இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் ! - இறுதிப் பாகம்.

எஸ்.எம்.எம்.பஷீர்
 
முன்னாள் மறைந்த கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் இந்தியாவில் உயர் கல்வி கற்றவர் . அங்குள்ள பிரபல ஒஸ்மானியா கல்லூரியை மனதில் கொண்டே  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு ஒஸ்மானியா என்ற பெயரை சூட்ட நினைத்தார். அவர் சூட்டிய பெயருடன் யாழ் முஸ்லிம் மக்களின் கனவுகளைச் சுமந்த ஒஸ்மானியா  கல்லூரி 1990 அக்டோபரின் புலிகளின் இனச் சுத்திகரிப்புடன் கலைக்கப்பட்டது.
 
மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் ஒஸ்மானியா பாடசாலை திறக்கப்பட்டு மீள் உயிர்ப்பு  பெற்று வரும் பொழுதில் திடீரென்று அமேரிக்கா கண்ணைத் திறந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது ஒரு சர்வேதச குற்றமான இனச் சுச்திகரிப்பாகும்.
 
சுமந்திரன் சொன்ன கையொடு சமந்தா (அமெரிக்கா)   சொன்னதும்தான் தமிழ் தீவிரவாத சக்திகள் விழித்துக் கொண்டார்கள். அமேரிக்கா விக்னேஸ்வரனுக்கு தனது அதிகார வல்லமையை   மென்மையாக காட்டியதும், அமேரிக்கா பிரபாகரனைக் காக்க வரும் என்று நம்பி ஏமாந்தது போல் மீண்டும் அமேரிக்கா தமிழர்களை ஏமாற்றுகிறது , இலங்கை அரசுடன் அனுசரித்து செல்கிறது. , தமிழ் தேசியக் கூட்டமைப்பும் , அதிலும் குறிப்பாக சுமந்திரனும் சம்பந்தனும் அமெரிக்க அரசின் ஏவலாளிகளாக செயற்படுகிறார்கள்  என்று  தமிழ் தீவிரவாத சக்திகள் புலம்பத் தொடங்கின. இந்த பின்புலத்தில்தான் தமிழர் பேரவையும் பிறப்பெடுத்துள்ளது.   
 
 "முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை கண்டித்து வட  மாகாண  சபை தீர்மான நிறைவேற்றாவிட்டால், உலகம் தமிழர்களின் இனப்படுகொலை கோரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாது என்று சுமந்திரன் வாதாடுகுகிறார் " என்கிறர்கள் சில தமிழ் அறிவுசீவிகள்.
 
சுமந்திரன் ஒரு  சட்டத்தரணி  என்பதை அங்கதத் தொனியில் சுட்டிக்காட்டி )  அவரின் அத்தகைய வாதாட்டம் அர்த்தமற்றது என்கிறார்கள்.
 
முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு இனச் சுத்திகரிப்பு என்று  பேசுவது சர்வதேச விசாரணைகளுக்கு தடங்கலாக அமையும் என்றும் , முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து  ஒரு தீர்மானம் இப்பொழுது தேவையா என்றும் , சுமந்திரனின் நேர்மையைக் குறித்தும் ,பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பும் தமிழ் அரசியல்வாதிகள் , அறிவு சீவிகள் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் குரல் கொடுத்தவர்கள் இல்லை என்பதை இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும்.
 
 
இங்கு காணிக்கப்பட வேண்டியது  புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியது  தமிழர்களின் பெயரால்  என்பதாகும். கிழக்கிலே தமிழ்-முஸ்லிம் வன்முறைகள் நடைபெறுகின்றன ,அதன் விளைவாய்  வடக்கிலும் முஸ்லிம்களுக்கு (தமிழர்களால்) அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றே முஸ்லிம்களை அங்கிருந்து பிரபாகரன் பாதுகாப்பாக தற்காலிகமாக அனுப்பி வைத்தார் என்று இன்றுவரை சொல்பவர்களை மனிதர்கள் என்றே சொல்ல முடியாது.
 
இவர்கள் வெளியேற்றத்தை தடுக்க முடியாமல் போன  பாரதியின் "நெட்டை நெடு மரங்களை " விட கேவலமானவர்கள்.
 
உண்மையில்  முஸ்லிம்களை தமிழர்கள் தாக்கி விடுவார்கள் என்பதற்காக பாதுகாப்பாக அனுப்பி வைத்ததாக சொல்பவர்கள் , பிரபாகரன் தங்களை (வடக்கு தமிழர்களை ) முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துமளவு கேவலமானவர்களாக , காட்டுமிராண்டிகளாக உலகுக்கு காட்டி உள்ளார்கள்  என்பதை  புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
 
ஒரு அபத்தமான காரணத்தை காட்டி தமிழர்களின் பெயரால் புலிகள் செய்த அநீதியை நியாயப்படுத்திய தமிழர்களே , தங்களை "சுய கருத்துச் சுத்திகரிப்பு" செய்ய வேண்டிய தருணமும் இதுவாகும்.
 
இந்நிலையில்தான் முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு என்று அழுத்தம் திருத்தமாகவும்  பகிரங்கமாகவும் கூறுவதும் ; முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு வருத்தம் தெரிவிப்பதும் (காலம் கடந்தாயினூம் ) சுமந்திரனை  ஒரு மனச்சாட்சி உள்ள ஒரு தமிழனாக (  ஒரு மனித உரிமை சட்டத்தரணி , ஒரு  (கிறித்தவ ) தமிழன் என்ற அடையாளங்களுக்கு  அப்பால்) வரலாறு பதிவு செய்யும்.
 
சிவ சிதம்பரம் சொன்னதில் சூட்சுமம் இருப்பினும் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறிய பின்னரே தான் யாழ் செல்வேன் என்ற அவரின் பிரதிக்கினை இன்றும் சிலாகித்துப் பேசுமளவுக்கு  உள்ளது.
 
முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை கண்டித்து வட  மாகாண  சபை தீர்மான நிறைவேற்றாவிட்டால் தமிழர்களின் இனப்படுகொலை கோரிக்கையை உலகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளாது என்று சுமந்திரன் சொல்வது " அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு " என்பதுபோல வாதிடுபர்களின் எதிர் வாதங்களில் நியாயமுண்டா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி
 
வடக்கிலே முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதி குறித்து மூச்சே திறக்காமல் இனவழிப்பு தீர்மானம் கொண்டுவந்த முன்னாள் நீதியரசரைவிட  சுமந்திரன் ஒரு நீதி செய்யக் கூடிய மனிதனாக , ஒரு நேர்மையான அரசியல்வாதியாக உயர்ந்து நிற்கிறார். 
 
 
இனவழிப்பு எனும் மனித குலத்துக் கெதிரான குற்றம் பற்றி 1948 ஆம் ஆண்டின் சர்வதேச இனவழிப்பு ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்பட்ட வட மாகான சபைத் தீர்மானம் 1956 ஆம் ஆண்டு   சிங்கள மொழிச் சட்டத்துடன் தொடங்கி புலிகளைத் தோற்கடித்த காலம் வரை  இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்தியதாக சொல்லப்பட்ட அடாவடித்தனங்களை அட்டவணைப்படுத்தியே இனவழிப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அப்படியானால்1990 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு நடந்த இனச் சுத்திகரிப்பு பற்றி இப்பொழுது பேசுவது பொருத்தமற்றது என்று எப்படிக் கூற முடியும்.
 
தமிழர்களுக்கு நடந்த அநீதிகளின் தோற்றுவாய் 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் ,அதுவே தமிழின அழிப்பின் ஆரம்ப புள்ளி என்று தொடங்கி 2009 வரையான சம்பவங்களைக் கோர்வை செய்து தீர்மானம் மேற்கொண்ட வட மாகாண சபைக்கு 1990இல் புலிகள் செய்த முஸ்லிம்களின் வெளியேற்றம் ஞாபகத்துக்கு வரவில்லை என்பது வட மாகான சபையின் அதிகார துஸ் பிரயோகமாகும். தமிழ் இனத்தின் பெயரால்  செய்யப்பட்ட வரலாற்று அநீதியாகும்.
 
புலிகளே முஸ்லிம் மக்களை வெளியேற்றியது அவர்களின் பாதுகாப்பு கருதியே என்று சொல்லி பல வருடங்கள் கடந்த பின்னர். அப்படி தாங்கள் சொல்லியது ஒரு அரசியல் அபத்தம்  என்று 10 ஏப்ரல் 2002 இல் அன்டன் பாலசிங்கம் சொல்லி " கடந்த காலத்தில் செய்த தவறுகளை மறப்போம் மன்னிப்போம் " என்ற சொன்ன பின்னரும் தமிழ் அறிவி சீவிகள் ,அரசியல் தீவிரவாதிகள் அசைந்து  கொடுக்கக் காணோம். 
 
2002 இல் புலிகள் அரசியல் அபத்தம் என்று தங்களின் முந்திய காரணத்தை சுய சுத்திகரிப்பு செய்து பொய்யாக்கியதும் , மன்னிப்போம் மறப்போம் என்று சொல்லி மன்னிப்பு கோரியதையும்  மறந்து 29 மே 2006 இல் 72 மணித்தியாலயத்தில் முஸ்லிம்கள் மூதூரை விட்டு வெளியேற வேண்டும் என்று புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளர் எழிலன் (இப்போதுள்ள வட மாகான சபையின் உறுப்பினரான ஆனந்தி சசிதரனின் கணவன் )   துண்டுப் பிரசுரம் வெளியிட்டதையும் , முஸ்லிம்கள் வெளியேறாத பொழுது ,பின்னர் , தகுந்த சந்தர்ப்பம் பார்த்து மூதூரைச் சுற்றி வளைத்து , பலவந்தமாக வெளியேற்றி இரண்டாவது தடவையாக முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு  செய்தவர்கள் என்பதையும் திட்டமிட்டு கவனத்தில் கொள்ளாது இன்று சுமந்திரன் வடக்கில் முஸ்லிம்கள் புலிகளால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டார்கள் என்று சொன்னதுக்காக "தாம் தோம் "என்று குதிக்கும் சகல தமிழ் அரசியல்வாதிகளும் , அறிவு சீவிகளும் உண்மையில் முஸ்லிம் விரோத இனவாதிகள் என்பதை நிரூபிக்கிறார்கள்.
 
சற்று திரும்பிப் பார்த்தால் ,
 
முன்னாளில் புளட் இயக்க உறுப்பினரும்  பின்னாளில் புலிகளின் பிரச்சாரகருமாக அறியப்பட்ட  புலிகளின் தலைவர் பிரபாகரனால் மாமனிதர் என்று கவுரவிக்கப்பட்ட தராக்கி எனும் சிவராம் "எல் ரீ ரீ யின் முஸ்லிம்  இனவழிப்பு"  ("The LTTE’s genocide of the Muslims" )என்ற தலைப்பிட்ட  தனது ஆங்கில எழுத்தாக்கம் ஒன்றில் புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனவழிப்பு நடவடிக்கை குறித்து எழுதி இருந்தார். புலிகள் முஸ்லிம்கள் மீது கிழக்கின் நடத்திய இனப் படுகொலை வடக்கில் நடத்திய இனச் சுத்திகரிப்பு எப்படி நன்கு திட்டமிட்ட வகையில் புலிகளால் செய்யப்பட்டது என்பதனை அதன் பின்னனிகளைப் பற்றி அவர் விரிவாக எழுதி இருந்தார். அந்த வகையில் முஸ்லிம்கள்  “இனச் சுத்திகரிப்பு” செய்யப்பட்டதை இதுகாலவரை   சிவராமும்   சுமந்திரனும் ( புலிகளின் அழிவின் பின்னராயினும்) மட்டுமே தமிழர்களுக்குள் வெளிப்படையாகச் சொன்னவர்கள்.(http://www.bazeerlanka.com/2015/02/blog-post_15.html)
 
புலிகள் கிழக்கிலே முஸ்லிம்களை  திட்டமிட்டு கொன்றழித்ததை சிவராம் ( தராக்கி )இனவழிப்பு என்று வெறுமனே சல்ஜாப்புக்கு சொல்லாமல் ஆதரங்களுடன் நிறுவியிருந்தார், தராக்கியின் அரசியல் நேர்மை குறித்து கேள்விகள் உண்டு ( நேரடியாக எனக்கு தெரிந்தவர் என்ற வகையில் கூட)  ஆனால் அவரின் இந்த பதிவுகள் அழுத்தமானவை.  இன்றைய இனச் சுத்திகரிப்பு சர்ச்சையில் அவசியம் நினைவு கூரப்பட வேண்டியவை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...