( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் !) - பாகம் இரண்டு





எஸ்.எம்.எம்.பஷீர்


"தவறு என்பது தவறி செய்வது! தப்பு என்பது தெரிந்து செய்வது ! தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் ! தப்புசெய்தவன் வருந்தியாகணும்!!"       (கவிஞர் வாலி) 

 "அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு"

02/01/2011 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட பொழுது சுமந்திரனுக்கு உரை நிகழ்த்த வழங்கப்பட்ட தலைப்பு "இரு சமூகங்கள்" (தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ).
அவுஸ்திரேலிய பேராசிரியர் அமீர் அலியும் அவரின் தந்தையும் காத்தான்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ;, அங்குதான் 1990 ஆகஸ்ட்டில்  புலிகள் முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட படுகொலையாட்டத்தை அரங்கேற்றினர்.

 
யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரசீன் மொஹமட் இமாம் , கவிஞர் அப்துல் காதர் பற்றிப்  பேசவில்லை , ஒருவேளை அவருக்கு அப்துல் காதர் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் , முஸ்லிம் தமிழ் ஒற்றுமை பற்றியே ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற தோரணையில் பேசினார்.  அவரின் பேச்சிலிருந்து அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருந்ததோ இல்லையோ , இமாமுக்கும் அன்றைய நிகழ்வின் நாயகன்   அப்துல் காதருக்கும் , அவர் பிரதிநிதுவப்படுத்திய "போராட்ட சிந்தனைகளுக்கும் " எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.     

இரு சமூகங்கள் பற்றி பேசும் பொழுது , அப்துல் காதர் லெப்பைக்கும் ஆப்ரகாம் சுமந்திரனுக்கும் (தமிழ்- முஸ்லிம்) தொடர்பு இருப்பதை சுமந்திரன் உணர்ந்திருக்க வேண்டும்! முஸ்லிம்களுக்கு புலிகள் செய்த அநீதிகள் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும்.!
அந்த நிகழ்வில் சுமந்திரன் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை புலிகள் கொன்றதற்காகவும் , பொதுவாக முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின்   தாக்குதல்களுக்கவும் வருத்தம் தெரிவித்தார். முஸ்லிம் தரப்பையும் முறுகல்களுக்கு குற்றம் சாட்டினார். அரசியல் ரீதியாக தமிழ் முஸ்லிம் உறவை  புதுப்பிக்க வேண்டிய தேவையையும் வெளியிட்டார்.  குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு முஸ்லிம்களின் ஆதரவு இன்றி சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார்.    

ஆனால் வழக்கம்போல  தமிழ் பத்திரிக்கைகளின் பிரசன்னம் இருந்தது . ஏதோ ஒரு பத்திரிக்கை செய்தியை சுற்றி வளைத்து எழுதியிருந்தது. ஆனால் பிரபல தமிழ் பத்திரிக்கைகள் எதுவும் அது பற்றி பிரஸ்தாபிக்கவில்லை. சுமந்திரனும் தப்பி விட்டார். இல்லாவிட்டால்   இப்பொழுது  குதித்தெழும் அறிவு  சீவிகள் அப்பொழுதே சுமந்திரனை ஒரு கை பார்த்திருப்பார்கள். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வருத்தம் சுமந்திரன் வருத்தம் தெரிவித்தாரா என்று தொடங்கி  வீர பாண்டிய கட்டபொம்மன் சினிமாப் பாணியில்  (மஞ்சள் அரைத்தாயா ..?)  கேள்விக் கணைகளை சுமந்திரன் மீதி ஏவி விட்டிருப்பார்கள் தமிழ் அறிவு சீவிகள்.

புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை  சட்டவியல்  சமூகவியல் வரைவிலக்கணங்களை விட்டுவிட்டு முஸ்லிம்களின் வெளியேற்றம் தவறு என்று சுமந்திரனுக்கு முன்னரே பலர் சொல்லியிருப்பதாக சில மேதாவிகள் சொல்லுகிறார்கள்.  

ஆனால் முஸ்லிம்களை வெளியேற்றியது தவறு என்று மட்டும் சுமந்திரன் சொல்லவில்லை ,  ஒரு படி மேலே சென்று இனச் சுத்திகரிப்பு  சர்வதேச சட்டப்படியான ஒரு குற்றம்  என்றும்  சொல்லி உள்ளார். முஸ்லிம்களுக்கு இழைத்த  குற்றத்துக்கு இன்றுவரை நியாயம் கற்பிக்கும் பல "பச்சை தமிழர்களின்  முகத்தில் ஓங்கி அறைந்துந்துள்ளார்.

புலிகளின் காட்டுமிராண்டித்தனத்தை ஒரு சர்வதேச குற்றச் செயல் என்று எந்த தமிழ் அரசியல்வாதியும் இதுவரை பகிரங்கமாக சொல்லவில்லை. அறமும் மறமும் தலைத்  தோங்குவதாக  சொல்லப்பட்ட புலிகளின் ஆட்சி அதிகாரத்தில் நடந்தேறிய மனித குலத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு காலத்திலோ , அதற்கு பிந்திய உடனடிக்காலப் பகுதியிலோ சுமந்திரன் அரசியலில் ஆதிக்கம் செலுத்தவில்லை , அண்மைக்காலம் வரை  சுமந்திரனும் வாய் திறக்கவில்லை. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் பலர் , அதிலும் குறிப்பாக புலிகளின் இயக்கம் அழிக்கப்படும்வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் உண்ணவும் பருகவுமே வாய்களைத் திறந்தார்கள். அல்லது வாய் திறந்த பொழுது புலிகளின் துதி பாடினார்கள் , ஆனால் புலிகளுக்காக  சுமந்திரன்  சாமரம் வீசியதாக அறியமுடியவில்லை.
 
வட மாகாண  இனவழிப்பு பிரேரணைக்கு முன்னரே கனடாவில் முஸ்லிம்களை  வெளியேற்றியது  சர்வதேசக்  குற்றம் என்று சொல்லியதையும் தமிழர்களின் மீதான இனவழிப்பினை முன்னெடுப்பது கடினம் என்பதையும்  பல தமிழ் அறிவு  சீவிகள் சவுகரியமாக  மறைக்கப்  பார்க்கிறார்கள் .  பிரபாகரனுக்கு பின்னர் உப்புச்சப்பென்று இருந்த தமிழர் அரசியல் நடவடிக்கைகளில் அதி தீவிரத்தை உண்டாக்கி இன வெறிக்கு வேள்வி நடத்தப் புறப்பட்டுள்ள விக்னேஸ்வரனை காப்பாற்ற தமிழ் அறிவு சீவி அசுரர்கள் பலர் புறப்பட்டிருக்கிறார்கள். ! சுமந்திரனை தங்களின் தேசிய விடுதலை வேள்விக்கு பலியிட முனைகிறார்கள் !.  
       
யாழ் தமிழ் மக்களைப் பொருத்தவரை தங்களால் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை தடுக்க முடியவில்லை என்பதை மக்களில் சிலர் சொல்லத்தான் செய்தார்கள். ஆனால் மக்கள் திரளாக திரட்சி பெற்று , அவர்களால் தடுக்க முடியவில்லை.

அந்த வகையில் முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை தடுக்க முடியாமல் போன மக்களின் நிலையை துரியோதனன் பாஞ்சாலியை  துகில் உரிந்த பொழுது நின்ற கையறு நிலையுடன் ஒப்பீடு செய்ய நேரிடுகிறது. துரியோதன அரச சபையில் நடந்த அதர்மத்தை தடுக்க முடியாமல் சபையிலே நின்று புலம்பிய சபையோரை பாரதி  பாடிய   " பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துனையாமோ " என்று சொன்னானே , அப்படித்தான் இவர்களையும் என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த இதிகாச சம்பவத்தின் பின்னணியிலேயே சுமந்திரனின் தமிழர்கள் பற்றிய கருத்தும் பார்க்கப்படல் வேண்டும். தமிழ் மக்கள்,  புலிகளின் ஈனச் செயலை ஒன்று திரண்டு தடுத்திருக்க வேண்டும் என்று சொல்லும் சுமந்திரனும் அந்த கால கட்டத்தில் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பை நேரடியாக காணக் கிடைக்காத போதும் கேள்வியுற்றேனும் ஒரு சாமான்ய தமிழராய் (அப்பொழுது அவர் அரசியல்வாதி இல்லை ) "பெட்டப் புலம்பலாயினும் " புலம்பினரா என்ற கேள்வியும் இங்கு எழாமலில்லை. !

தமிழ் மக்களில் பலர் கையறு நிலையில் இருந்தார்கள் என்று நான் அறிந்த செய்திகள் கூறுகின்றன. அந்த கால கட்டத்தில் நான் கொழும்பு வழக்கொன்றில் பிரதிநிதித்துவப் படுத்திய ஒரு யாழ்ப்பாணத தமிழ் பெண்மணி , முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து ,  தங்களின் கையறு நிலை குறித்து என்னிடம் வருத்தம் தெரிவித்தார். அது மாத்திரமன்றி புலிகள் முஸ்லிம்களின் உடைமைகளை  கபளீகரம் செய்தது பற்றியும் அவற்றினைக் கையாண்ட விதம் பற்றியும் மிகவும் விஸ்தாரமாகவே என்னிடம் அவர் கூறினார். ஆனால் இன்று பல தமிழர் அரசியல்வாதிகள் புலிகள் சொத்துக்களைப் பாதுகாத்தார்கள் என்று கதை அளக்கத் தொடக்கி இருக்கிறார்கள்

சுமந்திரன் முஸ்லிம்களுக்கு வடக்கில் நடந்தது இனச் சுத்திகரிப்புத்தான்  என்று எவ்வித சுதாகரிப்புமின்றி சுமந்திரன் சொன்ன கையோடு , அமெரிக்காவின் ஐ.நாவுக்கான தூதுவர் சமந்தா பவர் (Samantha Power ) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். அங்கு அவர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்ட கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 

சமந்தா பவர் , அமெரிக்காவின் ஒரு "பவர்புல்லான"  ஒரு ராஜீய அதிகாரி யாழ்ப்பாணத்துக்கு வந்து முஸ்லிம் கல்லூரிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தது மட்டுமன்றி அங்கு உரையாற்றும் போது 25 வருடங்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு நடந்தது என்று வேறு கூறி உள்ளார். அவ்வளவுதான் "விட்டேனா  பார்" என்று யாழ் ஊடகங்கள் அமெரிக்காவிற்கு எதிராக கொதித்து எழுந்தன !  (உள்ளூர சுமந்திரன் சந்தோசப்பட்டிருக்கலாம்) .     

அமெரிக்கா இலங்கை வட புல முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு சர்வதேசக் குற்ற நியமங்களை அனுசரித்து அங்கீகரித்துள்ளதே  என்று இலங்கை முஸ்லிம்களும் புளகாங்கிதம் அடைந்தார்கள்.!
 
அமெரிக்காவை பொருத்தவரை , இலங்கையில் முஸ்லிம்கள் அடிக்கடி அமெரிக்கா கொடியை எரிப்பது, அமெரிக்க தூதுவரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் பண்ணுவது என்ற ஒரு அமெரிக்க விரோத வரலாற்றைக் கொண்டவர்கள் ,  அதனை மாற்றி அமைக்க வேண்டிய ராஜீய தேவை அமெரிக்காவிற்கு உண்டு . இன்றைய அமெரிக்க  சார்பு இலங்கை அரசுடன் இஸ்ரவேல்  தூதுவராலயம் அமைக்கப்படும் சூழலில் ,   பவரின் " இனச் சுத்திகரிப்பு" கூற்று    முஸ்லிம்களை  குசிப்படுத்த பயன்படுத்தப்பட்ட "ஆளில்லா ஏவுகணை"  என்பதை பலர் புரிந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.!  முஸ்லிம் அரசியல்வாதிகள் அமெரிக்காவுடன் (பவருடன்  ) சேர்ந்து விருந்து உண்ணவே முன்டியடித்தார்கள். 
ஆனால் சுவாரசியமாக பல தசாப்தங்களை தாண்டி பின்னோக்கி பார்க்கின்ற பொழுது ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 

ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இஸ்தாபக உறுப்பினரும்  இஸ்லாமிய சோஷலிச முன்னணி (Islamic Socialist Front),  எனும் அமைப்பின்  தலைவருமான  மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் , முஸ்லிம்களுக்கென யாழில் ஒரு பாடசாலை என்பதே தனது முதல் இலட்சியம் என்று பிரதிக்கினை மேற்கொண்டு தான் கல்வி அமைச்சரானதும் ;  கல்வி அமைச்சராக பதவியேற்ற அன்றைய தினமே; தனது அமைச்சு அலுவலகத்தில் பிரவேசித்து; , இருக்கையில் அமர்ந்து மேசையில் இருந்த பேனாவை எடுத்து;  யாழ்ப்பாணத்தில் நிறுவப் போகும் கல்லூரியின் பெயர் "ஒஸ்மானியா" என்று எழுதி , அங்கு முஸ்லிம் பாடசாலை கட்ட ஒழுங்கு செய்தவர், அக் கல்லூரியைக் கட்டி முடித்தவர். 

27/12/2015 

தொடரும்….
 bazeerlanka.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...