கைதிகளும் கையறு அரசியலும்


கைதிகளும் கையறு அரசியலும்

எஸ்.எம்.எம்.பஷீர்

"இரட்சிக்கப்பட்ட பின்னரும் விசுவாசி, தொடர்ந்து பழைய பாவசுபாவத்தைப் பெற்றவராகவே இருக்கிறார். "
                                                                 வேதாகமம்  (1 யோவான்1:8, 1 கொரிந்தியர்3:1).


அண்மைக் காலமாக இலங்கையில் அதிகம் பேசப்படும் விவகாரமாக உள்ளது . நீண்ட காலம் சிறைகளில் வாடும் தமிழ்  கைதிகளின் விடுதலை பற்றிய விவகாரமாகும். தமிழ் "அரசியல்" கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படல் வேண்டும் என்று தொடுக்கப்படும் கோரிக்கைகளில் , போராட்டங்களில் கைதிகள் உட்பட  சிவில் அமைப்புக்கள் , தமிழ் அரசியல் கட்சிகள் ,  தமிழ் அரசியல்வாதிகள்  பிரபலம் பெற்ற எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் , தமிழ் கிறிஸ்தவ மத அமைப்புக்கள், அவற்றின் பிரதிநிதிகள் என்று நாளுக்கு நாள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எல்லாவற்றையும் விட  சிறைக் கைதிகளே கூரை மீதேறி போராட்டம் நடத்தினார்கள் , சாகும்வரையான  உண்ணாவிரத போராட்டத்தைக் கூட  நடத்தி இருந்தார்கள்.

கைதிகளின் குடும்பங்களும் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தின !

இவைகளின் பயனாய் , புதிய அரசு பலரை விடுதலை செய்திருக்கிறது. ஆனாலும் இன்னும் சிலர் சிறையில் இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் , விடுதலை கோரும் தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கைதிகளா , அல்லது பயங்கரவாத குற்றச்சாட்டில் வெறுமனே சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் எதுவுமின்றி பல்லாண்டுகளாக  சிறைகளில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களா, அல்லது குற்றம் நிரூபிக்கபப்ட்டு தண்டனை அனுபவிப்பவர்களா ?

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இதுவரை விசாரணை இன்றி , வழக்கு தொடுக்கப்படாமல் இருப்பார்களேயானால் , அவர்களை விடுவித்தே ஆக வேண்டும் என்பதும் அதில் உள்ள சட்ட சிக்கல்கள் இன்றைய அரசுக்கு மிக பெரிய சவால் அல்ல . அதற்கான சாதகமான சூழ்நிலைகள் காணப்படுகின்றன , சமிக்ஞைகள் காட்டப்படுகின்றன.

மறுபுறத்தில் குற்றம் சாட்டப்படாதவர்களை , சாட்சியங்களில் குறைபாடுள்ளவர்களை  விடுதலைக்காக  சட்டமா அதிபர் திணைக்கள அனுசரணை மூலம் விடுதலை செய்யலாம். 

ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் , குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனையை அனுபவிப்பவர்கள் யாவரையும் விடுவிப்பதென்பது பற்றிய விவகாரம் சர்ச்சைக்குரியது.

ஆனாலும்  அரசு,  பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது என்ற அடிப்படையில் மட்டுமே , தண்டிக்கப்பட்டோரை விடுதலை செய்ய எடுக்கும் முடிவு,  சட்டமும் அரசியலும் கலந்த அரசாங்கத்தின் முடிவாகும். அது சாத்தியமான கோரிக்கையும் அல்ல.  

அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கும்  , சிறை வைக்கப்பட்டவர்களுக்கும்  புனர் வாழ்வு  அளிக்க முற்படும் கருத்துக்களை விடுத்து , அவர்கள் யாவரும் அடிப்படை குற்றவியல் சட்ட கோட்பாடுகளின் படியும் , மனித உரிமை சட்ட விதிகளின்படியும் , இயற்கை  நீதியின் படியும் தாமதிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் கைதிகளை விடுதலை செய்வது குறித்து நாட்டின் ஜனாதிபதி சில தினங்களுக்கு முன்னர் , நாடாளுமன்றத்தில் முன்னைய ஜனாதிபதி காலத்தில் இடம்பெற்ற 12,000 புலிக்  கைதிகள் விடுதலைகளுடன் , புனர் வாழ்வு நடவடிக்கைகளுடன் , கருணா , பிள்ளையான் உட்பட்ட பலரை சுள்ளாப்புடன் சுட்டிக்காட்டி ,  கைதி விடுதலை குறித்து நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசி உள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள்  மீது தௌிவான ஆதாரங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் , அவர்களை விடுவிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று புலிகளால் ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்ட உயிர் தப்பிய சந்திரிக்கா சொல்கிறார். குற்றவாளிகள் யாவரும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதும் அவர்கள் யாரும் அரசியல் கைதிகளாக ஆகி விட முடியாது என்பதும்  விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்

ஆனால் அரசாங்கம் பயங்கரவாத சந்தேக நபர்களை ( இங்கு குறிப்பாக புலிகளை)  , அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முவைக்க தாமதித்த சட்ட தவறுகளுக்காக  தொடர்ந்து கைதிகளாக வைத்திருக்க முடியாது. அரசு அவர்களை விடுதலை செய்வதே சரியானது. ஆனாலும் அவர்கள் மீண்டும் பயங்கரவாத குற்றம் இழைக்க  மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இவர்களளின் விடுதலையைக் கோருவோர் பலர் தீவிரவாத கருத்தியல்களைக் கொண்டிருக்கின்றனர்.

கைதிகள் புனர்வாழ்வுக்குட்பட தயாரில்லை என்பதை  சொல்லி விட்டார்கள்.! அது சட்டப்படி பொருத்தமானதாகவும் தென்படவில்லை. 

இந்த நிலையில் தான்,  ஒரு மாணவனின்  தற்கொலை கூட இந்த "அரசியல்"  கைதிகளின் விவகாரத்தின் மீது மேலதிக கவனத்தை குவிய வைத்துள்ளது. கைதிகளின் விவகாரத்தில் அரசியல் அனுகூலங்களை பெற இந்த தற்கொலை பயன்படுத்தப்படுகிறது என்கிறார் டக்லஸ் தேவானந்த , அவரின் கருத்தும் கடந்த கால தமிழ் தேசியவாத அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு எச்சரிக்கையையும் விடுக்கிறது.

இந்த குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்க தமிழ் தேசிய வாதிகளும், தமிழ்  அரசியல் வாதிகளும் மத குருமாரும் தவறவில்லை.

அதிலும் , குறிப்பாக ஒரு சிலரின் அக்கறைகள் எச்சரிக்கையாகவும் , எரிச்சலூட்டுவனவாக உள்ளன.

கூரை மீது கைதிகள் நடத்திய போராட்டம் , கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியன சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது !  உண்ணாவிரதிகள் , திலீபனை போல , அல்லது வட அயர்லாந்து  கைதி பொபி சாண்டோஸ் போல உண்ணாவிரதமிருந்து செத்து விடக் கூடாது.

அரசுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களின் விடுதலையை பெற்று விடலாம் என்று தமிழ் தலைவர்கள் நம்பினார்கள் , அந்த முயற்சிகள் வெற்றி அளித்து வருகிறது. கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படும் கைதிகளின் செய்திகள் அதை உறுதி செய்கின்றன.      

இந்த நிலையில் ,தமிழ்  கைதிகளின்  போராட்டம் உண்ணாவிரதம் குறித்து இலங்கையில் உள்ள இந்து சைவ மத நிறுவனங்கள்  காட்டமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. முஸ்லிம்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. 

ஆனால் அருட்தந்தை சக்திவேல் என்பவர் சாகும்வரையான போராட்டம் நிறுத்தப்பட்டது குறித்து " தொடர்ந்து சாகும் வரையிலான போராட்டம் செத்தது. அதனோடு தமிழர் அரசியலும் கேள்விக்குறியானது." என்று ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இத்தனைக்கும் இவர்  ஒரு மத போதகர் , சாகும் வரை போராட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும் திலீபன் போல உண்ணாவிரதிகள் செத்திருக்க வேண்டும் , தமிழரின் தீவிரவாத  அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பமும் தொடர்ந்திருக்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறார் என்பது நன்கு புலப்படுகிறது.

அது மட்டுமல்ல  கைதிகளின் போராட்டத்துடன் தாங்கள் கட்டியிருந்த கோட்டைகளை தமிழ் அரசியல்வாதிகள் ( குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிதவாதிகள் தகர்த்துவிட்டார்கள் என்பதும் அவரின் கருத்தில் இருந்து புலப்படுகிறது.

தமிழ் சமூகம் புலிகளுடன் கைகோர்த்து அனுபவித்த துன்பங்களை , அழிவுகளை "அருட் தந்தைகள் " மீண்டும் நிகழ்த்த கங்கணம் கட்டி உள்ளார்கள் என்பதையே அவரின் (அருட்தந்தை சக்திவேல் ) "அருள் ததும்பும்" போதனைகள் -வார்த்தைகள் -  சொல்லுகின்றன.

"அரசு தீர்மானித்துள்ள பிணை, புனர்வாழ்வை அமைதியான முறையில் நாமும் ஏற்றுக்கொள்வதாயின் அரசியல் சிறைக்கைதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை, கடந்த கால எமது அரசியல் பயணத்தையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தியுள்ளோம். அதாவது, இன்னுமொரு அரசியல் ரீதியான முள்ளிவாய்க்கால் அழிவிற்கு எம்மை உட்படுத்தப்போகின்றோம் என்பதே பொருள்படுகின்றது."

அருட் தநதையின் இரண்டாவது முள்ளிவாய்க்கால் என்பது பிணை என்றும்  புனர்வாழ்வு என்றும் கைதிகள் அமைதியாக ஏற்றுக் கொன்டு விடுதலை செய்யப்படுவதாகும் . ஒரு சட்டப் பிரச்சினையை சட்டபூர்வமாக , அதிலும் இன்றுள்ள அரசு தமிழ் தரப்பு அரசியல் புரிந்துணர்வின் மூலம் சாத்தியமாகும் ஒரு சமாச்சாரத்தை அருட் தந்தை ஆட்சேபிக்கிறார். அரசியலாக்குகிறார்.

"தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலுள்ள  தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது." என்று அவர் குறிப்பிடுகிறார்.

உலகத் தமிழர் அமைப்பு , பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலம் பெயர் தமிழர்களை இணைத்துக் கொண்டு , அவர்கள்  தனிநாட்டு கோரிக்கையை (தந்தை இம்மானுவேல் )  கைவிட்டு விட்டார்கள் என்றும் , அவர்கள் வன்முறைக்கு இனி துணை போக மாட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் கூறி  புலிகளுடன்  தொடர்புடைய இயக்கங்கள் மீதான தடையை நீக்கி உள்ளன

இந்தப் பின்னனனியில், ஒரு புறத்தில் தேசியவாத சக்திகள் அவ்வாறான தடை நீக்கம் குறித்து , தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் சந்தேகங்களை  எழுப்புகின்றன.

மறுபுறத்தில்  அருட் தந்தை போன்ற தமிழ் தேசிய கடும்போக்காளர்கள் புலம்பெயர் அமைப்புக்கள் குறித்து, தமிழ் தேசிய வாதத்தின் அடிப்படையில்  சந்தேகங்களை  எழுப்புகின்றனர். மீண்டும் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை பிரிவினை வாதத்தை முன்னெடுக்கின்றனர்.

"2009 பொருட்சேதங்களை உயிர் அழிவை தமிழ் சமூகம் சந்தித்தது. ஆனால், கொள்கை ரீதியிலான அரசியல் சித்தாந்தத்தை அழிவிற்கு நாம் உட்படுத்தவில்லை. தற்போதைய அரசு சர்வதேச மற்றும் உள்ளக சக்திகளோடு இணைந்தும் இலங்கைக்கு வெளியிலென தமிழ் சமூகத்தை இணைத்துக் கொண்டும் அரசியல் அழிவைத் திட்டமிட்ட முன்நகர்த்துகின்றது. இது அரசியல் கைதிகள் விடயத்தில் தெளிவாகியுள்ளது"  என்று அருட் தந்தை கூறுகிறார்.

இப்பொழுது எமக்கு முன்னாள் உள்ள கேள்வி , புலம் பெயர் புலிகளின் தந்தைகளில்  ஒருவரான தந்தை இம்மானுவேல்  மனம் மாறி விட்டார் (அருட் தந்தை ) ஆகி விட்டார் என்று அரசு சொல்கிறது.

தந்தை இம்மானுவேல் இலங்கைக்கு விஜயம் செய்யப்போகிறார் என்கிறார்கள் .

இன்னுமொரு அருட் தந்தை சக்திவேல் கைதிகளின் விவகாரத்தில் உண்ணாவிரதிகள் செத்திருக்கக்  கூடாதா , போராடியிருக்கக் கூடாதா , மீண்டும் சரணாகதி முள்ளிவாய்க்கால் வேண்டுமா என்கிறார். அவரைப் பொருத்தவரை பேரருட்  தந்தை  இம்மானுவேல் ஒரு "துரோகி" ஆகி விட்டார். அருட் தந்தை சிங்கராயர் தொடக்கி வைத்த கிறித்தவ தமிழ் ஈழ கருத்தியல் கட்டுமானங்கள் மீண்டும் இன்றைய அருட் தந்தைகளால் புனரமைக்கப்படுகிறது. அவர்களின் அரசியலுக்குத் தேவை தமிழ் மக்களின் இன்னோரென்ன பிரச்சினைகள்தான்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...