சுமந்திரன் கேட்பது நியாயமானதா?-–பிரதீபன்ரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார். நல்லது. ஏனெனில் சுமந்திரன் போன்றவர்கள் தம்மை மறந்து கூறும் இத்தகைய வார்த்தைகள்தான் அவர்களது உண்மையான உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன.
அவரது கூற்றுப்படி, இலங்கை தமிழர்கள் மத்தியில் செயற்படும் ஏனைய கட்சிகளான ஈ.பி.டி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விகனேஸ்வரன் தலைமையில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராசப்பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ரெலோவிலிருந்து பிரிந்து வந்த என்.சிறீகாந்தா தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் கூட்டமைப்பு, அனந்தி சசிதரன் தலைமையிலான சுயாட்சிக் கழகம், ஈரோஸ் மாற்றுக் குழு, ரெலோ மாற்றுக்குழு போன்ற ஏனைய தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாகப் பேசக்கூடாது என்பதுதான் அர்த்தம்.


சரி, அவரது இந்த ஏகப் பிரதிநிதித்துவ நிலைப்பாட்டை ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும், கடந்த காலம் பற்றிய சில கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார்?
அதாவது, 1956 முதல் இன்றுவரை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே அதிகமான ஆசனங்களை நாடாளுமன்றத்தில் அளித்து வந்திருக்கிறார்கள். ஆனால் என்ன சாதனையை நிலைநாட்டினீர்கள்?
1956 முதல் 65 வரை சத்தியாக்கிரகம், சட்ட மறுப்புப் போராட்டம், கறுப்பு கொடி பறக்க விடுதல், திருமலை யாத்திரை என பல ‘போராட்டங்களை’ நடத்தினீர்கள். அதனால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா?
1965இல் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக என்று சொல்லி டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1970 வரை 5 வருடங்கள் சேர்ந்திருந்தீர்கள். ஆனால் இறுதியில் தமிழ் மக்களுக்கு என்னத்தைப் பெற்றுக் கொடுத்தீர்கள்?
1970 முதல் 77 வரை ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராக பல விதமான சட்ட மறுப்புப் போராட்டங்களை நடத்தினீர்கள். 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தனித் தமிழ்நாடு தீர்மானமும் நிறைவேற்றினீர்கள். இவற்றால் என்னத்தைச் சாதித்தீர்கள்? குறைந்தபட்சம் நீங்கள் நிறைவேற்றிய தனித் தமிழ்நாடு தீர்மானத்துக்காவது விசுவாசமாக இருந்தீர்களா? (இப்பொழுது அதிலிருந்து ‘றிவேர்ஸ்’ அடித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்கிறீர்கள்)
1977 முதல் 93 வரை ஜே.ஆர்., பிரேமதாச போன்ற ஐ.தே.க. தலைவர்களின் ஆட்சியுடன் தேன்நிலவு கொண்டானீர்கள். 1977இல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் உங்களுக்குக் கிடைத்தது. இவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையைச் செய்தீர்கள்?
1994 முதல் 2015 வரை பதவியில் இருந்த சந்திரிக, மகிந்த ராஜபக்ச ஆட்சிகளுக்கெதிராக எத்தனையோ போராட்டங்களை நடத்தினீர்கள். உங்கள் தலைமையில் புலிகள் உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை வைத்துக்கொண்டு ‘புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்’ என உரக்க முழக்கமிட்டீர்கள். (புலிகள் இல்லாதபடியால் இப்பொழுது உங்களை அரசாங்கம் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள்) அதன் மூலம் என்னத்தைச் சாதித்தீர்கள்?
இலங்கை அரசாங்கத்துடனும், இந்தியாவுடனும், மேற்கு நாடுகளுடனும் கள்ளக் கூட்டு வைத்து புலிகளின் அழிவுக்கு மறைமுகமாக உதவினீர்கள். (புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயம் என அண்மையில் உங்கள் தலைவர் சம்பந்தன் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்) இப்பொழுது பூனையில்லாத வீட்டில் எலிகளின் கொண்டாட்டம் போல, புலிகள் இல்லாத நிலையில் எலிகளாகக் கொட்டமடிக்கிறீர்கள்.
2015 முதல் 2019 நொவம்பர் 16 வரை ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசின் நான்கு தூண்களில் ஒன்றாக நின்று செயல்பட்டீர்கள். அதன் மூலம் தமிழ் மக்களுக்காக என்னத்தைச் சாதித்தீர்கள்?
இப்பொழுது தமிழ் மக்கள் உங்களுக்கு ஏகப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மீண்டும் யாசிக்கிறீர்கள். 1956 முதல் ஏறத்தாழ 64 வருடங்களாக தமிழ் மக்கள் உங்களுக்கு ஏகப் பிரதிநிதித்துவம் வழங்கியும் எதையும் சாதிக்காத நீங்கள், தமிழ் மக்களுக்கு இருந்த அற்பசொற்ப உரிமைகளையும் இல்லாமல் செய்த நீங்கள், இனி ஏகப் பிரதிநிதித்துவம் பெற்று என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்?
முதலில் இந்த ஏகப் பிரதிநிதித்துவம் என்ற சொல்லே தவறானது. பாசிசத்தன்மை வாய்ந்தது. அதாவது நான் மடடும் வாழ வேண்டும், மற்றவர்கள் வாழக்கூடாது என்ற சுயநல, அராஜக, பாசிச சிந்தனையிலிருந்து எழுவது.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பொழுது மக்கள் உங்களுக்கு ஏகப் பிரதிநிதித்துவம் வழங்குகிறார்களா அல்லது இருக்கிற பிரதிநிதித்துவத்தையும் பறிக்கிறார்களா என்பது தெரிய வரும்.
Source: Chakkaram.com

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...