நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன!

 நாட்டில் 30 வருட அழிவுகரமான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு அழிவுகரமான நிலைமையை உருவாக்குவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு நாசகார சக்திகள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளன. முன்பு போல இனப்பிரச்சினை வடிவத்திலேயே மீண்டும் அந்த வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக சகல பிற்போக்கு தமிழ் தேசியவாத சக்திகளும் ஓரணியில் திரட்டப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தோன்றிய இனப்பிரச்சினை என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தமது காலனியாதிக்க தேவைகளுக்காக மக்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, அவர்களது உள்நாட்டு அடிவருடிகளான சிங்கள – தமிழ் முதலாளித்துவ சக்திகளால் வளர்க்கப்பட்ட ஒன்றாகும்.

பிரித்தானியர் தென்னாசியாவில் – குறிப்பாக இந்தியாவில் தமது காலனியாதிக்கத்துக்கு எதிராக எழுந்த சுதந்திரப் போராட்ட அலை காரணமாக இலங்கையையும் விட்டு 1948 இல் வெளியேற நேர்ந்தாலும், தமது உள்நாட்டு அடிவருடிகள் மூலம் இலங்கை அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே இருந்தனர். அதற்கு ஏதுவாக சுதந்திர இலங்கையின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும், தமிழ் பிற்போக்கு மேட்டுக்குழாமும் செயற்பட்டன.


ஆனால் இடதுசாரி இயக்கத்தினதும் அதன் தலைமையிலான தொழிற்சங்க இயக்கத்தினதும் வளர்ச்சி காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வலைகள் இலங்கை மக்களின் மனங்களில் உருவாகி வளர்ந்ததால், பிரித்தானியர் உருவாக்கிய முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமே 1956 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் உருவானது.

பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் தென்னாசியாவிலேயே புரட்சிகரமான முறையில் தீவிரமான பல ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொண்டார். அதன் காரணமாக இலங்கையில் இரண்டாவது சுதந்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு பிரித்தானியாவின் பிடி மேலும் தளர்ந்தது. அதன் காரணமாக பிற்போக்கு சக்திகள் 1959 இல் பண்டாரநாயக்கவை படுகொலை செய்தனர்.

பிரித்தானியாவின் பிடி இலங்கையில் தளர்ந்தாலும், உலகில் முதல் நிலை ஏகாதிபத்திய வல்லரசாக வேகமாக வளர்ந்து வந்த அமெரிக்காவும், பிராந்தியத்தில் வல்லரசாக வளர்ந்து வந்த இந்தியாவும் இலங்கையை தமது பிடிக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கின. அதன் காரணமாக அவர்களது செயற்பாடுகள் இலங்கையில் அதிகரிக்கத் தொடங்கின.

இந்தச் சூழ்நிலையில் 1960 தேர்தலில் வெற்றி பெற்று பண்டாரநாயக்கவின் விதவை மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர் தனது கணவர் தொடக்கி வைத்த ஏகாதிபத்திய விரோத, பிற்போக்கு விரோத நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அதனால் வெகுண்டெழுந்த பிற்போக்கு சக்திகள், 1962 இல் இராணுவச் சதி ஒன்றின் மூலம் அவரது ஆட்சியைக் கவிழ்த்து அவரையும் கொலை செய்வதற்கு முயற்சி செய்தன. ஆனால் தேசபக்த படையினரால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும், 1964 இல் பிற்போக்கான லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அவரது அரசு தேசவுடமையாக்க எடுத்த முயற்சியைப் பயன்படுத்தி அவரது அரசை ஐ.தே.க – தமிழ் பிற்போக்கு கூட்டு தோற்கடித்து பதவியிழக்க வைத்தது.

1965 தேர்தலில் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத போதும், ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு சக்திகள் எதிரும் புதிருமான சிங்கள – தமிழ் முதலாளித்துவ இனவாத சக்திகளை ஓரணியில் திரட்டி ஐ.தே.க. தலைமையில் ஒரு வலதுசாரி பிற்போக்கு ஆட்சியை நிறுவின.

ஆனால் 1970 இல் நடந்த பொதுத்தேர்தலில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் – குறிப்பாக சிங்கள மக்கள் ஒரு சாதனை படைத்து மீண்டும் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஒரு ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரியாசனம் ஏற்றினர். இம்முறை அந்த அரசில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்றனர். அதன் காரணமாக மேலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடரும் வாய்ப்பு அதிகமானது.

இருப்பினும், பிற்போக்கு சக்திகள் இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி. என்ற சிங்கள இனவாத குட்டி முதலாளித்துவ இயக்கம் ஒன்றின் மூலம் 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை உருவாக்கி வன்முறை மூலம் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டன. அந்த முயற்சியும் பாதுகாப்பு படைகளினதும், சில நேச நாடுகளினதும் ஒத்துழைப்பால் முறியடிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1972 இல் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இலங்கை குடியரசாக்கப்பட்டு, இலங்கையின் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பு அறுதியும் இறுதியுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கிழடுதட்டிப் போய் இருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை மேலும் சினத்துக்குள்ளாக்கியது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையின் ஏகாதிபத்திய விரோத சக்திகளுக்கெதிராக புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்தன.

சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான இந்த ஆட்சிக்காலம்தான் (1970 – 77) இலங்கையில் தமிழ் இனவாதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை ஏகாதிபத்திய சக்திகளுக்கு உருவாக்கியது எனலாம். ஏனெனில் சிங்கள மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் அவர்கள் தமிழர்களைவிட கூடுதலான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சுதந்திரத்துக்கு முன்னரே அவர்களது வரலாறு அதுவாகத்தான் இருந்துள்ளது. அதனால்தான் பிரித்தானியர் தமிழ் பகுதிகளில் அதிகமான பாடசாலைகளை உருவாக்கி தமிழர்களை தமது நிர்வாகத்துரிய நம்பிக்கைக்குரிய 'வெள்ளைச் சட்டை' உத்தியோகத்தர்களாக உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் தமிழர்களுடைய அரசியல் இன்றுவரை மாற்றமில்லாமல் ஏகாதிபத்திய சார்பாகவும், தமிழ் இனவாதமாகவும்தான் இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரை சுதந்திரத்துக்குப் பின்னான இத்தனை வருடங்களில் சரிக்கு சரியான அளவுக்கு ஏகாதிபத்திய விரோத அரசுகளையே இலங்கையில் தெரிவு செய்து வந்திருக்கின்றனர்.

சிறீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1972 இல் பிரித்தானிய விரோத குடியரசுத் தீர்மானத்தை எடுத்ததை எதிர்த்ததின் மூலமே தமிழ் பிற்போக்கு பிரிவினைவாத சக்திகள் தமது இனவாத அரசியலைத் தீவிரப்படுத்த ஆரம்பித்தனர் என்பதைக் கவனிப்பது அவசியமானது. அதன் பின்னரே ஏகாதிபத்தியவாத சக்திகளின் ஆதரவுடன், தமிழ் பிற்போக்கு 'மிதவாத' சக்திகளின் தொடர்ச்சியாக பாசிசப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது. இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழ் பிற்போக்கு சக்திகள் மட்டுமின்றி, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஐ.தே.க., மேற்கத்தைய சக்திகள், இஸ்ரேலிய சியோனிசம் பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சார்பு சக்திகள் வௌ;வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் உதவியிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுகூட தற்போதைய அரசை எதிர்ப்பதில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட முழு மேற்குலகமும் ஓரணியில் அணிவகுத்து நிற்பதைக் காணலாம்.

எனவே, இலங்கையைப் பொறுத்தவரை இந்த ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். அதனால்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் 'முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி' இடிப்புச் சம்பவத்தில் இருந்து, ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான கண்டனத் தீர்மானம்வரை இந்த ஏகாதிபத்திய சக்திகள் பிற்போக்கு தமிழ் தேசியர்களுடனேயே அணிவகுத்து நிற்கின்றனர்.

அதன் மூலம் இலங்கை பிற்போக்கு தமிழ் தேசியத்தை உயிர்ப்பித்து தனிநாட்டுக்கான ஒரு அழிவுப்பாதைக்கு மீண்டும் தள்ளி விடுவதே அவர்களது ஒரே நோக்கம்.

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி போன்ற பிற்போக்கு தமிழ் தேசியவாத கட்சிகளின் அரசியல் நடவடிக்கைகளோ, யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நினைவுத்தூபிகள் அமைக்கும் நடவடிக்கைகளோ, 'காணாமல் போனோர்' சார்பாக நடத்தப்படுகின்ற போராட்டங்களோ அல்லது இந்த வகையான இதர நடவடிக்கைகளோ அவர்கள் வெளியே சொல்கிற மாதிரி சுத்தசுயம்புவான தன்னெழுச்சியான நடவடிக்கைகள் அல்ல. அவற்றுக்கும் ஐ.தே.க. பிற்போக்கு சக்திகளுக்கும், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் கண்ணுக்குப் புலப்படாத உள்ளார்ந்த தொடர்புகள் உண்டு. அவர்கள் திட்டவட்டமான ஒரே இலக்கை நோக்கியே வேலை செய்கின்றனர்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், முற்போக்கு – ஜனநாயக – தேசபக்த சக்திகள் இந்த உண்மைகளை, இந்த யதார்த்தத்தை உணர்ந்து அதுக்கேற்ற வகையில் தமது கொள்கைகளையும், தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்படத் தவறின், நாடு மீண்டுமொருமுறை இந்த நாசகார சக்திகளால் இருண்ட யுகத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.


Vaanavil 121 January 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...