அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது?

 மெரிக்காவில் இம்மாதம் (நொவம்பர்) 03ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பநிலை தோன்றியுள்ளது. அதன் காரணமாக புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி குறிப்பிட்டபடி எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தனது ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்க முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும், ஜோ பைடன் (ஜனாதிபதி ஒபாமா காலத்து துணை ஜனாதிபதி) ஜனநாயகக் கட்சி சார்பிலும் போட்டியிட்டனர். அனைவரும் எதிர்பார்த்தபடியே பைடன் ட்ரம்ப்பை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். ஆனால் அவரது தெரிவை ட்ரம்ப் ஏற்க மறுத்து பதவியிலிருந்து ஓய்வு பெறுவதை மறுத்து வருகிறார்.





ட்ரம்ப்பின் அடாவடித்தனத்துக்கும் பிடிவாதத்துக்கும் அவர் சொல்லும் காரணம், ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் மோசடிகள் செய்து தனக்கு வரவேண்டிய வாக்குகளை அபகரித்துவிட்டனர் என்பதாகும். ட்ரம்ப் இந்தக் குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்பக் கூறி வருவதுடன், பல மாநில நீதிமன்றங்களில் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது குற்றச்சாட்டை ஆராய்ந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேர்தலின் போதோ அல்லது வாக்குகள் எண்ணப்பட்ட போதோ, அவ்வாறான முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் ட்ரம்ப் பதவி விலகிப் புதிய ஜனாதிபதிக்கு வழிவிடப் போவதில்லை என அடம் பிடித்து வருகின்றார். அதன் மூலம் ‘வேலியே பயிரை மேய்ந்தது போல’ பதவியில் உள்ள ஒரு ஜனாதிபதியே அமெரிக்க ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதுடன், சர்வாதிகாரத்தை நோக்கியும் நகர்ந்து வருகிறார். ட்ரம்ப் தேர்தலின் பின்னர் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் பதவி மாற்றங்கள் செய்து தனக்குச் சார்பானவர்களை நியமித்துள்ள விடயம் ட்ரம்பின் எதிர்காலத் திட்டங்கள் இராணுவத்தன்மையுடையனவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதாதற்கு, ஜெர்மனியி;ல் சர்வாதிகாரி ஹிட்லருக்கு கோயபல்ஸ் என்ற ஒரு பிரச்சார மந்திரி இருந்து வாய் திறந்தால் பொய் பேசி வந்தது போல, ட்ரம்ப்பிற்கு மைக் பொம்பியோ என்ற ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்து செயற்பட்டதும் அல்லாமல், எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி ட்ரம்ப் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பார் எனவும் கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் ட்ரம்ப்பும் அவருக்கு விசுவாசமான குழுவினரும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல தமது தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதானமாகப் பதவி விலகிச் செல்வார்கள் எனக் கருத முடியாதுள்ளது. அதன் காரணமாக ஏற்கெனவே தேர்தல் காரணமாக ஆழமாகப் பிளவுண்டுள்ள அமெரிக்க சமூகம் மேலும் பிளவுபடும் நிலையும், சில வேளைகளில் உள்நாட்டு யுத்தம் தோன்றும் நிலையும், மக்களின் வெகுஜனக் கிளர்ச்சி உருவாகும் நிலையும் கூடத் தோன்றலாம்.

உலகிலேயே தங்கள் நாடுதான் உயர்தரமான நாகரீக ஜனநாயகம் உள்ள நாடு என்று பீற்றி வந்த அமெரிக்க அரசியல்வாதிகள் இப்பொழுது நடந்து கொள்ளும் முறை நாகரீக உலகையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகளை ஜனநாயக விரோத நாடுகள் என்று வர்ணித்து வந்த அமெரிக்கர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? இலங்கையில் ஜனாதிபதியை மக்களே தெரிவு செய்யும் உயர்ந்த ஜனநாயக முறை இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லையே? அமெரிக்காவில் மக்கள் தமது ஜனாதிபதியை நேரடியாகத் தெரிவு செய்ய முடியாதே?

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச தோற்ற நிலையில் தேர்தல் முடிவு முழுவதுமாக அறிவிக்கப்பட முன்னரே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை விட்டு வெளியேறித் தனது சொந்த ஊருக்குக் கிளம்பிச் சென்றாரே? அந்த உயர்ந்த ஜனநாயகப் பண்பு ‘உலக ஜனநாயகக் காவலனான’ அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் ஏன் இல்லாமல் போனது?

இன்னொருபுறம் அமெரிக்காவில் ட்ரம்ப் போய் பைடன் ஜனாதிபதியாக வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் வந்துவிடப் போவதில்லை. ஏனெனில் அமெரிக்காவை உண்மையில் ஆள்வது அரசியல் கட்சிகள் அல்ல. அமெரிக்காவில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பகாசுர பல்தேசியக் கம்பனிகளே அமெரிக்காவின் உண்மையான ஆட்சியாளர்கள். அந்தக் கம்பனிகளின் கருவிகளே அரசியல் கட்சிகள்.

அந்தக் கம்பனிகளின் தேவைகள் கணக்கில் அடங்காதவை. அதாவது எண்ணெய் உட்பட உலகின் இயற்கை வளங்களைச் தங்குதடையின்றிச் சுரண்ட வேண்டும், அமெரிக்காவின் உற்பத்திகளுக்கான சந்தையாக உலக நாடுகளை மாற்ற வேண்டும், அமெரிக்காவில் உற்பத்தியாகும் ஆயுதங்களை விற்க வேண்டும், அதை விற்பதானால் உலக நாடுகளிடையே போர்கள் நடைபெற வேண்டும், இவைகளைச் சாதிப்பதற்கு உலக நாடுகளில் தமக்கு ஜால்ரா போடும் அரசுகள் இருக்க வேண்டும், தரை, கடல், ஆகாய போக்குவரத்துகள் எல்லாம் தங்குதடையின்றித் தமக்கானவையாக இருக்க வேண்டும். இப்படிப் பலப்பல.

இவைகள் பைடன் பொறுப்பேற்கும் அமெரிக்க அரசிலும் இருக்கத்தான் போகின்றன. ஆனால் ‘ உமியை விட சப்பட்டை கொஞ்சம் பரவாயில்லை’ என்பது போல, ட்ரம்ப்பை விட பைடனிடம் அமெரிக்க மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கும் இல்லை.

ஏனெனில், அண்மைய அமெரிக்க வரலாற்றில் ட்ரம்ப் காலத்தில்தான் மிகவும் வலதுசாரித்தனமாகவும் எதேச்சாரத்தனமாகவும் பல கொள்கைகள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. முன்னொரு காலத்தில் அமெரிக்காவில் மெக்கார்த்தி என்பவரால் முன்னெடுக்கப்பட்டு, ‘மெக்கார்த்தி யுகம்’ என வர்ணிக்கப்படும் தீவிர கம்யூனிச எதிர்ப்பு, வலதுசாரிப் போக்கு ட்ரம்ப் காலத்தில்தான் உருவாகி இருந்தது.

உள்நாட்டைப் பொறுத்தவரை ட்ரம்ப் காலத்தில்தான் அமெரிக்கா வாழ் கறுப்பு இன மக்களுக்கெதிராக அதிகமான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தென் அமெரிக்க மற்றும் முஸ்லீம் மக்களுக்கெதிரான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டது. கொரோனா என்ற கொடிய நோயைக் கட்டுப்படுத்துவதை விட்டு, அமெரிக்க கொள்ளை இலாபக் கம்பனிகளுக்காக தொழிலாளர்கள் நோய்க்கு மத்தியிலும் வேலை வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வெளிநாடுகளைப் பொறுத்தவரை, பாரீஸ் காலநிலை பற்றிய மாநாட்டிலிருந்து அமெரிக்காவை ட்ரம்ப் வெளியேற்றினார். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தார். வட கொரியாவுடன் வலுச்சண்டைக்குப் போனார். சீனாவுடன் வர்த்தக மற்றும் பலமுனைப் போரைத் தொடக்கினார். சீனாவுக்குரிய தென்சீனக் கடலை ஆக்கிரமிக்க முயன்றார். சீனாவுக்கு எதிராக அதன் எதிரி நாடான தாய்வானுக்கு நவீன ஆயுத விற்பனையை அதிகரித்தார். பாலஸ்தீன மக்களிடமிருந்து அபகரித்த ஜெருசலம் நகரை இஸ்ரேல் தனது புதிய தலைநகரமாக்குவதை அங்கீகரித்தார்.

கியூபா மீதும் வெனிசூலா மீதும் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஆசிய – பசுபிக் கூட்டு என்ற பெயரில் அவுஸ்திரேலியா, யப்பான், இந்தியா என்பனவற்றைச் சேர்த்துக்கொண்டு சீனாவுக்கு எதிராக இராணுவக் கூட்டை ஏற்படுத்தினார். இந்திய – சீனா எல்லையில் மோதல்களை உருவாக்கினார். அநாவசியமான பொருள் செலவில் மெக்சிக்கோவுடனான எல்லையில் சுவர் எழுப்பத் தொடங்கினார். உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தினார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றினார். ‘நேட்டோ’ அமைப்பிலிருந்தும் விலகப் போவதாக மிரட்டல் விடுத்தார். இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை.

இந்த அடுக்கடுக்கான முன்யோசனை அற்ற நடவடிக்கைகள் மூலம் உலக அரங்கிலிருந்து அமெரிக்காவை ட்ரம்ப் அந்நியப்படுத்தினார். அதன் மூலம் அமெரிக்க மக்களினதும் உலக நாடுகளினதும் வெறுப்பைச் சம்பாதித்தார் ட்ரம்ப். அதன் விளைவே அமெரிக்க மக்கள் ஜனாதிபதித் தேர்தலில்; ட்ரம்ப்பிற்கு கொடுத்த மரண அடியும், அதற்கு உலக மக்களின் வரவேற்பும். இருந்தும் ட்ரம்ப் சட்ட விரோதமான முறையில் தொடரந்தும் வலுக்கட்டாயமாக ஜனாதிபதியாக இருந்து கொண்டு தனது அழிவு வேலைகளைத் தொடர முயற்சிக்கிறார். அதற்கு அமெரிக்க மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

மறுபக்கத்தில் ஜோ பைடனின் வெற்றி முற்றுமுழுதாக கொண்டாட்டத்துக்குரிய மக்களினதும் ஜனநாயகத்தினதும் வெற்றி அல்ல. முன்னர் குறிப்பிட்டது போல, ‘உமியை விட சப்பட்டை பரவாயில்லை’ என்பதே அவரது வெற்றி. அதாவது அமெரிக்க மக்களும் உலக மக்களும் ட்ரம்ப்பின் அழுங்குப் பிடியில் இருந்து தப்பி சிறிது மூச்சு விடுவதற்கான கால அவகாசத்தை பைடனின் ஆட்சிக்காலம் வழங்கக்கூடும்.

இப்பொழுது என்னவென்றால், அமெரிக்கா ஏகாதிபத்தியமாக இருந்து வருகிறதே என்ற கவலை ஒருபுறமிருக்க, அங்கு ஜனநாயகமும் இல்லாமல் போய்விட்டதே என்ற கவலை புதிதாக உருவாகி இருக்கிறது உலக மக்களுக்கு.

Source: vaanavil-119 / 2020

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...