
வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.
கிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.
இப்போது காடுகளுக்குள் ஆபத்தான விலங்குகளுடன் மிக அபாயமான மனிதர்களும் அங்கு இருந்தனர். இராணுவத்தினரின் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளின் அதிசிறப்பு தாக்குதல் படையினர் போன்றோர் காடுகளுக்குள் இரவு பகலாக அலைந்து திரிந்தனர். காடுகளுக்குள் வேட்டைக்கு செல்வோரின் தலைகளே கொய்யப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் புலிகளுக்கு பயந்து இளம் ஆண்களும், பெண்களும் காடுகளில் தஞ்சமடைய வேடியிருந்தது.
காட்டுக்குள் தென்படும் இரண்டாவது மனிதனை தங்களது எதிரியாகவே கருதி இராணுவத்தினரும், புலிகளும் வேட்டையாடிய அந்த அதி பயங்கர சூழலில் இந்த அப்பாவி இளைஞர்கள் அங்கே தமது பொழுதை கழிக்க தொடங்கியிருந்தனர். கிட்டத்தட்ட காட்டுப்பகுதிகள் அனைத்தும் ஆழ ஊடுறுவும் படைகளின் கட்டுப்பாட்டினுள் வந்த்திருந்த சூழலில் முறிகண்டி-ஜெயபுரம் வீதியும் மிக அபாயமான ஒன்றாகவே மாறி இருந்தது.
காட்டு ஓரங்கள் என்பதையும் தாண்டி ஆழ ஊடுறுவும் படையின் செயற்பாடுகள் கிளிநொச்சி நகர் வரை விரிவடைந்திருந்த நிலையில் புலிகளின் வாகனங்களின் நடமாட்டங்கள் மட்டுமல்லாது அவர்களில் வாகனங்கள் போன்று பச்சை நிறத்தில் உள்ள பொது மக்களின் வாகனங்களும் கிளைமோர் தாக்குதல்களுக்கு தப்பி பிழைக்க வேண்டியும் இருந்தது.
இவ்வாறான ஒரு கிளைமோர் தாக்குதலானது பிரபலமான முறிகண்டி பிள்ளையார் கோயிலில் இருந்து ஜெயபுரம் செல்லும் வீதியில் இரண்டு மைல் தொலைவில் நடந்தது. சம்பவத்தின் பின்னர் அந்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய புலிகள் அந்த பகுதியில் கட்டாய ஆட்கடத்தலுக்கு பயந்து ஒழிந்திருந்த கிளிநொச்சி பொன்நகரை சேர்ந்த 24வயது இளைஞனை ஆழ ஊடுறுவும் படையியினர் என்றுகருதி சுட்டுக்கொன்றுவிட்டனர். அவ்விளைஞனுக்கு உணவு கொண்டுவந்திருந்த அவனது தந்தையையும் ஆழ ஊடுறுவும் படைக்கு உணவளிப்பதாக நினைத்து பிடித்து சென்றுவிட்டிருந்தனர். பின் அந்த தந்தைக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது.
சில இளைஞர்கள் ஆழ ஊடுறுவும் படையினர், புலிகளில் விசேட தாக்குதல் படையணிகள் என்பவற்றை தாண்டி காடுகளுக்குள்ளாகவே தப்பி வவுனியாவுக்கு சென்றும் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் தப்பிப்பதற்கு சில நேரங்களில் ஆழ ஊடுறுவும் படையினரும், புலிகளின் விசேட படையினை சேர்ந்தவர்களுமே மனம் இரங்கி உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன. தங்களது எதிகாலம்தான் கேள்விக்குறியாகியுள்ளதே இவர்களாவது தப்பி பிழைத்து வாழட்டும் என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும்.
காடுகளுக்குள் இரவு நேரங்களில் தப்பிச்செல்லும் போது பிடிபட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு போர்களங்களங்களுக்கு அனுப்பபட்டவர்களும் உண்டு.கிளிநொச்சி வட்டக்கச்சியில் இருந்து ஒரு குடும்பம் தங்களது இரட்டை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக காடுகளுக்குளாக வவுனியாவுக்கு தப்பிசெல்லும் போது புலிகளில் சிறுத்தை படையினரிடம் பிடிபட்டுவிட்டனர். அந்த இரட்டை சகோதரகள் இருவருமே கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு போர்களகத்துக்கு அனுப்பபட்டிருந்தனர். பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதுடன் அவர்களின் தந்தை ”பங்கர்” வெட்டுவதற்காக ஆனையிரவு பகுதிக்கு நிரந்தரமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
கடுமையான இரவு பொழுதுகளை காடுகளில் கழித்த இளம் ஆண்களும் பெண்களும் அவர்களின் பெற்றோரும் தங்கள் வாழ்வில் விடிவு வராதா என கடவுள்களிடம் மன்றாட தொடங்கியிருந்தனர். அப்போது வைத்த நேர்த்திக்கடன்களுக்காக இன்றுவரை, கௌரிவிரதம், கந்தசஷ்டிவிரதம், கோயில்களின் திருவிழாக்களின் போது காவடி எடுத்தல் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அனேகமாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் கைகளில் கௌரிகாப்பு நூல் கட்டப்பட்டிருப்பதை இன்றும் கூட காணமுடியும்.
தொடரும்..
No comments:
Post a Comment