ஜனாதிபதி கொலை முயற்சியே இலங்கையில் எழுந்துள்ள நிலைமைக்கு அடிப்படைக் காரணமாகும்!


மது கடந்த மாத (ஐப்பசி – 2018) வானவில் இதழின் முன்பக்க கட்டுரையின் தலைப்பு இவ்வாறு அமைந்திருந்தது:

“நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்கு தயாராவீர்!”

அந்தக் கட்டுரையில் நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்:

“இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்கு கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர்.

எனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லீம், மலையக மக்களினதும் கடமையாகும்.
“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்”.
எமது இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து நாட்டில் யாருமே எதிர்பாராத வகையில் பல அரசியல் மாற்றச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.


நாம் ‘வானவில்’ பத்திரிகையில் சுட்டிக்காட்டியவாறு தேர்தல் ஒன்று நடைபெறாமலே ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு, அந்த மாற்றத்தைத் தாங்கிக் கொள்ளாத உள்நாட்டு பிற்போக்கு சக்திகளும், அவற்றின் சர்வதேச எஜமானர்களும் ஓரணியில் திரண்டு நின்று சன்னதம் ஆடுகின்றனர். அதன் காரணமாக நாடு பெரும் குழப்ப நிலையில் ஆழ்ந்துள்ளது.

பலர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சம்பந்தமாக வானவில்லால் எப்படி அச்சொட்டாக ஆரூடம் கூற முடிந்தது எனத் தமது வியப்பையும் அதே நேரத்தில் தமது பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
இதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. நாட்டின் அரசியல் நிலைமைகளை யதார்த்தபூர்வமாகவும் முற்போக்கு கண்ணோட்டத்துடனும் தொடர்ந்து அவதானித்து வந்தால் எவரும் சரியானதொரு முடிவுக்கு வர முடியும். வானவில் பத்திரிகை ஆசிரியர் குழுவைப் பொறுத்தவரையில் அதில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையானோர் 50 வருடங்களுக்கும் மேலான நேரடி அரசியல் அனுபவத்தைக் கொண்டவர்கள் என்பது இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயமாகும்.
ஆனால் நாம் எதிர்பார்க்காமல் நடைபெற்ற முக்கியமான விடயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட முக்கியமான முடிவுகள்தான். (இதை அவர் 2015 ஜனவரி 8இல் மேற்கொண்ட பாரதூரமான தவறுக்கான பிராயச்சித்தமாகவும் கொள்ளலாம்)
ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகள் இலங்கையில் தமக்கு சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வரும் புதிய முயற்சியாக 2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டு விடயங்களைக் கைக்கொண்டன.

ஓன்று, ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவை அக்கட்சியிலிருந்து வஞ்சகத்தனமாகப் பிரித்தெடுத்து ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவைப் பயன்படுத்தியது.

இரண்டாவது, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல் மைத்திரியை பொது வெட்பாளராக ஏற்றுக் கொள்ள வைத்தது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலமே இலங்கையில் ஏகாதிபத்திய சக்திகள் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டன.

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பதவியில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கலைத்து 47 உறுப்பினர்கள் மட்டும் கொண்ட ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதி மைத்திரியினால் பிரதமராக்கப்பட்டார். அப்பட்டமாக ஜனநாயத்தை மீறிய இச்செயல் செயல் குறித்து அப்போது ‘சர்வதேச சமூகம்’ எனப்படும் மேற்கு நாடுகள் எவ்வித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தவில்லை.
‘நல்லாட்சி’ என்ற பெயரில் மூன்றரை வருடங்களாக நடைபெற்ற ரணில் – மைத்திரி ஏகாதிபத்திய சார்பு அரசு நாட்டு மக்களுக்கு தேர்தல் காலங்களில் கொடுத்த எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக நாட்டு மக்கள் மேல் பலவிதமான வரிச்சுமைகள் ஏற்றப்பட்டன. விலைவாசி பல மடங்கு அதிகரித்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. ரூபாயின் மதிப்பு மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்தது. நாட்டின் பொதுச் சொத்துக்கள் அந்நிய கொம்பனிகளுக்கு அறாவிலைக்குத் தாரை வார்க்கப்பட்டன. கல்வி, போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகள் படிப்படியாக தனியார்மயப்படுத்தப்பட்டு வந்தன.

இன்னொரு பக்கத்தில் ஜனநாயக அரசியலுக்கு முரணாக ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணியைப் புறக்கணித்துவிட்டு 16 பேர் மடடும் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரியின் பல அதிகாரங்களை பலவந்தமாக எடுத்துக்கொண்டு எதேச்சாதிகாரமாக செயல்படத் தொடங்கினார். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக அவர்கள் மீது வகைதொகையில்லாத பொய் வழக்குகள் போடப்பட்டன.

35 வருடப் போரின்போது கூட ஒழுங்காகத் தேர்தல்கள் நடந்து வந்த இலங்கையில் ‘நல்லாட்சி’ பதவிக்கு வந்தபின்னர் 3 வருடங்களாக உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. பதவி முடிந்த மாகாண சபைகளுக்கும் இன்னமும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. கடைசியாக ஒருவாறு பலத்த அழுத்தங்களுக்கு மத்தியில் கடந்த பெப்ருவரி 10இல் உள்ளுராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்ட போது ஆட்சிப் பங்காளிகளான இரு கட்சிகளும் படுதோல்வியடைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிரணி அமோக வெற்றி பெற்றது.

இவ்வாறு ‘நல்லாட்சி’ என்று கூறப்பட்ட அரசு நடைமுறையில் நாசகார ஆட்சியாகவே கடந்த மூன்றரை வருடங்களாகச் செயற்பட்டது. உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அரச கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அவற்றுக்கிடையே இருந்த மோதல் உக்கிரமடைந்தது. இருந்தாலும் ரணிலும் மைத்திரியும் ஆட்சியை ஏதோ ஒருவிதமாக ஓட்டி வந்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியை நல்லாட்சி அரசிலிருந்து விலக்கும்படி எதிரணியினர் பலமுறை வலியுறுத்தியும் மைத்திரி ரணிலுடன் ஆட்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்.
ஆனால் ஒக்ரோபர் 26ஆம் திகதி யாரும் எதிர்பாராதவிதமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார் ஜனாதிபதி மைத்திரி. அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தை நொவம்பர் 16 வரையும் ஒத்தி வைத்தார். பின்னர் சடுதியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 2019 ஜனவரி 5இல் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

ஜனாதிபதி அடுத்தடுத்து எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை அரசியல் சக்திகளை மட்டுமின்றி சர்வதேச அரசியல் சக்திகளையும் திகைப்பில் ஆழ்த்தின. முன்னர் “ஜனநாயகத்தின் காவலன்” என அவை வர்ணித்த மைத்திரியை இப்பொழுது “சர்வாதிகாரி” என வர்ணிக்க ஆரம்பித்தன.

மைத்திரியின் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானவை என அந்த சக்திகள் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றன. ஆனால் மைத்திரி எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன என நாட்டின் பெரும்பான்மையான அனுபவமிக்க சட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. அதாவது மூன்றரை வருடங்களாக ரப்பர் போல ரணிலுடன் இழுபட்டுக் கொண்டிருந்த மைத்திரி ஒக்ரோபர் 26இல் ஏன் திடீரென இப்படியான அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் என்ற கேள்வி எழுகின்றது. அதுவும் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ரணிலுடன் இணைந்து ஆட்சியமைத்த இரண்டொரு மாதங்களிலேயே அவருடன் இணைந்து வேலை செய்வது முடியாத காரியம் என்பதைத் தான் புரிந்து கொண்டதாகக் கூறும் மைத்திரி, அப்படியானால் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் ஏன் பொறுத்திருந்தார்.

2015 ஜனவரி 8இல் நாட்டு மக்கள் தனக்கு வழங்கிய தீர்ப்பை ஊதாசீனப்படுத்தக் கூடாது எனப் பொறுத்திருந்த மைத்திரி ஏன் ஒக்ரோபர் 26இல் பொங்கியெழுந்தார்?
இங்குதான் உண்மை பொதிந்து கிடக்கிறது. உண்மை என்னவென்றால், தன்னையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களையும் உள்நாட்டு – வெளிநாட்டு சக்திகள் கொலை செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற விடயம் அம்பலத்துக்கு வந்ததும்தான் நிலைமை கைமீறிப் போய்விட்டதை மைத்திரி சடுதியாக உணர்ந்தார்.

இந்தக் கொலைச் சதி சம்பந்தமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் ஒருவரும், இந்தியாவின் “றோ” என்ற உளவு அமைப்பின் தொடர்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் ஆட்சித் தலைவரான ஜனாதிபதியை கொலை செய்யும்; சதி முயற்சியில் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு தொடர்பு இருக்கின்றது என்ற தகவல் வந்த பின்பும் பொலிஸ் துறைக்கு பொறுப்பாக இருந்த பிரதமர் ரணில் அந்தப் பொலிஸ் அதிகாரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் பலத்த வலியுறுத்தலுக்கு பின்னரே அந்த அதிகாரி லீவில் அனுப்பப்பட்டார். அவரைக் கைது செய்து விசாரிக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் ரணில் உதாசீனப்படுத்தினார். பின்னர் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்குப் பின்னரே அந்த பொலிஸ் அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்து ஐந்து நாட்கள் தினமும் பலமணி நேரம் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணையின் அடிப்படையில் அவர் சந்தேக நபராக இனம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், இந்த பொலிஸ் அதிகாரி பற்றிய விசாரணை அறிக்கையை ஜனாதிபதி மைத்திரி கோரியும் பிரதமர் ரணில் அதை அனுப்பாது தவிர்த்துள்ளார். இவையெல்லாம் சேர்ந்து இந்த கொலை சதி முயற்சியில் ஐ.தே.கவுக்கு தொடர்பிருக்கலாம் என்ற திடமான சந்தேகம் ஜனாதிபதி மைத்திரிக்கு எழுந்தது நியாயமானதே. இந்த நிலைமையில் ரணில் அதிகாரத்திலிருப்பது மிகவும் ஆபத்தானது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தால் அது யதார்த்தமானது.

‘நல்லாட்சி’ அரசில் 2015 ஜனவரி 8 முதல ஒன்றாக இணைந்திருந்தவர்கள் ஜனாதிபதியை ஏன் கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுவது நியாயமானது. எல்லாவற்றுக்கும் அரசியல் அடிப்படைதான் காரணம் என்றபடியால் இதற்கும் அரசியல் அடிப்படைதான் காரணம்.
ஐ.தே.கவுக்கும் அதன் வெளிநாட்டு எஜமானர்களுக்கும் உள்ள முதலாவது பிரச்சினை இவ்வருடம் பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் கூட்டு எதிரணி பெற்ற அமோக வெற்றியாகும். இந்த தேர்தலில் கூட்டு எதிரணி 46 வீதம் வரையிலான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் மைத்திரி தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி அணி சுமார் 15 வீதமான வாக்குகளைப் பெற்று மூன்றாவதாக வந்திருந்தது. இந்த நிலைமை எதைக் காட்டுகிறது என்றால், சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, மகிந்த அணி என பிளவுபடாமல் இருப்பின் அடுத்த பொதுத் தேர்தல் – ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அவர்கள் வெற்றியீட்டுவர் என்ற உண்மையை எடுத்துக் காட்டியது. அதைத் தடுப்பதே உள்நாட்டு – வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் தந்திரோபாயமாக இருந்து வந்துள்ளது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்தின்படி, மைத்திரி – மகிந்த தரப்புக்கு இடையில் பெப்ருவரி உள்ளுராட்சி தேர்தல் நடந்த கையோடு ஒற்றுமைப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டது. ஏற்கெனவே நல்லாட்சி அரசுக்குள் ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் முரண்பாடு முற்றிவிட்ட நிலையில், இந்த ஒற்றுமைப் பேச்சுவார்த்தை வெற்றியில் முடியலாம் என்ற வலுவான சந்தேகத்தை ஐ.தே.கவுக்கும் அதன் சகாக்களுக்கும் ஏற்படுத்திவிட்டது.

மக்கள் ஆதரவு தமக்கு எள்ளளவும் இல்லை என்ற நிலையில் பிற்போக்கு சக்திகள் மாற்று வழியைத் தேட ஆரம்பித்துள்ளனர். அந்த மாற்றுவழிதான் ஜனாதிபதி கொலை முயற்சி.
இலங்கையின் அரசியல் சாசனப்படி அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி ஒருவர் இறக்க நேரிட்டால், அல்லது அவர் பதவி விலகினால், பிரதமர் பதவியில் இருப்பவரே இயல்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரை ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதன்படிதான் 1990இல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாசவை புலிகள் தற்கொலைக் குண்டுதாரி மூலம் கொலை செய்துவிட, பிரதமராக இருந்த டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியானார்.
எனவே இன்றைய சூழலில் ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்துவிட்டால் இயல்பாகவே பிரதமர் பதவியில் இருக்கும் ரணில் ஜனாதிபதியாக வருவார். பின்னர் அவர் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி அடுத்து வரும் பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் எனபனவற்றில் ஐ.தே.க. வெற்றியீட்ட முயற்சிக்க முடியும்.

மைத்திரியை கொலை செய்தாலும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவுக்கு சவாலாக இருப்பார்கள். புலிகளுடனான போரில் அரசாங்கத்தை வெற்றிக்கு இட்டுச் சென்றவர்கள் என்ற வகையில் நாட்டு மக்கள் மத்தியில் அவர்களுக்கு அபரிமிதமான செல்வாக்கு உள்ளதென்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அரசியல் சட்டத்தின் 19ஆவது திருத்தத்தின்படி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட முடியாவிட்டாலும், புலிகளுடனான போரில் தீர்க்கமான பாத்திரம் வகித்த அவரது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. அதுமாத்திரமின்றி மகிந்தவின் இன்னொரு சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் ஜனாதிபதி மைத்திரியை மட்டுமின்றி, கோத்தபாய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்ட முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏகாதிபத்திய – பிற்போக்கு சக்திகளைப் பொறுத்தவரையில், போலியான நாடாளுமன்ற ஜனநாயகம் தங்களுக்கு சாதகம் இல்லாமல் அமையும் போது, நேரடி பலாத்காரத்தில் இறங்கியதற்கு உலக வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. கொங்கோவின் பட்ரிஸ் லுமும்பாவில் தொடங்கி, இலங்கையின் பண்டாரநாயக்க, சிலியின் அலண்டே, இந்தியாவின் இந்திரா காந்தி, பங்களாதேசின் முஜிபுர் ரஹ்மான் என உதாரணங்கள் உண்டு.
இந்த நிலைமைகளில், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது, பொதுத் தேர்தலுக்கு திகதி குறித்தது எல்லாமே இலங்கையின் அரசியல் சாசனத்துக்கு அமைவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமல்லாது, அரசியல் ரீதியாக இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிரதேச ஒருமைப்பாடு, மக்களின் இறையாண்மை, ஜனநாயக அரசமைப்பு என்பனவற்றைப் பாதுகாக்க எடுத்த அத்தியாவசிய நடவடிக்கைகளாகும்.
இலங்கை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளை இலங்கையிலும், உலகம் முழுவதிலும் பரந்து வாழும் ஏகாதிபத்திய – எதிர்ப்பு முற்போக்கு சிந்தனையுள்ளவர்களும், ஜனநாயகத்தை நேசிப்பவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி ஆதரிப்பது கடமையாகும்.

இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அரசியல் சாசனத்துக்கு முரணானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என ஓலமிடுபவர்கள் அனைவரும் ஆடு நனைகிறது என்று ஓலமிடும் ஓநாய்க்கு சமமானவர்கள்.

உண்மையில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயக நெறிமுறைகளையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பிரதம மந்திரி பதவி போன பின்பும் பிரதமர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும், நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் நடைமுறைகளையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கும் அவரது கட்சியைச் சார்ந்த சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தான்.
தற்போது இலங்கையில் நடைபெறும் போராட்டம் என்பது ஏகாதிபத்திய, பிற்போக்கு சக்திகளுக்கும், இலங்கை மக்களுக்கும் இடையில் நடைபெறும் வாழ்வா சாவா என்ற ஒரு ஜீவ மரணப் போராட்டமாகும்.

நன்றி : வானவில் இதழ் 95 நவம்பர் 2018

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...