தமிழ் மக்களுக்கு தேவை ஆள் மாற்றமா அல்லது கொள்கை மாற்றமா?

மிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகள் சம்பந்தமாகவும், ஆயுதப் போராட்டம் சம்பந்தமாகவும் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி சம்பந்தமாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன.
சுமந்திரன் என்ன நோக்கத்துக்காக புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் விமர்சித்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கத்தில் அவரை விமர்சிப்பவர்கள் இப்பொழுதும் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது அவர்கள் இன்னமும் தனிநாடு காணுவதற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட விரும்புகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
சுமந்திரன் சொந்தக் கட்சியான தமிழரசுக் கட்சியையும், அது தலைமைதாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ‘தூய்மைப்படுத்தும்’ வேலையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. அதாவது தான் சார்ந்திருக்கும் அணி தமிழீழ தனிநாட்டையோ, அதற்கான ஆயுதப் போராட்டத்தையோ ஆதரிக்கவில்லை என்பதை நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக் காட்டுவது அவசியம் என சுமந்திரன் நினைக்கிறார்.
2009இல் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட பிறகு தனிநாட்டுக் கோரிக்கையோ அதற்கான ஆயுதப் போராட்டமோ பெரும் பின்னடைவுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ் பொதுமக்களும் அந்த நிலை திரும்ப ஏற்படுவதை ஏற்கும் மனநிலையில் இல்லை. எனவே இனிமேல் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்ய விரும்பும் எவரும் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் முடியுமான அளவுக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வதை நோக்கியே வேலை செய்ய முடியும்.
இதன் அடிப்படையில் வேலை செய்வதானால் முதலில் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் தம்மைப்பற்றி ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இன்று இருக்கும் ஒரேயொரு கட்சி டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மட்டுமே. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட மற்றைய கட்சிகள் எல்லாவற்றையும் சிங்கள மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையே காணப்படுகிறது.
டக்ளஸ் தேவானந்தா சிங்கள மக்கள் மத்தியில் தனது கட்சியைப் பற்றி நம்பிக்கையை உருவாக்கியதிற்கு அவர் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டதும், புலிகளை இறுதிவரை எதிர்த்து நின்றதும் மட்டும் காரணங்களல்ல. அவர் சாத்தியமான நேரங்களில் அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றதுடன், தனது பதவிகளுக்கூடாக 30 வருடப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்ததுமாகும்.
அவரது கட்சியுடன் ஒப்பிடுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணியாகவும், நாடாளுமன்றத்தில் பல ஆசனங்களைக் கொண்டதாகவும் இருந்த போதிலும், கூட்டமைப்பால் இத்தனை வருட காலத்தில் ஈ.பி.டி.பி. கட்சி சாதித்ததில் 10 வீதத்தைத்தன்னும் சாதிக்க முடியவில்லை. இதன் காரணமாக சாதாரண தமிழ் பொதுமக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை இழந்த நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையைப் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்களோ, சம்பந்தன் தவிர, சிந்திப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தேர்தல் வந்தால் வழமைப்பிரகாரம் தமிழ் தேசியவாதத்தை சற்று உணர்ச்சிகரமாக உரத்துப் பேசி மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற கனவில் மூழ்கி இருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேகம் போதாது என்று சொல்லி அதிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சிகள் அமைத்தவர்களின் நிலையும் அதுதான்.
இந்த நிலையில்தான் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க வேண்டிய மாற்றுவழி குறித்து அக்கறைப்படுகிறார். அவரது இந்த அக்கறை தனிநாட்டுக் கொள்கையையும் அதற்கான ஆயுதப் போராட்டத்தையும் நிராகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. எதிர்காலத்தில் பதவிக்கு வரக்கூடிய எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து வேலை செய்வது வரை கூட்டமைப்பு பயணிக்க வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். (இந்தத் தந்திரோபாயத்தில் ஈ.பி.டி.பி. கட்சியை அரசுகளிடமிருந்து ஓரம்கட்டும் மறைமுகத் திட்டமும் இருக்கிறது)
சுமந்திரன் இந்த விடயத்தில் கூடுதலான அக்கறை காட்டுவதற்கு காரணமும் இருக்கிறது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை மூத்தவரான சம்பந்தன் இருக்க மாவை சேனாதிராசா தலைவராக இருந்தாலும், அவரது பதவி சம்பிரதாயபூர்வமான பதவிதான். உண்மையில் தமிழரசுக் கட்சியை இயக்குபவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும்தான். தமிழரசுக் கட்சியின் தற்போதைய முடிவுகளை எடுப்பதில் சுமந்திரன் வகிக்கும் பங்கை கட்சியில் வேறு எவரும் வகிக்கும் நிலை இல்லை. எனவே, சம்பந்தனுக்குப் பிறகு சுமந்திரனே தமிழரசுக் கட்சியின் அதிகாரமிக்க தலைவராக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் சுமந்திரன் தமிழரசுக் கட்சியை அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு ‘மாற்றி’ அமைக்கப் போகிறார் என்பதே அடிப்படையான கேள்வியாகும். ஏனெனில் தமிழ் தலைமைகளின் மாற்றங்களை எடுத்துப் பார்த்தால், தலைமை மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நடந்து வந்தது உண்மைதான். ஆனால் கொள்கை மாற்றம் நடந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்தில் தமிழர்களின் ஒரேயொரு கட்சியாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சி இருந்தது. பின்னர் அதிலிருந்து பிரிந்து எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உருவாக்கிய தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக இருந்தது. அதன் பின்னர் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி அ.அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர்களின் பிரதான கட்சியாக இருந்தது. தமிழ் மிதவாத தலைமையில் அதிருப்தி கொண்ட தமிழ் இளைஞர்கள் பல்வேறு ஆயுதப்போராட்ட இயக்கங்களை உருவாக்கினர். அவர்கள் மத்தியிலும் போட்டி ஏற்பட்டு இறுதியில் புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை அழித்து தானே தனிக்காட்டு இராஜாவாக மாறியது. இறுதியில் புலிகளையும் இலங்கை அரசு அழித்த பின்னர், தமிழர்களின் மிதவாதத் தலைமை என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது தமிழர்களின் பிரதான அரசியல் தலைமையாக இருக்கிறது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இந்த 72 ஆண்டுகால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஆறு தலைமைகள் உருவாகியுள்ளன. ஆனால் இந்தத் தலைமைகளின் கொள்கைகளில் அடிப்படை மாற்றம் ஏதாவது ஏற்பட்டதா? ஒரேயொரு மாற்றம் என்னவென்றால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவென முதலில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஏதாவது உருப்படியாகச் சாதிக்கப்பட்டதா? ஒன்றுமே இல்லை. அதற்கான காரணம் என்ன? இங்கேதான் தொடர் தோல்விக்கான அடிப்படை உண்மை பொதிந்து கிடக்கிறது.
முதலாவது, தமிழ் தலைமைகள் எல்லாமே தமிழ் மக்கள் மத்தியிலுள்ள உயர்ந்த சாதியைச் சேர்ந்த, நிலபுலமும் பணமும் படைத்த, ‘மெத்தப் படித்த’வர்களைக் (பிரபாகரன் நீங்கலாக) கொண்டதாகவே இருந்தது. இந்தத் தலைமை தான் பிரதிநிதித்துவப்படுத்திய பிற்போக்கு வர்க்கங்களின் நலன்களுக்காக வேலை செய்த அதேநேரத்தில், சாதாரண தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளது.
இரண்டாவதாக, தமிழ் மக்களின் தேசிய – ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு சாதாரண சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான எந்தவொரு வேலையையும் தமிழ் தலைமைகள் செய்தது கிடையாது. அதேநேரத்தில் சிங்கள மத்தியிலுள்ள பெரும் செல்வந்த முதலாளிகளின் கட்சியான சிங்கள இனவாத பிற்போக்குக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே தமிழ் தலைமைகள் எப்பொழுதும் கூடிக்குலாவி வந்துள்ளன.
மூன்றாவதாக, தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு இலங்கையில் வாழ்கின்ற ஏனைய இன மக்களின் ஆதரவைப் பெறுவதற்குப் பதிலாக அந்நிய சக்திகளின், குறிப்பாக, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற்று இலங்கையைப் பிளவுபடுத்தி, தமிழர் பிரதேசத்தில் தனி அரசொன்றை நிறுவி, அதை ஏகாதிபத்திய நாடுகளின் ஒரு காலனியாக்கவே தமிழ் தலைமைகள் எப்பொழுதும் முயன்று வந்துள்ளன.
இவைதான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் அகிம்சாவாதத் தலைமைகளினதும், ஆயுதப் போராட்டத் தலைமைகளினதும் மாற்ற முடியாத தொடர்ச்சியான கொள்கையாக இருந்து வந்துள்ளது. இந்தக் கொள்கைகளை மாற்றாதவரை தமிழ் மக்களின் வாழ்வில் ஒருபோதும் மாற்றம் ஏற்படப்போவதில்லை. தலைமை மாற்றத்தால் மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. அப்படிக்காண முடியுமென்றால் இந்த 72 வருட காலத்தில் 6 தலைமைகள் உருவாகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அடிப்படையான மாற்றம் கொள்கை மாற்றமாகவே இருக்க வேண்டும்.
இந்த நிலைமையில் சுமந்திரன் புலிகளையும் ஆயுதப் போராட்டத்தையும் மட்டும் விமர்சிப்பதால் மாற்றம் வந்துவிடப்போவதில்லை. அடிப்படையில் பிற்போக்கு தமிழ் இனவாதிகளாகவும், சிங்கள பிற்போக்கு இனவாத ஐ.தே.கவின் சகபாடிகளாகவும், ஏகாதிபத்திய விசுவாசிகளாகவும் இருந்துகொண்டு மாற்றம் கொண்டு வருவதென்பது, மாவை சேனாதிராசாவுக்குப் பதிலாக ஒரு சுமந்திரனைத் தலைமைக்கு கொண்டு வருவதாக மட்டுமே இருக்கும். இதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.
சுமந்திரன் புலிகளுக்கெதிராகவும், ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகவும் ‘விமர்சனம்’ செய்வதும், அதைக்கண்டு அவருக்கு எதிரானவர்கள் ‘சன்னதம்’ ஆடுவதும், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அடுத்தமுறை நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான நாய்ச்சண்டையே தவிர வேறு ஒன்றுமல்ல என்பதே உண்மையாகும்.
Source: வானவில் இதழ் 113-

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...