ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?- பிரதீபன்


-பிரதீபன்
திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னவிதமான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பலரின் கேள்வியாக இருக்கின்றது. பொதுவாகத் தமிழ்த் தலைமைகளினதும் குறிப்பாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்தவர்கள், ‘இதிலென்ன சந்தேகம் அவர்கள் வழமைப்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தம் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள்’ என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள்.
அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் பார்த்துவிடுவது நல்லது.
கடந்காலங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கங்களில் பங்காளிக் கட்சியாக இருந்ததும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த பெரிய கட்சியுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி இம்முறையும் மகிந்த அணி நிறுத்தியுள்ள வேட்பாளரையே ஆதரிக்கும் என்பது பலரினதும் கருத்தாகும்.


வடக்கில் ஈ.பி.டி.பிக்கு அடுத்த பெரிய கட்சியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை. அவர்கள் வழமைபோல ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன, நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லை’ என்ற பாணியில் கருத்து வெளியிடக்கூடும் என்ற கருத்து நிலவுகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அடுத்ததாக வாக்கு வங்கியைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் ஆனால் அரசியல் கட்சி எதனையும் கொண்டிருக்காத முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டும் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கக்கூடாது’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தலைமையில் செயல்படும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனை நிறுத்தும் வேட்பாளரைப் பகிரங்கமாக ஆதரிக்கும் எனத் தெரிகிறது. இதுசம்பந்தமாக வரதராஜப்பெருமாள் அண்மையில் கருத்துத் தெரிவிக்கையில், ‘கோத்தபாய ராஜபக்ச போர்க்குற்றம் புரிந்தவர் என்று பேசிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. அரசபடைகள் மட்டுமின்றி புலிகளும் போர்க்குற்றம் புரிந்தவர்கள் என சர்வதேசம் சொல்கிற நிலையில் கோத்தாவை மட்டும் குற்றுஞ்சாட்டுவதில் பிரயோசனம் இல்லை. எனவே அதை மறந்துவிடுவதே நல்லது’ எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இதுவரை தனது நிலைப்பாடு குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
கிழக்கிலங்கையில் தனியான அரசியல் கட்சியொன்றை நடத்தி வரும் கருணா அம்மான் என அழைக்கப்படும் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியான விநாயகமூர்த்தி முரளிதரன், ‘இராணுவத்தளபதியாக இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த சரத் பொன்சேக முன்பொருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க முடியுமென்றால், ஏன் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கக்கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுமட்டுமின்றி, ‘ரணில் ஒரு குள்ள நரி, அவரது கட்சி வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது’ எனவும் காட்டமாகக் கூறியுள்ளார்.
அமைச்சர் மனோகணேசனின் தம்பியும், தனியான கட்சியொன்றை நடத்தி வருபவருமான பிரபா கணேசன் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்திருக்கிறார்.
அதேபோல மலையகத்தின் பெரிய கட்சியான ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசும் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது.
முன்னாள் போராளிக்குழுவான ஈரோஸ் இயக்கத்தின் ஒரு பிரிவும் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளது.
இதேவேளை தமிழர்களின் பழம்பெரும் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்திவரும் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதித் தேர்தலில் தனது கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில்தான் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகின்றது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த காலங்கள் போல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சந்தேகத்துக்கு இடமின்றி ஐ.தே.க. நிறுத்தும் வேட்பாளருக்குத்தான் எனச் சொல்வதற்கு இம்முறை அதன் ஆதரவாளர்கள் தயங்குவதைக் காண முடிகின்றது.
அதற்குக் காரணம் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. ‘பொது வேட்பாளர்’ என்ற பெயரில் நிறுத்திய மைத்திரிபால சிறிசேனவை நிபந்தனை எதுவுமின்றி ஆதரித்ததின் மூலமோ, பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக முண்டுகொடுத்து வந்ததின் மூலமோ, தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை. இனப்பிரச்சினைத் தீர்வு ஒருபுறமிருக்க, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்குக்கூட ரணில் அரசைக்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எதனையும் செய்ய முடியவில்லை.
இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது சாதாரண தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி, அதன் ஆதரவாளர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியை கடந்த வருடம் (2018) பெப்ருவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ் மக்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். ஐ.தே.க. அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதை அத்தேர்தலில் அதன் வாக்கு வங்கியின் வீழ்ச்சி எடுத்துக்காட்டியது.
இந்தச் சூழ்நிலையில் 4 கட்சிகள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி கூட்டமைப்பைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டது. பின்னர் கூட்டமைப்பால் வடக்கு மாகாணசபைத் தலைவராக நிறுத்தப்பட்ட சி.வி.விக்னேஸ்வரனும் அந்த அணியைவிட்டு வெளியேறிவிட்டார். கூட்டமைப்பால் மாகாணசபை உறுப்பினராக நிறுத்தப்பட்ட இன்னொருவரான அனந்தி சிறிதரனும் வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்.
மிகுதியாக உள்ள மூன்று கட்சிகளில் ஒன்றான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் அடிக்கடி தலைமைக்கட்சியான தமிழரசுக்கட்சியுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றது.
இன்னொரு பங்காளிக் கட்சியான புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் தான் கூட்டமைப்பைவிட்டு வெளியேறப்போவதில்லை என்று சொல்லி வந்தாலும், அண்மையில் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து சுமார் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியிருக்கிறார். இதுவரை காலமும் மகிந்த ராஜபக்சவைக்கூட சந்திக்காத சித்தார்த்தன் கோத்தாவை மட்டும் ஏன் சந்தித்தார் என்ற கனதியான கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலைமைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்திலிருந்து உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவான சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் வைத்துச் சந்தித்திருக்கிறார்கள்.
இதில் இன்னொரு வேடிக்கையான விடயம் என்னவெனில், இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத் தலைவராக வரவிருப்பவர் எனக் கருதப்படும் எம்ஏ.சுமந்தரனும் கோத்பாய ராஜபக்சவை இரகசியமாகச் சந்தித்திருக்கிறார் என்ற செய்திதான்.
இந்த நிலைமைகளை எல்லாம் வைத்துப் பார்க்கையில், இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த எடுப்பில் ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதில் சங்கடநிலையை எதிர்நோக்குகிறது என்பது தெளிவாகிறது.
அதாவது, ஒருபக்கத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் தமது கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் அரசாங்கத்துக்கும் தமக்கும் ஒருசேர உருவாகியிருக்கும் எதிர்ப்பு நிலையைத் தணிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சில தந்திரங்களைக் கையாள முற்படுவது தெரிகின்றது. அதாவது, அவசரப்படாமல் இருந்து நிலைமை தமக்குச் சாதகமாக மாறிய பின்னர் இறுதி நேரத்தில் வழமைப்பிரகாரம் ஐ.தே.க. சார்பு நிலையை எடுப்பது என்பது ஒரு தந்திரோபாயம்.
இன்னொரு தந்திரோபாயம், கோத்தபாய ராஜபக்சதான் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக வெல்வார் என்ற நிலை உருவாகி வருவதால், அவருடன் சில தொடர்புகளைப் பேணி, தமிழ்மக்கள் சார்பாக சில கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றை அவர் ஏற்காததால்தான் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரிக்க நேர்ந்தது எனப் பின்னர் நியாயம் கற்பிப்பது.
அதனால்தான், ‘ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசரப்பட்டு எந்த முடிவையும் இப்பொழுது எடுக்காது’ என சுமந்திரன் தந்திரமாகப் பேசி வருகிறார். அவரது மற்றைய இரு சகாக்களான சம்;பந்தன், மாவை சேனாதிராசா போன்றோரும் மௌனம் காத்து வருகின்றனர்.
அதேநேரத்தில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன் போன்றோரை கோத்தபாயாவுக்கு எதிராகக் கடுமையாகப் பேசுவதற்கும் கூட்டமைப்புத் தலைமை பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.
உண்மை என்னவெனில், ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் அவசரப்பட்டு முடிவு எதனையும் எடுக்கமாட்டோம் என சுமந்திரன் திரும்பத்திரும்பக் கூறினாலும், கூட்டமைப்பு தனது நிலைப்பாடு குறித்து எப்போதோ முடிவு எடுத்துவிட்டது. அந்த முடிவு ஐ.தே.க. நிறுத்தும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது என்பதுதான். தமிழ் தலைமைகளின் கடந்தகால வரலாற்றை அறிந்தவர்கள் இதைத்தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது
மூலம்: சக்கரம்.காம்  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...