Saturday, 5 December 2015

"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்" அபூ ஸய்யாப்

கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும் தமிழர் விடுதலை என்ற பெயரில் கடந்த மூன்று தசாப்த காலங்களுல் நடந்து முடிந்தவை அனைத்தும் நாம் அறிந்தவையே. இப்போதும் அதே விடுதலையின் பேரில் ராஜபக்ஸவையும் சிங்களைவனையும் பலிவாங்க வேண்டும் எனும் பேரவாவில் தமிழர் தரப்பு (இதில் படித்த, படிக்காத என்ற வேறுபாடு கிடையாது) முனைப்புடன் செயலாற்றுகிறது. தோல்வியின் பின் ஒருவனிற்கு ஏற்படும் உளவியல் குணாம்சம் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களிற்கும் ஏற்பட்டுள்ளது. இன்று இந்த மக்கள் நம்பி நிற்கும் மேற்குலகும் ஐக்கிய நாடுகள் சபையும் யார் என்பதை முஸ்லிம் உலகில் இவர்கள் செய்யும் அநியாயங்களையும் துரோகங்களையும் பார்த்து பாடம் படித்து கொள்ள வேண்டும். மாறாக மஹிந்தவை ஒழிக்க போய் மீண்டும் ஒரு முறை மாண்டு போய்விடக் கூடாது. அமெரிக்காவும் மேற்குலகும் இலங்கையை எப்போதும் அக்கறையுடன் அவதானித்துவருபவை. அதிலும் அமெரிக்கா இலங்கையை அதன் தளமாக மாற்ற வெகுநாட்களாக களஆய்வுகளை செய்து காலம் கனியும் வரை காத்திருக்கிறது.


இந்நிலையில் இலங்கை எனும் பொளத்த தேசம் சீனா எனும் பொளத்த தேசத்துடன் உறவாடுவது அமெரிக்க நலன்களிற்கு பாதகமானது. இந்த பிரச்சனைகளிற்கு எல்லாம் ஒரே வழி ஈழத்தை கிறிஸ்தவ தேசமாக மாற்றுவதே. தனித் தமிழீழம் கிடைத்தால் அது பாரதத்துடன் பிற்காலங்களில் இணங்கிப்போக வாய்ப்புண்டு. அதே ஈழம் கிறிஸ்தவ சிந்தனைகளை சுமந்த தேசமாக மாறினால் அது ஒரு குட்டி பிலிப்பைன்ஸ். இது தான் அமெரிக்காவிற்கு தேவை. அதற்கான அனைத்து வாயில்களும் இப்போது திறக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசங்களான கிறிஸ்தவ நாடுகளில் வாழும் டமிழ்ஸ் எல்லோருமே இன்று கொக்கோகோலா கலாச்சாரத்தில் ஊறிப்போயுள்ளார்கள். பேச்சு, நடை, உடை, பாவனை என எல்லாமே மேற்கத்தைய நாகரீகம். சொல்லப்போனால் இனகூறுகள் எனுமடிப்படையில் இவர்கள் தமிழ் பெயரை கொண்டிருப்பது மட்டும் தான் இவர்களது கடைசியிருப்பு. புலம்பெயர் தமிழர்களிற்கு மத்தியில் கத்தோலிக்கத்தை பரப்புவது இன்று பரவலாக இடம் பெறுகிறது. அவர்களும் அதை சில பல சலுகைகளிற்காக ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழர்களது இணையங்களில் கூட கிறிஸ்தவ பிரச்சார விளம்பரங்கள் பரவலாக இடம்பிடித்துள்ளன. இந்த கிறிஸ்தவத்தின் ஆதிக்கம், தமிழீழ போராட்ட வரலாற்றில் அன்று முதலே ஆதிக்கம் செலுத்தியே வந்துள்ளது. வணபிதா சிங்கராயர் முதல் இன்றைய இராயப்பு ஜேக்கப் வரை (அருட் தந்தை) ஈழ விடுதலை போராட்டத்தில் கனதியான பாத்திரங்களை வகித்துள்ளனர். இறுதி யுத்தத்தின் போது மடு மாதாவை வன்னிக்குள் கொண்டு சென்றதும் கொண்டு வந்ததும் கூட இதில் ஒரு அங்கமே. ஈழத்தமிழர்களிடையே கிறிஸ்தவ கோட்பாட்டை வளர்த்தல் எனும் செயற்பாடு சில வேளைகளில் மிக இரகசியமாகவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் செயற்படுத்தப்பட்டன. செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இதற்காக முனைப்புடன் கனடா, நெதர்லாந்து, நோர்வே போன்ற தேசத்து பிரச்சார அமைப்புக்கள் மிக நுட்பமாக தமிழர்கள் மத்தியில் களமிறக்கப்பட்டுள்ளன. ரெஸிடென்ட் விசாவிற்கு கத்தோலிக்கனாவதும், செங்கன் விசாவிற்கு புரட்டஸ்தாந்தாவதும் தமிழர்களிற்கு இன்று நத்திங். ஈழ பிரதேசம் கிறிஸ்தவ தேசமாவதும், கன்பூஷிய தேசமாவதும் நமக்கு அலட்டிக்கொள்ள வேண்டிய விடயங்கள் அல்ல. ஆனால் இதே ஈழத்து அன்றைய தமிழ் தலைமைகள் வடக்கு கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை இஸ்லாமிய தமிழர்கள் என்று ஒரு எல்லைக்குள் முடக்க முற்பட்டனர். பலமான தமிழரது சாதித்துவ பின் புலத்தில் வெள்ளாலரிற்கு கீழும் நலவரிற்கு மேலும் இஸ்லாமிய தமிழர் எனும் ஒரு இனத்தை புதிதாக உட்புகுத்தி உள்வாங்கினர். இஸ்லாமிய தமிழர் எனும் மாய வாதத்தின் ஊடாக முஸ்லிம்களின் தனித்துவம், சமவுரிமை, அதிகார பங்கீடு, நில பங்கீடு போன்ற இன்னோரன்ன விடயங்களை விழுங்கப்பார்த்தனர். தமிழ் மேலாதிக்க மனோபாவத்தினதும், தமிழ் குறுந்தேசியவாதத்தினதும் இந்த தந்திரமான அரசியல் மாய வலையில் நல்ல வேளை முஸ்லிம்கள் அகப்பட்டுக்கொண்டு விடவில்லை. இந்த சித்தாந்த தோல்வியின் விளைவே முஸ்லிம்கள் மீதான படுகொலைகளும், பலவந்த வெளியேற்றமுமாகும்.

சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு அங்கமாகிய இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை பொய்யான கருத்தியலை முன்வைத்து தமிழ் நாட்டு முஸ்லிம்ள் திடாவிடர்கள் போல் நீங்கள் இஸ்லாமிய தமிழர் என்றும், லெபனானில் மற்றும் பலஸ்தீனில் யூதர்களிற்கு எதிராக மண்விடுதலையை மையமாகக்கொண்டு கிறிஸ்தவர்களும் முஸ்லி்ம்களும் போராடுவது போல் சிங்களவனிற்கு எதிராக நீங்கள் களப்பலியாக வேண்டும் என்றும் பலவந்தப்படுத்தியது இந்த தமிழ் சமூகமே. அதாவது அது ஆதரித்த விடுதலை இயக்கங்களே. இந்த கீழ்தரமான இனத்துவ அரசியலை பாசிஸ புலிகளும் ஏனையவர்களும் முன்வைத்த போதும் செயற்படுத்திய போதும் சிவத்தம்பி உட்பட பல தமிழ் புத்திஜீவிகளும் அதை சரிகண்டே கருத்துக் கூறினர். தனித்துவ முஸ்லிம் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்துமென்றனர். ஆனால் இன்று இவர்கள் சார்ந்து நிற்கும் புலிபினாமிகளான தமிழர் கூட்டமைப்பு டக்ளஸ் தேவானந்வாவுடன் மல்லுக்கு நிற்கிறது. கருணாவுடன் முரண்படுகிறது. இன்றைய நிலையில் அதுவும் போராட்ட இயக்கங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் இவர்களது இந்த நிலைப்பாடு தமிழர் அபிலாஷைகளை பலவீனப்படுத்தாதா எனும் கேள்வி இங்கே எழுவது நியாயம் என்று நினைக்கின்றேன்.

வடபுல முஸ்லிம்களையும் தென்தமிழீழ முஸ்லி்ம்களையும் இஸ்லாமிய தமிழர் என வலுகட்டாயமாக ஒரு வட்டத்துள் கொண்டு வர நினைத்த இந்த இந்து பேரினவாதம் தான் இப்போது கிறி்ஸ்தவ அரசியலிடம் தன் கற்பை விலை பேசுகிறது. அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளும் விரும்பும் கிறிஸ்தவ சமஷ்டியிலோ அல்லது மாகாண அரசிலோ ஏன் ஈழத்திலோ வாழும் முஸ்லிம்களை இனிவரும் காலங்களில் இஸ்லாமிய கத்தோலிக்கர்கள் என்றா அழைக்கப்போகிறார்கள். அல்லாவிட்டால் இன்று உலகலாவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற நவ சிலுவையுத்தத்தின் வரிகளை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீதும் எழுதப்போகிறார்களா? நடக்கும் நிகழ்வுகளும் அசைவுகளும் அதைத்தான் செய்யப்போகிறார்கள் என்றே எண்ண வைக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் சொகுசு நோக்கிய வாழ்க்கையை குறி வைத்தவர்களாகவும் ”உலகம் உருண்டை, உருளை கிழங்கும் உருண்டை, உங்கள் வாப்பாவின் தலையும் உருண்டை, எங்கள் வாப்பாவின் தலையும் உருண்டை” என கிணறு அல்ல பாழுங்கிணற்றுத் தவளைகளால் தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்
மூலம் : நகர்வு ஜூலை 27, 2011

No comments:

Post a Comment

Wheeler Dealer Muslim Politicians and Helpless and Voiceless Muslim Community By Latheef Farook

The island’s Muslim community continues to suffer from political and religious leadership crisis .Unless the civil society come forward ...