Wednesday, 22 February 2017

பதவிகளுக்காகவும் சொகுசுகளுக்காகவும் முஸ்லிம்களைக் கைவிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸை கைவிடும் நேரம் வந்துள்ளதா? - லத்தீப் பாரூக்


VEERAKESARI SUNDAY
slmc logo
வெறுக்கத்தக்க வெற்கக்கேடான அவமானம் மிக்க பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் பதவிகளுக்காகவும் சொகுசுகளுக்காகவும் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்து அந்த சமூகத்தைக் கைவிட்ட குற்றத்துக்காக அந்தக் கட்சியை இழுத்து மூடிவிட்டு கமூகத்தை அதன் பிடியில் இருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்.
இஸ்லாம், ஐக்கியம் என்ற சுலோகங்களோடு தான் முஸ்லிம் காங்கிரஸ் அறிமுகமானது. ஆனால் இந்த சுலோகம் அதன் ஆரம்பம் முதலே கைவிடப்பட்டு விட்டது.
காங்கிரஸின் ஆரம்பம் முதல் அது அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் தனி மனித ராஜ்ஜயத்துக்குள் தான் சிக்கியிருந்தது. அப்போதும் கூட வெற்கக் கேடான பல மோசடிகளில் அது சிக்கியிருந்ததாகத் தகவல்கள் உள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் வரலாறு என்பது அதன் பதவிகளுக்காகவும் சுகபோகங்களுக்களுக்காகவும், ஊழல் மோசடிகளுக்காகவும் சமூக நலன்களை விட்டுக் கொடுத்ததாதகவே காணப்படுகின்றது. இப்போது பேசப்படும் விடயங்கள் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைமையும் எந்தளவுக்கு தரம் கெட்ட ஒழுக்கக் கேடான விடயங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் எந்த அளவுகோலைக் கொண்டு தங்களை இன்னமும் முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதும் கஷ்டமாக உள்ளது.
இவர்களின் செயல்கள் ஒட்டு மொத்த சமூகத்தின் நற்பெயருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கட்சியை இயலுமானவரைக்கும் விரைவாகக் கலைத்து விட வேண்டும் என்ற கோரிக்கை தான் இப்போது மேல் எழத் தொடங்கியுள்ளது.
இதற்கு முன் நான் எழுதிய பல கட்டுரைகளில் முஸ்லிம் காங்கிரஸின் மோசடிகள் பற்றி குறிப்பிட்டுள்ளேன். நான் சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதிய "Nobody’s People-The Forgotten Plight of Sri Lanka’s Muslims” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.
சர்வாதிகார தலைமைத்துவம், ஊழல், சந்தர்ப்பவாதம், பதவி மோகம்,கோஷ்டிச் சண்டை, பாலியல் குற்றச்சாட்டுக்கள், என்பனவற்றுக்குப் பெயர் போன முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் மீது இலங்கை முஸ்லிம்கள் விரக்தி அடைந்துள்ளனர். பதவிகளுக்காக தமது சொந்தக் கட்சி சகாக்களுக்கே துரோகம் செய்யும் மனப்பாங்கு அங்கே அதிகரித்துள்ளது. அந்தக் கட்சி முஸ்லிம்களை இன்று நிர்க்கதி நிலைக்குள் தள்ளி விட்டுள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் இன்று பொதுவாகக் காணப்படும் ஒரு உணர்வு குறிப்பாக புத்திஜீவிகள் மற்றும் தொழில்சார் முஸ்லிம் நிபுணர்கள், சமயத் தலைவர்கள், வர்த்தகப் புள்ளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான உணர்வு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை மிக மோசமாகக் கைவிட்டு விட்டது என்பதுதான்.
முஸ்லிம்கள் தங்களுக்கென தனியானதோர் அரசில் கட்சியை வேண்டி நிற்கவில்லை. ஆனால் எவ்வாறோ சிங்களத் தலைமைகளின் பாரபட்சம் தங்கள் குரல்கள் தனித்து ஒலிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் முஸ்லிம்களை தனியானதோர் கட்சியை நோக்கித் தள்ளியது.
உதாரணத்துக்கு 1980 களின் முற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மீது முஸ்லிம்கள் மிக ஆழமான அதிருப்தி அடைந்தவர்களாகக் காணப்பட்டனர். அந்த அதிருப்தி முஸ்லிம் சமூகத்தின் இருப்பையே பாதிக்கச் செய்யும் சில விடயங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய ஒரு மேடையை நோக்கி அவர்களைத் தள்ளியது.manna muslim
தமிழர்கள் மீதான1983வன்முறைகளின் பின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன முஸ்லிம்களை வெளிப்படையாகவே அவமானப் படுத்தினார். தன்னோடு உடன் படாவிட்டால் தனது ஆட்சியில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ளலாம் என்று அவர் பகிரங்கமாகவே கூறினார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குள் இஸ்ரேல் நலன் பேணும் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்ட போது அதற்கு எதிராகக் கருத்துக் கூறிய முஸ்லிம் தலைவர்களுக்குத் தான் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டது.
ஜே.ஆர் கர்வத்துடன் முஸ்லிம்களை இவ்வாறு ஒதுக்கியதால் அவரின் கட்சி மீது முஸலிம்களுக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த வெறுப்பு, தமிழ் ஆயுதுபாணிகளின் அட்காசங்கள், உள்நாட்டு அரசியலில் இந்தியாவின் தலையீடு, அஷ்ரபிடம் காணப்பட்ட அரசியல் அபிலாஷைகள் என்பனவெல்லாம் சேர்ந்து தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற வழிவகுத்தன.
ஆனால் அந்தக் கட்சியை அகில இலங்கை ரீதியாக விஸ்தரிக்காமல் கிழக்கோடு மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு பல முஸ்லிம் பிரமுகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர். இவ்வாறானதோர் கட்சி தேசிய ரீதியாகச் செயற்படத் தொடங்கினால் அது ஏனைய பகுதிகளில் பாரம்பரியமாகக் காணப்படும் முஸ்லிம் சிங்கள நல்லுறவைப் பாதிக்கும் என்று அவரை பலரும் எச்சரித்தனர்.
ஆனால் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் முஸ்லிம் மக்களின் உணர்வுகளதை; தூண்டிவிட்டு அஷ்ரப் தனது கட்சியை ஸ்தாபித்தார்.
தெற்கில் உள்ள சில முஸ்லிம்கள் இந்தக் கட்சியை அனுதாபத்தோடு பார்த்தனர். தெற்கில் உள்ள பெரும்பான்மை கட்சிகளோடு எந்த வகையிலும் பகைமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் தமது பிரச்சினைகளை வெளிக் கொண்டு வருவதற்கான ஒரு அரசியல் தளமாக இதை பாவிக்கலாமா என்று சிந்தித்தனர்.
இந்தக் காலப் பகுதியில் சந்திரிக்கா பிரதமராகப் பதவியேற்று ஐக்கிய மக்கள் முன்னணி அரசை நிறுவினார். அதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சந்திரிக்காவுக்குத் தேவைப்பட்டது. இது அந்தக் கட்சிக்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பேரம் பேசும் சக்தியை அளித்தது. குறிப்பாக பெரும்பான்மை சமூகத்துக்குள் உள்ள கடும் போக்காளர்கள் விரும்பாத ஒரு செல்வாக்கு நிலையை முஸ்லிம் காங்கிரஸ் அடைந்தது.
பெருமைக்குரிய இந்தச் சந்தர்ப்பத்தில் அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் கொண்டிருந்த மனநிலையை சரியாகக் கணிப்பிடத் தவறிவிட்டார் என்பதுதான் யதார்த்தமாகும். “தனது கட்சி இன்று ஆட்சியாளர்களை உருவாக்கும் நிலைக்கு வந்துள்ளது. தனது ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது” என்ற அவரின் அன்றைய பொறுப்பற்ற உளரல்கள் பெரும்பான்மை சிஙகள மக்களை மட்டும் அன்றி முஸ்லிம்களையும் கோபம் அடையச் செய்தது.
ranil maithriதீகவாபி விடயத்தை அவர் கையாண்ட விதம், சோம தேரருடனான தேவையற்ற விவாதம் என்பன முஸ்லிம்கள் மீது சிங்கள் சமூகத்தின் வெறுப்பை தூண்டியது. இவற்றின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதி அஷ்ரபை பல்வேறு விடயங்களில் மிகக் கடுமையாக எதிர்த்தது.
ஆனால் அவருக்குள் இருந்த ஈகோ இந்த விடயங்களில் அவரின் காதுகளை செவிடாக்கி யதார்த்த நிலையை கண்களில் இருந்து மறைத்தது. அவர் அருகே நெருங்க முடியாத பிடிவாதம் மிக்க ஒரு மனிதராகிவிட்டார். மற்றவர்களை சரியாக மதிப்பதில்லை என்றெல்லாம் அவருக்கு நெருக்கமானவர்களே குற்றம் கூறத் தொடங்கினர். அவர் அரசியல் ஏணியில் ஏறி உச்சத்துக்கு செல்லக் காரணமாக இருந்த ஆதரவாளர்களைக் கூட மதிக்கத் தவறிவிட்டார் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாக கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட அவரை விட்டு விலகிச் செல்லவும் தொடங்கினர்.
அஷ்ரப் தனது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இஸ்லாத்தை தனது பிரதான பிரசார ஆயுதமாகவும்; பயன்படுத்தினார். இதுவும் ஏனைய கமூகங்கள் மத்தியில் இருந்த முஸ்லிம்களின் நன்மதிப்பை பாதித்தது.
இவற்றின் நடுவே தான் முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் 2002செப்டம்பரில் மத்திய மலைநாட்டின் அருகே மாவனல்லை நகருக்கு அருகில் ஊரகல காட்டுப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அவர் உயிர் இழந்தார்.
அஷ்ரப்பின் மரணம் அவரின் மனைவி பேரியலுக்கும் றவூப் ஹக்கீமுக்கும் இடையில் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டியை ஏற்படுத்தி அந்தக் கட்சி பல கூறுகளாகப் பிளவு பட வழியமைத்தது.
இவ்வாறு பிளவு பட்ட ஒரு குழுவை எப்போதுமே சிங்கள தலைமைத்துவங்கள் தம்மோடு அரவணைத்து மற்றைய குழுவை தாக்கவும் கவிழ்த்தவும் பயன்படுத்தி வந்தன. இதன் காரணமாக அடிப்படையில் பதவி மோகங்களில் மூழ்கியிருந்ததன் விளைவாக அந்தக் கட்சி இன்னும் பல குழுக்களாகப் பிளவு பட்டது. அவர்கள் பெரும் சுகபோகங்களை அனுபவித்ததோடு பெரும் செல்வத்தையும் குவிக்கத் தொடங்கினர்.
இவர்களுடைய அதிகாரத்துக்கும் பதவிக்கும் சுகபோகத்துக்குமான பேரம் பேசல் ஒரு போதும் சமூகத்தின் நலன் சார்ந்ததாக இருக்கவில்லை. மாறாக தனிப்பட்ட நலன்கள் சார்ந்ததாகவே காணப்பட்டது.
இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனி நபர்களாகவும் சிறு குழுக்களாகவுமே அரசாங்கத்தில் இணைந்தனர். பேரம் பேசலில் ஈடுபட்ட பின்பே அரசில் இணைந்தனர். அப்போதும் கூட அவர்கள் குழுவாக பேரம் பேசவில்லை. தனித்தனியாகப் பேசி தங்களுக்குத் தேவையான அமைச்சுக்கள் உட்பட ஏனையவற்றைப் பெற்றுக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளின் போது இவர்களுக்கு தேவையான பதவிகளையும் சொகுசுகளையும் வழங்கி சமூகத்தின் குரல் வளையை நசுக்கலாம் என்பதை சிங்களத் தலைமைகள் நன்றாகப் புரிந்து கொண்டன. இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த மாத முற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கு முஸ்லிம்கள் மத்தியில் பேசும் போது “கல்வி, தொழில், காணி,மீள் குடியேற்றம் என முஸ்லிம்களின் பல அடிப்படை பிரச்சினைகள் பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசத் தவறி விட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.wilpattu mosqe
அரசாங்கத்துக்குள் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் தேவைக்காக குரல் கொடுக்க வேண்டும். அது ஒருமித்த குரலாக ஒலித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும். முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு சமாதானமானதோர் தீர்வு எட்டப்பட வேண்டும். இத்தகைய ஒன்றிணைந்த செயற்பாடுகள் தான் முஸ்லிம்கள் மீது இந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இன்னமும் இந்த அரசுக்கு தேவையாகவே உள்ளது. எனவே அதைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் குரலாக அவர்கள் அரசுக்குள் ஒலிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு 95 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்து இந்த அரசாங்கத்தை பதவியில் அமர்த்தினர். 24 க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்த பின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஐ.தே.க தலைமையிலான அரசும் இன்று முஸ்லிம்களை கைவிட்டு விட்டது. அது மத்திய கிழக்கை கொலைகளமாக்கிய முஸ்லிம்களின் பரம எதிரியான இஸ்ரேலுக்கு செங்கம்பளம் விரிக்கத் தொடங்கிவிட்டது.
இஸ்ரேலியர்கள் இலங்கையர்களை ‘குரங்கு போல் இருக்கும் மனிதர்கள்’ என்றே அடையாளப் படுத்துகின்றனர். அவர்கள் இப்போது இலங்கையை நேசிக்கும் மனிதர்களாக இங்கு வரவில்லை. மாறாக அவர்களின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே இங்கு வந்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களையும் தமிழர்களையும் தூண்டிவிடுவர். முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களைக் கூட தூண்டிவிட தயங்க மாட்டார்கள். அரசின் ஒரு அங்கமாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் என்றாவது இஸ்ரேல் வருகைக்கு எதிராக ஒரு வாத்தையாவது உதிர்த்துள்ளதா? அந்தக் கட்சியின் வேலைத் திட்டத்தில் அப்படி எதுவும் இல்லை.
மறுபுறத்தில் புதிய அரசியல் யாப்பு குறித்த சூடான வாதங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்தப் புதிய அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது முஸ்லிம் காங்கிரஸின் கடமை அல்லவா? ஆனால் இந்த விடயத்தில் இந்தக் கட்சி இதுவரை எந்தக் கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களின் அடிப்படை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விடயங்கள் பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் கருத்து ஒற்றுமைமையை ஏற்படுத்த பல்வேறு தரப்பினராலும் இதுவரை எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
நான்கு வருடங்களுக்கு முன் இவ்வாறான ஒரு பின்னணியில் தான் 18 தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய சூறா கவுன்ஸில் என்ற அமைப்பை உருவாக்கின. பல்வேறு விடயங்களில் சமூகத்துக்கு ஆதரவை வழங்கிக் கொண்டே ஏனைய சமூகங்களுடன் சிறந்த நல்லுறவைப் பேண இந்த அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் “இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்? அவர்கள் யாருக்காக பணி புரிகின்றார்கள்” என்பதுதான் இன்னமும் விடை காண முடியாத கேள்வியாக உள்ளது.
மிகவும் வர்த்தக மயமாக்கப்பட்ட, குற்றப் பின்னணி கொண்ட, ஊழல் மிக்க இன்றைய அரசியல் பின்னணியில் பதவிகளை வகித்துக் கொண்டே சமூகத்துக்காகவும் குரல் கொடுப்பது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான காரியம். எனவே அவர்கள் சிங்களத் தலைமைகளை அசௌகரியத்துக்கு ஆளாக்குவதை விட சமூகத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்கள். எனவே தமது நலன்களைக் காப்பாற்ற வக்கில்லாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சமூகத்தில் இருந்து விலக்கி வைக்க முஸ்லிம்களும் முடிவு செய்துள்ளனர்.
இந்தக் கட்சி தேசியக் கட்சிகளில் இருந்த முஸ்லிம்களைப் பிரித்தது. அதன் விளைவாக முஸ்லிம்களை சகல கட்சிகளும் புறக்கனிக்கத் தொடங்கிவிட்டன. இதனால் முஸ்லிம் சமூகம் பல துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அது மட்டுமன்றி சகல முக்கிய அரசியல் ஆலோசனைகளில் இருந்தும், கொள்கை ரீதியான கலந்துரையாடல்களில் இருந்தும் முஸ்லிம் சமூகத்தை பிரதான கட்சிகள் விலக்கி வைத்துள்ளன.
முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை இதுதான். முஸ்லிம்களுக்கு எதிரான உலக சக்திகளும் உள்ளுர் சக்திகளும்; இலங்கையில் ஒன்று சேர்ந்திருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் இன்றைய காலத்தின் தேவை அவர்கள் மீண்டும் தேசிய கட்சிகளுடன் இணைவதாகும். முஸ்லிம்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் தேசிய கட்சிகள் மீண்டும் முஸ்லிம்களை தம்மோடு இணைத்துக் கொள்ளவும் வேண்டும். இவ்வாறான ஒரு சூழலில் தாம் சார்ந்த சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பேணுவதற்காக சிவில் சமூகம் பிரதான பங்கினை வகிக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

Source : Veerakesari - as forwarded via email by Mr. Latheef Farook 
__._,_.___

No comments:

Post a comment

Biden’s Drone Wars BY BRIAN TERRELL

  On Thursday, April 15, the   New York Times   posted an  article   headed, “How the U.S. Plans to Fight From Afar After Troops Exit Afghan...