எம் காலத்திய வரலாற்றுத்துயரம்.- குருக்கள் மடத்துப் பையன்

 


  இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளில் அழிவுற்றதும் அலைவுற்றதும்  
மட்டுமல்ல,  இன ஒருமைப்பாட்டின் மையமாக காலகாலமாக திகழ்ந்து 
வந்திருந்ததும் இன்றைய கிழக்கு மாகாணமாக உருவாக்கப்பட்டிருக்கும் 
நிலத்தொடர்ச்சித்தான்.  இந்த நிலத்தில்தான்  மூவின மக்களும் உணர்வறக் 
கலந்து வாழ்ந்து களித்திருந்தனர்.  ஆனால் அந்த நிகழ்வு இன்று 
வெறுமனே  வரலாற்றுப் பதிவுகளாகவும் வாய்மொழி கதைகளாகவும் 
மட்டுமே  எம் முன்னே நிலவிவருவது எம் காலத்திய வரலாற்றுத்துயரம். 
இதன் விளைவும் அனர்த்தமும் எம் ஒவ்வொருவரின் தோள்களையே சாரும்.


  கொடூரமான  இனவழிப்புடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 
பத்து ஆண்டுகள் நிறைவுபெறும்  காலத்தில் நின்றுகொண்டு இலங்கை 
வாழ் சமூகங்களின்  இயங்கு திசையையும் இயங்கிய திசையும் 
குறியிடவேண்டியவர்களாகவே நாம் இருக்கிறோம்.
 "இன்னன்ன வகை தீர்வுகள்  சாத்தியம் என" அடையாளப்படுத்துவதைவிட 
எம் சமூகம் இயங்கிய திசையையும் இயங்க வேண்டிய திசையும் 
குறியிடுதல் தீர்வுகளை தேடிச்செல்வதைவிட தீர்வுகள் எங்களை தேடி 
வரச்செய்வதாகும். அதை முன்னிறுத்தி, மூவின மக்களும் 
இணைந்துவாழும் கிழக்கு நிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற அரசியல் 
சமூக செயற்பாடுகள்  அதிக அவதானத்திற்குள்ளாகின்றன. 
இன ஒருமைப்பாட்டுக்கும் இலங்கையின்  அமைதிக்கும் இந்த 
நிலத்தொடர்ச்சியில் நிகழ்கின்ற செயற்பாடுகள் மிக மிக 
முக்கியமானவை. அரசியல் அதிகாரங்களுப்பால் மூவின 
மக்களின் மனதில் நிகழ்கின்ற மாற்றங்களே முக்கியமானவை. 
அவ்வகை மாற்றங்களுக்கான  ஒரு எத்தனிப்பாக  வெளிவந்திருக்கும் 
ஒரு அரசியல்ப் பிரதியே குருக்கள் மடத்துப் பையன்.

  "தோண்டப்படாத குழிகளில் தொலைக்கப்படும் வரலாறு' என்றவொரு
 அடையாளத்தை முன்னிறுத்தி  1990 /06/ 12 ம் நாள் விடுதலைப்புலிகளால் 
முஸ்லீம் மக்கள் சுமார் 120 பேர் வரை கொன்று புதைக்கப்பட்டதாக 
கருதப்படும்  குருக்கள் மடம் என்ற தமிழ்க்கிராமத்தின், அந்த 
அழிவோடு அமிழ்ந்துபோன கதைகளை, நிகழ்வுகளை, மக்களை 
நினைவில் கொள்ளுமுகமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.  
கூடவே இன்றுவரை அந்தப்புதைகுழிகளை ஆய்வு செய்வதில் 
ஏற்படுத்தப்படும் தடங்கல்களை அரசியல் காரணகாரியங்களை 
வெளிச்சம் போட்டும் சொல்கிறது.

  பெரும்பான்மை இனஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த இளைஞர் 
அமைப்புகளில் அங்கம் வகித்திருந்த பல முஸ்லீம் இளைஞர்களை 
அவர்களின் தியாகங்களை, அது புலிகளாகட்டும் ஏனைய  ஆயுத 
இயக்கங்களாகட்டும், அரசியல் கட்சிகளாகட்டும்  அந்த இளைஞர்களின் 
 விபரங்களை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.   சிங்கள பேரினவாத  
அரசினதும், தமிழர் விடுதலைக்காக என்று எழுந்த அமைப்புக்கும் 
இடையில் அவர்களின் நலனுக்காக,  முஸ்லீம்- தமிழ் அப்பாவி மக்கள் 
பலிக்கடாவாக்கப்பட்ட இழி அரசியல் தந்திரம் விலாவாரியாக 
எடுத்துரைக்கப்படிருக்கிறது. ஆயுதம் ஏந்திய அனைத்து தரப்பினராலும் 
இந்த அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அதில் விடுதலைப்புலிகள் மட்டுமல்ல ரெலோ, ஈபிஆர்எல் எப்   
போன்ற அமைப்புகளுக்கும் பங்கு உண்டு. விடுதலைப்புலிகளைப்போல 
அவர்கள் பலம் பெற்றிருந்தாலும் இதுதான் நிகழ்ந்திருக்கும். 
அதை நோக்கியே அவர்களின் அன்றைய செய்யற்பாடுகள் 
இருந்திருப்பதை அறிந்துகொள்ள இயலும்.
                                     

  முஸ்லீம் ஊர்காவல்படை , மறுபுறத்தில் விடுதலைபுலிகளுக்கும் 
முஸ்லீம் தலைவர்களுக்குமான  மேல்மட்ட உறவுநிலை, அரசின் 
ஆதரவுத்தளம் அரசசார்பு  முஸ்லீம் உளவாளிகள் என ஒரு தொடர்ச்சியான 
செயல்நிலையூடாக   இனங்களுக்குள் முரண்களை உருவாக்கி அதனை  
தம் நலன் சார்ந்து இறுக்கி வைத்துள்ளன என்பதை முன்வைக்கிறது. 
கூடவே இனி வரும் நாட்களில் எவ்வாறு முஸ்லீம் தமிழ் சிங்கள 
உறவுகள் கட்டமைந்தால் ஒரு சுபீட்சமான எதிகாலத்தை நாளைய
 சந்ததியினருக்கு உருவாக்கிட முடியும் என்றும் எதிர்வு கூறுகிறது.

  முஸ்லீம் துணைப்படையினரால் தமிழர்கள் கொல்லப்பட்டமை மீதான 
 மீதான  கேள்வியினை துயரத்தை கரிசனையை முன்வைத்திருந்தாலும் 
அந்த நிகழ்வின் அடிப்படைகள் மீது  போதியளவு கவனக்குவிப்பினை 
செய்யவில்லை. சிலவேளைகளில் இந்த நூலுக்கு அந்த விடயங்கள்
 தேவையற்றவை என நூலாசிரியர் கருதியிருக்கவும் கூடும். 

எப்போதெல்லாம் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டார்களோ அடுத்த 
நாள்களில் ஏதாவது ஒரு தமிழ் கிராமம் சூறையாடப்பட்ட 
நிகழ்வுகளை வரலாறு விட்டுச்சென்றிருக்கிறது. இதில் யார் சரி பிழை 
என்பதைத்தாண்டி  இந்த நிகழ்வுகள் உருவாக்கிய இடைவெளிகள் 
குறித்தே நாம் கவலை கொள்ளவேண்டும்.  அதை இந்த  தொகுப்பு  முயன்றுள்ளது.

 கிழக்கின் தமிழ் - முஸ்லீம்  சந்தர்ப்பவாத  அரசியல்
தலைமைகளினதும் அரசியல் அதிகாரங்களுக்காக  தங்களை
ஒப்புக்கொடுத்து தங்கள் நலன்களை நிலைநிறுத்த 
முயல்பவர்களினதும் உருக்களை வெளிப்படுத்தி அவர்களிடமிருந்து 
விலகி மக்கள் நலன்சார் அரசியலின் தேவையை  
முன்வைப்பதால்  ஒரு முக்கியமான தொகுப்பாக இருக்கிறது.




source: https://netkoluvan.blogspot.com/2018/04/blog-post_15.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...