பயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi

 (தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)

 


மனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.

இதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.


 2632_n
அதன் விளைவாகவே அவர்கள் கட்டாய ஆட் கடத்தலில் ஈடுபட தொடங்கியிருந்தனர். இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்களும் முன்னேற்றங்களும் அதிகரித்த அதேவேளை அதற்கு முகம் கொடுக்க முடியாமல் பல நூற்றுக்கணக்கில் தம்மால் பிடித்து போர்முனைகளுக்கு அனுப்பப்படுவோர் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததாலும் , ஒரு கட்டத்தில் தாங்கள் தோற்கப் போவதை உணர்ந்த புலிகளின் கண்முன்னேயே , அவர்களின் மனைவி பிள்ளைகளின் சுக போக வாழ்க்கை அச்சத்தை நோக்கி நிழலாடத் தொடங்கியிருந்தது. அவர்களை காப்பாற்றிக்கொள்ள இக் காலத்தில் புலிகள் மிக கொடூரமான முறைகளிலும் , ஆட்கடத்தல்களிலும் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
அப்படி கட்டாயமாக பிடித்து செல்லப்படுவோரின் ஆயுட்காலம் ஆகக் கூடியது சில வாரங்கள் மட்டுமே என்ற நிலையில், இப்போது புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் மக்கள் உச்ச கட்ட வெறுப்பில் இருந்தனர். அவர்களுக்கு சாபம் விடுவதும் கோயில்களில் பிரபாகரன் செத்து மடிய வேண்டும் என்று நேர்த்தி வைக்கவும் தொடங்கியிருந்தனர். இதனை அறிந்த புலிகள் , பிரபாகனை ஒழித்துக்கட்டும் மந்திரங்களை கோவில் அர்ச்சகர்கள் பிரயோகிக்கின்றனரா என ஆராய்வதில் ஈடுபடத்தொடங்கினர்.

தாங்கள் செய்யும் பாவங்கள் , தங்களையும் தமது தலைவரையும் பழி தீர்க்கும் என்று அஞ்சிய புலிகள், இப்போது ஒரு விபரீத கட்டளையை கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கியிருந்தனர். கடவுளுக்கு பூஜைகளை முடித்தபின்னும், அர்ச்சனையைகளை தொடங்கும் போதும் முதலாவது அர்ச்சனை தங்கள் தலைவர் பிரபாகரன் பெயரில் , அவரின் நீண்ட ஆயுளை வேண்டி செய்யுமாறு அர்சகர்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.

அனேகமாக கிளிநொச்சியிலும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், தங்களை பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியும் அவர்கள் எப்படியாது தப்பித்து வீடுகளுக்கு வந்துவிட வேண்டும் என்றும் , கிளிநொச்சியில் உள்ள கண்ணன் கோயிலில் ஞாயிற்று கிழமையும் விரதம் இருந்து பூஜைகள் செய்வதை வழமையாக்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அங்கு வருவோர் எண்ணிக்கை புதிது புதிதாக அதிகரித்த அதே வேளை, சிலர் தங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டமையால் தொடர்ந்து வருவதை நிறுத்தியும் இருந்தனர்.

வழமையாக மக்களின் பூஜைகளை செய்யும் அந்த கோயிலின் அர்ச்சகர் அன்று பிரபாகரனுக்காக நீண்ட நேரம் பூஜை செய்ததுடன் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
முதல் நாள் இரவு கிளிநொச்சி முருகன் கோயிலில் வசித்து வந்த அந்த குருக்களின் வீட்டினுள் புகுந்த புலிகள் அவருடைய இளைய சகோதரியை கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாகவும், போகும்போது மறக்காமல் தங்கள் தலைவரின் நீண்ட ஆயுளை வேண்டி பூசை செய்ய வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்துவிட்டுச் சென்றிருந்ததாகவும் அந்த குருக்கள் கண்ணீர் மல்க கூறிக்கொண்டிருந்தார்.

பிள்ளைகளை பிடித்துக் கொண்டு செல்லப்படுவோரின் பெற்றோர் குறிப்பிட்ட கண்ணன் கோயிலுக்கு சென்று தமது பிள்ளைகளுக்காக பூஜைகள் செய்வதை ஏதோ தங்களுக்கு எதிரான மாந்திரீக வேலைகள் ஈடுபடுவதாக நம்பிய புலிகள், அங்கும் தங்களுக்கு தகவல்களை சேகரிப்பதற்காக அவர்களின் தீவிர ஆதரவாளர்களை அனுப்ப தொடங்கியிருந்தனர்.

இப்போது கடவுள் கண்ணனும் அவர்களின் கண்காணிப்பு வலையத்தினுள் கொண்டு வரப்பட்டார். புலிகளின் ஆட்கடத்தலில் , நகருக்குள் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒருவனும் இப்போது அந்த கோயிலுக்கு வரத் தொடங்கியிருந்தான். தான் செய்த பாவ காரியத்துக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அங்கு வந்தானா அல்லது வேறு ஏதேனும் தீய நோக்கில அங்கு வந்தானா என்பது அவனுக்கும் கண்ணனுக்கும் மட்டுமே தெரியும் !
Rajh Selvapathi
தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...