இறுதி யுத்த நேரத்தில் இறந்தவர்களின் உண்மையான தொகை என்ன? சண்முகப்பிரியா


முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் மட்டுமின்றி, கணிசமான பொதுமக்களும் பலியாகியுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் சொல்லும் இறந்த பொதுமக்களின் தொகைதான் ஆளாளுக்கு மாறுபடுகிறது.

இலங்கைத் தமிழ் தேசியர்களும், தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழ் தேசியர்களான வைகோ, சீமான் போன்றவர்களும் இறந்த பொதுமக்களின் தொகையை இலட்சக்கணக்கில் சொல்கிறார்கள். அரசியலில் எப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்களோ அதுபோல இந்த விடயத்திலும் கண்ணை மூடிக்கொண்டு தமது மன விருப்பப்படி கணக்குச் சொல்கிறார்கள். தமிழ் தேசியர்களின் கணக்கை ஒருபக்கம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், உலக அமைப்பான ஐ.நாவும் இறுதி யுத்த நேரத்தில் நாற்பதினாயிரம் வரையான பொதுமக்கள் இறந்ததாகச் சொல்லியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை அரசாங்கம் இதை மறுக்கிறது. எனவே ஐ.நா. இந்தப் புள்ளிவிபரத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டது என்ற விபரத்தை வெளியிடுவது அவசியம். அப்பொழுதுதான் அதன் நம்பகத்தன்மையை எடைபோட்டுப் பார்க்க முடியும். 


Photo: Xcitefun 


ஏனெனில், நாம் அறிந்த வரையில் இலங்கை அரசாங்கமோ, பொது அமைப்புகளோ, ஐ.நாவோ இறந்தவர்கள் சம்பந்தமாக ஆராய்வோ அல்லது கணக்கெடுப்பு எதுவுமோ நடத்தியதாகத் தெரியவில்லை. இறுதி யுத்த நேரத்தில் புலிகளால் முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்கள் பெரும்பாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இந்த இரு மாவட்டங்களையும் பொறுத்தவரை மொத்தமாக 231 கிராம அலுவலர்கள் பிரிவுகள் உள்ளன. அத்துடன் இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 2 இலட்சத்து 4 ஆயிரத்து 822 மக்கள் வாழ்கிறார்கள். இதில் நாற்பதினாயிரம் பேர் கொல்லப்பட்ட கணக்கை வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் சராசரியாக 173 பேர் இறந்திருக்க வேண்டும். அல்லது மொத்தச் சனத்தொகையில் 20 சதவீதம் பேர் வரையில் இறந்திருக்க வேண்டும். எனவே இது ஒரு பாரதூரமான விடயம். ஒரு சிறிய நிலப்பரப்பில் (சுமார் 25 சதுர கிலோமீற்றர்) பல்லாயிரக்கணக்கானோர கொல்லப்பட்டிருந்தால், இறந்த அவ்வளவு தொகை மக்களின் உடல்களைக் கடந்து இராணுவம் முன்நோக்கிச் செல்லவதென்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். மேலும் இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காகவே இராணுவம் இன்னுமொரு படைப் பிரிவை ஈடுபடுத்தியிருக்க வேண்டிய தேவையும் இருந்திருக்கும்.


இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. முள்ளிவாய்க்காலில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள்தான் இந்த மக்கள் இருந்திருக்கிறார்கள். இறந்ததாக ஐ.நா. சொல்லும் நாற்பதினாயிரம் பேரும் தனித்தனியாக இருந்து  தாக்குதலுக்குள்ளாகி இறந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன, சொந்த பந்தங்களுடன், சக ஊரவர்களுடன்தான் கூட்டமாக இருந்திருப்பார்கள். அப்படிப் பார்த்தால் இறந்த ஒவ்வொருவருக்கும் அருகில் இருந்த குறைந்தது 5 பேராவது காயமடைந்திருப்பார்கள். அதன்படி சுமார் 2 இலட்சம் பேர் காயமடைந்திருக்க வாய்ப்புண்டு. அப்படிக் காயமடைந்தவர்களுக்கு என்ன நடந்தது?

அந்த நேரத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பல் மொத்தம் எத்தனை பேரை ஏற்றிச் சென்றது? இப்படியான விடை காணப்படாத பல கேள்விகள் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகியும் தொடர்கின்றன.

இலங்கை அரசாங்கமோ, பொது அமைப்புகளோ அல்லது ஐ.நாவோ இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள கிராம அலுவலர்கள் பிரிவு வாரியாக இலகுவாக கணக்கெடுப்பு நடத்தி இறந்தவர்களின் தொகையை மதிப்பீடு செய்யலாமே? அதன் மூலம் இறந்தவர்களின் உண்மையான தொகையைக் கண்டறிவதுடன்,அவர்களது குடும்பங்களுக்காவது இழப்பீடு வழங்கலாமே? ஏன் இன்னமும் அதைச் செய்கிறார்கள் இல்லை? ஏதாவது உள்நோக்கம் காரணமா?

நிலைமையைப் பார்க்கையில் எல்லாத் தரப்பினரும் இந்தப் பிரச்சினையை மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு அரசியல் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

Source: Vanavil 123 (March 2021) 

-

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...