Wednesday, 21 December 2016

"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை! "-வானவில்-vaanavil-72_2016


unitary-1
லங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.எதைச் செய்வதாக இருந்தாலும் சில அடிப்படைச் சூழ்நிலைகள் அவசியமானவை. முதலாவதாக, இன்றைய ஐ.தே.க. – சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். இரண்டாவதாக, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படும் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணி அந்த உடன்பாட்டை ஏற்க வேண்டும். மூன்றாவதாக இனப் பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்பு பிரதிநிதியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இணங்க வேண்டும். நான்காவதாக, முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அதை ஆதரிக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் தவிர தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, தீர்வு முயற்சிகள் நடைபெறும் போதெல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதைக் குழப்பி அடிக்கும் ஜே.வி.பியும் கூட அதற்கு உடன்பட வேண்டும்.

ஏனெனில் இன்றைய இலங்கை அரசியலில் இந்த அரசியல் சக்திகளே ஏதோவொரு விதத்தில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.
இதுதவிர, புதிய அரசியல் யாப்போ அல்லது சீர்திருத்தமோ நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அத்துடன் அது மக்களின் கருத்துக் கணிப்பில் வெற்றி பெறவும் வேண்டும்.

முதலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துப் பார்த்தால் இனப் பிரச்சினை தீர்வில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பது குழப்பமாகவே இருக்கிறது. இந்த இடத்தில் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
சுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை எடுத்து நோக்கினால், அது இனப் பிரச்சினைக்கு தீர்வாக நாடாளுமன்றத்தில் சிங்களவருக்கு ஐம்பது வீதமும் தமிழருக்கு ஐம்பது வீதமும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோசம் ஒன்றை முன்வைத்தது. அப்படி வைத்தாலும் அதற்காக உழைப்பதை விடுத்து, ஐ.தே.க. அரசுடன் இணைந்து அவ்வரசு மேற்கொண்ட தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், மலையக மக்களின் பிரஜாவுரிமை – வாக்குரிமையைப் பறித்தமை போன்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்கியது.
பொன்னம்பலத்தின் தலைமை தவறு என்று சொல்லி தமிழரசுக் கட்சியைத் தொடங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி கொள்கையை முன்வைத்தனர் அப்படி வைத்தாலும் அதற்காக உழைக்காது தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுடனும் பேரம் பேசுவதிலேயே தமது நேரத்தைச் செலவிட்டனர். அவர்களும் ஒரு கட்டத்தில் ஐ.தே.க. அரசுடன் இணைந்து ஆட்சியின் பங்காளர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது யுக்தி எதுவும் பலிக்காததால், கையறு நிலையில் எவ்வித திட்டமும் இன்றி கடைசியில் தனிநாடு கோசத்தை முன்வைத்தார்கள்.


தமிழரசுக் கட்சி தனிநாட்டுக் கோசத்தை முன்வைத்தாலும் அதற்காக ஒரு சிறு துரும்பைத் தன்னும் எடுத்துப் போடாமல் இளைஞர்களை முன்னே தள்ளி விட்டுவிட்டு தாம் பின்னே இருந்து கொண்டார்கள். அதன் காரணமாக தமிழ் இளைஞர்களின் போதிய அரசியல் ஞானமும், திட்டமும் இல்லாத ஆயுதப் போராட்டம் 30 வருட அழிவுகளுக்குப் பின்னர் 2009இல் முள்ளிவாய்க்கால் அழிவில் முற்றுப் பெற்றது.

இதன் பின்னர் தமிழ் தலைமை (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) மீண்டும் ஒரு அரசியல் சூதாட்டத்தில் இறங்கியது. தாம் பிரிவினை கோரவில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண விரும்புவதாகவும் கூறி இன்றைய அரசாங்கத்தைப் பதவிக்கும் கொண்டு வந்தனர். இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதன் அடிப்படையில் சமஸ்டி தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரினர். வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லீம் மக்கள் ஒருபோதும் இணங்கார் என்பதையோ, எந்த வடிவிலேனும் தமிழர்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிங்கள மக்கள் இணங்கார் என்பதையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்துப் பார்க்கவில்லை அல்லது தெரிந்தும் வழமைபோல விதண்டாவாத அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் இன்றைய அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்பதை பல தடவைகள் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஐ.தே.கவின் நிலைப்பாட்டை – அதாவது ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்பதையும், எந்தக் காரணம் கொண்டு சமஸ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது என்பதையும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்லவும் பல தடவைகள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலும், இனப் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு எல்லையும், வரையறையும் உண்டு எனவும் பிரதமர் ரணில் கூறியிருப்பதுடன், இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் காணிகளை விடுவிப்பதே இனப் பிரச்சினைத் தீர்வின் ஓர் அங்கம்தான் என கோமாளித்தனமாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி எதுவும் கூறாமல் பெரும்பாலான சமயங்களில் தந்திரமாக நடந்து கொண்டாலும், இராணுவ முகாம் நிகழ்வு ஒன்றிலும், திரிகோணமலையில் நடைபெற்ற பௌத்த விகாரை நிகழ்வொன்றிலும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும், 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அம்சங்கள் தொடரும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், இன்றைய அரசின் அமைச்சர்களில் ஒருவருமான நிமால் சிறிபால சில்வா அண்மையில் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக தமது கட்சி மூன்று விடயங்களில் விட்டுக் கொடுக்காது என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அந்த மூன்றும் வருமாறு: பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்காதிருத்தல், எந்தவிதமான சமஸ்டி அமைப்பையும் வழங்காதிருத்தல் என்பவையாகும்.

கட்சியின் இன்னொரு சிரேஸ்ட தலைவரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளிக்கையில், புதிய அரசியல் அமைப்பிலும் தற்போதுள்ள ஒற்றையாட்சி முறையே பேணப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு அமைச்சர்களும் தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி இப்படியான கருத்துக்களைக் கூறியிருக்க முடியாது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒற்றையாட்சி நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதால் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை.

இந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டபடியால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் “ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு” என்றும், அவரது சகா எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை” என்றும் புதிய சுருதியில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்படியானால் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன வடிவத்தில் என்பதை இவர்கள் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் இவர்கள் செய்யவில்லை.

இவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதுள்ள மாகாணசபை முறைமையையே அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வாக முன்வைக்க இருக்கிறது என்பது தெளிவாகின்றது. இப்படியான ஒரு தீர்வை முன்வைப்பதை கூட்டு எதிரணியும் ஆதரிக்க வாய்ப்புள்ளது. இந்த முறைமையைக் கொண்டுவர ஆதரவளித்த இந்தியாவின் நிலைப்பாடும் அதுவேதான். இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டின் அனைத்து இன மக்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அதுவே இருக்கின்றது.

எனவே போர் முடிவுற்ற நாளிலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் இணக்கமான பேச்சுவார்த்தை எதனையும் நடத்தாமல் மல்லுக்கட்டி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வைப் பெற்றுத் தரப்போவதாக மாய்மாலம் காட்டி, அந்த அரசை நிரந்தனை ஏதுமின்றி ஆதரித்து வந்ததின் பலாபலன் மாகாணசபைத் தீர்வு மட்டுமே.

கடந்த அரசாங்க காலத்தின் போது தமிழ் மக்கள் சார்பாக அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ‘மாகாணசபை முறைமையை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இனப்பிரச்சினை தீர்வுக்காக உழைக்க முன்வாருங்கள்’ என்று அழைத்த போது அவரை “துரோகி” என வர்ணித்த கூட்டமைப்பினர் இப்பொழுது அந்த முறையையே அறுதியும் இறுதியுமான தீர்வாக ஏற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபக்கத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வைக் காண்போம் என தமிழ் மக்களை ஏமாற்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய மைத்திரி – ரணில் குழுவினர் இதற்கு மேல் எதனையும் செய்யப் போவதில்லை என்ற நிலையே உள்ளது.

மாகாணசபை முறைமையைத் தன்னும் அரசும் கூட்டமைப்பும் சேர்ந்து உண்மையாக நடைமுறைப்படுத்தினார்கள் என்றால் அதுகூட பரவாயில்லை. ஆனால் கூட்டமைப்பினர் ஒருபக்கத்தில் தமக்குப் பிடித்தமான இன்றைய நவ தாராளவாத அரசை ஆதரித்துக் கொண்டு, மறுபக்கத்தில் இந்த அரசு தமிழருக்கு நிறையச் செய்ய இருந்ததாகவும், ஆனால் மகிந்த தலைமையிலான சிங்கள இனவாதிகள் குழப்பிவிட்டதாகவும் வழமைபோல தமது பிரச்சாரத்தைச் செய்துகொண்டு அரசியல் பிழைப்பு நடாத்தவே முற்படுவர் என்பது திண்ணம்.
மகிந்த தரப்பினர் எதிர்ப்பு கிளப்பினாலும், நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மற்றும் பல்வேறு வகைச் சட்டங்களை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது போன்று இனப் பிரச்சினை விடயத்திலும் தாங்கள் விரும்பும் தீர்வை அரசைக் கொண்டு நிறைவேற்றலாம் தானே என்று யாராவது கேட்டால் அதற்கு கூட்டமைப்பினரிடம் எந்தப் பதிலும் இருக்காது.

மொத்தத்தில் ஆராய்ந்து பார்த்தால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பிலும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை. பழைய ஒற்றையாட்சி அமைப்பே புதிய வகையில் நிலை நிறுத்தப்படப் போகின்றது.

இதற்கான உண்மையான காரணம், பலரும் கருதுவது போல புதிய அரசியல் அமைப்பு என்பது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்படவில்லை. அதன் பிரதான நோக்கம் தற்போது பதவியில் உள்ள முதலாளித்துவ நவ – தாராளவாத அரசு மேலும் மேலும் சர்வதேச முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. இது கூட்டமைப்பினருக்கும் தெரியும். இருந்தாலும் தமிழர் பிரச்சினைத் தீர்வைவிட இன்றைய நவ – தாராளவாத அரசைப் பாதுகாப்பதே அவர்களது நோக்கம் என்பதால், அவர்கள் அரசுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்களேயொழிய, தமிழ் மக்கள் பிரச்சினைத் தீர்வுக்காக இன்றைய அரசுடன் போராடப் போவதில்லை.

எனவே தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வதானால், தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் அதைத் தமது கையில் எடுத்துப் போராடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.
   Source: வானவில்-vaanavil-72_2016

No comments:

Post a Comment

New book tells untold story of Sri Lanka’s 2009 victory at UN Human Rights Council- By P.K.Balachandran

Colombo, September 12: For the first time since Eelam War IV ended nearly eight years ago, a book entitled “Mission Impossible: Gen...