பயிரை மேய்ந்த வேலிகள்..(29 ) (30)- raj Selvapathi

பயிரை மேய்ந்த வேலிகள்..(29)
*********************************************
(மாணவிகளை புலிகளாகவே அடையாளபடுத்திய அரசாங்கம்.)
முல்லைத்தீவு வைத்திய சாலையில் இருந்து வவுனியாவுக்கு இந்த மாணவிகளை கொண்டு செல்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம்- ICRC உதவியது. இந்த மாணவிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆரம்பத்தில் பல சிக்கல்கள் காணப்பட்டன. அக்காலத்தில் நிலவிய புலிகளின் போக்குவரத்து அனுமதி (பாஸ்) முறையினை இந்த அப்பாவி மாணவிகள் மீது கடுமையாக நடைமுறைப்படுத்த புலிகள் முயன்றனர்.
 720809_nபோக்குவரத்து அனுமதி (பாஸ்) வழங்குவது புலனாய்வு அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் குடும்ப விபரம் மற்றும் மீள திரும்பக்கூடிய சாத்திய தன்மை என்பவை பற்றி ஆராய்ந்தே முடிவெடுத்தனர். இதற்கென கிராமத்திற்கு கிராமம் சம்பளம் கொடுத்து ஆட்களையும் நியமித்திருந்தனர். இவ்வாறு சம்மபளத்துக்கு புலனாய்வு துறையுடன் வேலை செய்தவர்களாலேயே மக்கள் அதிகளவு சிரமங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவை சேர்ந்த புலிகளிடம் கூட கதைத்து பேசி அனுமதியை வாங்கிவிடலாம். ஆனால் இவ்வாறு சம்மபளத்துக்கு அங்கு வேலைசெய்தவர்களுடன் மக்களால் கதைக்கவே முடியாத நிலை காணப்பட்டது.
ஒருவர் பாஸுக்கு விண்ணப்பித்தால் அவருக்கான பதில் குறைந்தது மூன்று மாதங்களின் பின்பே வழஙக்ப்பட்டது. போக்குவரத்து அனுமதிக்கு விண்ணப்பிபவர்களின் சரித்திரமே திரட்டப்பட்டது. அவர் செல்லும் இடத்தில் உள்ள பல புலனாய்வு கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டது. அவர் கூறுவது உண்மையா எனவும் ஆராயப்பட்டது. இவை எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே ஆள்பிணையுடன் பாஸ் வழங்கப்படும். ( இந்த போகுவரத்து அனுமதி தொடர்பாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தொடரலாம் என்பதால் இத்துடன் இதனை நிறுத்துகின்றேன்)

மாணவிகள் விடயத்திலும் இந்நடைமுறைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. காயமடைந்த மாணவிகளின் உதவியாளர்கள் விடயத்திலும் இவ்விடயம் பின்பற்றப்பட்டது. காயமடைந்த குடும்பத்தில் அனைவரையும் அனுப்புவதில் தடை விதிக்கப்பட்டது. உதவியாளராக புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டது. ஆனால் மாணவிகளை ICRC அழைத்துச்செல்ல இருப்பதை உணர்ந்து கொண்ட புலிகள் அத்திட்டத்தை கைவிட்டனர். ஐ.நா. போர் நிறுத்த கண்காணிபு பிரிவினரின் நெருக்கடி காரணமாக மூன்று மாணவிகளையும் வவுனியாவுக்கு சிகிட்சைக்காக அனுப்பபட்டனர்.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு செல்லும்போது விசாரனைக்கு வரும் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் எப்படி உரையாட வேண்டும் எவ்வாறு அங்கு நடந்து கொள்ள வேண்டும் எனவும் காயப்பட்ட மாணவிகளுக்கும் அவர்களுடன் கூட செல்லும் உதவியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை புலிகள் வழங்கியிருந்தனர்.இங்கே முல்லைத்தீவில் எஞ்சியிருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மனதில் கொண்டு செயற்படுமாறு அவர்களுக்கு வெளிப்படையாகவே அவர்கள் கூறினார்கள். அத்துடன் வவுனியாவில் உள்ள புலிகளின் புலனாய்வு முகவர்களால் இந்த மானவிகளை கண்காணிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டது.

இவ்வாறு வவுனியாவுக்கு மேலதிக சிகிட்சைக்காக சிறிபதி கஸ்தூரி (18), தம்பிமுத்து தயாழினி(20), பாலசிங்கம் சுனேத்ரா(19) ஆகியோர் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும் இம்மாணவிகள் மேலதிக சிகிட்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்

அங்கு சிகிட்சை பெற்று வந்த இந்த மாணவிகளை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் செப்டம்பர் 01,2006ல் அறிவித்தனர். அதன் படி அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விமானதாக்குதலுக்கு உள்ளான இடம் செஞ்சோலை எனப்படும் அநாதை இல்லம் அல்ல எனவும் அது புலிகளின் பயிற்சி முகாம்தான் எனவும் அரசு தரப்பினர் இப்போது அடித்துக்கூறத்தொடங்கினர். மாணவிகளை கட்டாயப்படுத்தி தமது பயிற்சி முகாமில் ஆயுத பயிற்சியை வழங்கப்பட்ட புலிகளால் தடுத்து வைக்கப்பட்ட இவர்களை இனிமேலும் மாணவிகள் தாக்கப்பட்டார்கள் எனக் கருத முடியாது எனவும் அரசாங்கம் கூறினர்.

ஐ.நாவின் சிறுவர் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டதாக இந்த மாணவிகளின் வாக்கு மூலத்த சாட்சியாக வைத்து அரசாங்கம் ஐ.நா மீது நேரடியாகவே குற்றம் சாட்டியது. ( இந்த மாணவிகள் விவகாரத்துடன் அரசாங்கத்தரப்பினருக்கும் ஐ.நா சிறுவர் நிதியத்துக்கும் இடையிலான மோதல் உருவாகியதும் அது தொரபில் ஐ.நா எடுத்த இறுக்கமான நிலைப்பாடு எனபன இத்தொடரில் இருந்து விலகிச்செல்லவதாலும், மிக நீண்டதாக இருப்பதாலும் அதனை இங்கே தவிர்க்கின்றேன்)

அதன் பின் அந்த மாணவிகள் குணமடைந்த பின் மீண்டும் முல்லைத்தீவுக்கு செல்ல அனுமதிக்கப்படவும் இல்லை அவர்கள் அதனை விரும்பியிருக்கவும் இல்லை. மாணவிகள் கொல்லப்பட்ட துயர நிகழ்வுடன் மாணவ மாணவிகளுக்கான கட்டாய ஆயுத பயிற்சியை புலிகள் கைவிட்டனர். இப்போது மாணவர்களால் சற்று ஆறுதலடைய முடிந்தது. இந்த ஆறுதுக்காக அவர்கள் கொடுத்த விலை 53 மாணவிகளின் உயிரும் 129 பேரின் உடல் ஊனமும்.
மாணவ சமூகத்தின் இந்த ஆறுதல் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. அது தற்காலிகமானதாகவே இருந்தது. இப்போது வேறு விதமாக புலிகள் தமது ஆட்டத்தை தொடங்கியிருந்தனர்.
தொடரும்..
 


பயிரை மேய்ந்த வேலிகள்..(30)
*********************************************
(1995களியேயே ஆரம்பித்த புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு)
புதிய ஜனாதிபதி சந்திரிகாவுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு புலிகள் ஈழப்போர் III ஐ தொடங்கியபோதே அவர்கள் தமது படையணிகளில் ஆளணி பற்றாக்குறையை உணரத்தொடங்கியிருந்தனர்.


10615_n1990களின் ஆரம்பத்தில் புலிகளின் மக்கள் சார்பு கொள்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. முன்பு தாயக மக்களை முதன்மைபடுத்தியும் அனைவரையும் சமமாகவும் பாவித்துவந்தவர்கள் இப்போது புலம்பெயர் மக்களை முதன்மைபடுத்த தொடங்கியதுடன் தாயகத்தில் இருந்த மக்களையும் பிரதேசவாரியாக நோக்கத்தொடங்கியிருந்தனர். இதுவே இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் தமது இயக்கத்தில் மிகபெரிய பிளவை ஏற்படுத்த போகின்றது என்பதை அறியாமல் அவர்கள் பிரதேச வேறுபாடுகளை கையாளத்தொடங்கினர்.

1990களில் மக்கள் சார்புகொள்கையில் புலிகள் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை புலிகள் பின்வரௌமாறு மாற்றியிருந்தனர்.
1. புலம்பெயர் தமிழர்களை.
2. யாழ் குடாநாட்டில் இரணுவ கட்டுப்பாடில் வாழ்பவர்கள்.
3. தமது கட்டுப்பாட்டில் வன்னி பெரு நிலப்பரப்பில் (கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை, வடமரட்சிக்கிழக்கு) வாழ்பவர்கள்.
4. இராணுவ கட்டிப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் பகுதிகளில் வாழ்பவர்கள்.
5. மட்டகளப்பு-அம்பாரை-திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த கிழக்கு மாகாணத்தவர்.
வன்னிப்பகுதியை சேர்ந்தவர்களும், கிழக்கு மாகாணத்தவர்களுமே தமது படையணிகளில் அதிகளவு பங்குவகிப்பதாலும், புலிகள் அமைப்பில் அதிகளவில் இணைந்துகொள்வதையும் அவதானித்த புலிகள் யாழ்குடாநாட்டில் வாழ்ந்தவர்கள் இயக்க செய்ற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்கின்ற ஒருவித அதிர்ப்தியை வெளிபடுத்திவந்தனர்.
இதன் வெளிப்பாடாகவே கட்டாய ஆட்சேர்ப்பின் ஆரம்பவடித்தை ”பிரச்சாரம்” என்கின்ற பெயரில் 1994-1995 காலப்பகுதிகளில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கினர். இவர்களால் முதலில் குறிவைக்கப்பட்டவர்கள் மாணவர்களே. அப்போது யாழ்குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். தனியார் கல்வி நிலையங்களுக்கு பிரச்சாரத்துக்காக செல்லும் புலிகள் நாள் முழுவதும் மாணவர்களை பிடித்து வைத்து மூளைச்சலவை செய்து அவகளை இயக்கத்தில் சேர்க்க முயன்றனர். இளம்பருதி-பாப்பா-சிட்டு போன்றவர்கள் ஆரம்பத்தில் இவ்வாறான செய்ற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனாலும் தமது கல்வியிலேயே அதிக அக்கரை காட்டிய யாழ் மாணவர்களிடம் இவர்களின் முயற்சி கடைசிவரை வீணான ஒன்றாகவே இருந்தது.

பின்னர் யாழ்குடாநாட்டை 1995ல் ஆரசு படைகள் கைப்பற்றிக்கொண்ட போது பெருமளவில் மக்களை வன்னிப்பகுதிக்கு இடம்பெயர்ச்செய்வதில் இறங்கிய புலிகள் அதில் ஓரளவுக்குத்தான் வெற்றிபெற முடிந்தது. பெரும் எண்ணிக்கையிலான குடாநாட்டினர் தென்மராட்சியுடன் நின்றுகொண்டனர். வடமராட்சிக்கும் தப்பி சென்றுவிட்டனர்.வன்னிக்கு வந்த மக்களில் பெரும்பாளனவர்கள் புலிகளிடம் இருந்து தப்பித்து புலம்பெயரத்தொடங்கினர். அத்துடன் வவுனியா, கொழும்பு என குடியேற தொடங்கினர். 1996 ஜூன் 26ல் ஏற்பட்ட கிளிநொச்சி இடம்பெயர்வை சாதகமாக்கிக்கொண்டு மீண்டும் யாழ்குடாநாட்டுக்குள் தப்பிச்சென்றனர். காடுகள், கடல்வழியாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பிசென்றனர்.

இவ்வாறு தப்பிச்சென்ற ஒருவர் பின்னாட்களில் நான்காவது ஈழ்ப்போர் காலத்தில் வன்னிப்பகுதி மக்களி வதைபடுவதை பார்த்து லண்டனில் வைத்து இப்படிக்கூறினார்.
“ஒருவர் தியாகம் செய்தால்தான் அவரது வீடு வாழும், ஒரு வீடு தியாகம் செய்தால்தால் ஒரு ஊர் வாழும், ஒரு ஊர் தியாகம் செய்தால்தான் ஒரு நாடு வாழும், எனவே எமக்கு தமிழீழ நாடு கிடைக்க வேண்டும் என்றால் கிளிநொச்சி-முல்லைத்தீவு மக்கள் தியாகம் செய்யத்தான் வேண்டும். அவர்கள் கொல்லப்பட்டால்தான் உலகம் எங்களுக்கு தமிழீழம் பெற்றுத்தரும்”
ஆள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்த புலிகள் தங்கள் பிரச்சாரத்தை கிளிநொச்சி முல்லைத்தீவிலும் ஆரம்பித்தனர். இளம்பருதி,பாப்பா, சிட்டு,மற்றும் புலிகள் அமைப்பினையும் அவர்களது கலை பண்பாட்டு குழுக்களை சேர்ந்த பிரபல எழுச்சி பாடகர்களையும் இந்த பிரச்சாரத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர். வீதிகள் தோறும் வீதிநாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். பிரச்சார கொட்டகைகளை அமைத்து அவ்வழியால் போவோர் வருவோரை இயக்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த தொடங்கினர். சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக சிக்குகின்றவர்களை கடத்திச்செல்வதில் பாப்பா குழுவினர் இறங்கியியிருந்தனர்.

நெட்டாங்கண்டலை மையமாக வைத்து இயங்கிய பாப்பா குழுவினர் புத்துவெட்டுவான், மருதங்குளம், ஐயங்கன்குளம், பழைய முறுகண்டி, கோட்டை கட்டியகுளம், தென்னியங்குளம், தேராங்கண்டல் போன்ற காட்டுபகுதி கிராமங்களிலும் அவ்வழியே சென்றுவருபவர்கள் மீதும் தமது கைவரிசையை காட்டத்தொடங்கிருந்தனர்.

இந்த பிரச்சாரத்தில் கவரப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்ப்பவர்கள் தமது பயிற்சியை முடித்த பின் அங்கிருந்து தப்பி மீண்டும் வீடுகளுக்கு ஓடிவருபவர்கள் போன்று அனுப்பப்ட்டனர். ஊருக்குள் சென்று சில நாட்கள் ஒழிந்த்திருந்த்துவிட்டு மீண்டும் மெல்ல வெளியே வந்து ஊருக்குள் இருக்கும் இளைஞர்களையும் மூளைச்சலவை செய்து புலிகள் இயக்கத்துக்கு அழைத்துச்செல்லும் பணியினனை அவர்கள் செய்தனர்.
இந்த பிரச்சார குழுவினர் தனியார் கல்விநிலையங்களில் அதிக அக்கரை செலுத்தியிருந்தனர். வன்னேரிக்குளத்தில் ஒரு சிறுவனை இயக்கத்தில் சேர்க்க முயன்ற புலிகளுடன் நேரடியாகவே முட்டிக்கொண்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் நிர்வாக சேவை பொறுப்பாளராக இருந்த நாகேஸால் பிஸ்டலை காட்டி அச்சுறுத்தப்பட்டார். இவரை தடுத்துவைத்த புலிகள் அவருக்கான மரண அச்சுறுத்தலை நேரடியாகவே வழங்கியிருந்தனர்.
புலிகள் அமைப்பின் பணியாளர்களாக இருப்பவர்களையும் அப்போது பிரச்சாரத்துக்காக அவர்கள் இறக்கிவிட்டிருந்தனர். நிர்வாக சேவை, நிதி, நீதி, பொருன்மியம் போன்ற இடங்களில் சம்பளத்துக்கு பணியாற்றியோர் குறிப்பிட்ட நாட்களுக்கு இவ்வாறான பிரச்சார வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பாப்பா, சிட்டு போன்றவர்கள் ஆள் அரவம் அற்ற இடங்களில் சிக்கிகொள்ளும் இளம் ஆண்களையும் பெண்களையும் கடத்திக்கொண்டு புலிகள் அமைப்பில் சேர்க்க தொடங்கியும் இருந்தனர். சற்றுவரம்பு மீறி ஆட்கடத்தலில் ஈடுபடுவதை அறிந்த புலிகளின் மேலிடம் சிட்டுவை பிடித்து போர்களத்துக்கு அனுப்பிவிட்டனர். பினபு போரில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இவ்வாறு 1996லேயே தனது ஆட்டத்தை தொடங்கியிருந்த பாப்பாவுக்கு இப்போது 2006ல் கட்டாய ஆட்சேர்ப்புக்கு அதிக அதிகாரங்களுடன் தலைமையினாலேயே நியமிக்கப்பட்டால் சும்மா இருப்பாரா என்ன?
தொடரும்..

No comments:

Post a Comment

அரப் ஸ்பிரிங் (Arab Spring) முதல் காலிமுகத்திடல் ஸ்பிரிங் (Galleface Spring) வரை போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்குமா? இந்தப் போராட்டங்கள் யாருக்காக? BY த ஜெயபாலன்

  காலிமுகத்திடலில் அசௌகரியத்தை விரும்பாத உயர் மத்திய வர்க்கம் எரிவாயு, பெற்றோல் இல்லாமையால் போராட புறப்படுவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக...