Thursday, 9 January 2020

காசிம் சுலைமான் கொலையில் குளிர்காயும் அமெரிக்கா?: உலகளவில் ஷியா, சுன்னி முஸ்லிம்கள் பிளவு பெரிதானது- க.போத்திராஜ்


-
Gerelateerde afbeelding
ஈரானின் முஸ்லிம் புரட்சிகரப்படைத் தளபதி (ஐஆர்ஜிசி) காசிம் சுலைமான் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டபின் உலகளவில் சுன்னி, ஷியா முஸ்லிம்களிடையிலான பிளவு இன்னும் பெரிதாகியுள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த காசிம் சுலைமான் கொல்லப்பட்டதற்கு எதிராக சுன்னி பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் மலேசியா தவிர்த்து ஒருநாடும் வாய்திறக்கவில்லை.
முஸ்லிம்களில் இரு பெரும் பிரிவுகளில் உலகளவில் 85 சதவீதம் சுன்னி பிரிவினரும், 15 சதவீதம் மட்டுமே ஷியா பிரிவினரும் வாழ்கின்றனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்கு இடையிலான போராட்டம், பிளவு நேற்று இன்று உருவானது அல்ல, 7-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த இருதரப்புக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.
இதில் சுன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசியா, சீனா, தெற்காசியா, ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் வசிக்கின்றனர்.
இராக், பஹ்ரைன், ஈரான், அசர்பைஜன் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவினரும், சிரியா, குவைத், ஏமன், லெபனான் பாகிஸ்தான், குவைத், சிரியா ஆகிய நாடுகளில் அரசியல்ரீதியாக முக்கியத்துவமான பதவிகளில் ஷியா பிரிவினரும் வசிக்கின்றனர்.
இரு பிரிவுகளுக்கும் இடையே பிளவு தொடர்ந்து வந்தபோதிலும் கடந்த சில ஆண்டுகளாகச் சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளது. அதாவது இந்த இரு நாடுகளும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் நாடுகளில் நடக்கும் உள்நாட்டு குழப்பங்கள், போர்களில் யார் அதிகமாக ஆதரவு தருவது என்ற போட்டி நாளுக்கு நாள் அதிகரித்தது.
குறிப்பாக உள்நாட்டுப் போர் நடக்கும் சிரியா, ஏமன், ஈராக் ஆகியவற்றின் பிரச்சினையில் தலையிடுவதில் இரு நாடுகளுக்கு இடையே போட்டி அதிகரித்தது. இந்த போட்டியில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கிய நிலையில், ஈரானுக்கு ஆதரவாகச் சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக இருந்தன.
சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போட்டி இதோடு நிற்காமல் பஹ்ரைன், லெபனான், கத்தார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜிரியா, மொராக்கோ ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பதிலும் போட்டி ஏற்பட்டது. வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்காசியா, மத்திய ஆசியா, கருங்கடல், காஸ்பியன் கடலை ஒட்டியுள்ள பகுதியிலும் தங்கள் எல்லைப் போட்டியும் இரு நாடுகளுக்கும் இடையே இருந்து வருகிறது.
Afbeeldingsresultaat voor சியா, சுன்னி முஸ்லிம்கள்
இந்த சூழலில் ஈரான் நாட்டின் உச்ச பட்ச அதிகாரம் படைத்த கொமேனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஈரான் புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமான் கொல்லப்பட்டார். கடந்த வாரம் பாக்தாத் விமானநிலையத்தில் வைத்து ஆள் இல்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் சுலைமானை கொன்றது அமெரிக்க ராணுவம். இதில் காசிம் சுலைமான் மட்டுமல்லாமல் அவரின் மருகமன் முகந்திஸ் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கர்களைக் கொல்வதற்கு சுலைமான் திட்டமிட்டார் அதனால் கொன்றோம் என்று ஒற்றை வரியில் அமெரிக்க அரசு விளக்கம் அளித்து நிறுத்திக்கொண்டது. அதன்பின் வழக்கம் போல் அமெரிக்காவின் ஏதேச்சதிகார மிரட்டல்கள், பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன.
ஈரான் ஷியா முஸ்லிம்களின் ஆதர்ச ஹீரோவாகவும், ஈரானிய ராணுவத்தை கட்டமைத்து வலுப்படுத்தியவருமான சுலைமான் படுகொலை ஈரான் அரசையும் உலுக்கியது, மக்களையும் கலங்கச் செய்தது.
என்ன தான் முஸ்லிம் மக்களிடையே பிளவு இருந்தபோதிலும் காசிம் சுலைமான் மறைவுக்கு உலகளவில் இருக்கும் சுன்னி பிரிவு மக்கள் இரக்கமும் வருத்தமும் தெரிவித்தார்கள். ஆனால், சுன்னி பிரிவு மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் எந்த நாடும் இந்த விஷயத்தில் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்தன. இதில் சுன்னி பிரிவு நாடான மலேசியா மட்டுமே சுலைமான் மறைவுக்கு வெளிப்படையாக இரங்கல் தெரிவித்தது.
அமெரிக்க அரசின் “கட்டவிழ்த்துவிட்ட தீவிரவாதத்தால்தான் சுலைமான் கொல்லப்பட்டார், அதற்கு பழிதீர்ப்போம்” என்று ஈரானின் ஒற்றைக் குரல் மட்டுமே ஒலித்தது. ஆதரவாக எந்த நாட்டின் குரலும் ஒலிக்கவில்லை.
Afbeeldingsresultaat voor shia vs usa
இருப்பினும், ஈரானுக்கு ஆதரவாக இராக்கில் ஷியா பிரிவினர் அதிகமாக இருக்கும் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க ராணுவம் இராக்கில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினாலும் அதை அமெரிக்க தனது வழக்கமான ஏதேச்சதிகார எண்ணத்தால் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் சுன்னி பிரிவு நாடுகளின தலைவராக இருக்கும் சவுதி அரேபியாவோ ஈரானின் மீதான வெறுப்பை இந்த காலத்தில் குறைக்காமல் அதிகப்படுத்தியிருக்கிறது. எங்கள் எல்லைக் காக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க தயங்கமாட்டோம், மத்திய கிழக்கில் தீவிரவாதம் பரவ ஈரான் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி பிளவை பெரிதாக்கியுள்ளது.
ஆனால், இதில் சவுதி அரேபியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் துருக்கி அதிபர் எர்டோகன் சவுதி அரேபியாவின் நிலைப்பாட்டை விரும்பவில்லை. அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைக்க தன்னால் இயன்ற பணிகளைச் செய்யவும் முன்வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கோலாலம்பூரில் மகாதிர் முகமது அரசு இஸ்லாமிய நாடுகள் மாநாட்டை நடத்தியது. அதில் பாகிஸ்தான் திடீரென பங்கேற்காமல் புறக்கணித்ததையும், சவுதி அரேபியாவின் நடவடிக்கைகளையும் கடுமையாகத் துருக்கி அதிபர் எர்டோகன் விமர்சித்துள்ளார்.
தொடக்கத்தில் அமைதியாக இருந்த பாகிஸ்தான், பின்னர் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைக்க தன்னால் இயன்ற பேச்சுவார்த்தையை நடத்தவும் முன்வந்தது.
RT
ஈரானின் கெர்மான் நகரில் காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலம்
ஆனால், கடந்தவாரம் ஈரான் தளபதி காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றதற்குப் பின் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தது. இதற்கு பிரதிபலனாகப் பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியான உதவிகளைச் செய்யவும் முன்வந்துள்ளது.
இப்போதுள்ள சூழலில் ஷியா பிரிவு நாடான ஈரானுக்கு மலேசியா மட்டுமே ஆதரவுக் கரம் நீட்டுகிறது. சுலைமான் கொல்லப்பட்டது அறத்துக்கு மாறானது, சட்டவிரோதம் என்று வெளிப்படையாகக் கண்டித்தார். அதுமட்டுமல்லாமல், “வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகத்தைக் காக்கவும் முஸ்லிம் நாடுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று மகாதிர் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், சுலைமான் கொலையின் மூலம் ஷியா, சுன்னி பிரிவினர் சேர்ந்து விடாமல் பிளவை பெரிதாக்கி அமெரி்க்கா குளிர்காய்ந்து வருகிறது.
-இந்து தமிழ்
2020.01.07

No comments:

Post a comment

Bengal polls: Abbas Siddiqui's ISF seals seat-sharing deal with Left, talks on with Congress

  Indian Secular Front leader Abbas Siddiqui (Photo | Youtube screengrab) Addressing a press conference, Siddiqui said the Left Front has ag...