காணாமல் ஆக்கப்பட்டவர்கள் - அமிர்தலிங்கம் பகிரதன்



 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தர கோரி ஒரு சுழற்சி முறை போராட்டம் வன்னியில் முன் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு பற்றுவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தாய்மார், தந்தைமார், மனைவிமார் மற்றும் பிள்ளைகள். இந்த போராட்டம்
நான் உணர்ந்த வரையில் இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம்
சரணடைந்த போராளிகளையும் வேறு சிலரையும் மீட்டுத் தரும்படி இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான
போராட்டமாகும்.

ஆயுத போராட்ட ஆரம்ப கட்டத்திலேயே விடுதலை இயக்கங்களுக்கிடையே
மாற்று கருத்து கொண்டவர்கள், தலைமையை கேள்வி கேட்பவர்கள்
இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு சிறிய உதாரணத்தை குறிப்பிடலாம் என எண்ணுகிறேன் . கல்லடி மைக்கல், 70களின்ஆரம்பத்தில்
ஆயுத போராட்டத்தில் நம்பிக்கை வைத்து போராட புறப்பட்ட இளவல்.
இவர் வீட்டிலிருந்து இளைஞர்கள் சிலருடன் இணைந்து தமிழகம் சென்ற
சில காலங்களிலேயே காணாமல் ஆக்கப்பட்டார். இவரை தேடி இவரது
விதவை தாயார் பல இடங்களிலும் விசாரித்து கடைசியில்
என் தந்தையிடமும் வந்து ஐயா எனது மகனை காணவில்லை. அவரது
இருப்பிடம் அறிந்து கூறுங்கள் என வேண்டுகோள் வைத்தார். இந்த
விதவை தாயார் வசதியானவர் அல்ல. நாளாந்தம் மட்டக்களப்பு புனித
மைக்கல் கல்லூரியினருகே தனது சிறிய கடகத்தை வைத்து சிறுவர்களுக்கு

தின்பண்டங்கள் மற்றும் பழங்கள் விற்று அந்த சொற்ப வருமானத்தில்
தனது வாழ்நாளை கொண்டு நடத்தியவர். தனக்கு கிடைக்கும் சிறு
வருமானத்தில் சேமித்து யாழ்ப்பாணம் மீண்டும் மிண்டும் வந்து தனது
மகனைப் பற்றி அறிய முற்பட்டார எனது தந்தையாரும் இயக்கத்துடன்
தொடர்புகளுடைய ஒரு இளைஞரிடம் இவர் பற்றி விசாரித்து தகவல்
தருமாறு கேட்டார். ஓரிரு மாதங்களின் பின்னர் அந்த இளைஞர் என்
தந்தையிடம் வந்து கல்லடி மைக்கல் உயிருடன் இல்லை என்ற தகவலை
கூறினார். அவர் இயக்கத்தினுள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால்
இல்லாமல் ஆக்கப்பட்டார் என தெரிவித்தார். இது நடந்தது 70பதின்
ஆரம்பங்களில். அப்போது எந்த இயக்கமுமே ஆரம்பிக்கப்படவுமில்லை,
பெயரிடப்படவுமில்லை. உரிமை போராட்டத்தில் ஈடுபாடு உள்ள சில
இளைஞர்கள் ஆயுத போராட்டம் பற்றி சிந்தித்து அதை செயலில் கொணர
முற்பட்ட காலம். தமிழ் நாட்டில் ஒரு கடற்கரை கிராமத்தில் இந்த
இளைஞனின் முடிவுரை எழுதப்பட்டது.



பின்னர் இயக்கங்கள் பிரபலமடைந்து பெரிய அளவில் செயல்பட முற்பட்ட
போது அதனுள்ளும் வெளியிலும் இருந்த இளைஞர்கள் காணாமல்
ஆக்கப்பட்டனர் , கொலை செய்யப்பட்டனர். இராணுவத்தால் கைது
செய்யப்பட்ட பல இளைஞர்களை தனக்கு தெரிந்த வழிகளால் விடுதலை
செய்ய உதவிய சிலர் கூட அரசாங்கத்துடன் உறவு கொண்டவர்கள் என கூறி
கடத்தப்பட்டனர், பின்னர் அவர் தம் மனைவியரிடம் வௌ;ளை சேலை
வழங்கப்பட்டு சமிக்ஞையாக அவர்கள் உயிருடன் இல்லை என கூறப்பட்ட
சம்பவங்களையும் நான் அறிந்துள்ளேன்.

ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டு யுத்தம் முடிந்த கையுடன் தமிழீழ விடுதலை
புலிகளிலிருந்த பல போராளிகள், தளபதிகள், பெயர் பெற்றவர்கள் கூட
இராணுவத்தினால் பொறுப்பேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாகவும்
பின்னர் அவர்கள் திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இன்றைய கால
கட்டத்தில் இவர்களையே நாம் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என
குறிப்பிடுகிறோம். இப்படியாக கையளிக்கப்பட்டவர்கள் சிலரை ஏற்றுக்கொண்டதாக இராணுவம் எழுதி கொடுத்து விட்டு அழைத்து சென்றதாகவும் சிலர் கூறுகிறார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளின் பின்னர் இந்த இளைஞர்கள், நபர்கள் எங்கு உள்ளனர், எப்படி உள்ளனர் என்பது அவர்களது உறவினர்களிடம் நிலவும் மிகப்பெரிய கேள்வியாகும். அவர்களை திருப்பி தரும்படி பல உறவுகள் தொடர் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் இதில் வயது வேறுபாடு இல்லாமல் பல உறவினர்களும் பங்கு பற்றுகிறார்கள். தமது பிள்ளைகளை இழந்த தாய் தந்தையர் தமது அந்திம காலத்தில் அல்லாடுகிறார்கள், பலர் எந்த முடிவையும் பார்க்காமலேயே
இயற்கையாக உயிரிழக்கிறார்கள். தமது பிள்ளைகளை இழந்த இவர்களது மன உழைச்சல் எதனுடனும் ஒப்பிட முடியாதது. இதுவே இவர்களின்
வாழ்க்கை பயணம் முற்று பெறுவதற்கு ஒரு பிரதான காரணமாகும். இந்த பதிவின் போது இந்த ஆர்பபாட்டம், போராட்டம் மூன்று வருடங்களை கடந்து
நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

அரச தரப்பிலிருந்து பல பதில்கள் காலத்திற்கு காலம் கூறப்பட்டுள்ளன.
கடந்த நல்லிணக்க அரசாங்கத்தின் காலத்தில் அன்றைய பிரதமர் திரு
ரனில் விக்கிரமசிங்கா அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும்
உயிருடன் இல்லை, அவர்கள் வரப்போவதுமில்லை எனக் கூறி
அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க தயாராக உள்ளதாகவும் அரச சார்பில்
தெரிவித்தார். இதை யாரும், எமது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட
கருத்தில் எடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அண்மையில் புதிதாக
பதவியேற்ற ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக இவர்கள் யாரும்
உயிருடன் இல்லை என அறிவித்தார்.

இதைவிட பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காவிடினும் கூட
காலத்திற்கு காலம் மறைமுகமாக இதே கருத்தையே கூறி வந்துள்ளனர்.
இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்
இந்த விடயம் பற்றி சரியான, தெளிவான கருத்தை முன்வைத்த
போது பலரது சொல்லடிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டார்.
இந்த போராட்டத்தின் முடிவுதான் என்ன?. தம்மால் அதிகாரத்திடம்,
இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களை திரும்ப தரும்படி கேட்டு போராட்டம் தொடர்கிறது. அவர்கள் யாரும் இல்லை என அரசாங்கம் கூறுகிறது.

அதன் அர்த்தம் அவர்களை மீள கையளிக்க முடியாது என்பதேயாகும்.
அப்போது அடுத்த படிதான் என்ன? தமது அன்பான தனயனை, பாசமிகு
கணவனை, சகோதரனை, தந்தையை இழந்த இவர்களுக்கு என்னதான்
பதில்? இந்த போராட்டத்தின் முடிவு தான் என்ன? தேர்தல் பேரிகைகள் முழங்குகின்ற இந்த காலகட்டத்தில், “கோயபல்ஸ்” ஐயும் விஞ்சும் பொய்களை எல்லோரும் அள்ளி வீசும் இந்த காலகட்டத்தில்
இந்த போராட்டமும் இந்த மக்களின் குரல்களும் அமிழ்ந்து இன்னமும்
கேட்காமலேயே போகலாம்.

எனது தனிப்பட்ட கருத்தில் இந்த மக்கள் அரசியலுக்கு அப்பால் சிந்தித்து
ஒரு முடிவை எடுக்க வேண்டும். மாண்டவர் மீண்டதாக சரித்திரம்
இல்லை என்ற உண்மையை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு,
தூண்டுதல்களுக்கு அப்பால் தங்களதும் தங்களது உறவுகளினதும்
வாழ்க்கையை வாழ தொடங்க வேண்டும். இந்த முப்பது வருட கால
யுத்தத்தில் நாம் ஒரு சமுதாயமாக இழந்தவை எண்ணிலடங்காதவை.
எமது கலாசாரத்தில் ஏற்பட்ட சீரழிவு மட்டுமல்ல, குடும்ப, சமூக உறவுகளில்
ஏற்பட்ட மாற்றங்கள் எத்தனையோ. இந்த கூற்றானது புலம் பெயர்
மக்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு வகையில்
இழப்புக்கள் ஏறபட்டுள்ளது.

காயம்படாத நெஞ்சங்களே இல்லை எனலாம். அந்த காயங்களுக்கு மருந்து
அதை தொடர்ந்து கிளறி அந்த வேதனையில் தவிப்பதல்ல.இழப்புகளையும் வேதனைகளையும் ஏற்று கொண்டு அதை கடந்து செல்வதே. அப்படி நடக்காதவரை அந்த மக்களின் துயரம் தீரப்போவதில்லை. இதை உணர்ந்து
நடந்தால் அது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு செய்யும் கைமாறாகவே நான் கருதுவேன். இந்த உறவினர்கள் அனைவரும் ஒரு மன சாந்திக்கும் சம நிலைக்கும் வருவதற்கு சமுதாயத்தின் எல்லா
பகுதிகளில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு வழங்க படவேண்டும்.
என்னை பொறுத்தவரை எமது புத்திஜிவிகளும், அரசியல்வாதிகளும்,
மொத்த சமுதாயமுமே குரல் கொடுக்க வேண்டும். இதுவே எனது
வேண்டுகோள். இதிலிருந்து நாம் தவறுவோமாயின் எமது பாதிக்கப்பட்ட
சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு நாம் பெருந்தீங்கு இழைத்தவர்களாவோம்.

நன்றி: முகநூல் நன்றி: முகநூல் (இலண்டனில் வாழும் அமிர்தலிங்கம்
பகீரதன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழரசு கட்சியினதும்,
தமிழர் விடுதலைக் கட்சியினதும் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் கனிஷ்ட
புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது)

Source: vaanavil 101

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...