இலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்! -மகேஸ்


இலங்கை அரசாங்கம் சர்வதேசநாணய நிதியத்துடன் (International Monetary Fund)
முன்னேற்பாட்டு திட்ட ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்து, மிக ஆபத்தான சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது உரையாற்றிய பிரதமர் ரணில்,
அடுத்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாதிகளால் மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய
பொருளாதார தாக்கத்தால் இலங்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கே, இந்த ஒப்பந்தம்
செய்யப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.


ஏற்கெனவே படுமோசமான, மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ள
மைத்திரி -ரணில் அரசு, தற்போது சர்வதேச வட்டிக் கடைக்காரர்களான சர்வதேச நாணய நிதியத்திடமும், உலக வங்கியிடமும் இலங்கையை அடகு வைக்கும் கைங்கரியத்தில்
இறங்கி உள்ளதையே ரணிலின் அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது.
ரணில் எதிர்வு கூறுவது போல, அடுத்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மத்திய கிழக்கில்
குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என, எந்தவொரு மத்திய கிழக்கு நாடோ அல்லது இதர நாடுகளோ இதுவரை எவ்வித அச்சத்தையும் பகிரங்கமாக வெளியிட்டதாகத்தெரியவில்லை. அப்படியிருக்க ரணிலுக்கு மட்டும் இந்த 'ஐ.எஸ்.ஐ.எஸ். காய்ச்சல்' எப்படி
பிரத்தியேகமாக ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ரணில் ஐ.எஸ்.ஐ.எஸ்.
தீவிரவாதிகளை இவ்வாறு மிகைப்படுத்திக் கருதுவாரானால், அமெரிக்கா தலைமையிலான
வலுவான மேற்கு நாட்டு அணியும், ரஸ்யாவும் அந்த இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக
எடுத்து வரும் நடவடிக்கைகளால் அவர்களை முறியடிக்க முடியும் என, உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையை ரணில் மட்டும் நம்ப மறுக்கிறார் என்று அர்த்தமாகிறது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னேற்பாட்டு ஒப்பந்தம் செய்வதற்கு ரணில் சொல்லும் காரணம்  ஏற்புடையதன்று, பொய் என்று தெரிகிறது. இந்த ஒப்பந்தம் செய்வதன் நோக்கம், இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது இருக்கும் பாதியளவான சுயாதாரத்திலிருந்தும் கூட நீக்கி, ஏகாதிபத்திய சர்வதேச நிதி நிறுவனங்களின் தேர்ச்சில்லுடன் இறுகப் பிணைப்பதற்காகவே. ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல.

1953இல் டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகக் கொண்டிருந்த அன்றைய ஐ.தே.க. அரசில்
நிதியமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இதே
வேலையைத்தான் செய்தார். அவர் அன்றைய உலக வங்கி நிர்வாகத்தின் ஆலோசனையைக்
கேட்டு, மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசியை
நிறுத்தினார், தபால் - தந்தி - போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தினார். பாடசாலைப்
பிள்ளைகளுக்கு வழங்கிய மதிய உணவான பணிசை நிறுத்தினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் 1953 ஓகஸ்ட்
12ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. அந்த
போராட்ட அழைப்பை ஏற்று முழுநாடும் கொந்தளித்து எழுந்தது. அதன் காரணமாக
டட்லியின் அரசாங்கம் செயற்பட முடியாமல் போய், இறுதியில் அவர் தனது பிரதமர் பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. பிரதமர் ரணிலின் அரசாங்கம் இன்று எடுத்து வரும் நடவடிக்கைகளும் இலங்கையில் மீண்டும் ஒரு
ஹர்த்தால் போராட்டத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், எஸ்.டபிள்யு,ஆர்.டி.பண்டாரநாயக்கவாலும், அவரது
துணைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தில் கட்டி வளர்க்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும், இன்றைய ஐ.தே.க. அரசுடன் இணைந்துள்ள அந்தக் கட்சியின் ஒரு பகுதியினரும், எப்படி ரணில் அரசின் இந்த மக்கள் விரோத,
ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான்.
 மூலம் : வானவில் மார்கழி 2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...