காஷ்மீரைப் புரிந்துகொள்ளல்: சில குறிப்புகள்-தொகுப்பு: சாரி, த.ராஜன்

facts-about-kahsmir

இந்தியா மாநிலங்கள் கடந்துவந்திருக்கும் பாதை
இந்தியாவில் ‘மாநிலங்கள்’ எனும் அமைப்பு கடந்துவந்திருக்கும் பாதையும், ‘மாநிலங்கள்’ கைகளில் உள்ள அதிகாரங்களும் மத்தியிலுள்ள ஆட்சிக்கேற்ப மாறிவந்திருக்கின்றன. 1950-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது 7 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. 1956-ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது, மேலும் 5 மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது. 1975-ல் சிக்கிம் இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக இணைந்தது. அதன் பிறகு பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்கள் தனி மாநிலங்களாயின. வடகிழக்குப் பிராந்தியத்தில் இருந்த ஒன்றியப் பிரதேசங்களில் சில மாநிலங்களாயின. மாநிலங்களின் எண்ணிக்கை 22 ஆனது. 2000-ல் பாஜக ஆட்சியில் ஜார்க்கண்ட், சண்டிகர், உத்தராகண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் உதயமாயின. இடைப்பட்ட காலத்தில் கோவா உள்ளிட்ட சில ஒன்றியப் பிரதேசங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்றன. 2000-ல் மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது.
2014-ல் தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதால், மாநிலங்களின் எண்ணிக்கை 29 ஆனது. தற்போது ஜம்மு, காஷ்மீர் மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதால், மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்திருப்பதோடு, ஒன்றியப் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால், மிக முக்கியமான ஒரு மாற்றம் இதில் இருக்கிறது. அதிகாரப் பரவலாக்கம் நடைபெற வேண்டும் என்றால், ஒன்றியப் பிரதேசங்களை மாநிலங்களாக அறிவிக்க வேண்டும். டெல்லி, புதுச்சேரி ஆகியவற்றைக்கூட முழு மாநில அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை ஒன்றியப் பகுதிகள்தான் மாநிலங்கள் என்ற அந்தஸ்து நோக்கி முழுமையாகவோ பகுதியாகவோ உயர்த்தப்பட்டுவந்தன. இப்போது போக்கு தலைகீழாகிறது.


அரசமைப்புச் சட்டக் கூறுகள் 370 மற்றும் 35ஏ சொல்வதென்ன?
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஜம்மு, காஷ்மீருக்கு விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு இயற்றியுள்ள அவசரச் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டக் கூறுகள் 370 மற்றும் 35ஏ இரண்டையும் செயலிழக்கச் செய்திருக்கிறது. ஜம்மு, காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்தக் கூறுகள் இரண்டும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.
தங்களுடைய எதிர்காலத்தை காஷ்மீர் மக்கள் கருத்தெடுப்பின் மூலம் தீர்மானிக்கலாம் என்ற ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் இணைந்தது காஷ்மீர். ராணுவம், வெளியுறவு, தகவல்தொடர்பு இந்த மூன்று அதிகாரங்களை மட்டுமே இந்திய அரசின் கைகளுக்கு அப்போது அது கொடுத்தது. ஏனைய அதிகாரங்களைத் தன் வசமே அது வைத்துக்கொண்டது. இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டக் கூறு 370 ஆனது, அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 1 மற்றும் 370 தவிர, மற்ற கூறுகள் ஜம்மு, காஷ்மீருக்குப் பொருந்தாது என்று கூறுகிறது. தனக்கான அரசமைப்புச் சட்டத்தை ஜம்மு, காஷ்மீரே இயற்றிக்கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது. ஜம்மு, காஷ்மீர் குறித்து இந்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதையும் இந்தக் கூறு கட்டுப்படுத்துகிறது.
மேலும், இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு, அயலுறவு மற்றும் தகவல்தொடர்பு ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் சட்டங்களை ஜம்மு, காஷ்மீருக்கு விரிவுபடுத்தும்போது, தேவைப்பட்டால் மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதேநேரத்தில், மற்ற விஷயங்கள் குறித்த சட்டங்களை விரிவுபடுத்தும்போது, மாநில அரசின் இசைவைப் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கிறது.

Afbeeldingsresultaat voor indian states autonomy

1952-ல் இந்தியப் பிரதமர் நேரு, ஜம்மு-காஷ்மீர் மாநிலப் பிரதமர் ஷேக் அப்துல்லா இருவருக்கும் இடையேயான டெல்லி ஒப்பந்தத்தின்படி ஜம்மு, காஷ்மீரின் ‘மாநிலப் பட்டிய’லில் இந்தியக் குடியுரிமை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, 1954-ல் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆணையின்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறு 35ஏ சேர்க்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஆணையானது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 370 (1) (டி)-ன்படி வெளியிடப்பட்டது. இந்தக் கூறானது, ஜம்மு, காஷ்மீரின் ‘மாநிலப் பட்டிய’லில் விதிவிலக்குகளையும் திருத்தங்களையும் செய்வதற்குக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. ஜம்மு, காஷ்மீரில் ‘நிரந்தரமாகக் குடியிருப்பவர்’களுக்குச் சிறப்புரிமை வழங்குவதற்கு இந்திய அரசு அளித்த இசைவே அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட கூறு 35ஏ.
அரசமைப்புச் சட்டத்தின் கூறு 35ஏ ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் ‘நிரந்தரமாகக் குடியிருப்பவர்’களுக்குச் சிறப்புரிமைகளை வழங்குதல், பொதுத் துறை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளித்தல், மாநிலத்தில் சொத்துரிமையைப் பெறுதல், கல்வி உதவித்தொகை மற்றும் இதர சமூக நலத் திட்ட உதவிகளைப் பெறுதல் ஆகியவற்றைக் குறித்து முடிவெடுக்கும் முழுமையான அதிகாரத்தை அம்மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு வழங்குகிறது. இக்கூற்றின்படி, சட்டமன்றத்தால் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகவோ அல்லது வேறு எந்தச் சட்டத்தையும் மீறியதாகவோ கூறி எதிர்த்து வழங்கிட இயலாது.
சிறப்பு அதிகாரம் கோலோச்சும் மாநிலங்கள்
அரசியல் சட்டக் கூறு 370 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அதிகாரம் வழங்கிவந்ததை நாம் அறிவோம். அதைப் போல சட்டக் கூறு 371 பத்து மாநிலங்களுக்கு வெவ்வேறு விதமான சலுகைகளை வழங்கியுள்ளது. பெரும்பாலானவை வடகிழக்கு மாநிலங்களில், அவை பின்பற்றிவரும் பழங்குடிக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டவை. பிற மாநிலங்களில் பின்தங்கியுள்ள பிரதேசங்களின் முன்னேற்றத்துக்காக அவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
மதம், சமூகப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக நாடாளுமன்றம் இயற்றும் எந்தச் சட்டமும் நாகாலாந்து மாநிலத்துக்குப் பொருந்தாது என்று அரசியல் சட்டக்கூறு 371ஏ பாதுகாப்பு அளிக்கிறது. நாகர்களின் பாரம்பரியச் சட்டப்படியான உரிமையியல், குற்றவியல் வழக்குகள் நிர்வாகம், நிலங்களும் அது தொடர்பான ஆதாரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எதையாவது நாகாலாந்துக்கும் அமல்படுத்த வேண்டுமென்றால், அந்த மாநில சட்டமன்றம் அதை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினால்தான் சாத்தியம். சட்டம், ஒழுங்கு தொடர்பாக மாநில முதலமைச்சர் ஏதேனும் முடிவெடுத்தால் அதை நிராகரிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு இது வழங்குகிறது. குடிமக்கள் சட்டம் 1955-ஐ திருத்துவது என்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, நாகாலாந்துக்குப் பொருந்தாது என்று முதலமைச்சர் நெய்பியு ரியோ, கடந்த ஜனவரியில் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதற்கு சட்டக் கூறு 371தான் காரணம்.
கடந்த ஜூன் மாதம், நாகாலாந்து தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி (என்டிபிபி) சட்டமன்ற உறுப்பினர் நெய்கிசாலி நிக்கி கிரே, அரசியல் சட்டத்தின் 371ஏ மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். “மாநிலத்தில் உள்ள நிலங்களும் அவை சார்ந்த வளங்களும் மாநிலத்துக்கு உரியவை அல்ல; மக்களுடையது என்று அது கூறுகிறது. இந்த சட்டக் கூறால் நில உடைமையாளர்கள் தங்களுடைய நிலங்களில் அரசு எந்த முன்னேற்ற நடவடிக்கையையும் நடத்தவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றார்.
அசாம் மாநிலத்துக்கானது 371பி. மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில ஆளுநருக்குக் குடியரசுத் தலைவர் வழங்கலாம். அத்துடன் 1969-ல் 244ஏ என்ற சட்டக் கூறும் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன்படி, அசாம் மாநிலம் சில பகுதிகளின் வளர்ச்சிக்காக சுயேச்சை அதிகாரமுள்ள குழுக்களை நியமித்துக்கொள்ளலாம். இதுபோக, அரசியல் சட்டத்தின் ஆறாவது அட்டவணைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்குத் தனி உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சட்டக் கூறு 371ஜி, மிசோரத்துக்கு இப்படிப்பட்ட நில உடைமைப் பாதுகாப்பை அளிக்கிறது. மிசோரம் மாநில மக்களின் மத, சமூகப் பழக்கவழக்கங்கள், பாரம்பரியச் சட்டம், நடைமுறை, உரிமையியல்-குற்றவியல் நடைமுறைகள் ஆகியவற்றில் நாடாளுமன்றம் இயற்றும் எந்தச் சட்டமும் மிசோரத்தில் நேரடியாக அமலாகிவிடாது. மிசோரம் சட்டமன்றம் அவற்றை ஏற்றுத் தீர்மானமாக நிறைவேற்றினால்தான் நடைமுறைப்படுத்த முடியும்.
அரசியல் சட்டக் கூறு 371பி அசாம் மாநிலம் தொடர்பானது. மேகாலயா என்ற புதிய மாநிலத்தை உருவாக்க இப்பிரிவு சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டக் கூறு 371சி மணிப்பூர் மாநிலம் தொடர்பானது. 1972-ல் மணிப்பூர் மாநிலம் உதயமானது. மணிப்பூரிலும் பழங்குடி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களை மாநில ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் நியமிக்க இது அதிகாரம் அளிக்கிறது. 1975-ல் சிக்கிம் இந்திய மாநிலமானது. அரசியல் சட்டக்கூறு 371எஃப் சிக்கிம் மாநிலத்துக்கானது.
371ஹெச் அருணாசல பிரதேச மாநில சிறப்பு உரிமைகள் தொடர்பானது. மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரங்களை இப்பிரிவு வழங்குகிறது. அரசியல் சட்டக் கூறு 371ஐ கோவா மாநிலத்துக்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. நில விற்பனை, சொத்துரிமை தொடர்பானவை இந்த அதிகாரங்கள். 371ஜே ஹைதராபாத்-கர்நாடகப் பிராந்தியங்களின் ஆறு பின்தங்கிய மாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சி மன்றங்கள் ஏற்படுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சிறப்பு அதிகாரங்கள் வழங்குகிறது. அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவு மகாராஷ்டிரத்தின் விதர்பா, மராத்வாடா பகுதிகளிலும், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளிலும் தனி வளர்ச்சி வாரியங்களை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
அரசியல் சட்டக் கூறு 371ஏ முதல் 371ஜி வரையிலான பிரிவுகள் சொல்வது என்னவென்றால், இவற்றில் எந்த மாற்றங்களைச் செய்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்பதாகும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இதே வகையிலான சிறப்பு அதிகாரத்தைத்தான் அரசியல் சட்டக் கூறு 370 தந்திருந்தது.
மாநிலம், ஒன்றியப் பிரதேசம், தேசியத் தலைநகரப் பகுதி… அதிகாரங்கள் என்னென்ன?
மாநிலங்கள்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங் களைக் கொண்ட சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொண்ட நிர்வாக அலகுகளே மாநிலங்கள். மாநிலங்கள் ஒற்றை அல்லது இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்களைக் கொண்டிருக்கலாம். அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ள விஷயங்களின் மீதும் ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விஷயங்களின் மீதும் சட்டமியற்றுவதற்கு அதிகாரம் பெற்றுள்ளன. மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மட்டுமே நிர்வாகத்தில் பங்கெடுப்பார்.
ஒன்றியப் பிரதேசங்கள்: ஒன்றியப் பிரதேசங்கள் லெப்டினென்ட் கவர்னரை நிர்வாகியாகக் கொண்டு செயல்படுபவை. சட்டமன்றங்களைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்கள் தங்களது முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். தற்போது புதுச்சேரி மட்டுமே சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும் ஒன்றியப் பிரதேசம். ஜம்மு, காஷ்மீரும் சட்டமன்றத்தைக் கொண்ட ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலில் இணைந்திருக்கிறது. சட்டமன்றங்களைக் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது. ஒன்றியப் பிரதேசங்களின் சட்டமன்றங்கள் ஆலோசனை அமைப்பாகச் செயல்படலாமேயொழிய சட்டம் இயற்றுவதில் முழு உரிமை பெற்றவை அல்ல. நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றியப் பிரதேசங்களுக்கும் உறுப்பினர்கள் இருந்தாலும்கூட, மாநிலங்களவை என்று வரும்போது டெல்லி, புதுச்சேரி இவற்றுக்கு மட்டுமே உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.ஒன்றியப் பிரதேசங்கள் நிதியாதாரங்களுக்கு மத்திய அரசையே முழுமையாகச் சார்ந்து இருக்கின்றன. மாநிலங்களாக அறிவிக்கப்பட முடியாதவகையில் மிகச் சிறிய எல்லைப் பரப்பையும் பொருளாதாரத்தில் வலுவற்ற தன்மையையும் கொண்டிருக்கும் பகுதிகளை ஒன்றியப் பிரதேசங்களாக அறிவிக்கலாம் என்று 1956-ல் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்தது. ஒன்றியப் பிரதேசங்களின் முன்னால் உள்ள வாய்ப்புகள் மூன்றே மூன்று மட்டும்தான். குறிப்பிட்ட அளவில் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஒன்றியப் பிரதேசங்கள் தனி மாநில அந்தஸ்தைப் பெறலாம் அல்லது காலப்போக்கில் அருகிலிருக்கும் மாநிலங்களுடன் இணைக்கப்படலாம் அல்லது ஒன்றியப் பிரதேசமாகவே தொடரலாம். எனினும், மக்கள்தொகையும் பொருளாதாரமும் வளர்ந்துவரும் சூழலில் ஒன்றியப் பிரதேசங்கள் தங்களை தனிமாநிலங்களாக அறிவிக்க வேண்டும் என்பதையே கோரிக்கையாக முன்வைக்கின்றன.
தேசியத் தலைநகரப் பகுதி: ஒன்றியப் பிரதேசங்களில் ஒன்றாக இருந்துவந்த டெல்லி, ‘தேசிய தலைநகரப் பகுதி’ என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் அதிகாரங்களைப் பொறுத்தவரை அதே ஒன்றியப் பிரதேசத்தின் நிலைதான் தொடர்கிறது. 1.8 கோடி பேர் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தைக் கொண்டிருந்தாலும்கூட மாநிலங்களுக்குரிய அதிகாரம் இன்னும் டெல்லிக்கு அளிக்கப்படவில்லை. சட்டமன்றம் இயற்றிய சட்டங்கள் லெப்டினென்ட் கவர்னரின் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடக்கின்றன. இன்னும் ஒன்றியப் பிரதேசத்தின் நிலையிலேயே தொடர்கிறது டெல்லி.
ஒரே தேசம்… ஒரே அரசமைப்புச் சட்டம்!

Afbeeldingsresultaat voor jammu kashmir bjp cartoons

தொடர்ந்து தனது முன்னோடிகளின் பாதையிலேயே பாஜக பயணிக்கும் என்றானால், மாநிலங்கள் மேலும் படிப்படியாகப் பிரிக்கப்படுவது அதிகரிக்கும். ஏனென்றால், மாநிலங்களை வெறுமனே மாவட்டங்களைப் போல நிர்வாக அலகுகளாகப் பாவிப்பதே பாஜகவின் முன்னோடிகளின் பார்வை. அந்த வகையில் ஒரே நாடு… ஒரே அரசமைப்புச் சட்டம் என்பது ஒரே நாடு… நூறு மாநிலங்கள் என்றும்கூட ஆகலாம். இன்றைய ஜம்மு, காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மாற்றங்களுக்குக்கூட பாஜகவின் நெடிய வரலாறு அதன் வேர்களில் உண்டு. காஷ்மீர் மாநிலத்துக்குத் தனி அரசமைப்பு, தனிக் கொடி உள்ளிட்ட சிறப்புரிமைகளை வழங்குவதை எதிர்த்து 1952-ல் பெரும் போராட்டத்தைத் தொடங்கியவர் பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜி. சாவர்க்கருக்குப் பிறகு இந்து மகா சபையின் தலைவரான சியாமா பிரசாத், 1947-ல் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத மூன்று அமைச்சர்களில் ஒருவர். நேருவின் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராகப் பதவிவகித்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1950-ல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1951-ல் ஜன சங்கத்தைத் தொடங்கினார். ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பு, அயலுறவு மற்றும் தொலைத்தொடர்பு தவிர அனைத்து அதிகாரங்களையும் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 370-ஐ கடுமையாக எதிர்த்தார் சியாமா பிரசாத். 1952-ல் கான்பூரில் நடந்த ஜனசங்கக் கூட்டத்தில் ஷேக் அப்துல்லாவின் ஆட்சிக்கு எதிராக ஜம்முவைச் சேர்ந்த டோக்ரிகள் நடத்திய போராட்டத்துக்குத் தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தார். ஜம்மு, காஷ்மீர் விஷயம் தொடர்பாக நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். காஷ்மீர் அரசாங்கத்தின் அனுமதி பெறாமலே 1953 மே 11 அன்று ஜம்முவுக்குள் நுழைய முற்பட்ட அவர், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். ஸ்ரீநகரில் சிறைவைக்கப்பட்டிருந்த அவர், ஜூன் 23 அன்று சிறையிலேயே இறந்தது இன்னமும் விவாதப்பொருளாக இருக்கிறது. சியாமா பிரசாத் தொடங்கிய பாரதிய ஜனசங்கத்தின் அரசியல் தொடர்ச்சியான பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது தனது தலைவர் எதிர்த்துப் போராடிய கூறு 370-ஐ நீக்கியிருக்கிறது!
தொகுப்பு: சாரி, த.ராஜன்
-தமிழ் இந்து
ஓகஸ்ட் 7, 2019
மூலம்: சக்கரம்.காம் 

No comments:

Post a Comment

Oxfam report “Inequality Kills”: Billionaires racked up wealth while millions died during the pandemic by Kevin Reed

  The global charity Oxfam released a briefing on Monday entitled “Inequality Kills” in advance of the World Economic Forum State of the Wor...