யார் இந்த சிவில் சமூகம்? -புரத்தான்


லங்கையில் ஏதாவது நல்ல விடயங்கள் நடக்கும் போதெல்லாம் அதை சில அரசியல்வாதிகள் மட்டும் எதிர்ப்பதில்லை. மதவாதிகளும் எதிர்ப்பார்கள். இந்த மதவாதிகள் அநேகமாக உள்ளுர் தயாரிப்பாகவே இருப்பார்கள். இவர்களது கவலை எல்லாம் தங்களது மதம், மொழி, கலாச்சாரம் எல்லாம் பறிபோகிறது என்பதாகத்தான் இருக்கும். தமது நாட்டின் வளங்களை ஆட்சியில் இருப்பவர்கள் அந்நிய நாடுகளுக்குத் தாரை வார்ப்பதையோ, அந்நிய கலாச்சார ஊடுருவல் நடப்பதையோ இவர்கள் பார்க்கமாட்டார்கள். இவர்கள் தமது எதிரிகளை எப்பொழுதும் சக இனத்தவரிடையிலேயே தேடிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களைத் தவிர கடந்த சில தசாப்தங்களாக இன்னொரு தரப்பினரும் ஏதாவது நல்ல விடயங்கள் நடந்தால் அதை நாகரீகமான முறையில் எதிர்ப்பதற்கெனறு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தம்மை “சிவில் சமூகம்” (Civil Society) என பெருந்தன்மையோடு அழைத்துக் கொள்வார்கள். இவர்களில் கொஞ்சம் கீழ்மட்டத்தவர்கள் தங்களை “பிரஜைகள் குழு” (Citizens Committee) என்று அழைப்பதுமுண்டு.



இந்த சிவில் சமூகம் இப்பொழுது சற்று விரிவாக்கம் பெற்று “சிவில் மற்றும் கல்விசார் சமூகம்” (Civil and Academic Society) என்று தனது பெயரைச் சூடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பேர்வழிகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலோர் அநாமதேயங்களாகவும் சமூகத்துடன் எவ்வித தொடர்புகளும் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களது பெயருக்கு ஒரு கனதியைக் கொடுப்பதற்காக பெயருக்கு முன்னால் “கலாநிதி” (Dr) என்றோ அல்லது மதப் பெரியார் என்பதைக் குறிக்கும் அடைமொழியோ இருக்கும். இவர்களில் சிலர் ஆங்கில ஊடகங்களில் அவ்வப்போது கடினமான சொற்களைப் பயன்படுத்தி விளங்க முடியாத கட்டுரைகளையும் எழுதுவார்கள்.

அதுதவிர, சிலர் ஏதாவது வெளிநாட்டுத் தொடர்புடன் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, சிலரை வேலைக்கமர்த்தி, சமூக பொருளாதார கலாச்சார ஆய்வுகளையும் மேற்கொள்வார்கள். இந்த ஆய்வுகள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்ற கேள்விக்கு தெளிவான பதில் இருக்காது. ஆனால் இந்த ஆய்வுகளில் பெறப்படும் தரவுகளை இலங்கை அரசாங்கமோ அல்லது இலங்கையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைச் செய்பவர்களோ பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.
ஆனால் இந்த ஆய்வுகளை பல நோக்கங்களுடன் செயல்படும் சர்வதேச நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளும் தமது வேலைகளுக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. சில நாடுகளில் அரசாங்கங்களை வீழ்த்துவதற்கும் நிறுவுவதற்கும் கூட இந்த ஆய்வுகள் பயன்பட்டிருக்கின்றன.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளின் போது சில சிவில் சமூக அமைப்புகள் தலைகாட்டியிருக்கின்றன. இவர்களது தலைகாட்டல் ஒரு சீர்வரிசையில் அமைந்திருக்கின்றன.
அந்த வரிசையில் பதவி நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, அதனுடைய கூட்டாளிக் கட்சிகள், அவைக்குச் சார்பான பொது அமைப்புகள், மேற்கத்தைய நாடுகள் என்பனவற்றுடன் இந்த சிவில் சமூகமும் சேர்ந்துள்ளது. இவர்களுடைய பிரதான கோசங்களாக அரசியல் அமைப்பு மீறப்பட்டுள்ளது, ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது, மீண்டும் எதேச்சாதிகார ஆட்சி நிறுவப்பட்டுள்ளது என்பன இருக்கின்றன.

இந்த பொது அமைப்புகளில் சில 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைக் கொண்ட இன்று நடைமுறையில் உள்ள எதேச்சாதிகார அரசியல் அமைப்பைக் கொண்டு வந்தபோது அதற்கெதிராக போர்க்கொடி தூக்கியவை. இப்பொழுது அந்த அரசியல் அமைப்பு மீறப்பட்டுள்ளது என அந்த அரசியல் அமைப்பை ஜனநாயக ரீதியானது எனக்காட்ட முயல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, தற்போதைய ஆட்சிக் கலைப்பை அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் மீறிய செயல் என கூப்பாடு போடுபவர்கள், 2015 ஜனவரி 8இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும், 162 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரதமர் தி.மு.ஜெயரத்ன தலைமையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை நீக்கிவிட்டு, வெறுமனே 47 உறுப்பினர்களுடன் இருந்த ஐ.தே.கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கியதையோ அல்லது பிரதம நீதியரசர் மொகான பீரிசை நாடாளுமன்றத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் பதவி நீக்கியதையோ அல்லது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்தாமல் மூன்றாண்டுகள் இழுத்ததடித்ததையோ அல்லது மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடத்தாமல் இருப்பதையோ, ஏன் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் மீறிய செயலாக இவர்களால் பார்க்க முடியவில்லை. இந்த இடத்தில் இவர்களது பக்கச்சார்பற்ற நிலை எங்கே ஓடி ஒளிந்து கொண்டுள்ளது?
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்ததைத் கண்டித்து சிவில் சமூகம் சார்பில் கையெழுத்திட்ட இந்தப் பெருந்தகைகளின் கடந்தகால வரலாறு, அரசியல் பின்னணி என்பனவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த கையெழுத்துப் பட்டியலில் சில தமிழ்ப் பெயர்களும் இருக்கின்றன. அவர்களின் கடந்கால வரலாறும் சில உண்மைகளைக் கூறும். அதில் சிலர் தமிழ் மக்கள் 30 வருடப் போரில் அல்லலுற்றபோது வெளிநாடுகளில் சுகபோகமாக வாழ்ந்தவர்கள், சிலர் வெளிநாட்டுப் பணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களை நடத்தியவர்கள். சிலர் புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பினாமிகளாகச் செயற்பட்டவர்கள்.

இவர்களில் சிலர் 2009இல் போர் முடிவுற்றதும் பல்வேறு வேலைத்திட்டங்களுடனும் பணபலத்துடனும் இலங்கையில் குடியேறியவர்கள். அதுவரை ஆள்பாதி ஆடைபாதியாக இருந்தவர்கள் 2015இல் இலங்கையில் ரணில் தலைமையில் ஒரு வலதுசாரி அரசு அமைந்ததும் இனிமேல் இலங்கைதான் தமது சொர்க்கம் என நினைத்து புதிதாக வீடு மனைகளைக் கட்டி வாழ ஆரம்பித்தவர்கள்.
அவர்களில் சிலர் மக்களைத் திசைதிருப்புவதற்காக இடதுசாரி வேடங்களில் செயற்படுகின்றனர். உதாரணமாக, கடந்த பெப்ருவரியில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது பிற்போக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியைத் தடுப்பதற்காக “சுயேட்சைக் குழுக்கள்” என்ற பெயரில் சில குழுக்களை உருவாக்கி அவற்றைத் தேர்தலில் போட்டியிட வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியவர்கள். எனவே பேசும் வார்த்தைகளை விட இவர்களது செய்கைகளை அவதானித்தால் இப்படியானவர்களின் நோக்கங்களை இனங்காண முடியும்.
ஆனால் இந்த “சிவில் சமூகம்” என்னதான் பிரயத்தனங்களில் ஈடுபட்டாலும் மக்கள்தான் வரலாற்றைத் தீர்மானிக்கப் போகின்ற சக்திகள். கண்ணுக்குத் தெரியாத நூல்களால் இயக்கப்படுகின்ற இந்த ‘நண்பர்களை’ விட கண்ணுக்கு தெரிந்த எதிரியையும் நம்பலாம் என்பதில் மக்களுக்கு அனுபவம் உண்டு.

மூலம்: வானவில் இதழ் 95 நவம்பர் 2018 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...