இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும் "இனச் சுத்திகரிப்பு", எனும் பூமராங்கும் , இடையில் சிக்கிய சுமந்திரனும் இயலாவாளி முஸ்லிம்களும் !




எஸ்.எம்.எம்.பஷீர்

நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?”

                                               சுப்ரமணிய பாரதி  ( பாஞ்சாலி சபதம் )


அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர்  வட மாகான முஸ்லிம்களின் 25 வருட வெளியேற்றம் குறித்து நடத்திய  நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ்த் தேசிய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , புலிகளின் முஸ்லிம்  இனச் சுத்திகரிப்பு குறித்து சொன்ன  கருத்துக்களுக்காக -அபிப்பிராயங்களுக்காக -   அவரை அரசியல் சுத்திகரிப்பு செய்யும்  முயற்சியினை புலம் பெயர் தேசத்து தமிழர்களும்    உள்ளூர் புலம் பெயர் அறிவு சீவிகளும் தமிழ்த் தேசிய தீவிரவாத கோட்பாட்டாளர்களும்  தீவிரமாக செய்து வருகின்றனர்.


சுமந்திரன் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி குறிப்பிட்டதுடன்  விட்டு விடாமல் , கூடவே தமிழரின் "இனப் படுகொலை"யை சர்வதேசத்திற்கு  கொண்டு செல்ல முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய இனச் சுத்திகரிப்பும் தடையாக இருக்கிறது என்று சமாந்திர தார்மீக ஒப்பீடு செய்ததுதான் , பல தமிழ் அறிவு சீவிகளை அலற வைத்துள்ளது.
எழுத்தாயுதம் கொண்டு அவரைக் கீறிக்  கிழிக்க புறப்பட்டுள்ளார்கள் !

அவுஸ்திரேலியாவில் புலி மீண்டும் ஈழம் வரும் என்று அச்சுறுத்தி அவர் மீது பாய்ந்திருக்கிறார்கள். !

அரசியல்வாதிகளில் சிலர் தீயை மிதித்தது போல் அலறத் தொடங்கினர் , சுமந்திரனின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். 



இலங்கையில்  இன்றுவரை சளைக்காது , எவ்வித கழிவிரக்கமும் கொள்ளாது ,  புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்  முன்னாள் எம் .பீ அரியேந்திரனும்  தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார்.


அதிலும் மிக ஆச்சரியமாக ஆட்சேபனைக் கருத்தினை வெளியிட்டவர்களில் ஒருவர்  முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன்.       

" விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது பிழையான கருத்தாகும். இதனை அவர் கூறுவதன் மூலமாக தன்னை தானே சிலருக்காக சுத்திகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது " என்று குறிப்பிட்டிருந்தார் .

இலங்கையின் அரசியலில் மலையகத் தமிழர்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தைக் அழிக்க வட புல தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிகள் ஆதரவளித்த  பிரஜாவுரிமைச் சட்ட திருத்தங்கள்  மூலம் இலங்கையில் முதன்முதலில் அரசியல் ரீதியாக " இனச் சுத்திகரிப்பு" செய்யப்பட்டவர்கள்; நாட்டைவிட்டு துரத்தி அடிக்கப்பட்டவர்கள்  மலையகத் தமிழர்கள் என்பதை , மலையகத் தமிழர்களின் சந்ததியில் வந்த பிரபா கணேஷன் மறந்திருக்க மாட்டார். 

அவரைப் போலவே தமிழர்களாயினும் ஒரு தனிப்பட்ட தமிழ் பேசுகின்ற சமூகமாக திகழும் மலையகத் தமிழர் என்ற வகையில் இன்னுமொரு தமிழை பேசுகின்ற தனித்துவமான முஸ்லிம் சமூகம் , மதத்தின் அடிப்படையில் , வேறுபட்ட  ஒரு சமூகமாக கருத்தப்பட்டு வட புலத்தை விட்டு துரத்தப்பட்டதை - இனச் சுத்திகரிப்பு- செய்யப்பட்டதை அவர் மறுதலிப்பது என்பது விசனத்துக்குரியது.

இப்பொழுது தமிழ் தேசிய ஊடகங்கள் கூட தங்களின் பங்கிற்கு சுமந்திரனை சாடத் தவறவில்லை. ! 

இந்த மொத்த கருத்துக் குவியல்களில் சிக்கிய சுமந்திரனை விமர்சன தாக்குதல் நடத்தி அரசியல் சுத்திகரிப்பு செய்து தமிழ் அரசியலில் இருந்து  அவரை வெளியேற்றுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரல் போலவே தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர் முஸ்லிம்களுக்கு நடந்தது  ஒரு இனச் சுத்திகரிப்பு என்று சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தின் வரையரைக்குற்பட்ட குற்றம் ஒன்றினை புலிகள் மீது சுமத்தியதாகும் .  

முன்னர் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது , இனப்படுகொலைதான்  என்று குறிப்பிட்டதாக சொல்லும் சுமந்திரன் இப்பொழுது , அதன் சட்டக் கூறுகள் குறித்து சர்ச்சையைக் கிளப்பி இனப்படுகொலையை கேள்விகுட்படுத்துகிறார் என்கிறார்கள் சில புத்தி சீவிகள் ! 

ஆனால் , அண்மைக் காலமாக சுமந்திரனின் முஸ்லிம்கள் பற்றிய கருத்துக்கள்  தமிழர் தரப்பில் புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த அநீதிகள் குறித்து  தமது கவலைகளை வெளியிட்ட   தமிழர்களுக்கும்  , முஸ்லிம்களின் நியாயங்களை விளங்கிக் கொள்ளாத தமிழர்களுக்கும்  சுமந்திரன் மீது ஒரு கவனக் குவிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

2013ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி கனடாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனிடம் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் வட மாகாணத்திலே இருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றியது குறித்து நியாயம் கற்பித்து அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் என்ன கருதுகிறார் என்று கேள்வி தொடுத்த பொழுது சுமந்திரன் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு பற்றிக் குறிப்பிட்ட விடயங்களை இங்கு மீள நினைவு படுத்துதல் அவசியமாகிறது.  

"முழு மாகாணத்திலேயும் இருந்து ஒரு இனம் வெளியேற்றப்படுவது என்பது சர்வதேசச் சட்டத்தில் பாரிய ஒரு குற்றம் எங்களுடைய மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்ததென்று நாங்கள் சொல்லுகிறோம்  அது இன்னும் சர்வதேச சமூகத்தாலே ஏற்றுக் கொள்ளப்படவில்லை நிபுணர் குழு அறிக்கையிலே பேர்சிகியுசன்  -இன்னலுக்குட்படுத்தல்- (Persecution) என்ற சொல்லும் எக்ஸ்டேர்மினேஷன் (Extermination)   என்ற சொல்லும்  பாவிக்கப்பட்டிருக்கிறதே தவிர  ஜெனசைட் (Genocide) என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் எதினிக் கிலேன்சிங் -இனச் சுத்திகரிப்பு- (Ethnic Cleansing) என்பது வட மாகாணத்திலே நடந்தது என்பது பற்றி எந்தவிதமான சந்தேகமும் கிடையாது அது சர்வதேச சட்டத்தில் இனப் படுகொலைக்கு அடுத்ததான ஒரு தட்டு"  என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னரே , 2 ஜனவரி 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வாழும் பல்கலைக்கழக பேராசிரியரான அமீர் அலி தனது தந்தை எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து  அறிஞர் அப்துல் காதர் லெப்பையின் "போராட்ட சிந்தனைகள்" என்ற  பெயரில் ஒரு நூலை இலங்கை தமிழ் சங்கத்தில் வெளியிட்டு வைத்தார்.

தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பார்வையாளர் அரங்கில் நானும் அமர்ந்திருந்தேன். முன்னாள் தமிழர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இமாமும் உரையாற்றினார். அவர் தமிழ் கூட்டமைப்புக்கு தனது விசுவாசத்தை -தனக்கு எம்.பீ பதவி வழங்கியதற்காக - அந்த நிகழ்விலும் வெளிப்படுத்தினார். 

"அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு"  என்பது போலவே அவரின் பிரசன்னம் அங்கு காணப்பட்டது. 
தொடரும்
bazeerlanka.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...