இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு





எஸ்.எம்.எம்.பஷீர்

"எனக்குப் பின்னால் நடக்காதே,
நான் வழிகாட்ட முடியாமல் போகலாம்
எனக்கு முன்னே நடக்காதே
நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம் 
என்னுடனே நட , எனது நண்பனாக  இரு"

                                                            ( ஆல்பர்ட் கேமஸ் )  

  

25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் நானும் எனது பக்கப்  பார்வையை  
பகிர்ந்து கொள்கிறேன்.


மறைந்த ஏ ஆர் எம்.மன்சூரை ஒரே ஒருதடவை கொழும்பில் உள்ள  சிராவஸ்தி எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அந்தச் சந்திப்பில் அவர், என்னைப்பற்றி விசாரித்த பின்னர் , அவரது கொழும்பு ஹல்ஸ்டொர்ப் சட்டத்துறை அனுபவம் குறித்த அறிமுகத்துடன் அன்றைய  முஸ்லீம் காங்கிரஸ்  தலைவர் அஸ்ரப் பற்றி தனது அபிப்பிராயத்தை கூறினார். குறிப்பாக தாங்கள்  மாத்திரமே முஸ்லிம்கள் என்பதுபோல முஸ்லீம் காங்கிரஸ் செயற்படுவதாக  குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் அஸ்ரப் அரபு பிரார்த்தனைகளுடன் தனது உரையினை தொடங்குவதைக் கூட அவர் ஒரு அரசியல் விளம்பரமாகவே கருதினார். தங்களுக்கும் (முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும்) அஸ்ரப்பைபோல அரபுப் பிரார்த்தனைகளுடன்  பேச முடியாதா என்ன என்று வினாவெழுப்பினார். என்னை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு வேண்டினார் , நான் எனது அரசியல் நிலைப்பாட்டினை உறுதியாகக் கூறி அவரின் வேண்டுகோளையும் மறுத்தேன்.


ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்  ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின்னர் தேர்தல்களை எதிர்கொள்ள நேரிட்ட பொழுது, அதிலும் குறிப்பாக , 1989 நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள நேரிட்ட  பொழுது  ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ்ஸுக்கு  திகாமடுல்ல மாவட்டத்தில் மிகுந்த அரசியல் சவாலாக இருந்தவர் ஏ.ஆர்.எம்.மன்சூர். அஸ்ரபுடன் தனி மனித ஆளுமை அரசியல் பின்னணி போன்ற ஒப்பீடுகளில் , அஸ்ரபை போலவே அவரும் ஒரு சட்டத்தரணி , திகாமடுல்ல மாவட்டத்தில் பெயர்பெற்ற காரியப்பர் குடும்பத்தை சேர்ந்தவர் , அரசியலில் தனி மனித விழுமியங்களில் நற்பெயர் பெற்றவர். ஆகவே முஸ்லிம்  காங்கிரஸ் தேசிய அரசியல் கட்சிகளில் பிரபல்யமான அரசியல்வாதிகளை நோக்கி தனது தனித்துவ அரசியல் அஸ்திரங்களை ஏவினர். அந்த வகையில் மன்சூர் ஒரு தடவை அமைச்சர் என்ற வகையில் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு , ஏனைய சிங்கள அமைச்சர்களை போல பூத் தட்டு தூக்கி சென்றார் என்றும் அவரைப்போல சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்  அரசியல்வாதிகள்  சுயத்தை இழந்தவர்கள் என்ற சங்கதிகள் பல முஸ்லிம்  காங்கிரஸ் மேடைகளில் பேசு  பொருளாக்கப்பட்டன. இவ்வாறான பிரச்சாரங்களுக்கு அப்பால் ,தாங்கள்  குரான் ஹதீஸ் அடிப்படையில் செயற்படும் உண்மை முஸ்லிம்களின் கடசி என்று வலியுறுத்தப்பட்டது.  எது எப்படியோ , மிக நீண்ட அரசியல் பின்னணியைக் கொண்டிருந்த நேர்மையான மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதியான   ஏ .ஆர் எம். மன்சூரை எதிர் கொள்வது என்பது  தனிப்பட்ட வகையில் அஸ்ரபுக்கு அசாத்தியமாக தோன்றியது.

அந்த சூழ்நிலையில் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்  காங்கிரஸ்  பெற்ற வெற்றி , தேசியக் கடசிகளின் பார்வையை  முஸ்லீம் காங்கிரசின் மீது குவித்தது. பிரேமதாசாவின் ஜனாதிபதித் தேர்தலுக்கு அஸ்ரப் ஆதரவு அளித்தார். அதற்கு நன்றி உபகாரமாக  அஸ்ரப் , பிரேமதாஸாவிடம் கேட்ட "வரங்களில்"  ஒன்று திகாமடுல்ல மாவட்டத்தில் தனக்கு , தனது கட்சிக்கு  சவாலான இரண்டு   சிரேஷ்ட ஐக்கிய தேசியக் கடசியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ .மஜீத் ஏ.ஆர் எம். மன்சூர் ஆகியோரை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது. பிரேமதாசா அந்த  "வரத்தை" அஷ்ரபுக்கு வழங்கினார்.
 
பிரபலமற்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். கட்டை விரல் தட்சணை கொடுத்த ஏகலைவன் போல  ஏ .ஆர் எம். மன்சூர் கையறு நிலையில் கள  அரசியல் போட்டியில் கைவிடப்பட்டார். அஷ்ரபும் அவரின் கட்சியும் மகத்தான வெற்றியை பெற்றனர்.

ஆனாலும் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட மன்சூர் தொடர்ந்தும் தனது மக்கள் பணியை நேர்மையுடன் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் வரை செய்தார். அஷ்ரபும் மன்சூரும் நாடாளுமன்றத்திலும் , அதற்கு வெளியேயும் கட்சி ரீதியில் மட்டுமல்ல தனிப்பட்ட வகையிலும் எதிர் எதிராக செயற்பட்டனர்.

அந்த  சூழலில் ஒரு தடவை  நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் சுவாரசியமானது. 1994 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற இறுதி அமர்வொன்றின் பொழுது தனது உயிருக்கு அச்சுறுத்தல் உண்டு என்று அஸ்ரப்  அறிக்கையிட்டார். அஸ்ரப்  அந்த அறிக்கையில் , தான் ஏ. ஆர். எம்  மன்சூரின் அறையத்  தாண்டிச்  செல்லும் பொழுது , ஏ.ஆர். மன்சூர் " உமது கடைசி நடை" (Your Last walk) என்று தன்னைப் பார்த்து சொன்னதாகவும் , ஏற்கனவே அதையொத்த  எச்சரிக்கையொன்றினை அன்றைய தினத்தில் வேறு புறமிருந்து வந்திருந்ததனால் தான்  அதுபற்றி அச்சப்படுவதாகவும் குறிப்பிட்டார். மன்சூர் நாடாளுமன்றத்தில் சங்கடத்துக்குள்ளானார்.

அனால்  , அமைச்சர் ஏ. ஆர். எம் மன்சூர் தனது பதிலுக்கு எழுந்து நின்றார். மிக நிதானமாக தான் ஏன் அப்படி சொன்னேன் என்று சபையோருக்கு விளக்கமளித்தார்.  திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆறு  பிரதேச சபைகளில் ஏதேனுமொன்றில் வெற்றி பெறாவிட்டால் , தனது நாடாளுமன்றத் பதவியை  இராஜினாமா செய்துவிடுவேன் என்று அஸ்ரப் பிரகடனப்படுத்தி இருந்தார் என்றும் அவர் நிச்சயம் அவரது சவாலில் வெல்லப்போவதில்லை , எனவே அவர் இராஜினாமா செய்ய வேண்டி வரும் , மார்ச் மாதத்தில்  பிரதேச சபைத்  தேர்தல்கள் முடிந்தபின்னர் , நாடாளுமன்றம் மீண்டும் ஏப்ரலில் கூடும்பொழுது அஸ்ரப் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கமாட்டார். ஆகவேதான் நாடாளுமனறத்தில் உள்ள தனது அறையத் தாண்டி நீங்கள் நடப்பது இதுவே கடைசியாக இருக்குமென்று தான் சிலேடையாக குறிப்பிட்டதன் தாற்பரியத்தை  சபையோருக்கு உணர்த்தினார். யதார்த்தத்தில் அஸ்ரப் சவால்விட்டவாறு முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆறு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற முடியவில்லை.  அஸ்ரப் தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்ய வேண்டி நேரிட்டது. அவருக்கு பதிலாக 19 மே 1994 இல், தொப்பி மொஹிதீன் என அழைக்கப்பட்ட  யுஎல்.எம்.மொஹிதீன்  நாடாளுமன்றம் சென்றார். 

ஆனால் வரலாறு மிக வேகமாகவே திரும்பியதுஜூலை 1997  முஸ்லிம் காங்கிரஸ் பரிகசித்த, குறைகண்ட அதே சம்பவம் அஷ்ரபினால் செய்யப்பட்டது . அஸ்ரப் அமைச்சராகவிருந்த பொழுது திகவாபிய பிரதேச புனருத்தாருண சம்பிரதாய நிகழ்வுகளில் மல் பூஜா எனப்படும் மலர் பூஜை செய்யும் -மலர் தட்டினை- அஸ்ரப் காவிச் சென்றார் என்று பகிரங்க குற்றச்சாட்டு எழுந்தது. ஜம்மியத்துல் உலமா எனப்படும் இலங்கையின் இஸ்லாமிய மத விவகாரங்களுக்கு பொறுப்பான உச்ச நிறுவனம் அஷ்ரபின் செயலுக்கு கண்டனம் கூட தெரிவிக்க வேண்டி நேரிட்டது.

தனது கட்சியின் நலனுக்காக திகாமடுல்ல மாவட்ட தேசிய பட்டியலில் தனது தேர்வை தியாகம்  செய்து , தனக்குப் பதிலாக கரு ஜெயசூரியவை நியமிக்க  முன்வந்தவர்  ஏ. ஆர்.எம்.மன்சூர் என்பது பலருக்கு  தெரியாத சமாச்சாரம்


ஏ. ஆர். எம்.மன்சூர் கல்முனையின் அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல , தேசிய ரீதியில் இன மத பேதமற்று மக்கள்  சேவைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு சமூக சேவையாளர் என்பதை வரலாறு நன்றியுடன் நிச்சயம் பதிவு செய்யும்.


மட்டுநகர் சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்ற வகையில் அங்குள்ள விடுதி ஒன்றினை கட்டுவதற்கும் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் உதவியுள்ளார். அக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற வகையில் என்னைப் போன்றோருக்கும் , அவரின் செயல் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையாகாது.

1 comment:

  1. கல்முனையில் மன்சூர் செய்த சேவைகளைத் தாண்டி இப்போது வரைக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் சேவை செய்யவில்லையென்று கல்முனை நண்பரொருவர் ஆதங்கப்பட்டார். முஸ்லிம்களுக்கான தனித்துவக் கட்சியாக தன்னை நிலைநாட்டுவதில் முஷ்லிம்காங்கிரஸ் காட்டிய அக்கறையை கொஞ்சம் மக்களின் பக்கமும் குறிப்பாக கல்முனை காட்டியிருக்கலாம். - musdeen

    ReplyDelete

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...