2019 நொவம்பர் 16இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இரு வாரங்களுக்குள் அந்த நாட்டுக்கு தனது முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்திய பிரதமர் 13ஆவது திருத்த சட்டத்தை அமுலாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வந்தன. இதன் அர்த்தம் 13ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட மாகாண சபைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கோரியதே.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட சட்ட ஏற்பாடே 13ஆவது திருத்த சட்டமாகும்.
இந்த ஒப்பந்தத்தில் அன்று கையெழுத்திட்டவர்கள் இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆவர்.
ஆனால் அப்பொழுதே ஜே.ஆர். ஆட்சியின் பிரதமர் ஆர்.பிரேமதாசவும், சிறீலங்கா சுதந்திர கட்சி, ஜே.வி.பி. என்பனவும் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன.
ஜே.ஆரை தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு தெரிவான ஆர்.பிரேமதாச, 13ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்ததுடன், 13ஆவது திருத்த சட்டத்தையும் கிடப்பில் போட்டார்.
வடக்கு கிழக்கு மாகாண சபையை பிரேமதாச கலைத்தாலும். 13ஆவது திருத்த சட்டத்தை இலங்கையின் அரசியல் அமைப்பிலிருந்து அகற்ற அவர் முயற்சிக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இலங்கை ஒருதலைப்பட்சமாக அதை நீக்க முயன்றால் இந்தியாவின் விரோதத்தை சம்பாதிக்க வேண்டிவரும் என்ற பயம். இரண்டாவது காரணம், அந்த திருத்தத்தை நீக்கிவிட்டால் தமிழ் மக்களுக்கு இருந்த ஒரேயொரு நம்பிக்கையையும் தகர்த்து அவர்களின் முற்றுமுழுதான எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரலாம் என்ற பயம்.
இந்த நிலைமையில்தான் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2009இல் புலிகள் அரச படைகளால் தோற்கடிக்கப்பட்டதுடன் போர் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தினார். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதற்கு எதிராக ஜே.வி.பி. நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததால், இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டு தனித்தனியாகவே தேர்தல் நடந்தது.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில், மகிந்த ராஜபக்ச இந்த இரு மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தியதன் மூலம், தமிழ் பேசும் மக்களுக்கான அதிகார பகிர்வை ஏற்று கொண்டார் என்பதே. ஆனால் அவரும் சரி, அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் ஜே.ஆர்., பிரேமதாச, சந்திரிக ஆகியோரும் சரி, 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கு காரணம், 13ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்று அவர்கள் கருதியதே.
உண்மையில் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதின் நோக்கம், சிறுபான்மை இனங்களுக்கும், மாகாணங்களுக்கும் அதிகாரத்தை பங்கிட்டு அளிப்பதற்காகவே. தனியே தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாகாணங்களுக்கு மட்டும் மாகாண சபை முறைமையை அமல்படுத்தினால் அது சிங்கள மக்களால் இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் என்பதால், இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் இது பொதுவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை இந்தியாவின் இராஜதந்திரம் என கருதலாம்.
ஒன்பது மாகாணங்களுக்கும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதால், 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒன்பது மாகாண சபைகளுக்கும் வழங்கினால் அதை சிங்கள மக்களை அதிகமாக கொண்ட ஏனைய ஏழு மாகாண சபைகளும் கூட எதிர்க்க போவதில்லை. எனவே ஆட்சியாளர்கள் காட்ட முனைவது போல இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமல்ல.
ஆனால் ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கினால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதை எதிர்ப்பார்கள் என்ற நொண்டி சாட்டு ஒன்றை தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் சிங்கள மக்கள் அப்படி எதிர்ப்பார்கள் என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? இந்த விவகாரம் குறித்து வேண்டுமானால் நாட்டு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பை மேற்கொண்டு பார்க்கலாமே?
புதிய ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின்போது அங்குள்ள சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போதும், மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் வகையில் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார். இலங்கையிலும் சில சந்தர்ப்பங்களில் அதை திரும்பவும் கூறிருக்கிறார். அவரது அண்ணனும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவும் அவ்வாறுதான் கூறுகின்றார்.
அதுமட்டுமல்லாமல், அதிகார பகிர்வை விட அபிவிருத்திதான் முக்கியமானது எனவும் ஜனாதிபதி கோத்தபாய கூறுகின்றார்.
தனித்தமிழ் நாட்டை இலங்கையின் அரசியல் தலைவர்களும் மக்களும் நிராகரிப்பது நியாயமானது என ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோல வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டி அமைப்பு முறையிலான தீர்வை வழங்குவதையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதிலும் உண்மை இருக்கிறது. ஆனால் குறைந்தபட்ச தீர்வான மாகாண சபை முறையையும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என ஆட்சியாளர்கள் சொல்வது பெரும்பான்மை சிங்கள மக்களின் கருத்தல்ல. அது ஆட்சியிலுள்ளவர்களின் இனவாத நிலைப்பாடாகும்.
ஏனெனில், சிங்கள மக்கள் மாகாண சபை முறைமையை ஏற்கவில்லை என்றால், அதற்கான தேர்தல்களில் பங்குபற்றாமல் ஆரம்பத்திலேயே புறக்கணித்திருப்பார்கள். சிங்கள மக்களின் உண்மையான பாதுகாவலன் தான்தான் என கூறிக்கொண்ட ஜே.வி.பி. ஆரம்ப காலங்களில் மாகாண சபை தேர்தலை புறக்கணித்தது. ஆனால் மக்கள் அதில் முழுமையாக ஈடுபாடு காட்டியதால் பின்னர் N.ஜ.வி.பி. தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மாகாண சபை தேர்தல்களில் பங்குபற்றி வருகின்றது.
ஆனால் நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் அதிகார பகிர்வு முக்கியமல்ல, அபிவிருத்திதான் முக்கியம் என்று சொல்வதை பார்த்தால், அவர்களிடம் இனப்பிரச்சினை தீர்வுக்கான திட்டம் எதுவுமில்லை என்றுதான் சிந்திக்க வேண்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை.
உண்மையில் ஜனநாயகமும் அதிகார பகிர்வும் அபிவிருத்தியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. இந்த உண்மையை உலகில் சோசலிச முறையில் வளர்ச்சி அடைந்த முன்னைய சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளின் அனுபவத்தில் இருந்தும், அதேபோல முதலாளித்துவ முறையில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் அனுபவத்தில் இருந்தும் அறிந்துகொள்ள முடியும். ஏன் எமது அண்டை நாடான இந்தியாவும் இதற்கு ஒரு உதாரணம்.
அதை விடுத்து முன்னர் ஆட்சியில் இருந்த பலர் சொன்னது போல, செய்தது போல, அதிகார பகிர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டை தற்போதைய ஆட்சியாளர்களும் பின்பற்றுவார்களாக இருந்தால், தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் முற்றுமுழுதாக இழக்க வேண்டி வரும். அது திரும்பவும் நாட்டை இருள் சூழ்ந்த யுகத்திற்கு, அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும். இதை தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்வது அவசியம்.
ஒருவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை இன மக்களான தமிழ் – முஸ்லீம் மக்கள் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வாக்களிக்காத காரணத்தால் அவரது அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை செலுத்த விரும்பவில்லை என்றால் அது மிகவும் தவறான தீர்மானமாகும்.
ஏனெனில், தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்ட போதும் அவருக்கு வாக்களிக்காமல் இன்னொரு சிங்கள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கே வாக்களித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் ராஜபக்சாக்கள் தமிழர்களின் முதல்தர விரோதிகள் என அவர்களது தலைமை (தமிழ் தேசிய கூட்டமைப்பு) தொடர்ச்சியாக செய்துவந்த பிரச்சாரமாகும்.
இந்த நிலைமையில், தமிழ் மக்களின் அரசியல் தலைமையின் பொய்யான பிரச்சாரத்தை உடைததெறிந்து, தமிழ் மக்களை சரியான திசைவழிக்கு கொண்டு வருவதானால், குறைந்தபட்சம் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்குவதன் மூலமே அதை செய்ய முடியும்.
எனவே, இந்த விடயத்தில் ராஜபக்ச சகோதரர்கள் என்ன செய்ய போகிறார்கள்? தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீரத்து அவர்களை தம்முடன் அரவணைக்க போகிறார்களா? அல்லது அவர்களை உதாசீனப்படுத்தி தொடர்ந்தும் பிற்போக்கு, இனவாத ஐக்கிய தேசிய கட்சியினதும், தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், இலங்கையில் சிறுபான்மை இனங்களைத் தூண்டி விட்டு இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அந்நியர்களதும் பக்கம் தள்ளிவிடப் போகிறார்களா?

Source: Vaanavil December 2019