ஜே.வி.பி. மேற்கொள்ளும் தொடர் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளும் அதனால் பிளவுபடும் நிலையும்! -இராசேந்திரம்


லங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகளில் போலி இடதுசாரிகளான ஜே.வி.பியின் நடவடிக்கைகள் வழமைபோல எதிரப்புரட்சிகரமானதாகவும், சந்தர்ப்பவாதரீதியாகவும் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு ஒரு நிலைப்பாட்டை எதிர்பார்த்திருக்க முடியாது என்பதே உண்மை.
ஏனெனில் 2015 ஜனவரி 8இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ஏகாதிபத்திய சக்திகள் தீட்டிய ஆட்சி மாற்றத்துக்கான திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பிற்போக்கு சக்திகளுடன் ஜே.வி.பியும் கைகோர்த்தது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, ஜே.வி.பி. அப்பொழுது எடுத்த நிலைப்பாட்டை வைத்தே தொடர்ந்து ஜே.வி.பியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றது என்பதை ஊகிக்க முடிந்தது.


அதன் பின்னர் ஐ.தே.க.தலைமையில் கடந்த மூன்றரை வருடங்களாக நடைபெற்று வந்த ‘நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் போலி எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலவே ஜே.வி.பியும் அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் வேலைகளிலும், உண்மையான எதிர்க்கட்சியையும், இடதுசாரிக் கட்சிகளையும் தாக்கும் வேலைகளிலுமே ஈடுபட்டு வந்தது.
இப்பொழுது மட்டுமல்ல ஜே.வி.பியின் செயல்பாடுகள் எப்பொழுதுமே ஐ.தே.க. சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜே.வி.பி. தனது வரலாறு முழுவதும் அந்தக் கொள்கையையே பின்பற்றி வந்திருக்கிறது.

1970 பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஏகாதிபத்திய விரோத அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலுடனும், ஆதரவுடனும் ஜே.வி.பி. அடுத்த வருடமே, அதாவது 1971 ஏப்ரலில் ஆயுதக் கிளர்ச்சி ஒன்றில் ஈடுபட்டது.
ஜே.வி.பியின் அந்தக் கிளர்ச்சிக்கு அன்றைய ஐ.தே.க. தலைமை ஆதரவளித்தது எல்லோரும் அறிந்த உண்மை. 71 கிளர்ச்சி காரணமாக முன்னைய அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. தலைவர்களை ஐ.தே.க. அரசாங்கம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் 1977இல் ஆட்சிக்கு வந்ததும் விடுதலை செய்து சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக் கொண்டது.

பின்னர் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் ஊடாகத் தீர்வுகாணும் நோக்குடன் 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முறியடிப்பதற்காக 1988 – 89 காலப் பகுதியில் ஜே.வி.பி. இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் சுமார் அறுபதினாயிரம் சிங்கள இளைஞர்களை ஐ.தே.கவின் பிரேமதாச அரசிடம் பலியிட்டது.
அதன் பின்னர் 2000ஆம் ஆண்டில் அப்போதைய சந்திரிக தலைமையிலான அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஏறத்தாழ சமஸ்டியை ஒத்த தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தபோது, ஐ.தே.கவுடனும், புலிகளின் பினாமி அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், வேறு பல சிங்கள இனவாத அமைப்புகளுடனும் இணைந்து ஜே.வி.பி. அதை எதிர்த்து முறியடித்தது.

இப்பொழுது இலங்கையில் ஐ.தே.க. தலைமையிலான ஏகாதிபத்திய சார்பு தீவிர வலதுசாரி அரசாங்கத்தை ஜனாதிபதி மைத்திரி நீக்கிய போதும், நாடாளுமன்றத்தைக் கலைத்து மக்களிடமிருந்து புதிய ஆணையைக் கோரிய போதும், ஜே.வி.பி., ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசனின் ‘முற்போக்கு’ கூட்டணி போன்ற வலதுசாரி சக்திகளுடன் சேர்ந்து செயல்படுகிறது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமின்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிராக ‘இம்பீச்மென்ட்’ என்ற குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்யப் போவதாக ஜே.வி.பி. மிரட்டல் விடுக்கிறது. அப்படி ஒரு பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றுவதானால நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை. வெறுமனே ஆறு உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஜே.வி.பியால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? ஐ.தே.க. உட்பட பிற்போக்கு கட்சிகள் அனைத்தினதும் ஆதரவு தனது திட்டத்துக்கு கிடைக்கும் என்ற நப்பாசையிலேயே ஜே.வி.பி. இவ்வாறு மனப்பால் குடிக்கிறது.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஜே.வி.பியின் தொடர்ச்சியான எதிர்ப்புரட்சி மற்றும் சந்தர்ப்பவாத நடவடிக்கைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. ஜே.விபியின் இத்தகைய நடவடிக்கைகளால் அந்த இயக்கத்திலிருந்து காலத்துக் காலம் பலர் வெளியேறி புதிய அமைப்புகளைத் தோற்றுவித்திருக்கின்றனர். அதில் குறிப்பிடக்கூடிய வகையில் அதன் பிரச்சாரச் செயலாளராக இருந்த விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார். அவருடைய அமைப்புக்கும் ஜே.வி.பிக்கு இருப்பது போல அதேயளவு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். ஜே.வி.பிக்கும் ஐ.தே.கவுக்கும் இருக்கும் உறவைக் குறிப்பிடுவதற்காக ஜே.வி.பி. இயக்கத்தை “சிவப்பு யானை” என விமல் வீரவன்ச கேலியாகக் குறிப்பிட்டு வருகின்றார்.

பின்னர் ஜே.வி.பியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான குமார் குணரட்ணம் என்பவர் தலைமையில் ஒரு பிரிவினர் வெளியேறி ‘முன்னிலை சோசலிசக் கட்சி’ என்ற பெயரில் ஒரு கட்சியை நடாத்தி வருகின்றனர். அவர்கள் தாம் ஜே.வி.பியை விட்டு வெளியேறியதற்குச் சொன்ன காரணம், ‘ஜே.வி.பி. ஒரு இடதுசாரி கட்சி அல்ல’ என்பதுதான்.
அதன் பின்னர் ஜே.வி.பியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜேவீரவுடன் அதன் முதலாவது மத்திய குழுவில் அங்கம் வகித்தவரும், பின்னர் நீண்டகாலமாக ஜே.வி.பியின் தலைவராக இருந்தவருமான காலஞ்சென்ற சோமவன்ச ஜே.வி.பியின் போக்கில் வெறுப்புற்று அதிலிருந்து வெளியேறி புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார்.

இப்பொழுது ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் விஜித ஹேரத்தும் தற்போதைய கட்சித் தலைவர் அனுரகுமார திசநாயக்கவின் தீவிர ஐ.தே.க. போக்கில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், மிக விரைவில் அவர் தலைமையில் ஒரு குழுவினர் வெளியேறி புதிய அமைப்பொன்றை உருவாக்கக்கூடும் எனவும் தெரிய வருகிறது.
ஜே.வி.பியினர் மார்க்சிசம் பேசுவார்கள், தமது கூட்ட மேடைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் படங்களை வைப்பார்கள், சிவப்பு சட்டை அணிவார்கள், செங்கொடியை ஏந்துவார்கள், தொழிலாளர்களுக்காக தொண்டை கிழியக் கத்துவார்கள், சிறுபான்மை இனங்களுக்கு சமவுரிமை வேண்டும் எனப் பரிந்து பேசுவார்கள், ஆனால் நடைமுறையில் இவையெல்லாவற்றுக்கும் எதிராகச் செயல்படுவார்கள்.

இவ்வாறு ஜே.வி.பி. போல இரண்டக நிலையுடன் செயல்படும் இடதுசாரி அமைப்புகளை உலகில் காண்பது அரிது.
எனவே, ஜே.வி.பி. என்ன சொல்கிறது என்பதை விட, அது நடைமுறையில் என்ன செய்கிறது என்பதை அவதானிப்பதன் மூலம் அந்த இயக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுபவர்கள் சரியான பாதைக்கு மீண்டுவர முடியும்.

மூலம்: வானவில் இதழ் 95 நவம்பர் 2018 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...