Sunday, 13 August 2017

ஒரு யாழ்ப்பாண ஊடகவியலாளனின் பார்வையில் ஈழத்தில் ஊடக சுதந்திரம்- ந. பரமேஸ்வரன்


இக்கட்டுரை தீராநதி சஞ்சிகைக்கு அனுப்பி பிரசுரத்திற்கு தகுதியற்றது என நிராகரிக்கப்பட்ட நிலையில் தேனியில் பிரசுரமாகிறது. பின்னர் தமிழ் நாட்டிலுள்ள வேறு சில இதழ்களுக்கு அனுப்பப்பட்டது. அவையும் இதைத் தவிர்த்தன. தமிழ் ஊடக சுதந்திரத்தின் நிலைக்கு இது ஒரு நல்ல சான்றாகும். இந்த நிலையிலேயே இந்தக் கட்டுரை தேனீ இணையத்தளத்துக்கு அனுப்பப்படுகிறது.
ந. பரமேஸ்வரன்
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிராபத்துடனேயே தமது பணியை ஆற்றி வருவதாக கவிparameswaranஞர் தீபச்செல்வன் தீராநதியில் பல தடவை எழுதியுள்ளார். சர்வதேச ஊடக அமைப்புகளும் இலங்கையில் அதிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சறுத்தப்படுவதாக தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர்,கொல்லப்படுகின்றனர் என்பதை நான் மறுக்கவில்லை.


 இலங்கையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர்,கொல்லப்படுகின்றனர் என  ஓலமிடுவோர் இரண்டு விடயங்களைப்பற்றி பேசுவதில்லை. முதலாவதாக அச்சறுத்தலுக்கு முகம் கொடுக்கும் ஊடகவியலாளர்கள் பெரும்பாலும் பக்கம் சாய்ந்தே காணப்படுகின்றனர். ஊடகவியலின் அடிப்படைக்கோட்பாடான  நடுநிலைமை அல்லது பக்கம்சாராமை என்றால் கிலோ என்ன விலை என்று தான் இவர்கள் கேட்பார்கள். புலிகளின் அழிவுக்கும் தமிழ் ஊடகவியலாளர்களும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். புலிகளின் அழிவுக்குப்பின்னரும் மக்களை பிழையான வழியில் பல தமிழ் ஊடகங்கள் வழிநடத்தி வருகின்றன.புலிகளைப்பற்றி அல்லது தமிழ் தேசியத்தை விமர்சிப்பவர்கள் ஈழ தமிழ் ஊடகங்களின் பார்வையில் துரோகிகள். அடுத்ததாக அச்சுறுத்தப்படும்  தமிழ் ஊடகவியலாளர்கள் தனியே ஊடக பணியை மட்டும் செய்வதில்லை புலிகளுக்கு தகவல் வழங்கும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாராவது ஒரு ஊடகவியலாளனுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சாட்டாக வைத்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் தான் அதிகம்.வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் மூன்று மாதங்கள் ஏதாவது ஒரு பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றி விட்டு கடிதம் வாங்கிக்கொண்டு சென்றவர்கள் பலர் உள்ளனர். வேடிக்கை என்னவென்றால் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வானொலியான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவர்கள். யாழ்ப்பாண கச்சேரியில் அரசாங்க தகவல் உத்தியோகத்தராக பணியாயாற்றயவர்கள் கூட தமது உயிருக்கு அச்சுறுத்தல் என வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லை கடந்த பத்திரிகையாளர் அமைப்பு (RSF)  இவர்களுக்கு உண்மையிலேயே அச்சறுத்தல் உள்ளதா என மின்னஞ்சல் மூலம் என்னிடம் விசாரித்த பின்னர் தான் இப்படிப்பட்டவர்களெல்லாம் தஞ்சம் கோரியுள்ள விடயம் தெரிய வந்தது. வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்களனைவரும் கொழும்பு விமான நிலையத்தினூடாகவே புறப்பட்டுச்சென்றனர். இவர்களை ஏதாவது செய்ய வேண்டுமாயிருந்தால் விமான நிலையத்தில் வைத்து தூக்க முடியாதா?
வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களுள் வின்சன்ற் ஜெயன் என்பவர் மற்றவர்களை விட புத்திசாலி.எல்லோரும் இராணுவம் அச்சுறுத்துகிறது என்று சொல்லிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோர ஜெயன் மட்டும் யாழ்ப்பாணத்தில் RSF  பிரதிநிதிகள் தங்கியிருந்த வேளையில் புலிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, (வன்னியிலிருந்த ஒரு ஊடகவியளாலரைக்கொண்டு செயமதி தொலைபேசி மூலம் எந்நேரமும் கொல்லப்படுவீர் என குறுந்தகவல் அனுப்பி)  சுவிஸுக்கு ஓடியதுடன் மட்டுமல்லாமல் தனது சகோதரன் மைத்துனர் இருவரையும் சுவிஸுக்கு அழைத்து விட்டார். இவர் AP  நிறுவனத்தின் யாழ்ப்பாண செய்தியாளராக பணி புரிந்தவர். AP  நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கங்குலி யாழ்ப்பாண இராணுவத்தளபதிக்கு தனது யாழ்ப்பாண நிருபருக்கு புலிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக அறிவித்தார். யாழ்ப்பாண இராணுவத்தளபதியும் தனது மோட்டார் சைக்கிள் குரூப்பை ஜெயனின் பாதுகாப்பிற்கு அனுப்பி ஜெயனையும் மனைவியையும் விமான நிலையத்திற்கு அழைத்து ராஜ உபசாரத்துடன் வழியனுப்பினார்.       RSF  பிரதிநிதிகள் தம்முடன் ஜெயன் தம்பதியினரை விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துச்சென்றனர். இவர் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்ல உதயன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றிய குகநாதன் அதென்ன RSF  பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் நிற்கிற நேரம் பார்த்து அச்சுறுத்தல் வருகிறது என்று நக்கலாக கேட்டார்; நான் அண்ணை அவன் வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுகிறான் போலிருக்கிறது போகட்டும் விடுங்கள் என்றேன். கொழும்பில் சுதந்திர ஊடக இயக்கம் ஜெயனுக்கும் மனைவிக்கும் கோல்பேஸ் விடுதியில் அறை எடுத்துக்கொடுத்து பாதுகாப்பாக சுவிஸுக்கு அனுப்பி வைத்தது.
அடுத்ததாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக ஊளையிடும் அனைவரும் சிங்கள அரசாங்கத்தின் அச்சுறுத்தல் பற்றித்தான் கூறுகிறார்களே ஒழிய தமிழ்ப்போராளிகளின் அச்சுறுத்தல் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.(நான் இதை எழுதுவதற்காக என்னை புலம் பெயர் தமிழர்கள் சில வேளை சிறிலங்காவின் கைக்கூலி என்று வர்ணிக்கக்கூடும் ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை). வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும் எங்கோ ஒரு இடத்தில்; இல்லா விட்டால் அது நாம் வருங்கால சந்ததிக்கு செய்யும் துரோகம். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது தமிழ் போராளிகளின் ஊடக ஒடுக்குமுறையுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறை குறைவு என்று தான் சொல்ல வேண்டும். ஊடகங்களை ஒடுக்கிய போது அதற்கு போராளிகள் (புலிகள்) கூறிய பதில் ஒரு விடுதலைப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரதேசத்தில் ஊடக சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியாது என்பதே.
முறிந்த பனை என்ற ஆவணத்தை வெளியிட்டமைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட ரஜனி திரணகம பற்றி ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு தேசத்தின் குரல் என புலிகளால் வர்ணிக்கப்பட்ட புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கம் அளித்த பதில் இது .
இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இப்பொழுதும் இலங்கையில் வசித்து வருகின்றனர்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான போராளிகளின் அடக்குமுறை காவலூர் ஜெகநாதனின் கொலையுடன் ஆரம்பமானது எனலாம்.காவலூர் ஜெகநாதனை ஈரோஸ் தான் கொலை செய்ததாக நம்பப்படுகிறது. தமிழ் போராளி இயக்கங்கள் அனைத்துமே தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்தன என்றால் மிகையாகாது. பிரபாகரனால் கௌரவிக்கப்பட்ட ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் கோபாலரத்தினம் (கோபு) ஒரு முறை சொன்னார் நான்கு இயக்கங்களும் வருவார்கள் துப்பாக்கியை மேசையின் மீது வைத்து விட்டு அறிக்கையை தந்து விட்டு நாளைக்கு தலைப்புச்செய்தியாக வர வேண்டும் என்று சொல்லி விட்டு போவார்கள். நான் நான்கு தலைப்புச்செய்திகளா போடமுடியும் என்றார். தமிழ் போராளிகளால் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் பற்றி யாரும் நினைவு கூருவதாகத்தெரியவில்லை. தமிழ் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊடக ஒடுக்குமுறை பற்றி இப்போது நினைவில் நிற்பவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் (இது ஒரு ஆய்வுக்கட்டுரை அல்ல).
ஈழமுரசு பத்திரிகை இயக்குனர் மயில் அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்செல்வத்தின் மகன் அகிலன் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருச்செல்வத்தின் வீட்டுக்கு திருச்செல்வத்தை தேடி ஆயுததாரிகள் சென்ற போது அவர் மதில் பாய்ந்து தப்பி விட்டார். ஆயுததாரிகள் மகனை சுட்டுக்கொன்றனர். இந்த கொலை தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப்., மீது குற்றம் சுமத்தப்படுகிறது. லேக் ஹவுஸ் நிருபராகப்பணியாற்றிய செல்வராஜா புலிகளால் கொல்லப்பட்டார்.
இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஈழநாடு,உதயன்,முரசொலி பத்திரிகை அலுவலகங்களுக்கு சீல் வைத்து விட்டு அங்கு கடமையாற்றிய ஊழியர்களை பிடித்துச்சென்று விடுதலை என்ற பத்திரிகையை வெளியிட்டனர். விடுதலை பத்திரிகையில் கடமையாற்றிய சண்முகலிங்கம், இவர் ஈழநாடு பத்திரிகையின் நிருபர், புலிகளால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டவர் திரும்பி வரவில்லை.
மூன்று மாத தடையின் பின்னர் யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு விடுதலை கிடைத்தது.  இந்தக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் பத்திரிகை ஆலுவலகங்களுக்குள் புகுந்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியப்பிரயோகம் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அதே போல் புலிகளும் மண்குதிரையை நம்பி என்ற தலைப்பில் ஆசிரிய தலையங்கம் எழுதியமைக்காக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தனர். உதயன் பத்திரிகை புலிகளின் அறிக்கையை பிரசுரிக்க மறுத்தமைக்காக உதயனின் மகுட  வாசகமான “உண்மை நடுநிலைமை அஞ்சாமை” என்ற வாசகத்தை பிரசுரிப்பதற்கு புலிகள் தடை விதித்தனர். இன்று வரை  உதயன் இந்த மகுட வாசகத்தை மறுபடி பிரசுரிக்க முயற்சிக்கவில்லை.
நிமலராஜனின் கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி   மீது சந்தேகம் உள்ளது.
மே 3ம் திகதி யாழ்ப்பாண ஊடக மையமும் உதயன் பத்திரிகையும் இரண்டு வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்ட  ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலிக்கூட்டம் நடத்தின. ஒரு இடத்திலும் புலிகளால் கொல்லப்பட்ட தினமுரசு ஆசிரியர் பாலநடராஜ ஐயரின் (சின்ன பாலா) படம் வைக்கப்படவில்லை.
தீபச்செல்வனுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் ஒரு ஊடகவியலாளர் நடுநிலைமையாக செயற்பட்டால் அவருக்கு பிரச்சனை இல்லை என்பதே எனது அபிப்பிராயம். நான்  1990ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளனாக செயற்பட்டு வருகிறேன். இது வரை என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. அதற்காக நான் எதையும் எழுதவில்லை என்று அர்த்தமல்ல. தமிழ் ஆங்கில ஊடகங்களில் வெவ்வேறு தளங்களில் நான் எனது கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். முரசொலி,ஈழநாடு,உதயன்,ஈழநாதம்,புலிகளின் குரல், சரிநிகர், Daily Mirror, Sunday Times, Financial Times, Reuters போன்றவற்றுக்கு செய்தியாளனாகவும் பத்தி எழுத்தாளனாகவும் பணியாற்றியுள்ளேன். பல சந்தர்ப்பங்களில் இராணுவத்தினருடன் முரண் பட்டிருக்கிறேன். ஆனால் நான் ஒரு நடுநிலை பத்திரிகையாளன் என்று தெரிந்ததனாலோ என்னவோ இராணுவத்தினரும் என்னை எதுவும் செய்யவில்லை.
 மூலம்: தேனீ.காம்
  http://www.thenee.com/130817/130817-1/130817-2/130817-2.html

No comments:

Post a Comment

பரவுவது வைரஸ் மட்டுமல்ல: வதந்தியும் வன்மமும்தான்!--மு.இராமனாதன்

பிப்ரவரி 14, 2020 சீ னாவைக் கலங்கடித்துள்ள ஆட்கொல்லி வைரஸுக்கு இப்போது பெயர் வைக்கப்பட்டுவிட்டது – கோவிட்-19. மனித உயிரணுக்களுக்குள் ...