ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தகுதியானவர் தானா? உணர்வு வார இதழ் (குரல் 22 : 20)வரும் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தகுதியானவர் தானா?
அவர் தமிழக மக்களுக்கு சேவை ஆற்றத்தான் வருகிறாரா?
தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றும், ஆன்மீக அரசியல் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளாரே? இதன் அர்த்தம் என்ன?
ரஜினிகாந்த் பின்னணியில் இருந்து யாரேனும் இயக்குகிறார்களா? விளக்கம் தரவும்.
- சாலிஹ், நெல்லை


ரஜினி அரசியலில் குதித்துள்ளார். இவருடைய சாயல் எப்போதும் பிஷேபியைச் சார்ந்த மாதிரியே தான் இருந்துள்ளது. இவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? அதோடு ஆன்மிக அரசியல் நடத்தப் போகிறேன் என்றுள்ளார் இதன் பின்னணி என்னவாயிருக்கும்?
- பஷீர் அலி, திருப்பூர்

No automatic alt text available.இந்தியாவில் அரசியல் கட்சி நடத்த எந்த உயர் தகுதியும் தேவை இல்லை. கிரிமினல் குற்றவாளிகள், மதவெறியர்கள், சாதிவெறியர்கள், கொலைகாரர்கள், போதையில் தள்ளாடுவோர், பிறர் சொத்துகளை அபகரித்தவர்கள், சிந்திக்கும் திறனில்லாத மூடர்கள், மானம் கெட்டவர்கள் போன்ற பலர் அரசியலில் இருக்கும் போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு மட்டும் தகுதியை எதிர்பார்க்க இந்திய மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆனால் ரஜினிகாந்த் சிறப்பாக அரசியல் செய்வார் என்று ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்படுவதையும், இவரது அரசியல் எடுபடுமா என்பதையும் பற்றி மட்டும் நாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
நடிகர் ரஜினிக்கு கொடுக்கப்படும் முக்கியமான பில்டப்கள் என்ன?
பில்டப் 1- இவர் நேர்மையானவர்; தூய்மையானவர் என்பதால் இவர் சிறந்த அரசியலைத் தருவார்.
பில்டப் 2 இவருக்கு மக்கள் மத்தியில் பயங்கர செல்வாக்கு உள்ளதாலும் நீண்ட காலமாக சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் இருப்பதாலும் இவர் வெற்றி பெறுவார்.
பில்டப் 3- இவர் எளிமையானவர்; மேக்கப் கூட இல்லாமல் பொது இடங்களுக்கு வருபவர்.
இந்தக் காரணங்களால் தான் இவர் அதிக முக்கியத்துவத்துடன் முன்னிறுத்தப்படுகிறார்.
இவற்றில் எதுவும் உண்மை இல்லை.
ரஜினிகாந்தின் நேர்மை
இவர் நேர்மையானவரா? தூய்மையானவரா? நிச்சயமாக இல்லவே இல்லை.
இந்தியாவில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்பவர்களில் ரஜினியும் ஒருவர். இவர் ஒவ்வொரு சினிமாவுக்கும் எவ்வளவு வாங்குகிறார்? அதற்கான வரியைச் செலுத்தியுள்ளாரா? என்றால் நிச்சயமாக இல்லை. அப்படி இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு அவர் நிரூபிக்க வேண்டும்.
மேலும் சட்டப்படி எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதோ அதை விட பல மடங்கு அதிகக் கட்டணம் இவரது எல்லா திரைப்படங்களுக்கும் வசூலிக்கப்பட்டது. இதில் ரஜினிக்குப் பங்கு இல்லையா? அதைத் தடுத்து நிறுத்தினாரா? இவர் எப்படி நேர்மையான அரசியல் நடத்துவார்?
ராகவேந்திரா திருமண மண்டபத்தைக் கட்டித் திறந்த போது இது என்னுடையது அல்ல; மக்களுக்குக் கொடுத்து விட்டேன். மக்களுக்காக இதோ உயில் எழுதி விட்டேன் என்று அறிவித்தார்.
பல ஆண்டுகள் கடந்த பின்னும் அது மக்களுக்கு உரியதாக ஆக்கப்படவில்லை. அவரது குடும்ப டிரஸ்ட்டின் சொத்தாகவே உள்ளது. அவரது ரசிகர்கள் கூட அதில் இலவசமாக திருமணம் நடத்த முடியாது.
இவரது நேர்மையை எடை போட இது ஒன்றே போதுமானது. மக்களை அப்பட்டமாக ஏமாற்றிய பித்தலாட்டக்காரரான ரஜினி எப்படி நேர்மையான அரசியல் நடத்துவார்?
காவிரிப் பிரச்சனைக்காக திரை உலகினர் நெய்வேலியில் ஒன்று திரண்டு போராடினார்கள். கர்நாடகாவில் உள்ள தனது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்படக் கூடாது என்பதற்காக கர்நாடகாவைக் கண்டித்து நடந்த அந்தப் போராட்டத்தில் ரஜினி மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அது மட்டுமில்லாமல் அந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உண்ணாவிரத நாடகத்தை நடிகர் விஜயகுமாரின் துணையுடன் சென்னையில் நடத்தினார்.
கர்நாடக அரசு காவிரி நீர் தர மறுப்பதைப் பற்றிப் பேசாமல் நதிகளை இணைப்பதுதான் இதற்கான தீர்வு எனக் கூறி போராட்ட உணர்வை மழுங்கச் செய்யும் வகையில் திசை திருப்பினார். நதிகளை இணைக்க நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார்.
இதனால் காவிரிப் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. நதிகளை இணைத்தால் மட்டுமே தண்ணீர்ப் பிரச்சனை தீரும் என்று திசை மாற்றி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்தார். அவரை நம்பிய மக்களுக்கு துரோகம் செய்தார்.
அவர் அறிவித்தபடி ஒரு கோடி ரூபாயை அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடமும் கொடுக்கவில்லை. அப்போதைய தமிழக முதல்வரிடமும் கொடுக்கவில்லை. இந்த வகைக்காக எந்த வங்கியிலும் பிக்சட் டெபாசிட் செய்யவும் இல்லை.
ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக உலகறியச் சொன்னதை இன்று வரை நிறைவேற்றாதவர் எப்படி நேர்மையானவராக இருப்பார்? இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
கோடீஸ்வரர்கள் மட்டுமே படிக்கும் ஆஷ்ரம் பள்ளி இவரது மனைவியால் நடத்தப்படுகிறது.
அந்தப் பள்ளி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் அப்பள்ளி நிர்வாகம் ஊழியர்களை தெருவில் நிறுத்திய போது, வீதியில் இறங்கி தொழிலாளர்கள் போராடிய போது அவர்களுக்கு நியாயம் வழங்கினாரா? இது குறித்து வாய் திறக்கவில்லையே? இவர் தான் நேர்மையான அரசியல் நடத்தக் கூடியவரா?
வயதான தம்பதியர் ஆஷ்ரம் பள்ளிக்கூட கட்டடத்தின் உரிமையாளர்கள் ஆவர். அவர்களிடம் வாடகைக்கு எடுத்து இந்தப் பள்ளிக் கூடத்தை ரஜினிகாந்த் மனைவி லதா நடத்தி வருகிறார். ஆனால் அந்த வயதான தம்பதிகளுக்கு பல மாதங்களாக வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். கட்டட உரிமையாளரை அடியாட்களை வைத்தும் அரசியல் செல்வாக்கை வைத்தும் மிரட்டி பணிய வைத்தவர் எப்படி நேர்மையான அரசியல் நடத்துவார்.?
இவரது மகளை ஐநா கலாசாரத் தூதராக பாஜக அரசு நியமித்ததே இது நேர்மையான செயலா? பதவியில் இல்லாத போதே தனது மகளுக்கு பதவி வாங்கித்தர செல்வாக்கைப் பயன்படுத்திய இவர் நேர்மையான அரசியல் நடத்துவார் என்று அறிவுடைய மக்கள் நம்புவார்களா?
மக்கள் பிரச்சனைக்காக வாய்திறக்காதவர்
ஜல்லிக் கட்டு போராட்டம் நடந்த போது பீட்டா எனும் மிருக கட்சியில் தனது குடும்பத்தினரை அங்கம் வகிக்க வைத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார்
ஜல்லிக்கட்டு போராளிகளை காவல்துறை அடித்து உதைத்து. சொத்துகளைச் சூறையாடிய போது அவர்களுக்காக குரல் கொடுக்காமல் கல்லுளி மங்கனாக இருந்தார்.’
விவசாயிகள் தற்கொலை செய்து செத்த போதும் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் குறித்தும் வாய் திறக்கவில்லை. அவர்களை பிரதமர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூட சொல்லவில்லை
தமிழக மீனவர்களை இலங்கை அரசு நாள் தோறும் தாக்குவதையும், சிறைபிடிப்பதையும், படகுகளைப் ப|றிமுதல் செய்வதையும், சில நேரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும் பற்றி வாய்திறந்தாரா? கையாலாகாத மத்திய அரசைக் கண்டித்தாரா?
மீத்தேன் எரிவாயுவுக்கு எதிராகவும், மக்கள் போராடிக் கொண்டு இருக்கும்போது அவர்களுக்காக குரல் கொடுத்தாரா?
ஓகி புயலால் 2000 மீனவர்கள் காணாமல் போனது பற்றியும், மத்திய அரசு அவர்களை மீட்க ஒரு நடவடிக்கையும் எடுக்காதது பற்றியும், உடனே பிரதமர் பார்வையிட வராததையும், ஒரு மாதம் கழித்து புகைப்படங்களைப் பார்க்க மோடி வந்ததையும் ரஜினி கண்டிக்கவில்லை.
சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது சிறிதும் மனமிரங்காதவர் நல்லாட்சி தருவார் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.
கட்டாய இந்தி திணிப்பு, நீட் தேர்வு, மீத்தேன் எரிவாயு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறியது உள்ளிட்ட எந்தப் பிரச்சினையைப் பற்றியும் வாய்திறக்காத ரஜினியை ஒருக்காலும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
காவிரி பிரச்சனைக்காக மக்கள் போராடிய போது அனைத்து நடிகர்களும் கர்நாடகாவை எதிர்த்து குரல் கொடுத்த போது இவர் மட்டும் என்ன சொன்னார்? இங்கே போராட்டம் நடத்தினால் பெங்களூரில் உள்ள தமிழர்களின் உயிருக்குப் பாதுகாப்பு இருக்காது என்று கூறினார். இவர் இவ்வாறு கூறிய பின் பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதும், சொத்துகள் சூறையாடலும் நடந்தது.
நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பணமதிப்பிழப்பு கொடுமையை ஆதரித்துப் பேச மட்டும் முந்திரிக் கொட்டையாக முந்தினார்.
இந்த அயோக்கியர் எப்படி நேர்மையான அரசியலைத் தருவார்?
சந்தி சிரித்த செல்வாக்கு
அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அடிக்கடி இவர் டயலாக் விட்டுவருவது ஏன்? முப்பது வருடமாக இப்படி ஏன் அறிக்கை விடுகிறார்?
ரசிகர்கள் மூலம் தான் சினிமாவில் கொள்ளையடிக்க முடியும். அவர்களைத் தக்க வைக்கவே இதுபோல் ஆசை வார்த்தை கூறுவதை முப்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
ரஜினி அரசியலுக்கு வரும் போது அவரது கட்சியில் நாம் பொறுப்புக்கு வரலாம். பின்னர் ஆட்சி அமைத்தால் மந்திரியாக ஆகலாம் என்று விரக்தி அடைந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஆசையைத் தூண்டி வருகிறார்.
புதிதாக ஒரு படம் வெளியாகும் போதெல்லாம் இதைச் செய்வார். அடுத்து வெளியாகும் படத்தை ரசிகர்கள் ஓடச் செய்த பின்னர் இமயமலைக்குப் போய் ஆன்மிக சேவை செய்து விட்டு உல்லாசம் அனுபவிக்க அமெரிக்கா போவார்.
அடுத்த படம் வெளியாக உள்ள போது இதே டயலாக்கை மீண்டும் எடுத்து விடுவார்.
ஆனால் தந்திரம் செய்து இவர் படங்களை ஓட வைத்தாலும் அதனால் பணத்தை கோடிகோடியாக குவித்தாலும் அது மக்கள் ஆதரவைக் காட்டாது என்ற அடிப்படை அறிவு கூட ரஜினி ரசிகர்களுக்கு இல்லை.
எத்தனை மக்கள் பார்த்தார்கள் என்பதை வைத்துத்தான் மக்கள் ஆதரவை மதிப்பிட வேண்டும்.
நூறு ரூபாய் டிக்கெட்டை பத்தாயிரம் இருபதாயிரம் என்று வெறியர்களிடமிருந்து பெறுவதால் தான் பணம் குவிகிறது. எத்தனை நாட்கள் ஓடியது? எத்தனை மக்கள் பார்த்தார்கள் என்று கணக்கிட்டால் இவர் தான் கடைசி இடத்தில் உள்ளார்.
பத்துக் கோடி தமிழ் மக்களில் சுமார் ஐந்து கோடி மக்களாவது இவரது படத்தைப் பார்த்தால் தான் மக்களின் ஆதரவு என்று அர்த்தம் ஆகும். ஆனால் ஒரு லட்சம் இரு லட்சம் மக்கள் மட்டுமே அதிகக் கட்டணம் கொடுத்து பார்ப்பதால் தான் இவர் சூப்பர் ஸ்டார் என்று நம்ப வைக்கப்படுகிறார். புதுமுக நடிகர்களின் புதுப் படத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று கணக்கிட்டால் ரஜினி படத்தை விட அதிக மக்கள் பார்த்திருப்பார்கள். இதுதான் ரஜினியின் செல்வாக்கு.
முன்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக இவர் குரல் கொடுத்து அதை மக்கள் அப்படியே ஏற்று ஜெயலலிதாவைத் தோற்கடித்து கருணாநிதிக்கு வெற்றியைக் கொடுத்தனர்.
இதுதான் ரஜினியின் செல்வாக்கு என்று பில்டப் கொடுக்கின்றனர்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான கடும் கோபம் மக்களிடம் இருந்த அந்த நேரத்தில் ரஜினி திமுகவை எதிர்க்காவிட்டாலும் ஜெயலலிதா தோற்கடிக்கப்படும் நிலை இருந்தது. ஜெயிக்கிற அணியில் சேர்ந்து கொண்டு கிடைத்த வெற்றியை ரஜினியால் கிடைத்த வெற்றி என்ற கருத்தை அவரது ரசிகர்கள் விதைத்து வருகின்றனர். இவர் மகா செல்வாக்கு மிக்கவர் என்று மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
ஆனால் அடுத்த தேர்தலில் என்ன ஆனது? இவர் திமுகவுக்கு வாய்ஸ் கொடுத்தும் ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார். பலமான ஒரு அணியை இவர் ஆதரித்த போதே இவரது வாய்ஸ் எடுபடவில்லை. பலமான பல கட்சி கூட்டணியை இவர் ஆதரித்தும் அந்த அணி படுதோல்வி அடைந்தது என்றால் இவரது மக்கள் செல்வாக்கு எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அப்படியானால் இவர் ஆரம்பிக்கும் தனிக்கட்சி என்ன கதியாகும்?
பாமகவை இவர் எதிர்த்தார். இதற்குப் பதிலடியாக பாபா என்ற படத்தை எந்த தியேட்டரிலும் திரையிட முடியாத நிலையை பாமகவினர் ஏற்படுத்தினார்கள்.
இவரது ஆதரவாளர்கள் பாமகவை விட அதிகமாக இருந்தால் அப்படத்தை ஓட விடாமல் பாமகவினர் தடுக்க முடிந்திருக்குமா? சிறிய கட்சியான பாமகவை விட குறைவான ஆதரவே ரஜினிக்கு அப்போது இருந்தது. இப்போது அதுவும் குறைந்து விட்டது. மேலும் அடிவாங்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் கோழைகள் தான் இவரது ரசிகர்கள் என்பதும் அப்போது அம்பலமானது.
பாமகவை விட ஆதரவு குறைந்த ரசிகர்களை வைத்துள்ள இவர் எப்படி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர் என்று சித்தரிக்கிறார்கள்?
இதன் பின் பாமகவை ஐஸ் வைத்து பாராட்டி குலாவினார். ராமதாஸ் குடும்ப திருமணத்தில் கலந்து கொண்டு அடுத்த படங்களுக்கு அவர்களால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். அடிவாங்கிய ரசிகர்களின் காயம் ஆறுவதற்கு முன்பே பாமகவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
இவர் எதை நம்பி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். தமிழகத்தில் சங்பரிவாரத்துக்கு அடித்தளம் உள்ள குமரியில் மட்டும் பொன் ராதா கிருஷ்ணன் ஜெயித்தார். ரஜினி ஆதரிக்காவிட்டாலும் பொன் ராதா கிருஷ்ணன் ஜெயிக்கும் நிலை இருந்தது.
மீதி 38 தொகுதிகளில் இவர் ஆதரித்த மெகா கூட்டணி மண்ணைக் கவ்வியது. பாஜக, பாமக, விஜயகாந்த் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக இருந்து அதற்கு ரஜினி ஆதரவு அளித்தும் அந்தக் கூட்டணி மண்ணைக் கவ்வியது என்றால் இதிலிருந்து இவரது செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.
மெகா கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் அனைவருக்கும் பங்கு போட்டால் இவரது ஆதரவால் தொகுதிக்கு ஆயிரம் ஓட்டு கூட இல்லை என்பதுதான் உண்மை நிலை.
ரஜினிக்கு திறமையாவது இருக்கிறதா?
அரசியல் செய்வதற்கு சில திறமைகளும், உழைப்பும் வேண்டும்.
நல்லவனோ, கெட்டவனோ அவன் அரசியல் நடத்துவது என்றால் அவன் தன் இருப்பை எப்போதும் காட்டிக் கொள்ள வேண்டும். அடிக்கடி மக்களைச் சந்திக்க வேண்டும். மாவட்ட கிளை அமைப்புகளை உருவாக்கி பலப்படுத்த பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தனது கட்சிக்காரர்கள் தாக்கப்பட்டால் உடனே அங்கு விரைய வேண்டும். செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். குறைந்தது வாரம் ஒரு தடவையாவது மக்கள் பிரச்சனை குறித்து கருத்து சொல்ல வேண்டும். இப்படி இல்லாத எவனாலும் இங்கே அரசியல் செய்ய முடியாது. இந்தத் தன்மை மற்றவர்களை விட அதிகம் உள்ள தினகரன் முன்னேறி வருகிறார். மற்றவர்கள் மேற்கண்ட ஈடுபாட்டுக்கு ஏற்ப களத்தில் நிற்கிறார்கள்.
விஜயகாந்த் ஆரம்பத்தில் இதுபோல் செயல்பட்டதால் வேகமாக வளர்ந்து வந்தார். உடல் நலம் குன்றி மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசமுடியாத போது காணாமல் போய் விட்டார்.
இதில் ரஜினிகாந்தின் பங்கு என்னவாக இருக்கும்?
அன்றாடம் மக்களை சந்திப்பாரா? மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வாரா? பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வாரா?
மேற்கண்ட தகுதிகளில் ஒரு தகுதி கூட ரஜினிக்கு இல்லை எனும் போது இவரை எப்படி தலைவராக மக்கள் மதிப்பார்கள்?
பாபா படத்தின் போது மண்டை உடைக்கப்பட்ட தனது ரசிகர்களைப் போய் இவர் பார்த்தாரா? அவர்களுக்குத் தேவையான பொருளுதவியும், சட்ட உதவியும் செய்தாரா? இல்லை அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் இவர் கலந்து கொண்டதைப் பார்த்த மண்டை உடைந்த அவரது ரசிகன் இவரை ஆதரிப்பானா?
ஆட்டுக்கறி விருந்து போட ஆசை என்பதை இதுவரை பல தடவை ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். இது அற்ப செலவு பிடிக்கும் ஒரு காரியம் தான். அவரது சொத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு செலவிட்டாலே இதைச் செய்துவிட முடியும். இதைக் கூட செய்யாமல் ஆட்டை அடித்து விருந்து வைக்க ஆசைப்படுகிறேன் என்று ஆண்டு தோறும் கூறி தொடர்ந்து ஏமாற்றும் முதல் தர அயோக்கியர் தான் ரஜினி.
தனது மகள் திருமணத்தின் போது எல்லா பிரமுகர்களையும், தலைவர்களையும் அழைத்து ஆடம்பர விருந்து வைத்தார். அவரது ரசிகர்களும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் அழைக்கப்படவில்லை. ரசிகர் மன்றத்தினர் வர வேண்டாம் அவர்களுக்கு தனியாக விருந்து போடுவேன் என்றார். இன்று வரை அதைச் செய்தாரா? தனது ரசிகர்களையே ஏமாற்றும் கேடுகெட்ட ஏமாற்றுப் பேர்வழியை மக்கள் ஒருக்காலும் நம்ப மாட்டார்கள்.
தன்னுடன் புகைப்படம் எடுப்பவர் தன்னைத் தொடக் கூடாது; கை குலுக்கக் கூடாது என்று சொல்லும் கர்வம் பிடித்த நவீன தீண்டாமைவாதியான இவர் தமிழக அரசியலில் எப்படி எடுபடுவார்?
வடிகட்டிய கஞ்சனாகவும், எச்சில் கையால் காக்கையை விரட்டாத வள்ளலாகவும் தான் இவரை தமிழக மக்கள் பார்க்கிறார்கள். அரை சதவிகிதம் கூட இல்லாத இவரது ரசிகர்களை வைத்து அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது கதை அதோடு முடிந்து விடும்.
தமிழருவி மணியன் போன்ற அரசியல் புரோக்கர்கள் தான் இவருக்கு முட்டுக் கொடுப்பார்கள். பாஜகவிடம் காசு வாங்கிக் கொண்டு பாஜகவுடன் ரஜினியைக் கோர்த்து விட்ட புரோக்கர் தமிழருவி மணியன் மீண்டும் புரோக்கர் தொழிலைக் கையில் எடுத்துள்ளார். இது போன்ற புரோக்கர்கள் வேண்டுமானாலும் இவருக்கு ஆதரவு இருப்பது போல் பில்டப் கொடுக்கலாம். தமிழக மக்களிடம் இவருக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
ஆன்மிக அரசியல்
மேலும் ஆன்மிகம் கலந்து அரசியல் நடத்தப் போவதாக இவர் கூறுகிறார். இவர் கூறும் ஆன்மிகம் என்ன?
முஸ்லிம் தலைவர் ஒருவர் ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக சொன்னால் அதை இந்துக்களோ கிறித்தவர்களோ பகுத்தறிவாளர்களோ ஏற்கமாட்டார்கள். அதில் இணைய மாட்டார்கள். முஸ்லிம் தலைவர் நடத்தும் ஆன்மிக அரசியல் இஸ்லாமிய அடிப்படையில் இருக்கும் என்று கருதுவார்கள்.
இந்து மதத்தைச் சேர்ந்த ரஜினி ஆன்மிக அரசியல் நடத்துவதாக கூறினால் அவர் ஆன்மிகமாக கருத்தும் இந்து மத அடிப்படையில் தான் அது இருக்கும். இவர் இந்துக்களில் அதிக மூட நம்பிக்கை கொண்ட ஆன்மிகவாதி. 2000 வருடமாக இமய மலையில் உயிருடன் உள்ள பாபாவை சந்தித்தேன் என்று நம்பும் அளவுக்கு மூளை வரண்டவர்.
இந்து மதத்தில் தீவிர வெறியுடன் இருக்கும் இவர் இந்து மத அரசியல் நடத்துவதாக அறிவித்தால் ஒருக்காலும் முஸ்லிம்களோ கிறித்தவர்களோ, நாத்திகர்களோ, நடுநிலை இந்துக்களோ இவரது அரசியலை ஆதரிக்க மாட்டார்கள். ஏற்கனவே இவருக்கு ரசிகர்களாக இருந்த பலர் இதனால் இவரை விட்டு விலகி மேலும் பலவீனப்படுத்துவார்கள்
பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் கொண்ட நாட்டில் அரசியல் நடத்துவதாக இருந்தால் ஆன்மிகம் கலக்காமல், எந்த மதமும் சாராமல் நான் அரசியல் நடத்துவேன் என்று கூற வேண்டும். ஆனால் இவரோ பாஜக அரசியலை முன்வைக்கிறார். இதற்கு ஏன் தனிக்கட்சி? பேசாமல் பாஜகவில் சேர்ந்து கொள்ளலாமே?
நான் எந்த ஆன்மிகத்தையும் அரசியலில் கலந்து பிரிவினைக்கு இடம் தர மாட்டேன் என்று தான் புத்தியுள்ள அரசியல்வாதி சொல்வான். அந்த புத்தியும் இவருக்கு இல்லை. வெறிகொண்ட மூடர்களைத் தவிர இவரது கட்சியில் இந்துத்துவா அல்லாத எவரும் சேர மாட்டார்கள்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக சிவாஜி கணேசனை விட படுகேவலத்தை அரசியலில் சந்திப்பார்.
முடிவாக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறோம்.
இவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகச் சொல்லி இருப்பது நாடகம் தான். அடுத்த படத்தை ஒடச் செய்வதற்காகத் தான் புகைப்படம் எடுப்பது, ஆட்டுக்கறி விருந்து ஆசை, அரசியல் கட்சி ஆரம்பிப்பது எல்லாமே. படம் ஓடி முடிந்த உடன் இப்போது நிலைமை சரியில்லை பிறகு பார்க்கலாம் என்று கூறி அந்தர் பல்டி அடிப்பார். அவரைப் புரிந்து கொண்ட அனைவருக்கும் இது நன்றாகத் தெரியும்.

மூலம் -உணர்வு வார இதழ் (குரல் 22 : 20)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...