பயிரை மேய்ந்த வேலிகள்.(31) (32) By Raj Selvapathi9198_n


புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால்
இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்
அத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும் இத்தொடரை வழங்கியிருந்தேன்.இத்தொடர் கசப்பான சம்பங்களை மறக்க முயற்சிப்பவர்களிடத்தில் வேதனையை மீண்டும் கிளறிவிட்டதையும் புலிகளின் தீவிர அபிமாணிகளை மனவருத்தமடையவும் செய்துள்ளது. உங்கள் அனைவரினதும் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ளவும் முடிகின்றது.

கடுமையான ஆட்சேர்ப்பு காலப்பகுதியில் நடந்த ஏனைய முக்கிய சம்பவங்களான,
1.இளைஞர்கள் தப்பிக்க உதவிய வைத்தியர்கள்.
2.கட்டாய ஆள்பிடிப்பாளர்களால் செய்யப்பட்ட பாலியல் சேட்டைகள், வன்கொடுமைகள், சதிராட்டங்கள்
3. மக்கள் படை, எல்லைப்படை, துனைப்படை,கிராமிய படை தொல்லைகள்
4.அன்பு முகாம் கொடுமைகள்
5. பணம், பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொண்டு இளைஞர்களை தப்பிக்கவிட்ட புலிப்பொறுப்பாளர்கள்.
6.கிளிநொச்சியில் இருந்து ஐ.நா வெளியேற்றத்தின் போதும் அதன்பின்பு நடந்தவை.
7. ஐ.நாவின் வெளியேற்றத்துடன் முற்றுமுழுதாகவே புலிகளின் கைகளில் சிக்கிக்கொண்டவர்கள், 2009மே வரை எதிர்கொண்ட வன்கொடுமைகள்.
என ”பயிரை மேய்ந்த வேலிகள்” தொடரில் இதுவரை சொல்லப்படாத விடையங்கள் முடிவில்லாமல் தொடருவதாலும் சிலர் இதனை வேறு விதத்தில் வெளிக்கொண்டுவர முயன்றுள்ளதனாலும் இன்றுடன் இங்கு முக நூலில் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைக்கின்றேன்
முகநூல் சுவாரஸ்யத்துக்காக மிக சுருக்கமாகவே 32 பகுதிகளையும் இதுவரை எழுதியுள்ளேன். இவற்றினை விரிவாகவும் மேற்குறிப்பிட்ட இதுவரை எழுதப்படாதவற்றையும் அவர்களுக்காக எழுதலாம் எனவும் நினைக்கின்றேன்.
நன்றி
Rajh Selvapathi

பயிரை மேய்ந்த வேலிகள்..(31)
*********************************************
(மாங்குளம் பெண்ணுக்கும் அபயமளித்த கிருஷ்ண பரமாத்மா )
1990களின் பின் புலிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,
1.புலிகளின் உயர்மட்ட தலைவர்கள், அரசியல், புலனாய்வு பிரிவினர். போர் படையனிகளின் தளபதிகள், காவல்துறையினர், நிதிதுறையினர், நீதிதுறையினர், நிர்வாக சேவையினர் என ஊருக்குள் புலிகள் என்ற பெயரில் திரிந்தவர்கள்.
58423_n3508_n

2.தாக்குதல் படையணிகளை சேர்ந்த ஊருக்குள் அவ்வளவாக தென்படாத போராளிகள்.
இந்த முதல் வகையினர் சமாதானகாலத்தில் புலம்பெயர் தமிழர்களுடன் மிக நெருக்கமாகி புலிகள் இயக்கத்தையும் அதன் தலைமையும் முழுமையாகவே தாயக மக்களை குறிப்பாக தமது கட்டுப்பாட்டில் இருந்த மக்களை ஒரு பொருட்டாகவே கருதவிடாமல் செய்தார்கள். தாயகத்தில் எஞ்சியிருந்த யாழ் -வசதியான உயர்குல பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவர்களையும் முதன்மை படுத்ததொடங்கினர். வெளிநாடுகளில் சகோதர்கள் அதிகமாக உள்ள யாழ் பெண்களை இவர்கள் காதலித்தோ, கட்டாயப்படுத்தியோ, சலுகைகள் வழங்கியோ திருமணம் செய்துகொண்டனர். சொகுசு மாளிகைகள் கட்டிக்கொண்டு சொகுசு வாகனங்களில் தங்கள் குடும்பங்கள் சகிதம் கிளிநொச்சியில் வலம் வந்தார்கள். கிளிநொச்சியில் இடம் கிடைக்காதவர்கள் புதுக்குடியிருப்பு , விசுவமடு என வீடுகளை கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர்.

இந்த வகையரா புலிகளே நான்காவது ஈழப்போர்ல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாந்தை-மன்னார், வவுனியா-வடக்கு, வடமராட்சி கிழக்கு மக்களின் அழிவுக்கும் புலிகள் இயக்கதினையும் அதன் தலைமையையும் அவல நிலைக்கும் காரணமானார்கள் என்றால்கூட மிகையாகாது.
10615_n
இந்த வகையை சேர்ந்த புலிகளின் கட்டாய ஆட்பிடிப்பாளர்கள் ஆடிய சதிராட்டம், அப்பாவி மக்கள் மீது அவிழ்த்துவிட்ட அராஜகங்கள் வார்த்தைகளால் கூறமுடியாதவை இருந்தன. அரசியல்வித்தகர்கள், இராணுவ நிபுணர்கள், ஆய்வாளர்கள் மட்டுமல்லாமல் சாதாரன பொது மக்களே புலிகளின் அழிவை இப்போது எதிர்வுகூறத்தொடங்கியிருந்தார்கள்.
புலிகளின் ஆட்கடத்தலுக்கு அஞ்சி பாடசாலைக்கு செல்லாமல் ஒழிந்திருந்த இளம் பெண் ஒருவர் தனது வீட்டு கிணற்றில் குழித்துக்கொண்டிருப்பதாக தகவல் அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்கடத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரபல ஆட்கடத்தல் மன்னனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கே உரிய மாதாந்த உபாதைக்கு முகம்கொடுத்த அந்த பிள்ளை தொடர்ந்து ஒழிந்திருக்க முடியாமல் தனது வீட்டு கிணற்றுக்கு சென்று குளிப்பதற்கு முயன்ற வேளை புலிகளின் ஆட் கடத்தல் குழு பறந்து வந்திறங்கியது.
பதறிப்போன தாய் மகளை காப்பாற்ற ஓடிச்சென்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். ”வீட்டினுள்ளேயே ஒழித்து வைத்துவிட்டு எங்களுக்கே கதைவிடுகின்றாயா” என ஆத்திரத்துடன் பாய்ந்து சென்ற புலிகள் அந்த பிள்ளையை பிடித்துக்கொண்டு வந்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். பிள்ளையின் எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் அந்த பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்துவந்தனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அந்த பெண்பிள்ளையின் மேல் ஆடை கிழிந்துவிட்டது. வேறு ஒரு சட்டையை கூட மாற்ற அனுமதிக்காத ஆட்கடத்தல் குழுவினர் அந்த பிள்ளையை அப்படியே தூக்கி வாகனத்தில் ஏற்றிவிட்டனர்.

துகிலுரியப்படும் திரௌபதையை காப்பாற்றியது போல் அந்த பிள்ளையையும் காபாற்ற இன்னும் ஒரு புலியாகவே கிருஷ்ண பரமாத்மா வந்திருக்க வேண்டும். திடீரென்று அந்த அராஜக செயலில் ஈடுபட்ட ஆட்கடத்தல் குழு எதிர் பார்க்காத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அந்த வீதிவழியே மோட்டார் சைக்கிலில் சென்றுகொண்டிருந்த கடாபியின் படைத்துறை பள்ளியை சேர்ந்த புலிஉறுப்பினரான எழில்வாணன் என்பவர் இதந்த மகா பாதக செயலை கண்டுவிட்டார். மிகவும் கோபமடந்த அந்த மனிதர் நேராக குழுவின் தலைவனான பிரபல புலியிடம் சென்று சென்று அந்த பிள்ளையை விடுமாறு கூறினார்.
ஆனால் அந்த துடுக்குத்தனமான புலி தான் தமிழ்ச்செல்வன் காலத்திலிருந்தே உயர் பதவிநிலைக்குரியவர் எனக்கூறி எழில்வாணனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட தொடங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த எழில்வாணன் தந்து இடையில் இருந்த பிஸ்டலை உருவி அவனின் நெற்றிப்பொட்டில் வைத்துவிட்டதுடன் உடனடியாகவே அந்த பெண்பிள்ளையை விடவில்லை என்றால் இங்கேயே உன்னை சுட்டுவிடுவேன் என்று மிரட்டினார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பிரபல பிள்ளைபிடியாளன் தன் முன்னே நிற்பது யாரோ ஒரு மேல் மட்ட புலி என்பதை உணர்ந்து சுதாகரித்துக்கொண்டதுடன் அந்த பிள்ளையை வாகனத்தில் இருந்து இறக்கி விட்டு அங்கிருந்து விரைவாகவே சென்று மறைந்திருந்தார்.
இப்போது அந்த குடும்பத்தினர் கிருஷ்ண பரமாத்மா போன்று தமக்கு அபயமளித்த புலியை நன்றியுடன் பார்ப்பதா அல்லது பிரபல பிள்ளை பிடியாளனான பாப்பாவை திட்டுவதா என்று குழப்பியிருந்த நிலையில் பின்னாட்களில் இந்த பாப்பா போர்களத்துக்கு அனுப்பபட்டபோது தனக்கு தானே காலில் வெடிவைத்துக்கொண்டு அங்கு கொல்லப்படுவதில் இருந்து தப்பித்து பத்திரமாக இராணுவத்திடம் சரணடந்ததாக மக்கள் கூறிக்கொண்டிருந்தார்கள்.
தொடரும்..
(குறிதப்பியதால் உருக்குலைந்த குடும்பம்)
ஆகஸ்ட் 14, 2006ம் நாள் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சிமுகாம் மீதானதாகுதலை தொடர்ந்து , மாணவர்களை மாணவர்களாகவே வைத்து போர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை புலிகள் கைவிட்டனர். ஆனால் பாடசாலைகளில் மாணவர்களை தங்களுடன் இணைந்து கொள்ள செய்வதற்கான சகல வழிகளையும் இப்போது அவர்கள் கையாள தொடங்கியிருந்தனர். தமது ஆதரவு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர்நிலை பொறுப்பாளர்கள் என அனைவரையும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
இவ்வாறு பாடசாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பலர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையே நிறுத்தியிருந்தனர். இளம் ஆண்களும் பெண்களும் வெளியே தலைகாட்டுவதே அரிதாகியிருந்தது. அவர்கள் வெளியே வந்தால் கடத்தி செல்லப்படுவதற்கான ஆபாத்தான சூழ்நிலையே காணப்பட்டது. சில பெற்றோர்கள் வெளியே செல்வதையோ அல்லது வேலைகளுக்கு செல்வதையோ கைவிட்டு வீடுகளிலேயே பிள்ளைகளுடன் தங்கி, தங்கள் பிள்ளைகள் பிடித்து செல்லப்படுவதை தடுக்கலாம் என எண்ணினர்.

இவ்வாறான சூழலில் கிளிநொச்சியில் நடந்த ஒரு பரிதாபகரமான சம்பவம் , சாதாரண பொது மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
நவம்பர் 02, 2006 அன்று மதியம் 2.30 மணியளவில் கிளிநொச்சி வானில் பிரவேசித்த இலங்கை விமானப்படையின் தரைத்தாகுதல் விமானங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 மீற்றர் தொலைவில் கோரத்தாக்குதலை மேற்கொண்டன. அதிர்ச்சியில் வைத்தியசாலை ஓடுகள் உடைந்து விழுந்தன, அங்கிருந்த நோயாளிகளும் பயத்தில் அவசரமாக வெளியேறத் தொடங்கினர்.

ஆனால் தாக்குதல் நடந்த பகுதியான ஆனந்தபுரத்தில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்துபேர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். முருகேசு மார்க்கண்டு (62), அவரது சகோதரன் முருகேசு சண்முகரத்தினம் ( 56) இவர்களின் சகோதரி ரத்தினம் சரஸ்வதி (59) ஆகியோருடன் சண்முகரத்தினம் சசி (20) சண்முகரத்தினம் கிரிஷாந் (18) ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட உயர்தரத்தில் கல்வி கற்ற சகோதரர்களான இந்த இரு இளைஞர்களும் பாடசாலையில் வைத்து புலிகளால் பிடித்து செல்லப்படுவதை தவிர்ப்பதற்காக பல மாதங்களாக வீட்டில் மறைந்து இருந்தவர்களாவர்.

ஆசிரியான இந்த இளைஞர்களின் தாயாரும் , இளைய சகோதரியும் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பாடசாலையில் இருந்தமையால் அவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.
கிளிநொச்சி நகரில் இருந்து 10Km தொலைவில் உள்ள , புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்துவதாக நினைத்துக்கொண்டு 1.5 Km தூரத்தில் உள்ள ஆனந்தபுரத்தில் தாக்கியதால் அவர்களின் குடும்பமே கொல்லப்பட்டது. விமானதாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினால் புலிகளால் பிடித்து செல்லப்படும் நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்களிடம் எமன் இஸ்ரேலிய தயாரிப்பு கிபிர் விமானம் வடிவில் வந்து விட்டான். ஒரு நொடியில் ஒரு குடுமபத்தை சேர்ந்த ஐவரும் தசைத் துண்டங்களாக பிய்த்தெறியப்பட்டனர்.
வள்ளிபுனம் அனர்த்ததை தொடர்ந்து சிலமாதங்களில் கிளிநொச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் பெரிதும் பதட்டமடைந்ததுடன் தமது பாதுக்கப்பற்ற சூழ்நிலை குறித்து மிகுந்த அச்சம் கொள்ளத் தொடங்கினர்.
இவர்கள் கல்வி கற்ற பாடசாலையில் இருந்த சில ஆசிரியர்கள் போன்றே, பல ஆசிரியர்களும் கிளிநொச்சியிலும் , முல்லைத்தீவிலும் புலிகளின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் தீவிர ஆதரவாளர்களாகவும் செயற்பட்டு புலிகளில் செயற்பாடுகளை பாடசாலைகளில் அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் காலப்போக்கில் தாம் பிடித்துக் கொடுத்த பிள்ளைகள் சில நாட்களிலேயே கொல்லப்படுவதை கண்டும், தமது சக இளம் ஆசிரியர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாலும், சில நேரங்களில் இவ்வாறு புலிகளுக்கு உதவியவர்களே புலிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டதாலும், தமது செயலுக்கு மனம் வருந்தி புலிகளுக்கு உதவுவதை கைவிட முயன்று கொண்டிருந்தனர்.
புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டுவிட்டால் அவர்களால் அதனை அவ்வளவு இலகுவாக விட்டு வெளியே வரமுடியாது என்பதற்கு இந்த ஆசிரியர்களும், புலிகளின் முகவர்களாக செயற்பட்ட மாணவர்களும், ஏனைய கல்விசார் பணியாளர்களும் விதிவிலக்காக இருக்க முடியவில்லை..


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...