தமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்! -புனிதன்மிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தமிழர் அரசியலில் இதுவரை காலமும் இல்லாத சாதனைகள் பலவற்றைப் படைத்து வருகின்றார். அவருடைய சாதனைகளை எவரும் இலேசில் முறியடித்துவிடவோ பட்டியலிட்டுவிடவோ முடியாது. ஏனெனில் இந்த நிமிடம் வரையிலான அவரது சாதனைகளைப் பட்டியலிட்டு முடித்துவிட்டோம் என நினத்தால் அவர் அடுத்த நிமிடம் மேலும் சாதனைகளை நிலைநாட்டி இருப்பார்.

2015இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவுகளையும் எடுக்காமலே இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் வைத்துக் கொண்டே ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதையே தொடர்ந்து செய்து வந்தனர். இதில் சுமந்திரனே முன்னோடியாகச் செயல்பட்டார்.
இவர்களது இந்தச் செயல்பாட்டால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ் Nதியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படத் தொடங்கி இறுதியில் கூட்டமைப்பை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்துள்ளார். இவர்களது அரச ஆதரவுச் செயற்பாடு காரணமாக கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இவர்களது செயற்பாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு ஒருமுறை சுமந்திரன் போனபோது அங்குள்ள தமிழ் மக்களிடம் அடிவாங்காத குறையாக ‘வரவேற்க’ப்பட்டார். இவ்வளவு எதிர்ப்புகள் வந்தபோதிலும் இந்த மூவரும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர்.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி இளைஞரணி மாநாட்டில் பேசிய சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை “நீ” என ஒருமையில் விழித்து, அவரைத் திட்டி, வசைபாடி, தனது கீழ்த்தரமான மனோபாவத்தையும், நடத்தையையும் பகிரங்கப்படுத்தியதுடன், தமிழ் மக்களின் மானத்தையும் கப்பலேற்றியிருக்கிறார்.
தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் பிரதிநிதி நாட்டின் பிரதான நிர்வாகியான ஜனாதிபதியை இவ்வாறு கீழ்மைப்படுத்தி விழித்ததை கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தனோ, மாலை சேனாதிராசாவோ இதுவரை கண்டிக்காமல் மௌனம் காக்கின்றனர். இந்த இடத்தில்தான் சிங்கள அரசியல்வாதிகளின் பெருந்தன்மையை சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமது பரம வைரியைக்கூட “திரு” என்றே விழித்துப் பேசும் மரபைக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் ஜனாதிபதி மீது சுமந்திரனுக்கு வெறித்தனமான கோபம் வந்ததிற்குக் காரணம், சுமந்திரன் தரகு வேலை பார்க்கும் ரணிலின் ஐ.தே.க. அரசாங்கத்தை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துவிட்டார் என்ற கண் மண் தெரியாத ஆத்திரம்தான்.

அதன் காரணமாக சுமந்திரனது பிந்திய சாதனையாக அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பேச்சாளராக மாறியிருக்கிறார். தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தில் அவர் எல்லா சந்தர்பங்களிலும் ஐ.தே.கவின் ‘அப்புகாத்து’வாக வாய்ச்சவாடலடித்து வருகிறார்.

தமிழர் அரசியலில் பாரம்பரியமோ நீண்டகால வரலாறோ கொண்டிராத அவர், தமிழரசுக் கட்சியில் இணைந்து முதன்முதலில் தேசிய பட்டியல் உறுப்பினராக பின்கதவால் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்திருந்தார். அவரது நாடாளுமன்ற பிரவேசத்தைப் பலரும் கேலி செய்ததைத் தொடர்ந்து அனைவருக்கும் சவால் விடுவது போல நேரடியாகவே தேர்தலில் போட்டியிட்டு பெருமளவான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். ஆனால் 2015 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டும்வரை அவரது சுயரூபத்தை மக்கள் அறிந்திருக்கவில்லை.
சுமந்திரனின் ஆட்டங்களுக்கெல்லாம் அனுசரணையாக இருப்பது திரிகோணமலையில் பாரம்பரியமான ஐ.தே.க. குடும்பத்தில் இருந்து வந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் தமிழரசுக் கட்சித் தலைவராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவராகவும் இருக்கும் இராஜவரோதயம் சம்பந்தன்தான். சம்பந்தன் விடயத்திலும் ஒரு குழப்பம் உண்டு. தமிழரசுக் கட்சியினர் தமது கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் சமஸ்டிக் கட்சி (குநனநசயட Pயசவல) என்றும், தமிழில் தமிழரசுக் கட்சி என்றும் பித்தலாட்டம் செய்தது போல, தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும், திரிகோணமலை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான இராஜவரோதயம் அவர்களின் புதல்வர்தான் இந்த சம்பந்தன் என்று சிலர் புலூடா கதையும் விட்டு வைத்திருக்கின்றனர். அது உண்மையல்ல. தமிழரசுக் கட்சி இராஜவரோதயத்தின் மகன் அல்ல இந்த சம்பந்தன். இவர் ஐ.தே.க. இராஜவரோதயத்தின் மகன். அதனால்தான் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக வெளியில் காட்டிக் கொண்டாலும் மனதை ஐ.தே.கவிடம்தான் ஈடு வைத்திருக்கிறார்.

இத்தகையதொரு சூழலில்தான் மாவை சேனாதிராசாவின் கையாலாகாத்தனம் காரணமாக சம்பந்தனுக்குப் பிறகு தமிழரசுக் கட்சியின் தலைவர் தான்தான் என்ற தற்துணிபை சுமந்திரன் கொண்டிருக்கிறார்.

தமிழ் தலைமைகளின் தொடர் பாரம்பரியமான ஐ.தே.க. விசுவாசம் காரணமாகவும், சம்பந்தனின் விசேடமான ஐ.தே.க. பற்றுதல் காரணமாகவும், 2015 ஜனவரி 8இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் அதன் பின் ஓகஸ்டில் நடந்த பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க. அணியை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பகிரங்கமாக ஆதரித்தது.
ரணில் தலைமையிலான அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைத்தன்னும் நிறைவேற்றாத போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்தை கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்து ஆதரித்தே வந்துள்ளது. இந்த ஆதரவின் பின்னணியில் சுமந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு.
சுமந்திரன் வெளிநாட்டு சக்திகளினதும் ஐ.தே.கவினதும் பிரதிநிதியாகவே தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. அதை நிரூபிப்பதைப் போலத்தான் சுமந்திரனின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

பொதுவாகவே இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் எல்லாத் தமிழ் தலைவர்களுமே, சி.சுந்தரலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் என எல்லோருமே ஐ.தே.க. சார்பாகவும், ஏகாதிபத்திய சார்பாகவுமே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட வே.பிரபாகரனும் அந்தப் பாதையிலேயே பயணித்தார். இவர்கள் எல்லோரையும் விட இன்றைய தமிழ் தலைமையை அலங்கரிக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரே தமிழர் வரலாற்றில் மிகவும் மோசமான கடைகோடி பிற்போக்குவாதிகளாகவும், தமிழ் மக்களின் உரிமைகளை சொந்த இலாபங்களுக்காக விலைபேசி விற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களுடைய இந்த மக்கள் விரோத தான்தோன்றிப் போக்குகளுக்கெல்லாம் காரணம், தாம் என்ன செய்தாலும் தமிழ் மக்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போல தொடர்ந்து பழைய பாதையிலேயே சென்று தமக்கு வாக்குப் போட்டு நாடாளுமன்றம் அனுப்புவார்கள் என்ற அசையாத நம்பிக்கைதான்.
ஆனால் மக்களும் காலமும் எப்பொழுதும் ஒரே பாதையில், ஒரே போக்கில் செல்வதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்பது இயற்கையின் நியதி. அந்த வகையில் 2015இல் இலங்கை மக்கள் விட்ட தவறை அடுத்த தேர்தலில் திருத்துவதற்கான சந்தர்ப்பத்தை பெரும்பான்மை சிங்கள மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்பில் தமிழ் மக்களும் இணைந்து கொண்டு தங்கள் தலைவிதியையும் மாற்றியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது. அதற்கான சமிக்ஞையை கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் காட்டியும் இருக்கிறார்கள்.

முக்கியமாக தமிழர்களின் உரிமைகளை விலைபேசி விற்றவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரை தமிழர்களின் அரசியல் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கும் நடவடிக்கையை அடுத்த பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்கள் தமது தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...