மார்ச் 29: கந்தன்கருணைப் படுகொலை 34 வது வருட நினைவு தினம்- –ஈழமணி

 



May be an image of 9 people, including Gnanathas Sivam and text

டந்த கால வரலாற்றை ஆவணப்படுத்துவது மிக மிக அவசியமானது. அதைவிட அவசியமானது கடந்த கால தவறான நடைமுறைகளை ஆவணப் படுத்துவதுமாகும். புதிய தலைமுறைக்கும், எதிர்கால தலைமைகளுக்கும், இவை பயனுள்ளதாக அமையும். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றால் தான் சரியான எதிர்காலத்தை அமைக்க முடியும். கடந்த கால ஆயுதக்கலாச்சார சூழல், கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட, இருண்ட காலமாக இருந்தது. மக்கள் நடந்த உண்மைகளை அறிய முடியாத, பேச முடியாத,பயங்கரமான நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். இதனால் பல ஆவணங்கள் முழுமைப்படுத்தப்படாமலும், 

சிறு தவறுகள் திருத்தப்படாமலும் இருந்து வந்துள்ளன. இப்போதுள்ள தகவல் தொழில் 

நுட்ப வசதிகள், சாதாரண மக்களும் கருத்துக்களையும், ஆவணங்களையும் பகிர கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எனவே இந்த சாதகமான சூழலை பயன் படுத்தி ஆவணங்களை முழுமைப் படுத்த நாம் முன்வரவேண்டும். (முகப்புத்தகத்தில் கருத்திடுபவர்கள் தீர விசாரித்த பின் பொறுப்புணர்வுடன் கருத்திட முன்வரவேண்டும்) அளவுகளில் வேறு பட்டாலும், சகல ஆயுதப்போராட்ட இயக்கங்களும் தவறிழைத்திருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே உண்மைகளை கண்டறிவதும், பொறுப்புக்கூறலும் எல்லோர் பக்கத்திலும் நேர்மையாக நடைபெற வேண்டும்.

கந்தன் கருணை படுகொலை என்பது, விடுதலைப் போராட்டத்தின் பெயரால் 

நடத்தப்பட்ட, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலை குனியவேண்டிய,

 ஓர் மனித உரிமை மீறலாகும். கந்தன் கருணை படுகொலை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டத் தலைவர்களில் ஒருவனான அருணாவின் (கோணேசன்/செல்வக்குமார்) தலைமையில் நடாத்தப்பட்டது. அருணா, விடுதலைப் புலிகளின், ஆரம்பகால மூத்த உறுப்பினர், பிரபாகரனால் பயிற்றுவிக்கப்பட்டவன், கிட்டுவுக்கு பயிற்சியளித்தவன்.


தீர விசாரித்து தண்டனை வழங்குவது, ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதியாவது தண் டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது ஓர் நாகரீக சமூகத்தின் 

நடைமுறை. அதிலும் மரண தண்டனை என்பது பலமுறை தீர விசாரித்து கொடுக்கப்பட வேண்டியது. இவையெல்லாம் இங்கு மீறப்பட்டதுமல்லாமல், முழுப்பூசணிக் காயை சோற்றுக்குள் மறைப்பதைப் போல் கந்தன் கருணைப் படுகொலைகளை மறைக்க 

புலிகளின் தலைமை முயற்ச்சியும் செய்திருக்கின்றது. 18 சிறைக் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், என பத்திரிகை அறிக்கை வெளியிட்டார்கள். இந்த அறிக்கையை புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கமே பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். இந்தப் பொய்ச் செய்தியை அன்று யாழ்பணத்தில். வெளிவந்துகொண்டிருந்த முரசொலி (ஆசிரியர் திருச்செல்வம்) போன்ற பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக பிரசுரித்து உண்மைகளை மூடி மறைக்க, முட்டுக் கொடுத்தன. 

எமது சமூகத்தின் பின்னடைவுகளிற்கு இது போன்ற முதுகெலும்பற்ற பத்திரிகைகளின் செயற்பாடுகளும் ஓர் காரணமென்றால் அது மிகையாகாது

1987 தை மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர், பாரதத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். கிட்டுவை மன்னார் தளபதியாக்கி, பொன்னம்மானை யாழ்ப்பாண 

தளபதியாக்க முடிவும் செய்திருந்தார். நாவற்குழி பவுசர் வெடிப்பு சம்பவத்தினால் நிலைமைகள் அங்கு மாற்றமடைந்தன. புலிகளின் தலைவர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்த 

வேளையிலேயே கந்தன் கருணை சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. இந்த கொலை தவறான ஓர் முன்னுதாரணம் என அவரோ, அல்லது புலிகளோ கருத்தியிருந்திருந்தால், அன்றே மக்கள் மத்தியில் பொது மன்னிப்பு கோரியிருந்திருக்க வேண்டும். மாறாக பல சாட்டுப் போக்குகள் கூறி புலிகளின் இந்த படுகொலைகளை நியாயப்படுத்த இன்று வரை பலர் முயற்சிக்கின்றனர். அருணாவை பதவியிறக்கம் செய்தோம், சம்மந்தப்பட்டவர்களை பதவியிறக்கம் 

செய்தோம் எனக் கூறுகின்றனர். விடுதலை போராடத்திற்கு தமது பிள்ளைகளை அனுப்பிய பெற்றார்களின் மனது எப்படித் துடிக்கும், என நீங்கள் எண்ணிப்பார்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம், தவறு நிகழ்ந்து விட்டது “மன்னித்து விடுங்கள்” என்றாவது நீங்கள் கேட்டிருந்திருக்கலாமல்லவா? மாறாக வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல் 

அவர்களின் அழும் உரிமையை கூட மறுத்து, பொது வெளியில் இதுபற்றி பேசக்கூடாது 

என அவர்களை எச்சரித்து,மிரட்டினீர்களல்லவா?

முன்னேறிய நாடுகளில் ஓர் அரசியல் திணைக்களத்தில் உள்ள ஒருவர் தவறு செய்துவிட்டால் அந்த திணைக்களத்தின் பொறுப்பான பதவியிலுள்ளவர், தார்மீக பொறுப்பேற்று பொறுப்பிலிருந்து விலகுவார், அல்லது விலகுமாறு நிர்பந்திக்கப்படுவார். ஆனால் எமது நாட்டிலோ, ஏதாவது நல்லது நடந்துவிட்டால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து தலைவர், ஜூம் (ZOOM) இல் நெறிப்படுத்தினார், திட்டமிட்டார், ஆலோசனை கூறினார், என்பார்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால், தலைவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் எனக்கூறி, கீழ் மட்டத்தின் தலையில் பழியை போட்டுவிடுவார்கள். இல்லை என்றால் அவர்களை 

கீழ்மட்டம் ஆக்கிவிடுவார்கள்.

உலகத் தரம் வாய்ந்த உளவுப் படை என்றார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களை கொண்ட தீப்பொறி என்ற சிறு குழு தான், கிட்டு மீதான குண்டெறிதலுக்கு (1987 மார்ச் மாதம் 29 ம் திகதி) காரணம் எனக் கண்டறிய தவறி, 60 பதிற்கும் மேற்பட்டோரை அநியாயமாக கொன்றார்கள். 25 வருடத்திற்க்கு பின்னர் தீப்பொறி அமைப்பினர் தாமாக, இந்த 

உண்மையை சொல்லியிருக்காது விட்டிருந்திருந்தால், இந்த உண்மை ஒருபோதும் வெளிவந்திருக்க முடியாததாக இருந்திருக்கும்.

கந்தன் கருணை படுகொலை என்பது, விடுதலைப் போராட்டத்தின் பெயரால் நடத்தப்பட்ட, இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலை குனியவேண்டிய, ஓர் மனித உரிமை மீறலாகும்.வெலிக்கடை படுகொலைகள், காடையர்களை தூண்டிவிட்டு நடாத்தப்பட்ட 

ஓர் சிறைப் படுகொலையாகும். வெலிக்கடை படுகொலைகளில் இறந்தவர்களை விட மேலதிகமான எண்ணிக்கையில் கந்தன் கருணை படுகொலைகளில் போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும்,வெலிக்கடை 

சிறப்படுகொலைகளை கண்டிப்பதோடல்லாமல் நினைவுகூர்ந்தும் வரும் எம்மில் பலர், இந்த கந்தன் கருணைப் படுகொலைகளிற்கு கண்டனம் தெரிவிக்கவோ, நினைவு 

கூருவதிற்கோ ஏனோ பின்னிற்கின்றார்கள். கந்தன் கருணை படுகொலைகளை கண்ணடிப்பதற்கோ, நினைவுகூருவதற்கோ பின் நிற்கும் எவருக்கும், வெலிக்கடை படுகொலைகளை நினைவு கூருவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தான் 

கூறவேண்டும்.

கந்தன் கருணை படுகொலை நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தி, மக்களுக்காக போராடப் புறப்பட்டு, அநியாயமாக கொல்லப்பட்ட போராளிகளுக்கு, பொது மக்களுக்கும், 

ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி மரியாதை செலுத்துவோம்.

29 03 1987
கந்தன் கருணைப் படுகொலைகள் இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் 

புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் 

இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். 29.3.1987 அன்று, காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவன் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவன் தான். அருணா, விடுதலைப் புலிகளின், ஆரம்பகால மூத்த உறுப்பினர், பிரபாகரனால் பயிற்றுவிக்கப்பட்டவன், கிட்டுவுக்கு பயிற்சியளித்தவன். கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தான். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் 

பணிமனைக்குள் புகுந்த அருணா, தனது மெய்ப்பாதுகாவலரின் கிரனைட் லோஞ்சர் 

பூட்டப்பட்ட M16னை வேண்டி Hip positionனைப் பயன்படுத்தி தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான். நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் கோவில் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள (3) முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான். அரை மணித்தியாலத்தில் 63 பேர் வரை கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம். எனவே ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு சென்று அருணா சரமாரியாக சுட்டான்.

விடுதலைப் புலிகளின் மன்னர் மாவட்ட தளபதிகள் விக்டர், ராதா ஆகியோருக்கு மெய்ப்பாதுகாவலராகச் செயட்பட்டவர் தலைமன்னாரைச் சேர்ந்த ஜஸ்டின் (புலிகளின் மாவீரர் பட்டியலிலுள்ளவர்) இவரை எப்போதும் ஓர் ராக்கெட் லோஞ்சருடன் காணமுடியம். இவரின் ராக்கெட் லோஞ்சரை பயன்படுத்தி அருணா சுட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன். இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா (கோணேசன்/செல்வக்குமார்). விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி. இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் ஜூலை இறுதியில்,இலங்கையின் வடக்கு – கிழக்கில். இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது. இந்திய இராணுவத்தின் தேடுதல் சுற்றிவளைப்பில் ,குருசோ வீதி , சுண்டுக்குளி , யாழ்ப்பாணத்தில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய படை, இராணுவ சிப்பாய் ஒருவரால் கொல்லப்பட்டான்.

படையினர் கைது செய்யும் நிலை வரும்போது சயனைட் அடித்து மரணத்தை தழுவி இரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்பது தலைமையின் கட்டளை, உயர் மட்ட தலைவர்களுக்கு இதில் ஏதும் விதி விலக்கு உண்டா??, அருணாவுடன் படகில் சென்ற அனைவரும் சயனை அடிக்க இவர் மட்டும் பிடிபட்டு, பின்னர் இவரை கைதிகள் பரிமாற்றத்தில் விடுவித்தார்கள் . சயனைட் அடிக்காத பல போராளிகள் தண்டிக்கப்படடார்கள் அல்லது இயக்கத்தில் இருந்து நீக்கப்படடார்கள்.அருணாவுக்கு ஏன் இந்தச் சலுகை ?

கந்தன் கருணைப் படுகொலை தாக்குதலின் போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அக்காலகட்டத்தில் கிட்டுவின் விசுவாசியாக செயல்பட்டவன் ‘சீவல் சத்தியா’ என அழைக்கப்பட்ட மானிப்பாய் சிவபரன். 1980 களில் ஈழ மாணவர் பொது மன்றத்தின் GUES அரசியல் வகுப்புகளிற்கு சமூகமளித்தவன். உடனடியாக ஆயுத பயிற்சி வேண்டும், ஆயுதம் வேண்டும் என்று தனது ஆயுத மோகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். மக்கள் மத்தியில் அரசியல் வேலைகள் செய்த, குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின்பு தான், ஆயுதப் பயிற்சிக்கு அனுப்ப முடியும் என அவனுக்கு பொறுப்பாளர்களால் கூறப்பட்டது பொறுமையிழந்த அவன் பின்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றினான். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருந்த சில முகாம்களுக்கும் அவனே பொறுப்பாளர். சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, திடீரென அந்த முகாமுக்கு வந்த சத்தியா அரைகுறையாய் உயிரோடிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றான். பின்னர் அறைகளுக்குள் ஒளித்திருந்தவர்களையெல்லாம் தேடித் தேடி தனது பிஸ்டலால் சுட்டான். இந்திய இராணுவம் வட கிழக்கில் நிலை கொண்ட பின்னர், இந்தியாவிற்கு தப்பியோடிய சீவல் சத்தியா, தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றான். .

தப்பி வந்தவர்களின் சாட்சிங்களின் அடிப்படையில் இந்த படுகொலையில் அங்கு கடமையில் இருந்த பாலா அமுதன் போன்றவர்களும் AK, SMG பிஸ்டல் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எஞ்சி இருந்தவர்களையும் குற்றுயிராயிருந்தவர்களையும் சுட்டிருக்கின்றார்கள்.. இவர்களுடன் இப்படுகொலையில் ராசா (நல்லூர்) சின்ன காந்தி (உரும்பிராய்) ஊத்தை ரவி (யாழ்ப்பாணம்) மற் றும் சில புலி உறுப்பினர்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக பேசப் படுகின்றது.

சடலங்கள் இரவோடிரவாக செம்மணி சுடலையிலும், நவாலி கல்லுண்டாய் சுடலையிலும் எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது புதைக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கந்தன் கருணை சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும்,ஒவ்வொரு நாளும் சிறு சிறு குழுவாக மாற்று இயக்க போராளிகள் கொல்லப்பட்டு வந்திருக்கின்றார்கள். சில பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றும் போது கைதிகள் தப்பியோடிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கைதிகளை பராமரிப்பதில் பெரும் நெருக்கடிகளை புலிகள் சந்தித்துக்கொண்டிருந்தனர். மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கந்தன் கருணை படு கொலை முகாமில் பெரிய கிடங்கு ஒன்றை வெட்டுமாறு கைதிகளை பணித்திருக்கின்றார்கள். மல சல கூடம் கட்ட எனக் காரணம் கூறப்பட்டது, இதிலும் சில மர்மங்கள் இருந்திருக்குமா? என கேள்விகள் எழுப்பபடுகின்றன.

கந்தன் கருணை படுகொலையில் இருந்து சிலர் தப்பியிருக்கலாம் என சந்தேகித்த புலிகள் தடயங்களை அழிக்க இரவோடிரவாக கடுமையாக உழைத்தனர், சுதுமலை வரதராஜசர்மா (புதைத்து வைத்த, புலிகளின் பணத்துடன் இந்திய படைகளிடம் சரணடைந்தவர் , தற்போது ஜெர்மனியில் வாழ்கின்றார்), பாரத் (மானிப்பாய்), மதி (மல்லாகம் ) போன்றோர் தப்பிய போராளிகளை மீண்டும் கைது செய்ய வீடு வீடாக தேடுதல் நடத்தினர்.

கந்தன் கருணை படுகொலைகள் பற்றிய பல உண்மை சம்பவங்கள், பல வருடங்களாக முழுமையாக வெளிவர முடியாதவாறு ஆயுத அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. ஆரம்பத்தில் மனித உரிமைகளுக்கான பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தினர் ஓரளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருந்தனர் .மறைந்த போராளி, தைரி (தைரியராசா நாகேஸ் அவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள சவளக்கடையை பிறப்பிடமாகக்கொண்டவர்) உட்பட ஒன்றுக்கு மேற்பட்ட, மாற்று இயக்கப் போராளிகள் இப் படுகொலை சம்பவத்திலிருந்து தப்பித்திருந்தாலும் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை இருந்தது. இதனால் கந்தன் கருணை படுகொலைகளில் போராளி தைரி (11.08.1987 அன்று மட்டகிளப்பில்,புலிகளால் சகோதர படுகொலையில் கொல்லப்பட்டவர்)என்ற ஒரு போராளி தப்பித்ததாகவும், தப்பித்த அனைவரினதும் நினைவுகளை அவர் ஒருவரது நினைவாக, அவர் கூறுவது போலவும் , அமுது சஞ்சிகையின் சித்திரை 2000 ஆண்டு இதழில் இயன்ற அளவு விரிவான தகவல்கள் வெளிவந்தன . பின்பு முகப் புத்தகங்கள் வாயிலாகவும் பலர் தமக்கு தெரிந்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மைகளை கண்டறிவதற்கு நெருக்கடியான காலங்களில் பங்களித்த அனைவரும் வரலாற்றில் நன்றியுடன் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.!

ஏற்கனவே வெளிவந்த தகவல்களுடன் புதிய தகவல்களையும் இணைத்து ஆவணப்படுதுவதுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் நினைவு கூர்வது எமது தலையாய கடைமையாகும்.

நினைவு தினத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. கிட்டுவுக்கு தீப்பொறி குழுவினரால் குண்டு எறியப்பட்ட தினம் மார்ச் 29 1987. படு கொலை சம்பவத்தில் உயிர் தப்பியவர்களின் தகவல்களின் அடிப்படையில் படுகொலை சம்பவங்கள் மார்ச் 29, 1987 நள்ளிரவுக்கு முன்னரே நிகழ்ந்து விட்டன. எனவே இந்த வருடம் முதல் கந்தன் கருணை படுகொலையை, மார்ச் 29 இல் நினைவு கூர்வது தான் முறையானதாக இருக்கும்.

கந்தன்கருணை படுகொலையில் கொல்லப்பட்ட போராளிகள், மற்றும் பொதுமக்களின் தகவல்கள், இயன்றவரை திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கந்தன் கருணை படுகொலை தினமான மார்ச் 29, 1987 அன்று கொல்லப்படடவர்களின் விபரங்களையும், புகைப்படங்களையும் ஆவணப்படுத்த உதவ விரும்புவோர் தயவு செய்து உள்பெட்டியில் தகவல்களை தந்து உதவுமாறு தயவாக வேண்டுகின்றோம்.

கந்தன்கருணை படுகொலையில் மக்களுக்காக மரணித்து, எம்நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னதமான போராளிகளே! வரலாறு உங்களை மீண்டும் மீண்டும் விடுவித்துக்கொண்டேயிருக்கின்றது.

May be an image of palm trees and text


ந்தப் படுகொலையில் மரணித்த EPRLF,TELO,PLOTE இயக்கங்களின் போராளிகள் , மற்றும் பொதுமக்கள் அனைவரையும் 34 வது ஆண்டு நினைவு தினத்தில்,நினைவுகூர்ந்து பங்குனி 29, 2021 நினைவு வணக்கம் செய்வோம்.

பிணங்களுள் பிணங்கள் போல் கிடந்தது மீண்டோம்!

கந்தன் கருணைப் படுகொலையில் மயிரிழையில் உயிர்தப்பிய போராளிகளின் சாட்சியம்!

கந்தன் கருணைப் படுகொலையில் மயிரிழையில் உயிர்தப்பிய போராளிகளின் விபரங்கள்:
ஞானதாஸ் சிவம் – மன்னார்
தைரியராஜா (தைரி/நாகேஷ்) – சவளக்காடு, கல்முனை
ஸ்ரீபாஸ்கரன் – களுவாஞ்சிக்குடி
ஹென்ரிக் அல்ஸ்டோன் – கல்முனை

‘உங்களால என்ன செய்ய முடியும், சுடத்தான்ரா முடியும். நீங்கள் அழிஞ்சுதான்ரா போவியள், இருக்க மாட்டியளடா, எங்களை அவிழ்த்து விட்டுப்பாருங்கடா…’
கொல்லப்படட போராளிகள் ராசிக் –பாப்பா
சொன்னது 29 03 1987, எழுதப்பட்ட்து -சித்திரை 2000.

மார்ச் 29 ஆம் நாள் 1987
‘அன்று மாலையில் அந்தி மயங்கும் வேளையில் கிட்டு வழக்கம் போல தனது சிறிய காரில் மாத கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டு சிந்தியாவை சந்திக்க அவருடைய வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கிட்டுவுடன் காரில் சந்தமணி, நிரூபன் ஆகியோர் இருந்தனர். காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்குவதற்கு கிட்டு முயற்ச்சி செய்துகொண்டிருந்த வேளையில், சைக்கிளில் வேகமாக வந்த இருவர் காரின் மீது இரு குண்டுகளை வீசினார்கள்.என்ன நடக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு குண்டு வெடித்தது .காரில் ஓட்டுநர் இருக்கையில் உட்க்கார்ந்து கொண்டிருந்த கிட்டுவை சாந்தமணி அவசர அவசரமாக வெளியே தள்ளினார் .கார் சிறியதாகையால், கிட்டுவின் ஒரு கால் காரினுள்ளும் ,உடம்பு வெளியேயும் ஆக , விழுந்தார் . விழுந்த வேகத்திலேயே கிட்டு தனது கைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார் இதற்குள் வெளியே குதித்த சாந்தமணியும் ,நிரூபனும் சுட்டனர் .இதற்குள் எங்கும் இருள் சூழ்ந்து விட்டது’ -.பழ . நெடுமாறனின் -காவிய நாயகன் கிட்டு, நூலிலிருந்து சில பகுதிகள்….

அந்த இருளில் கடந்துகொண்டிருக்கின்ற கடிகாரமுட்களின் கணங்கள்,ஒவ்வொன்றையும் காலன் தான் கடத்திக்கொண்டிருந்தான் என்பதை அறியாமல் அடைபட்டுக் கிடந்தார்கள் அவர்கள் ………

தைரி /சிவம் மேல் மாடியில் உள்ள அறையில்அடைக்கப்பட்டிருந்தார். சாப்பாட்டு வேளைகளில் அவர்களைத் திறந்து விடுவர். அதுவும் சாப்பாட்டு வேளையாக இருந்ததால்அவர்கள் கீழே இறங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சுமார் 9.15 இருக்கும், திடீரென அம்முகாமை நோக்கிவெடிச்சத்தங்கள் கேட்டன. முதலில் அது மிஸ்ஃபயர் (தவறுதலான துப்பாக்கி வெடி) என்று தான் யாவரும்எண்ணினர். அம்முகாமில் நீண்ட நாள் இருந்ததில் தாம்கொல்லப்படுவோம் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்ட தைரி /சிவம் குசினியை அண்டிய முடுக்கொன்றில் மறைந்துகொண்டார்.

அவ்வேளை அருணா என்ற புலி உறுப்பினர் தனது 5, 6 உதவியாளர் சகிதம் மூர்க்காவேசத்துடன் உள்ளே புகுந்தான். அவன் வந்த வேகத்தில் வலது புற மூலையிலிருந்த அறையில்அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது, எம்-16 யந்திரத் துப்பாக்கியால் ஹிப் பொஸிஷனில் நின்று சரமாரியாகச் சுட்டான்.

துப்பாக்கியின் மகஸீன் தீர்ந்ததும், உதவியாளர்களிடமிருந்து மறு மகஸீன் வாங்கிப்போட்டு மறுபடி சுட்டான், சுட்டுவிட்டுஅருகில் இருந்த மாடிப்படிகளால் ஏறி மேல் மாடிக்குச்சென்றான்.

அந்த வீட்டின் முகப்பில் பெரிய ஹோலிருந்தது. அதில் எதிரே இரு அறைகளிலும் கைதிகள் இருந்தனர். ஒருஅறையிலிருந்து மறு அறைக்கு வர வழியிருந்தது. இடப்புறமாக குசினியும் வலப்புற அறைக்கு அருகே மாடிப்படிகளும் இருந்தன.

வலப்புற அறையில் சூடுபட்டவர்கள், இடப்புற அறைக்குள் ஓடினார்கள் மேல் மாடிக்குச் சென்ற அருணா அங்கும்வெடிகளைத் தீர்த்துவிட்டு திரும்ப இறங்கி வந்து இடப்புற அறைக்குள்ளிருந்தவர்களை நோக்கிச் சுட்டான். சிறிது நேரம் தொடர்ந்து சுட்டுவிட்டு திரும்பிப் போய்விட்டான்.

சூடுபட்ட அஜித் என்பவருக்கு கைமுறிந்து எலும்பு தெரிய, வயிறு பிரிந்து குடல் வெளியே தள்ளியது, அதை முறிந்த கையின் எலும்பால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘தண்ணீர்தண்ணீர்’ எனக் கத்தினான். வலப்புற அறையில் றெஜி என்ற நெடிய சிவலைப் பொடியனுக்கு ரத்தம் ஒழுகியபடியிருந்தது. பலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யார் யார் சூடுபட்டனர், யார் யார் கொல்லப்பட்டனர் என்பதும்தெரியவில்லை.

தைரி /சிவம் இன்னும் சிலரும் வெளிக்கதவால் தப்பி ஓடினர். காவலில் நின்ற புலிகள் யாரடா என்று கத்தியபடி திரும்பச் சுட, ஓடி வந்தவர்கள் வெடிபட்டு கதவருகே விழுந்தனர். அவர்களோடு சேர்ந்து படுத்து விட தைரி/சிவா மேல் விழுந்திருந்த கங்கா என்பவருக்கு தலையில் வெடி பட்டு மூளை சிதறி தைரி /சிவம் முகம் மீது வடிந்தது. இரத்தம் வெள்ளம் போல் பரவியிருந்தது. தைரி /சிவம் அப்படியே இறந்தவர்களோடு இறந்தவன்போல் படுத்தபடி இருந்துவிட்டார். சென்றிக்கு இருந்தவர்கள் எஞ்சியிருந்தவர்களை இஷ்டப்படி எஸ்.எம்.ஜி களால்சுட்டனர். மேலே இருந்த மற்றைய இறந்த உடல்களும் இரத்தமும் தைரியை மறைத்திருந்தன.

அப்படிச் சடலங்களின் கீழ் புதைந்து கிடக்கையில் வெடிபட்டவர்களின் ஓலங்களும் முனகல் சத்தங்களும் கேட்டபடி இருக்கிறது. உயிர் பிரிகையில் ஒவ்வொருவரது மரண ஓசையும் அடங்கிச் செல்வது கேட்கிறது. அந்த ஓசை, குரல்வளை அறுபட்ட ஓர ஆட்டின் கதறல் போல், மனிதக்குரலேயற்ற வேறோர் பயங்கர குரலாக ஒலித்து, மூச்சிழுத்து, ஓய்வதைக் கேட்கும்போது உடல் அச்சத்தால் சில்லிட்டுப் போய்விடுகிறது.

கதிர் என்பவரும் வேறு சிலரும் மலசல கூடத்தின் மேல் இருந்த தட்டு ஒன்றுக்குள் ஏறி அங்கிருந்த புலித்தோலால் போர்த்தபடி பதுங்கிக் கொண்டனர்.
அருணா சுட்டு அதன்பின் சென்றிக்கு நின்ற புலிகளும் சுட்டு ஓய்ந்துவிட்டிருக்க, அடுத்ததாக சத்தியா என்பவன் வந்தான். சத்தியாவின் கீழ் தான் அந்த முகாம் இருந்தது. முகாமின்பொறுப்பாளராக பாலு என்பவன் இருந்தான்.

சந்தியா வந்ததும் அரைகுறையாய் உயிரோடிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றான். சத்தியா பிஸ்டலால் தான் சுட்டான். பின்னர் மலசல கூடத்துக்குப் போய் அங்கே மேலே ஒளித்திருந்தவர்களை நோக்கி இறங்கடா கீழே என்று கத்தியபடி சுட்டான், சூடு பட்டவர்கள் தொப்பென விழும் ஓசைகேட்டது. கதிர் குப்புற விழுந்து கிடந்ததை, பின்னர் தைரி தப்பிச் செல்லும் போது காணமுடிந்தது.

இவ்வேளையில் வாகனச் சத்தம் கேட்டது வெளியே சென்றஅருணா திரும்பி வந்தான். அவன் வேறொரு முகாமில்வைத்திருந்த ராசீக், பாப்பா இருவரையும் இழுத்து வந்தான். வழமையாக இவ்விருவரையும் அருணாவும், சத்தியாவும் இம்முகாமுக்கு கொண்டு வந்து மிக மோசமாகத் தாக்கிவிட்டு திரும்பக் கூட்டிச் செல்வது வழக்கம். ராசிக் என்பவன் மிகவும் நெஞ்சுறுதி கொண்டவன். எவ்வளவு அடித்தாலும் ‘நானும் ஆண் மகன் தான்ரா, போராடத்தான் வந்தவன், சாவுக்குப் பயப்பிட மாட்டன். நீ கொல்லுறதெண்டா கொல்லு’ என்றுஎதிர்த்துக் கூறுவான். அவனை இனியில்லை என்ற அளவுக்கு அடித்து நொருக்குவார்கள்.

இந்த தடவை அழைத்து வரப்பட்ட போது முகாமிலிருந்த நிலைமையைப் பார்த்ததும் தமக்கு என்ன நேரப்போகிறதென்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ‘உங்களால என்ன செய்ய முடியும், சுடத்தான்ரா முடியும். நீங்கள் அழிஞ்சுதான்ரா போவியள், இருக்க மாட்டியளடா, எங்களை அவிழ்த்து விட்டுப்பாருங்கடா…’ என்று கத்தி இழுபறிப்படுகின்ற சத்தம் கேட்டது. சத்தத்தோடு சத்தமாக வெடி கிளம்ப ஐயோ!….. ஐயோ!….. என்ற ஓலம் எழும்பி படிப்படியாக ஓய்ந்து அடங்கியது.

அதையடுத்து அங்கு மௌனம் நிலவியது. அனேகமாகஅனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். இரத்தம் கணுக்கால் அளவு உயரத்துக்கு இருந்தது. இரத்த வாடையும், வெடி மருந்து நாற்றமும் மண்டி இருந்தது.

அருணாவும் சத்தியாவும் இறந்த உடல்களை ஏற்றிச்செல்வதற்காக வாகனம் எடுத்து வர வெளியே சென்றனர். ஒரேஅமைதி சிறிது நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்த தைரி உயிரை கையில் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து குசினிக்குச் சென்று பின்புறமாக இருந்த கதவால் பாய்ந்து ஓடி அடுத்த வீட்டு வளவுக்குள் ஏறி விழுந்து தப்பிச் சென்றார். பின்புறமாக இன்னும் சிலர் தப்பிச் சென்றிருக்கக் கூடும். யார் யார் தப்பினார்கள் என்பது தெரியாது. ஆனால் முன்புறமாகத் தப்ப முயன்றவர்கள் சென்றியிடம் வெடிவாங்கி இறந்தார்கள்.
தைரி /சிவம் ஓடும்போது மீண்டும் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அநேகமாக உடல்களை அப்புறப்படுத்தவே வாகனங்களை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

சுமார் 60 தமிழ் இளைஞர்கள் அந்த ஒரே இரவில் ஒரு வீட்டிற்குள்வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுக் கறையை எப்படி எம்மவரால் நியாயப் படுத்த முடியும்?

ஏப்ரல் 2000 வெளியான அமுது சஞ்சிகையில் வெளியிடப்பட்ட‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ என்ற ஆக்கம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலைகளை ஒத்த மார்ச் 29, படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

வரலாற்றை நினைவூட்டுவதற்காக மீண்டும் தரவேற்றப்படுகின்றது…

இந்தக் குறிப்புகள் அனைத்தும் தப்பியவர்ககளின் வாக்கு மூலங்கள், சஞ்சிகை வெளிவந்த காலத்தில் எல்லோருடைய பெயர்களையும் வெளியிட முடியாத நிலை இருந்ததால் தைரியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்ட்து. போராளி சிவத்தினதும் அனுபவங்கள் நிறைய இருப்பதால் சிவத்தின் பெயரையும் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இணைத்துள்ளேன் .

Courtesy: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...