ஆளும் கட்சியும் ஆவலாதிகள் சேரும் ஒரே புள்ளி!

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த பாரத லக்ஸ்மன் பிரேமச்ந்திரா மற்றும் அவரது மூன்று மெய்ப்பாது காவலர்களை 2011ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் போது சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் அதே கட்சியைச் சேர்ந்த துமிந்த சில்வாவை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி விடுத்த அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதில் ஒரு சுவாரசியமான விடயமென்னவெனில், இந்த மகஜரில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி அணியைச் சேர்ந்த மனோ கணேசன் தலைமையிலான முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களும் இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட மனோ கணேசன், துமிந்த சில்வா இந்தக் குற்றத்தை இழைக்கும் போது மது போதையில் இருந்துள்ளார். இந்த இரு தரப்பு மோதலில் அவரும் காயமடைந்துள்ளார். ஏற்கெனவே அவர் 5 வருடங்களைச் சிறையில் கழித்துவிட்டார். எனவே மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் நான் ஒரு மனித உரிமைவாதி என்ற அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கையை அவதானித்த சில மனித உரிமை அமைப்புகள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்


மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவாராக இருந்தால், விசாரணையின்றி பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் உட்பட பலர் இவ்வாறு விடுவிக்கப்படுவார்களா எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.  இதற்கிடையில், துமிந்த சில்வாவின் விடுதலைக் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ள மனோ கணேசனின் செயல் அரசியல் உள்நோக்கம் கொண்டத என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பியுள்ளனர். அதாவது, மனோ கணேசன் குழுவினர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கான ஒரு நகர்வா இது என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.


இது போன்றதொரு நகர்வை ரவு+ப் ஹக்கீமின் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும் 20ஆவது திருத்தச்சட்ட வாக்கெடுப்பின் போது  ற்கொண்டிருந்தன. அதாவது இந்தக் கட்சிகளின் தலைவர்கள் திருத்தச்  சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க, உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். தலைமையின் மறைமுக  அங்கீகாரம் இன்றி இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதே அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.


மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கூட 20ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தார். 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் அரசாங்கத்துடன்

இணைந்து பட்டம் பதவி சலுகைகள் பெறும் ஆவலில் இருந்தார்கள். ஆனால் அவர்களை அரச தலைவர்கள் ஏறெடுத்தும் பார்க்காததால், ‘சீ..சீ… இந்தப் பழம் புளிக்கும்’ என்ற நிலையில் இருக்கிறார்கள்.

ஆக, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இந்த இனவாத முதலாளித்துவ தலைமைகள் எல்லாமே மக்களுக்கு தேர்தல் காலத்தில் ஒன்றைச் சொல்வார்கள், தேர்தல் முடிந்து தாம் எதிர்த்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமது சுயலாபம் கருதி அதனுடன் சேர்ந்து விடுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நடைமுறையாக இருக்கின்றது. 

Source: vanavil 119-2-20


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...