Sunday, 23 December 2018

நோர்வேயும் சவூதி அரேபியாவும் சிங்கள – முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களின் பின்னால் இருக்கின்றன! பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு!! – இத்ரீஸ்


பொதுபல சேனாவை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே ஆதரிக்கின்றது. அதுபோல இலங்கையில் செயல்படும் வகாபி (Wahabi) இயக்கத்தை சவூதி அரேபியா ஆதரிக்கின்றது. எனவே தமிழ் – முஸ்லிம் மக்கள் தேசிய ரீதியான இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும்”. இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. கல்முனையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுகையிலேயே விதாரண இவ்வாறு கூறியிருக்கிறார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஐ.தே.க. தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு ஆதிக்கத்திலான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக நாட்டின் தேசிய சுதந்திரமும், சுயாதிபத்தியமும் பாதிக்கப்பட்டு, நாடு அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் அரைக் காலனி நாடாக மாற்றப்பட்டுள்ளது.


அதிகரித்துச் செல்லும் வறுமை, போசாக்கின்மை என்பன தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைவரையும் பாதித்துள்ளது. எனவே நாம் இலங்கையர் என்ற ஒரே தேசமாக ஐக்கியப்பட்டு நிற்க வேண்டும்.

திரிகோணமலையை இராணுவத்தளம் அமைப்பதற்காக அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எமது பாரம்பரியமான அணிசேராக் கொள்கை கைவிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா சங்கிலித் தொடராக அமைத்து வரும் இராணுவத் தளங்களின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தில் எமது செலவில் அவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

பொருளாதாரம் எமது நாட்டினதும், மக்களினதும் தேவைக்கேற்ப நடைபெறவில்லை. பதிலாக அந்நிய பல்தேசியக் கொம்பனிகளினதும்; கோப்பிரேட் நிறுவனங்களினதும் சந்தைப் பொருளாதார சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளினால் எமது அரச வங்கிகளின் செலவில் பொருளாதாரம் கட்டுப்படுத்தப்படுவதுடன், கொள்ளையும் அடிக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பெரும்பாலான தலைவர்கள் வலதுசாரி அரசியல் தலைவர்களாக இருப்பதுடன், அவர்களது நோக்கமெல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு பணக்காரர்களைப் பாதுகாப்பதாகவே இருக்கின்றது. அவர்கள் அமெரிக்காவுக்குச் சார்பானவர்களாக இருப்பதுடன், நவ தாராளவாத நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன், அமெரிக்காவின் ஆசிர்வாதம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பனவற்றுடன் இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தங்களில் உள்ள நிபந்தனைகளின் காரணமாக பாரதூரமான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதுடன், தேசிய கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, வரிக் கொள்கை மக்களைக் கடனாளிகளாக ஆக்கி, வாழ்க்கைச் செலவை அதிகரித்துள்ள அதேவேளை, ஒரு சிறு தொகையினரான உள்நாட்டு, வெளிநாட்டு பணக்காரர்களை ஆடம்பர வாழ்வில் திளைக்க வைத்துள்ளது. இந்தவிதமான நடவடிக்கைகள் மூலம் ஏகாதிபத்தியங்கள் நாடுகளைத் தங்குதடையினறிச் சுரண்டுகின்றன.”
இவ்வாறு விதாரண தமது உரையில் குறிப்பிட்டார்.

மூலம்: வானவில் இதழ் 94 அக்டோபர் 2018

No comments:

Post a Comment

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது மிகவும் ஆபத்தானதாகும்”

  THENEEWEB    25TH FEBRUARY 2019 பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி பொலிஸ் ஆட்சியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டு வருகின்றது...