“நான் ஒதுக்கப்பட்டு ஒரு துரோகி என்று அழைக்கப்பட்டேன்” - 2020 ஆம் ஆண்டின் முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான வெற்றியாளர் பேசுகிறார“ - ஜூவைரியா மொஹிதின்

 வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானதொரு பெயர் ஜுவைரியா மொஹிதீன். 1990 இல் அவரது சொந்த ஊரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜுவைரியா, இடம்பெயர்ந்த மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதற்கு உழைத்துள்ளார்.

அவரது அமைப்பான முஸ்லீம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை

((Muslim Women’s Development Trust - MWDT) மூலம், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் ((Muslim Marriage and Divorce Act - MMDA) சீர்திருத்தங்களுக்கான அரசியல் ஆதரவிற்கு ஜுவைரியா பெண்களை பாராளுமன்றத்திற்கு வழிநடத்திச் சென்றார். புத்தளத்தை தளமாகக் கொண்ட ஜுவைரியா அண்மையில், 2020 ஆம் ஆண்டுக்குரிய முன்னணி வரிசைப் பாதுகாவலர்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய விருதைப் (Front Line Defenders Asia-Pacific Regional Award)பெற்றுள்ளார்.


கேள்வி: 1990 ஆம் ஆண்டு வடக்கில் கேள்வி:

புலிகளால் வெளியேற்றப்பட்ட பின்னர்,புத்தளம் பகுதியில் அகதிகளாக உங்கள் குடும்பம் மீள்குடியேற்றம் செய்யத் தள்ளப்பட்டது. உங்கள் வாழ்க்கையை இது எவ்வாறு பாதித்தது?

பதில்: எனது 23 வது வயதில், பெற்றோர், எனது பாட்டி மற்றும் எனது எட்டு உடன்பிறப்புகள் எங்கள் சொந்த ஊரான மன்னார் -எருக்கலம்பிட்டியில் இருந்து வெளியேறி, கடல் வழியாக கல்பிட்டிக்கு வந்தோம். எங்கள் ஊரிலிருந்து வெளியேறுவதற்கு, எங்களுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஒரு மாதத்தில் திரும்பி வரலாம் என்று நாங்கள் நினைத்ததால், எங்கள் உடமைகளை விட்டுச் சென்றோம். எனினும் இதுவரைக்கும், எங்களால் திரும்பி வர முடியவில்லை. நாங்கள் அரசாங்க வேலையைக் கொண்டிருக்காதபடியால், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தங்கி நாங்கள் நிறைய போராடினோம். என் உடன் பிறந்தவர்கள் அப்போது படித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நானும் என் மூத்த உடன்பிறப்புகளும் வேலைகளுக்கு விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் அப்போது தான், எங்கள் ஊரை விட்டு வெளியேறுவதற்கு நாங்கள் நிர்ப்பந்திக்கப்ட்டோம்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் (IDP) என வாழ்ந்து பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தோம். பரிதாபாத்தில் ஒரு முகாமில் நான் இருந்தேன். காலையில் அங்கே தண்ணீர் இல்லாததால், முகாமில் உள்ள பெண்கள் நள்ளிரவு 1 மணியிலிருந்து 2 மணிக்கிடையில் குளிப்பார்கள். இந்த தண்ணீர் பிரச்சினை காரணமாக, வாரம் ஒரு முறை மாத்திரமே எங்களால் குளிக்க முடியும். ஒரு கடினமான காலகட்டமாக எனக்கு அது இருந்தது. ஆனால் என்னால் ஒருபோதும் மறக்க முடியாத ஓர் அனுபவமாகவும் அது இருக்கின்றது. இந்த அனுபவம் எப்படியோ இன்று நான் யார், எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கக்கூடியளவிற்கு என்னை வடிவமைத்துள்ளது.

கேள்வி: ஒரு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்ற முறையில் எப்படி உங்கள் பயணத்தை ஆரம்பித்தீர்கள், அவ்வாறு செயற்படுவதற்கு உங்களைத் தூண்டியது எது?

பதில்: நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, ஆனால் நாங்கள் நிறைய துன்பங்களை அனுபவித்தோம். இது எங்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதி என்று நான் உணர்ந்தேன். அடிப்படை மனித உரிமைகளுக்கான வழிவகைகளை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இந்த அடிப்படை உரிமைகள் இல்லாத காரணத்தால், மனித உரிமைகளுக்காகப் பேச வேண்டியதொரு தேவையை எனக்கு இது எழுப்பியது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவு வழங்கிடும், கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தில் ((Rural Development Foundation - RDF) தொண்டாற்றுவதில் எனது பயணத்தை நான் ஆரம்பித்தேன். 

குறிப்பிட்ட மகளிர் சங்கங்களிலும் நான் தொண்டாற்றினேன். எனது  தன்னார்வத் தொண்டாற்றப்பணிகள் மூலம், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல மக்கள் என்னை அறிந்து கொண்டார்கள். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களினது குடியிருப்புகளுக்கு விஜயம் செய்த மக்கள், எப்போதும் என்னைச் சந்தித்து என்னுடன் பேசுவார்கள். நான் ஒரு தன்னார்வத் தொண்டராக இருப்பது மக்களுக்குத் தெரிந்ததால், மனித  உரிமைகள் தொடர்பான சில கூட்டங்கள் மற்றும் பட்டறைகள் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டியேற்பட்டது, மேலும் என்னால் அவற்றில் கலந்து கொள்ள முடிந்தது.

அவைகளில் ஒரு சிலவற்றுக்காக நான் கொழும்புக்கும் பயணித்தேன். அதனால் மனித உரிமைகள் தொடர்பாக தேசிய மட்டத்தில் என்னால் பணியாற்ற முடிந்தது.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை நிறுவப்பட்டதின் பின்னணியில் உள்ள கதை என்ன?

பதில்: எனக்கு ஏறத்தாள 24 வயது அல்லது 25 வயதாக இருக்கையில், நான் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டு மன்றம் Women’s Research and Action Forum - MWRAF) நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டதால், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. பெண்கள் சங்கங்களில் நான் தொண்டாற்றுகையில் எம்.எம்.டி.ஏ (ஆஆனுயு) இல் கூறப்பட்டுள்ள சமத்துவமற்ற விதிகளால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்தேன். ஒரு தன்னார்வத் தொண்டர் என்ற முறையில், நான் குவாஸி நீதிமன்றங்களுக்குச் (Quazi courts)  சென்று, நடவடிக்கைகள்  எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்த்திருக்கிறேன். இது பெண்களின் உரிமைகளை நோக்கியும், குறிப்பாக கிராமப்புற மற்றும் இடம்பெயர்ந்த பெண்களின் வாழ்க்கை மேம்பட பாடுபட வேண்டிய அவசியத்தை எனக்கு ஏற்படுத்தியது. நான் எம்.எம்.டி.ஏ சீர்திருத்தங்களுக்காக அரசியல் ஆதரவிற்கு பாராளுமன்றத்திற்கு பெண்கள் பிரதிநிதிகளை அழைத்துச் செல்ல தன்னார்வத் தொண்டர் என்ற அனுபவம் எனக்கு உதவியதுடன், கிராம மசூதிகளின் அடிமட்ட நிலைளிலும் நாங்கள் ஆதரவு நாடினோம்.

பெண்களின் உரிமைகளுக்காக மேலும் செயற்பட வேண்டிய தேவையொன்று இருப்பதையும், ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் நான் உணர்ந்தேன். எனவே, 2010 ஆம் ஆண்டில் சுமார் 75 பெண்களுடன்  நான் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையை உருவாக்கினேன்.

ஒரு பேனை, ஒரு காகிதம் மற்றும் ஒரு மேசையுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், அச்சடிப்பதற்குக் கூட, நாங்கள் ஏறத்தாள 5 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்த அமைப்பை உருவாக்க உதவிய எங்களது நலம் விரும்பிகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கிராமத்தில் உள்ள பெண்களுக்கு உதவ நாங்கள் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையை ஆரம்பித்தோம்.

ஆனால் இன்று நாங்கள் ஒருபோதுமே கற்பனை செய்து பார்த்திராத, தேசிய அழுத்தமொன்றினை ஏற்படுத்தக் கூடியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையில் என்ன செய்கிறீர்கள்?

பதில்: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையானது அடிமட்ட நிலையில் முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை வழிநடத்துவதோடு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து தேசிய மட்டத்திலான சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. வீட்டு துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சட்ட உதவி வழிவகையை நாங்கள் வழங்குகிறோம். நாங்கள் அவர்களுக்கான ஆலோசனைப் பணிகளையும் வழங்குகிறோம். நாங்கள் தமிழில் ஆலோசனைகளை வழங்குவதால், சில வேளைகளில் புத்தளம் மாஜிஸ்ரேட் நீதிமன்றம் எங்களிடம் ஆட்களை அனுப்புவார்கள்.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இளைஞர்களிடையே சமாதானத்தைக் கட்டமைத்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். மகளிர் அமைப்புகளுள்ள பகுதியில், குறைந்த வயது திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை நடத்தி வருகிறது. குழந்தை மணப்பெண்களுக்கு சட்ட உதவிக்கான வழிவகையையும் நாங்கள் வழங்குகின்றோம். இது தவிர, கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தி, குறைந்த வயது திருமணங்களை குறைக்கும் நோக்கில் ஒரு கிராமத்தில் குழந்தைகள் கழகம் ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். தற்போது, நாங்கள் குறைந்த வயது திருமணங்கள் குறித்து ஓர் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

கேள்வி: பாரபட்சமான குடும்ப சட்டங்கள் உட்பட முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்த முதல் வரிசையில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை இது எவ்வாறு பாதித்தது?

பதில்: இந்த விருதை வென்றது எனக்கு மிகவும் சிறப்பானதொரு தருணமாக இருந்தது. எனினும் என்னை நோக்கி பல வெறுக்கத்தக்க கருத்துக்களை நான் சமூக ஊடகங்களில் கண்டேன். இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிராக நான் வேலை செய்து வருகிறேன் என்று முஸ்லிம் சமூகத்தில் உள்ள சிலர் கூறுகிறார்கள். எம்.எம்.டி.ஏ இன் சில விதிகள் காரணமாக முஸ்லீம் பெண்களால் எதிர்கொள்ளப்படும் பாகுபாடு குறித்து நான் ஒரு முறை ஊடகங்களிடம் பேசினேன். அப்போது பலர் என்னை  அவமதித்து, மதத்திற்கு எதிராக நான் பேசியதாக் கூறி என்னை மிரட்டினார்கள். நான் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, துரோகி என்று அழைக்கப்பட்டேன். நான் போகும் இடமெல்லாம் பலர் என்னை அவமதித்தனர். இதனால், அலுவலகம் செல்வதும் வீடு திரும்புவதையும் தவிர, மூன்று மாதங்களாக நான் எனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

எனது கணவரைத் தவிர, எனது குடும்பம் வேலையைக் கைவிடும்படி என்னிடம் கூறியதோடு, என்னால் அவர்கள் வெட்கப்படுவதாகவும் கூறினார்கள். என் கணவரும் அவமானப்படுத்தப்பட்டார். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எனினும், ஒரு சில மத அறிஞர்களை நான் கலந்தாலோசித்தேன். நான் மதத்திற்கு எதிராக போகவில்லையென அவர்கள் என்னிடம் கூறினார்கள். இந்த புரிதல், என்னை ஒதுக்கியவர்களுக்கு எம்.எம்.டி.ஏ பற்றி எதுவும் தெரியாது என்ற அறிவுடன் இணைந்து எனது தலையை நிமிர்த்தி வைத்திருக்க உதவியது.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எவை?

பதில்: அண்மையில் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் காரணமாக, முந்தல்,  புத்தளத்திலுள்ள ஏராளமான மக்களுக்கு நிவாரணம் எதுவும்  வழங்கப்படவில்லை. எனவே, நாங்கள், அவர்களுக்கு உதவுவதென முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையில் நாங்கள் தீர்மானித்தோம். இந்த பகுதியிலுள்ள மக்களின் அவலநிலையை எடுத்துக் காட்டுகின்ற ஒரு வீடியோவை எங்கள் முகநூல் பக்கம் மூலம் நாங்கள் பதிவேற்றியதால், நன்கொடைகள் கொட்டத் தொடங்கின. இப்பகுதியிலுள்ள ஏறத்தாள 2000 மக்களுக்கு எங்கள் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகள் மூலம் உதவ முடிந்தது. அவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கும் போது, இருபுறத்திலும் சிங்கள, முஸ்லிம் மக்கள் உள்ளடக்குகின்ற பக்கத்துக் கிராமங்களில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையில்  பகைமையைக் கொண்டிருந்ததை நான் அறிந்து கொண்டேன். இரு கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கும் ஒரு முஸ்லீம் அமைப்பாக நாங்கள் இருந்ததால், கிராம மக்கள் அவர்களுக்கு இடையே உள்ள விரோதத்திற்கு பாலத்தை போட முடிந்தது. இத்தகைய சம்பவங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி இளைஞர் யற்பாட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்ற எனது பிரச்சாரத்தை என்னை மேலும் உந்தியுள்ளன.

மேலும், முஸ்லீம் சமூகத்துடன் கொண்டிருந்த தொடர்பு போல் ஏனைய சமூகங்களுடன் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளை அதிகம் வேலை செய்யவில்லை போன்று நான் உணர்கிறேன். எனவே எதிர்காலத்தில் ஏனைய சமூகங்களுடன் இன்னும் அதிகமாக பணியாற்ற நாங்கள் ஆவலாக இருக்கிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும் நோக்கிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெண்ணும் அடிப்படை மனித உரிமைகளுக்கான வழிவகை கிடைப்பதற்கும் பாலின பாகுபாட்டு சட்டங்கள் சிர்திருத்தப்படும் வரையிலும் நான் தொடர்ந்து வேலை செய்வேன்.

ஜுவைரியா மொஹிதீன் அவர்களின் இப்பேட்டி ஒக்ரோபர் 23ந் திகதி (2020)

டெயிலி மிரர் பத்திரிகையில் வெளியானது.

பேட்டி கண்டவர்: முகட்டாசா வாஹிட் (Muqaddasa Wahid)  

தமிழில்: வானவில் 

Source :  வானவில 119-2020


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...