கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர் -


மார்ச் 12, 2021


லங்கைத் திருநாட்டின் கீர்த்தி மிகு பேரறிஞர்’ ஏ.எம்.ஏ. அஸீஸ் (A.M.A. Azeez) , 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரபல கல்லூரிகளில் தன்னுடைய ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்ற அன்னார், 1933ஆம் ஆண்டில், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் இளமானிப் பட்டத்தைப் பெற்றார். அதி உயர்மட்டத்தில் மதிக்கப்பட்டதும், பெறுதற்கரிதுமான இலங்கை சிவில் சேவைப் பரீட்சையில் 1935 ஆம் ஆண்டில் சிறப்பாகச் சித்தி பெற்ற முதலாவது முஸ்லிம் சிவில் நிர்வாக அதிகாரியாகத் திகழ்ந்த அவர், இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் 13 வருடங்கள் மக்கள் பணிகளில் மேன்மையாக நிறைவு செய்தவராக விளங்கினார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற உந்துதலினால் இலங்கை நிர்வாக சேவையிலிருந்து 1948ஆம் ஆண்டில் இராஜினாமாச் செய்து, ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒரு தசாப்த காலத்திற்கு மேலாகத் தன்னுடைய தளராத உழைப்பினாலும், தலைசிறந்த தலைமைத்துவத்தினாலும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியை தேசத்தின் முதன்நிலைக் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ வைத்தார். 1952 ஆம் ஆண்டில் இலங்கை செனெற் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸீஸ், அச்சபையில் நிகழ்த்திய பேருரைகள், தன்னுடைய தாய்நாடும் அங்கே வாழும் மக்களும் மேன்மை நிலைக்கு உயர வேண்டுமென்ற உண்மையான உளப்பாங்கை உணர்த்துபவையாக விளங்கின. அவர் தேசத்திற்கும், சமூகங்களுக்கும் ஆற்றிய அரும்பெரும் சேவை அனைவராலும் ஏற்றுப் போற்றப்பட்டதுடன், அனைத்துச் சமூகங்களினாலும் மதிக்கப்பட்ட ஒரு மேதையாகவும் விளங்கினார்.  


பிரபல நிர்வாகியும், கல்விமானுமாகிய சுசில் சிறிவர்தன, அஸிஸ் பற்றிய தன்னுடைய ஆக்கம் ஒன்றில், அஸீஸின் கருத்துக்களும், செயல்களும் நம்முடைய தேசம், பல்லின, பல்மத பல்மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற நாடாகக் கட்டி எழுப்பப்பட வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டிருந்தமையால், அஸீஸ் ஒரு “தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற திலகம்” எனச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார். சமூகங்களின் ஒன்றிணைப்பை வளர்ப்பதற்கு ஏனைய சமூகத் தலைவர்கள், அறிவாளிகள், தொழில்வல்லுநர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அவருக்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தன.  

அஸீஸ் ஒரு விமர்சகராகவும், பகுத்தறிந்து ஆராய்பவராகவும் விளங்கினார். ஆனால் எவருடனும் முரண்படுபவராக அவர் இருந்ததில்லை. இலங்கை முஸ்லிம்களின் மனோநிலை உருவாக்கியவர்களில் ஒருவராக நான் அவரைக் கருதுகின்றேன். அறிஞர் சித்திலெப்பைக்குப் பின்பு முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய செல்வாக்குச் செலுத்திய மாபெரும் அறிவாளியாக அவர் விளங்கினார். தன்னுடைய சிந்தனையினாலும், செயலினாலும் அவர் வாழ்ந்த காலத்து ஏனைய முஸ்லிம் தலைவர்களிலிருந்து நவீன அணுகுமுறைகளைக் கொண்டிருந்தார். பரம்பரைப் பழக்கவழக்கங்களுடன் நவீனத்துவத்தையும் ஒன்றிணைக்க அவர் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார். அவர் ஒரு யதார்த்தவாதியாகத் திகழ்ந்ததுடன், தன்னுடைய சமூகம் தொடர்ச்சியான முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நியாயபூர்வ சிந்தனையுடையவராக விளங்கினார்.  

பின்தங்கி வாழ்ந்த முஸ்லிம் சமூகம் எழுச்சி பெற்று முன்செல்வதற்கும், சமூகத்தில் முன்நகர்வுகளை அடைவதற்கும் ஒரே வழிமுறை நவீன கல்வி முறைமைகளை மேற்கொள்ளல் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்துவதற்குத் தீவிரமாகச் சிந்தித்தார். இதைச் செயற்படுத்திய முதற்படியாக 1942இல் தாம் கல்முனையில் உதவி அரசாங்க அதிபராகச் சேவையாற்றியபோது, தோற்றுவிக்கப்பட்ட கல்முனை முஸ்லிம் கல்விச்சபை, 1945இல் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியம் என்ற பெயரில் பரிமளித்தது. இந்நிதியம் வசதி குன்றிய ஆயிரக்கணக்கிலான முஸ்லிம் மாணவர்கள், தங்களுடைய உயர் கல்வியைத் தொடர நிதி உதவிகள் செய்ததுடன், இன்றும் இப்பணி தொடரப்பட்டு வருகின்றது.  

முஸ்லிம் சமூகம் கல்வியில் முன்னேறுவதற்கும், ஏனைய சமூகங்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கும் பொருத்தமான கல்விப் போதனை மொழி அவசியம் என்பதை அஸீஸ் உணர்ந்தார். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மற்றும் மொழி சம்பந்தமாக 1940ஆம் வருட காலப்பகுதியிலிருந்தே தொடர்ச்சியாக எழுதியும், உரைகள் நிகழ்த்தியும் வந்துள்ளார். அன்னார் நம்மை விட்டுப் பிரிந்த 1973ஆம் ஆண்டிலிருந்து நாற்பத்தாறு வருடங்கள் கடந்த நிலையிலும், அவருடைய கருத்துக்கள் இப்போதைக்குப் பொருந்துவதாக இருப்பினும், முஸ்லிம்களின் கல்வி மற்றும் மொழி தொடர்புடைய தடுமாற்றம் கடந்த நூறு வருடங்களாகத் தொடர்ந்து கொண்டே உள்ளது.  

மொழி மற்றும் கல்வி ஆகிய இவை இரண்டும் இயல்பாகவே இணைந்திருக்கின்றன. ஒரு மொழி ஊடாக நாங்கள் கல்வியைப் பெறுவதுடன், அறிவைச் சேகரித்துக் கொள்வதும் மொழி மூலமாகவே. ஒரு சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் அரசியல் வாழ்க்கையுடன் மொழி நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது. ஒரு முழுமையான சமூகத்தின் சமூக மற்றும் கலாசார முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு முக்கியமான காட்டியாகக் கல்வி அமைகின்றது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அறிவைக் கல்வி வழங்குவதுடன், அவர்களின் வாழ்க்கை நன்றாக அமையவும் கல்வி வழியமைக்கின்றது. கல்வித்துறையிலும் மொழி தொடர்பான விடயங்களிலும் அஸீஸ் அளப்பரிய சேவையையாற்றியுள்ளார்கள்.  

இலங்கையில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற இலங்கை முஸ்லிம்கள், வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமல்லாமல், சிங்கள மொழி பெரிதும் பேசப்படுகின்ற தென்னிலங்கையில் அங்கும் இங்குமாகப் பரந்துள்ள கிராமங்களில் வாழுகின்ற முஸ்லிம்களும் தமிழ் மொழியையே பேசுகின்றனர். இருப்பினும், கொழும்பு வாழ் மேலிட முஸ்லிம்கள், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் காரணிகளுக்காகத் தமிழைத் தாய்மொழியாக ஏற்கத் தயக்கம் காட்டினார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த தமிழ் சமூகத்திடமிருந்து, தாம் ஒரு வேறுபட்ட இனம் எனக் காட்டிக்கொள்வதற்கும், இந்நிலைமை உபயோகிக்கப்பட்டது. அவர்களில் சிலர், அரபு மொழி முஸ்லிம்களின் தாய்மொழியாக இருக்க வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டதுடன், இன்னும் சிலர், சிங்களம் அல்லது ஆங்கிலம் தாய்மொழியாக இருத்தல் வேண்டுமென்றும் முயற்சித்தனர். இருப்பினும் எ.எம்.எ. அஸீஸ் தமிழ் மொழியே முஸ்லிம்களின் தாய்மொழியாக இருத்தல் வேண்டுமென உக்கிரமமாக வாதிட்டார். “இலங்கை முஸ்லிம்கள் மற்றும் தாய்மொழி: தமிழ் மொழியே முஸ்லிம்களின் கோரிக்கை” எனும் தலைப்பில் 1941ஆம் ஆண்டில் ஓர் ஆக்கத்தை எழுதினார்.  

தாய்மொழியை அவர் பின்வருமாறு விபரித்தார்: “தாய் தன் குழந்தையுடன் பேசுகின்ற மொழி. கணவன் மற்றும் மனைவி தம்மிடையேயும், தங்கள் பிள்ளைகளிடமும் பரிமாறிக்கொள்ளும் மொழி. பொதுவாக ஒரு சமூகத்தின் தாய்மொழி எது என்ற சந்தேகம் எழவே கூடாது. அநேக முஸ்லிம்கள் இரு மொழிகள் பேசக்கூடியவர்களாக இருப்பதாலும், தற்போதைய நிலைமையில் சிலர் திருப்தியடையாத காரணத்தாலும், ஒரு புதிய தாய்மொழியை நாடுகின்றனர். சிலர் அரபு மொழியையும், வேறு சிலர் சிங்கள மொழியையும், இன்னும் சிலர் ஆங்கில மொழியையும் தாய்மொழியாக விரும்புகின்றார்கள். இவர்கள் எவரும் தமிழ்மொழியின் எதிர்காலம் பற்றி எதுவித சந்தேகமும் நிலவாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல”.  

தொடர்ந்தும் அவர் கூறுகிறார் “முஸ்லிம் சமூகத்தின் எதிா்காலக் கல்வி மற்றும் கலாசார விழுமியங்கள் பின்னிப் பிணைந்துள்ள இந்த மொழி பற்றிய அதிமுக்கிய விடயம் குறித்து ஓரளவு சந்தேகம் மற்றும் தெளிவின்மை தோன்றியிருப்பது துரதிர்ஷ்ட நிலைமையாகும். இலங்கைச் சோனகர்களின் தாய்மொழி எது எனும் பிரச்சினை கடினமானது அல்ல திட்டவட்டமாக அது தமிழ்மொழியே. வடக்கிலும், கிழக்கிலும் வாழுகின்ற சோனகர்கள் தமிழ்மொழியையே பேசுகின்றார்கள். அவர்களில் எவருக்காவது வேறொரு மொழி தெரிந்திருக்குமெனில், அது தமிழ்மொழிக்கு மேலதிகமான மொழியாக இருக்குமே தவிர, தமிழுக்குப் பதிலாக அல்ல. இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற சோனக மக்கள் தமிழையும், சிங்களத்தையும் பேசுகின்றனர். அநேகமான ஆண்கள் இரு மொழிகளையும் தெரிந்துள்ளார்கள். ஆனால், இந்தப் பகுதிகளில் கூட தமிழ்மொழி தெரியாத ஒரு சோனகரைக் கண்டுகொள்ள முடியாது. அவர்கள் அனைவரும் வீட்டு மொழியாகத் தமிழையே பேசுகின்றனர். பெருமளவில் பார்த்தால், இப்பகுதிகளில் வாழுகின்ற பெண்கள் ஆண்களைப் போன்று சிங்கள மொழியில் அதிக தேர்ச்சி பெற்றுள்ளவர்களாகக் காணப்படவில்லை. இதிலிருந்து தமிழ்மொழியே சோனகர்களின் தாய்மொழி எனத் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது”. வேறொரு மொழிக்கு மாறுவதை அவர் ஆதரிக்கவில்லை.  

இந்தச் சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களின் கல்விப் போதனா மொழி பற்றிய கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக அமைகின்றது. 75%முஸ்லிம் மாணவர்கள் தமிழைப் போதனா மொழியாகக் கொண்டுள்ளபோதிலும், தென்னிலங்கை முஸ்லிம் மாணவர்களிடையே சிங்கள மொழி போதனா மொழியாகக் கொள்ளும் சுபாவம், பல காரணிகள் நிமித்தம் வளர்ந்து வருவதுடன், தற்போது சிங்களம் போதனா மொழியில் கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 25%ஆக உள்ளது. இந்த நிலையை, தாய்மொழியில் ஒரு நகர்வைக் காட்டுவதுடன், இவ்வாறான ஒரு நிலையினால், அஸீஸ் 1941ஆம் ஆண்டில் எதிர்பார்த்த, முஸ்லிம் சமூகம், தமிழ் மற்றும் சிங்களம் பேசும் சமூகங்களாக இரண்டாகப் பிளவுபடுகின்ற அச்சமும் ஏற்படலாம். இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி மற்றும் கல்விக்கான போதனா மொழி தமிழாகவே இருக்க வேண்டுமென்று அஸீஸ் தொடர்ச்சியாக வாதிட்டு வந்துள்ளார். இருப்பினும், தனிநபர்களின் விருப்பத்திற்கு மாறாக வரலாறு நம்மை அதன்வழியே இட்டுச்செல்கிறது. போதனா மொழியின் மெதுவான நகர்வின் ஐம்பது வருடங்களின் பின்பு, முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள மொழி பேசுகின்ற இளம் சந்ததியினர் உருவாகி வருகின்றார்கள். இன்னும் ஐம்பது வருடங்களின் பின்பு மொழி வாரியான பிரிவினையைத் துலாம்பரமாகத் தெரிந்துகொள்ள முடியும். இலங்கை முஸ்லிம்கள் தங்களுடைய சனத்தொகைப் பரவல் காரணமாகப் பாதிப்படைந்திருப்பதுடன், அவர்களுடைய சமூகமொழி நிலைப்பாடுகள் அவர்களுடைய மொழித் தேர்வைத் தீர்மானிக்கின்றது.  

நவீன இலங்கையில், “முஸ்லிம்” மற்றும் “சோனகர்” என்ற அடையாளம் தொடர்பாகவும் அஸீஸ் அபிப்பிராயங்கள் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ஆரம்பப் படைப்புக்களில் “சோனகர்” என்ற பதத்தையே உபயோகித்துள்ளார். மேற்கு ஸ்பெயின் மற்றும் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம்களை இனங்காண “சோனகர்” என்ற பதத்தை ஐரோப்பியர்கள் உபயோகித்துக் குடியேற்ற கால ஆட்சியாளர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் அடையாளப்படுத்தினார்கள். இந்தப்பதம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அதிகமாகக் கையாளப்பட்டது. கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள், தம்மை இந்தியர் மற்றும் மலாயர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக “சோனகர்” என்ற பதத்தைத் தொடர்ந்து உபயோகித்து வந்தார்கள். இந்த மேலிட கொழும்புக் குழுக்கள் தங்களுடைய இன அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் “சோனகர் யூனியன்” என்ற பெயரில் ஓா் அமைப்பை 1900இல் அமைத்தனர். இதன் ஆரம்பத் தலைவராக ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் விளங்கியதுடன், இந்த அமைப்பு பின்னர் 1920இல் “அகில இலங்கைச் சோனகர் சங்கம்” என்றும் 1940ஆம் ஆண்டில் “சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்” எனவும் வளர்ச்சி பெற்றது.  

“சோனகர்” என அடையாளப்படுத்தப்படுவதை விரும்பாத இன்னொரு முஸ்லிம் குழுவினர், பிரத்தியேக முஸ்லிம் அடையாளம் ஒன்றை விரும்பியவர்களாக “வாலிப முஸ்லிம் லீக்” என்ற ஓர் அமைப்பை நிறுவி, பின்பு அதை “அகில இலங்கை முஸ்லிம் லீக்” எனப் பெயர்மாற்றினார்கள்.  

1940, 1950 தசாப்த காலப்பகுதியில், “சோனகர்” என்ற அடையாளப் பதத்தை முன்னிலைப்படுத்திய தலைவர் சேர். ராசிக பரீத் ஆவார். நீண்டகாலமாக “அகில இலங்கை சோனகர் சங்கத்தின்” தலைவராகத் திகழ்ந்த அன்னார், 1944 ஆம் ஆண்டில் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தைத் தோற்றுவித்து அதன் ஸ்தாபகத் தலைவராகச் செயற்பட்டார். 1944 இல் முதல் பிரதமராக இருந்த டீ.எஸ். சேனாநாயக்க, தேர்தல் வாக்காளர் இடாப்புக்களில் “சோனகர்” என்ற பதத்திற்குப் பதிலாக “முஸ்லிம்” என்ற சொல் பாவிக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையை முன்வைத்தார். இந்த முன்மொழிவை சேர். ராசிக் பரீத் “சோனக” இன அடையாளத்திற்கு இது அச்சுறுத்தலாக அமைந்தது என்று கூறி எதிர்த்தார்.  

இந்த “முஸ்லிம்” மற்றும் “சோனகர்” பிரச்சினை தொடர்ந்தது. இந்தச் சொற் பிரயோகத்தை எதிர்த்த எ.எம்.எ. அஸீஸ் 1944 ஆம் ஆண்டில் “இலங்கை முஸ்லிம் யூனியன்” எனும் பெயரில் ஓர் அமைப்பை நிறுவி, அதன் ஸ்தாபகத் தலைவராக ஆற்றிய உரையில், “சோனகர்” என்ற பதம் இனவாதத்தைத் தோற்றுவிக்கின்றது என்பதால், மத அடிப்படையிலான “முஸ்லிம்” என்ற பெயர் உபயோகித்தல் நன்மை பயக்கும் என்ற கருத்தை அந்த அமைப்பில் பங்கேற்புச் செய்த சுமார் ஐநூறு பேரும் ஏற்றுக்கொண்டார்கள். சுதந்திரம் அடைந்த பின்பு, முஸ்லிம்களிடையே “சோனகர்” என்ற பெயர் மெதுவாக மறையத் தொடங்கியது. தற்போது இந்தப் பதம் சில அரச ஆவணங்களில் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது.  

1973 நவம்பர் 23ஆம் திகதி காலஞ்சென்ற அஸீஸூக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், 1980ம் ஆண்டில் இலக்கியக் கலாநிதி கெளரவப்பட்டம் வழங்கி அன்னாரைக் கெளரவித்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேல் இலங்கை நாட்டிற்கு உன்னத சேவையாற்றி மறைந்த அஸீஸ் என்றும் நினைவு கூரப்படுகின்ற மாமேதை ஆவார்.  

ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் எஸ்.எம்.எம். யூசுப்   

மூலம்: A.M.A. Azeez: An Intellectual Leader of the Muslim Community

Source: Chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...