நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவராக டியூ.குணசேகர விளங்குகிறார். சரியாகச் சொல்லப்போனால் 60 வருடங்கள். டட்லி சேனாநாயக்க 31 வருடங்கள் சேவை செய்தார் ஜே.ஆர்.ஜயவர்தன 50 வருடங்கள் ;  சிறிமாவோ பண்டாரநாயக்க 40 வருடங்கள் ;  கலாநிதி என்.எம்.பெரேரா 46 வருடங்கள் ;  கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 56 வருடங்கள் ; கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க 50 வருடங்கள் ; பீட்டர் கெனமன் 57 வருடங்கள்.
நோர்வேயைச் சேர்ந்த சிறந்த நண்பரொருவர் டி.யூவுடன் குறுகிய நேரம் சந்தித்துப் பேசிவிட்டு அவர் எத்தகைய பண்பு கொண்டவர் என்று மதிப்பிடுகிறீர்கள் என்று என்னைக் கேட்டார். ‘டியூ ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்’  என்று நான் பதில் சொன்னேன். கம்யூனிஸ்ட் என்றால் யார் என்று தனக்கு விளங்குகிறது என்றும், ஆனால் கைதேர்ந்த கம்யூனிஸ்ட் என்ற ஒரு சொல்லை ஏன் சேர்க்கிறீர்கள் என்றும் நோர்வே நண்பர் திருப்பிக் கேட்டார். எனது பதில் மிகவும் எளிமையானது; டியூ வார்த்தை ஜாலங்களில் நம்பிக்கை கொண்டு செயற்படுபவர் அல்ல. அவர் நம்புவது ஆய்வுகளையும், அறிவாதாரமான அனுபவத்தையுமே.


டியூ சிறந்ததொரு கல்வி அத்திவாரத்தைக் கொண்டவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த அவரின் அறிவு முன்னேற்றம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அவரது தொழில்சார் வாழ்க்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் ஆரம்பமானது. அங்கு பாகு மகாதேவா, எஸ்.சிற்றம்பலம், சீ.சிவ்பிரகாசம், சேர்லி அமரசிங்க, ஹக் மொலகொட போன்ற மேதைகளுடன் பணியாற்றி நெருக்கமாகப் பழகும் சிறப்பான வாய்ப்பு டியூவிற்குக் கிடைத்தது. புகழ்பெற்ற நிதியமைச்சர்களான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, டி.பி.இலங்கரத்ன மற்றும் கலாநிதி என்.எம்.பெரேரா ஆகியோரின் கீழ் டியூ சேவையாற்றினார்.
டியூவை பௌத்த சங்கம், இலக்கிய சங்கம், பொழுதுபோக்குக் கழகம், மிகவும் முக்கியமாக தொழிற்சங்கத்தின் செயலாளராக நியமித்த அவரது சகாக்களும் அவரது அறிவுத்திறத்தை முறையாக அங்கீகரித்தார்கள். அந்த அமைப்புக்களில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு டியூவின் ஆற்றல்களையும், தலைமைத்துவப் பண்புகளையும் மேம்படுத்த உதவியது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் துடிப்புடன் செயற்பட்ட தொழிற்சங்க இயக்கம் அவர் தனது பேச்சுவார்த்தை ஆற்றல்களை விருத்தி செய்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் டியூவிற்கு மேலும் அறிவைப் பெருக்கிக்கொள்ள, குறிப்பாக வரிச்சட்டங்கள், வரிக்கட்டமைப்புக்கள், நிதித்துறை ஆய்வுகள் போன்ற துறைகளில் அறிவைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்பைக் கொடுத்தது.
இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரு வருடங்களுக்குத் தகுதிகாண் உறுப்பினராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். புதிதாகச் சேரும் இளம் உறுப்பினர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கொள்கை ஒன்றைப் பின்பற்றியது. மார்க்சிஸ கோட்பாட்டு அறிவை அவர்கள் பெறுவதற்குக் கடுமையான செயற்திட்டங்களை வகுத்திருந்தது. இவ்வாறு தான் டியூவை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.
இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தில் என்.சண்முகதாசனின் வகுப்புகளில் நாமிருவரும் கலந்துகொண்டோம். சண் அரசியல் தத்துவம் போதித்தார். ஜனநாயகம் தொடர்பில் நடந்த முதல் பாடத்தை டியூ இன்றுவரை நினைவில் வைத்திருக்கிறார். ஜனநாயகம் என்றால் என்ன என்று வகுப்பிலிருந்தவர்களிடம் சண் கேட்டார். ‘மக்களின், மக்களால், மக்களுக்கான அரசாங்கம்’ என்ற ஆப்ரஹாம் லிங்கனின் பிரபலமான வரைவிலக்கணத்தை நான் பதிலாகக் கூறினேன். அப்போது சண் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு ‘எந்த மக்கள்’ என்று எம்மைக் கேட்டார். அதுவே வர்க்கங்கள் பற்றிய ஆய்வில் எமது முதற்பாடம்.
கம்யூனிஸ்ட் கட்சியின் வகுப்புக்கள் சண்முகதாசனுடன் மட்டுப்பட்டு நிற்கவில்லை; பொன்.கந்தையா அரசியல் பொருளாதாரத்தில் கடும் கண்டிப்பான வகுப்புக்களை நடத்தினார். கலாநிதி.எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெலமன் மற்றும் பிரேம்லால் குமாரசிறி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவ்வப்போது வகுப்புக்களை நடத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகளான போர்வாட், மவ்பிம ஆகியவற்றுக்குக் கட்டுரைகளை எழுதுமாறு கட்சி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். இது எமக்கு சிந்தனைகளை வரிசைப்படுத்தி, ஒருமுகமாக்கி, திட்டமிட்ட முறையில் எழுதுவதற்கு நல்ல பயிற்சியைத் தந்தது.
டியூவின் அறிவுத்தேடலில் மிகப்பெரிய பாய்ச்சல் 1970 இல் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரான பீட்டர் கெலமனுக்கு அந்தரங்க காரியதரிசியாக அவர் நியமனம் செய்யப்பட்ட போது வந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பதவியில் மேலும் உயர் பதவிகளைப் பெறும் வாய்ப்பு இருந்தபோதிலும் டியூ அதனைக் கைவிட்டு பீட்டர் கெலமனுடன் இணைந்தார். ஆனால் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அந்தரங்க காரியதரிசி என்ற வகையில் டியூவின் அன்றாடப் பணிகளே தினமும் ஒவ்வொரு விடயத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கடிதங்களையும், முக்கியமான ஆவணங்களையும் மொழிபெயர்க்க வேண்டியேற்பட்ட போது மிக முக்கியமான பயிற்சிக்கான சந்தர்ப்பமாக டியூவிற்கு அது அமைந்தது. நல்ல மொழிபெயர்ப்புக்குத் துல்லியமான சிந்தனையும், மொழியும் இன்றியமையாதவை ஆகும். கட்சியின் பத்திரிகைகளுக்கு குறிப்பாக, அத்த தினசரிக்கு கிரமமாக டியூ கட்டுரைகளை எழுதிவந்தார்.
2004 மே மாதத்தில் அரசியலமைப்பு விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராக டியூ நியமிக்கப்பட்ட போது பொது நிர்வாகத்துறையில் ஏற்கனவே அவருக்கு இருந்த பழுத்த அனுபவம் கைகொடுத்தது. 2010 ஏப்ரலில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 2010 நவம்பரில் மனிதவள அபிவிருத்திக்கான சிரேஷ்ட அமைச்சராக நியமிக்கப்படும் வரை அந்தப் பதவியில் அவர் தொடர்ந்தார். அந்தக் கட்டத்தில் அவர் பொதுநிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக உறுதியாகக் குரல் கொடுக்கும் ஒருவராக அவர் மாறியிருந்தார். ஆனால் மனிதவள அபிவிருத்திக்குப் பொறுப்பான பரந்தளவு செயல் விளைவுடைய பதவி அமைச்சரவை அந்தஸ்த்து இல்லாததாக இருந்தாலும் பரந்தளவு விவகாரங்களை நோக்கி அவரைச் சிந்திக்கத் தூண்டியது.
தீவிரமடைந்த உலகமய சூழலில் முன்னேற்றம் காண்பதற்கான தந்திரோபாய விவகாரமாக மனிதவள அபிவிருத்தியை டியூ நோக்கினார். அதற்காக உறுதியாகக் குரல் கொடுத்தார். தேசிய மனிதவள அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கை ஒன்று அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.
2015 ஆகஸ்ட் வரை டியூ பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். அந்தக் காலகட்டத்தில் தான் அவர் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) தலைவராக சேவையாற்றினார். அந்தப் பதவியின் இறுதிக்கட்டத்தில்  அவர் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையொன்றைத் தயாரித்திருந்தார். அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த தருணத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காகத் தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பதே உண்மை.
இலங்கை நாட்டின் நலன்களின் அடிப்படையில் நோக்குகையில் டியூ மேற்கொண்ட சிறந்த முயற்சிகள் சிலவற்றின் மூலமான பயனுறுதியுடைய விளைவுகள் முறையாக வெளிப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். மேற்குலகத்தில் குறிப்பாக, அமெரிக்காவிற்கு அடிமைச் சேவகம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கின்ற இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கு டியூ கடுமையாக முயற்சித்து வருகின்றார்.
ஆனால் இடதுசாரி அரசியல் இந்த விடயத்தில் வெறும் பேச்சுக்களையும், வார்த்தை ஜாலங்களையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களுடன் கட்டுப்பட்டு நிற்கிறது. அபிவிருத்திக்கான மாற்று மூலோபாயமொன்றை முன்வைக்க வேண்டியதே இன்று அவசியமானதாகும். அபிவிருத்தி வகை மாதிரிகளுக்காக சோவியத் யூனியனையும், சீனாவையும், ஏனைய சோசலிஸ நாடுகளையும் இடதுசாரிக் கட்சிகள் திரும்பிப்பார்த்த காலம் போய்விட்டது. இன்று தேவைப்படுவது வெற்று ஆரவாரப் பேச்சுக்கள் இல்லாத நல்லாட்சிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக நீதியுடனான சந்தைச் செயற்திறன் கொண்ட ஒரு கூட்டு மூலோபாயமாகும்.
(கலாநிதி லொய்ட் பெர்னாண்டோ)
Virakesari