழ்வுக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு ஜனாதிபதியால் நீடிக்க முடியும்.

இந்த நிலைமையில், இந்தச் சட்டம்மக்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும்,அதனால் அதை உடனடியாக திரும்பப் பெறுமாறும்,அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ‘மனித உரிமைக் கண்காணிப்பகம்’ வலியுறுத்தியிருக்கிறது.


மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் வேண்டுதலைப் பார்க்கும்போது,அவர்களின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களினதும் மதங்களினதும்உரிமைகள் மீறப்படக்கூடாது என வலியுறுத்தும் மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள், மறுபக்கத்தில் அதை மீறிச்செயற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கூறுகின்றன.இது ‘தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளிவிடும்’செயலேயன்றி வேறொன்றுமில்லை.

கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யும்படி கோருவதை விடுத்து, முழுச் சட்டத்தையுமே திரும்பப் பெறும்படி கோருவது, அப்பட்டமான விரோத நடவடிக்கையாகும். உண்மை என்னவெனில், ஏகாதிபத்திய சக்திகளின் வளர்ப்புப் பிள்ளைகளான இந்த மனித உரிமை அமைப்புகளுக்கு தமக்குப் பிடிக்காத நாடுகளில் ஏதாவதொரு வகையில் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும்என்பதுதான் விருப்பமாகும்.

Source: Vanavil 123 (26/03/2021) 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...