அணிசேராக் கொள்கையே எமது வெளியுறவின் ஆணிவேர்!

ந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எமது இலங்கைத் தீவின் அமைவிடம் காரணமாக அதன் உலகளாவிய முக்கியத்துவம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
இரண்டு வகைகளில் இலங்கையின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. ஒன்று, வணிகரீதியிலானது. மற்றையது இராணுவ ரீதியிலானது. இதில் இரண்டாவது விடயமே பெரும் வல்லரசு நாடுகளின் அதீத அக்கறைக்குரியதாக இருக்கின்றது. அதனால்தான் கடந்த இரண்டு வாரங்களில் உலகின் முக்கியமான மூன்று முன்னணி நாடுகளின் இராஜதந்திரிகள் ஒருவர் பின் ஒருவராக இலங்கைக்கு படையெடுத்து வந்து போயிருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi), மற்றையவர் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் அலைஸ் ஜி.வெல்ஸ் (Alice G.Wells), அடுத்தவர் ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் (Sergy Lavrov).
இவர்கள் வருவதற்கு முதல் கோத்தபாய ராஜபக்ச 2019 நொவம்பர் 16இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் முதலில் இலங்கைக்கு ஓடி வந்தவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்.
இவர்களது வருகைக்கான காரணம் வழமைபோல இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காக என்று சொல்லப்பட்டாலும், இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் இந்தப் பெரிய வல்லரசுப் பூதங்கள் எங்கள் குட்டி நாட்டுக்கு படையெடுத்து வந்தது வெறுமனே நட்புறவுக்காக மட்டும அல்ல. அதன் பின்னால் பாரிய நோக்கங்களும் திட்டங்களும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை பூகோளரீதியாக இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் சக்திகள் இலங்கையில் செல்வாக்குப் பெறுவதைத் தடுப்பதில் எப்போதும் முனைப்பாகவே இருக்கின்றது. அதுதவிர, இரு நாட்டு மக்களிடையேயும் பல நூறு ஆண்டுகளாக நெருக்கமான கலாச்சார, மொழி, மத, வணிக உறவுகள் இருந்து வருகின்றன.
சீனாவைப் பொறுத்தவரையிலும் கூட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கலாச்சார, மத, வணிக உறவுகள் இருந்து வருகின்றன. அதுதவிர, 1949இல் புதிய சோசலிச சீனா உருவானது முதல் இலங்கைக்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுதுகளில் முதலில் ஓடிவந்து உதவி செய்த நாடாக சீனாவே இருந்து வந்திருக்கிறது. அத்துடன் தற்பொழுது சீனா முன்னெடுத்து வரும் ‘ஒரு வழி, ஒரு தடம்’ (One Road, One Belt) என்ற உலகளாவிய திட்டத்திலும் இலங்கை ஒரு உறுப்பு நாடாக இணைந்து கொண்டுள்ளது.
ரஸ்யாவைப் பொறுத்தவரை, அது சோவியத் யூனியன் என்ற பெயரில் சோசலிச நாடாக இருந்த காலத்திலிருந்தே, குறிப்பாக 1956இல் இலங்கையில் பண்டாரநாயக்க ஆட்சி ஏற்பட்டது முதல் இரு நாட்டு நட்புறவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அந்த நாடு ஒரு உலக ஏகாதிபத்திய வல்லரசு என்ற வகையில் அதன் உறவை எந்தவொரு நாடும் இலேசில் நிராகரித்துவிட முடியாத ஒரு நிலை இருக்கிறது. அதனால் இலங்கை அதனுடன் அனுசரித்துப் போயேயாக வேண்டிய கட்டாயத்தில் எப்பொழுதும் இருந்து வருகின்றது.
ஆனால், உலகின் இந்த நான்கு நாடுகளையும் பொறுத்தவரையில் அவற்றின் இலங்கை சம்பந்தமான அணுகுமுறையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.
சீனாவையும் ரஸ்யாவையும் பொறுத்தவரையில் இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வரும் அரசுடன் நிலைப்பாடு மாற்றமின்றி அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக, கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் சீனா வழமைபோல இலங்கைக்கு தாராளமாக பொருளாதார உதவி செய்தது.
ஆனால் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் இலங்கை பற்றிய அணுகுமுறை அவ்வாறானதல்ல. அதற்கு உதாரணம் இந்த இரண்டு நாடுகளும் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது தமது செல்வாககைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றுவதில் வெற்றி கண்ட வரலாறு.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையில் பதவிக்கு வரும் எந்தவொரு அரசும் பொருளாதாரத் தேவைகளுக்காக சீனாவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணுவது தவிர்க்க முடியாதது என்பதை விரும்பாவிடினும் தவிர்க்க முடியாமல் ஏற்க வேண்டிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் பொருளாதார நலன்களுக்கு அப்பால் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக சீனாவுடன் பிரத்தியேகமான உறவினையும் கொண்டுள்ளன என்பதுவும் இந்தியாவுக்குப் புரியும்.
இப்படியான நிலைமைகளில் இந்தியா இலங்கையில் ஆட்சி மாற்றங்களைச் செய்யும் வேலையில் இறங்கும் என்ற துரும்புச் சீட்டைப் பயன்படுத்தி வருகின்றது. அத்துடன் இலங்கை தன்னை மீறிப்போகாதபடி கடிவாளம் போடுவதற்கு முன்னைய காலங்களில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினரின் பிரச்சினையையும், பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் பயன்படுத்தி வந்திருக்கிறது.
மறுபக்கத்தில் அமெரிக்காவின் இலங்கை பற்றிய அணுகுமுறையை எடுத்துக்கொண்டால், அது வெளிப்படையாக ஒரு பக்கச் சார்பாகவே இருந்து வந்திருப்பதை அவதானிக்கலாம்.
இலங்கை 1948இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து 2019 நொவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல் நடந்தது வரை, அமெரிக்கா தனக்குச் சார்பான ஐ.தே.கவையே வெளிப்படையாக ஆதரித்து வந்திருக்கிறது. கடந்த வருடம் ஒக்ரோபரில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஒன்று நடந்தபொழுது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் வெளிப்படையாகவே ஐ.தே.க. அரசுடனும், அதன் செல்லப்பிள்ளையான ‘எதிர்க்கட்சி’ அந்தஸ்து வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் சேர்ந்து செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
அதுமாத்திரமின்றி, புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதாகச் சொல்லும் அமெரிக்காவும் அதன் தலைமையிலான மேற்கு நாடுகளும், புலிகளை ஒழித்துக்கட்டும் இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் நேரடியாகவும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஊடாகவும் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த ராஜபக்ச அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் தலைமையிலான அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தவும், அரச தலைவர்களை குற்றவாளிக் கூண்டுகளில் ஏற்றவும் முயன்றன.
இந்த விதமான அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலம் இலங்கையை அடிபணிய வைத்து, தமக்கு இராணுவ ரீதியிலான நன்மை பயக்கும் சில ஒப்பங்பந்தங்களைச் செய்வதே அவற்றின் நோக்கமாகும். அதில் ஒன்றுதான் சர்ச்சைக்குரிய ‘மில்லேனியம் சவால் ஒத்துழைப்பு’ (millenium Challenge Corporation) ஒப்பந்தம். அத்தகைய முயற்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க இலாகாவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளரின் வருகையையும் நோக்கவேண்டி உள்ளது.
இலங்கையில் தமக்குப் பிடிக்காத ஒரு அரசு கோத்தபாய ராஜபக்ச தலைமையில் அமைந்துவிட்டதே என எண்ணி இந்த ஆதிக்க நாடுகள் சும்மா இருந்துவிடப் போவதில்லை. அவை தமது ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டும் பல்வேறு பிரயத்தனங்களில் ஈடுபடவே செய்யும்.
எனவே, தற்போது ஐ.தே.க. கடந்த தனது ஆட்சிக் காலத்தில் நமது நாட்டில் பொருளாதார, நிர்வாக மற்றும் பாதுகாப்பு துறைகளில் செய்துவிட்டுப் போன பேரழிவுகளை சீர்செய்து வரும் கோத்தபாய அரசு, நமது வெளிவிவகாரக் கொள்கையையும் சீரமைத்து சரியான தடத்தில் இட வேண்டும். இதன் அர்த்தம் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் மேற்கத்தைய சார்பாக உருமாற்றப்பட்ட எமது வெளிவிவகாரக் கொள்கையை மீண்டும் உறுதியான முறையில் அணிசேரா நிலைமைக்கு இட்டுவர வேண்டும் என்பதே.
எம்மைப் போன்ற சிறிய, மூன்றாமுலக நாடுகளுக்கு அணிசேராக் கொள்கையே சிறந்த வழிமுறையாகும்.
உலகில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ உச்சமடையத் தொடங்கிய 1950களிலேயே அணிசேராக் கொள்கை துளிர்விட ஆரம்பித்தது. இதன் தொடக்கப் புள்ளியாக 1955இல் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் அந்நாட்டின் ஜனாதிபதி சுகர்ணோ கூட்டிய ஆசிய – ஆபிரிக்க நாடுகளின் உச்சி மாநாடு அமைந்தது. இந்தியாவின் பிரதமர் ஜவகர்லால் நேருவும், சீனாவின் பிரதமர் சௌ என் லாயும் முக்கிய பங்கு வகித்த இம் மாநாட்டில்தான் நாடுகளின் உறவுகளுக்கு அத்திபாரமான ‘பஞ்சசீலக் கொள்கைகள்’ முதன்முதலில் வகுக்கப்பட்டன.
அதன்பின்னர், அதன் தொடர்ச்சியாக 1961இல் யூகோஸ்சிலோவாக்கியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் அணிசேரா இயக்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் நேரு, யூகோ ஜனாதிபதி மார்சல் டிட்டோ, எகிப்திய ஜனாதிபதி நாசர், கானா பிரதமர் என்குரூமா போன்றவர்களுடன் எமது நாட்டுப் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவும் பங்குபற்றி, எமது நாட்டுக்கு அழியாப் புகழைத் தேடித்தந்தார்.
எமது நாட்டின் அந்தப் பங்களிப்பு காரணமாகவே 1962இல் இந்தியாவுக்கும சீனாவுக்குமிடையில் எல்லை யுத்தம் நடந்தபோது எமது பிரதமர் சிறீமாவோவினால் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்த முயற்சியை மேற்கொள்ள முடிந்தது. அதுமாத்திரமின்றி, 1976இல் சிறீமாவோ பிரதமராக இருந்த காலத்தில் அணிசேரா இயக்கத்தின் 5ஆவது உச்சி மாநாட்டை கொழும்பில் நடத்தும் வாய்ப்பும் எமக்குக் கிடைத்தது.
எனவே அணிசேரா கொள்கையின் சிற்பிகளில் நமது நாடும் ஒன்று என்ற வகையில் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் தனது வெளிவிவகாரக் கொள்கையாக அதையே உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஏனெனில், 1950களில் இருந்தது போன்ற ஒரு பனிப்போர், அப்போது இருந்ததையும் விட மூர்க்கமான முறையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்பினால் உருவாக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பனிப்போரின் ஒரு கேந்திரமாகவும், ஆடுகளமாகவும் எமது நாட்டை ஆக்குவதற்கு சில சக்திகள் முயன்று வருகின்றன.
இத்தகைய ஒரு சூழலில் எமது நாட்டின் தேசிய சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாப்பதானால், நாம் அணிசேராக் கொள்கையை இறுகப்பற்றுவதைத்தவிர வேறு வழியில்லை.

Source: வானவில் இதழ் 109

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...