மட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் ஜமாய்க்கப் போவது யாரு ?


எஸ்.எம்.எம்.பஷீர் 


“தேர்தல்களில் வெற்றிபெறுவது என்று வருகின்ற பொழுது இலட்சியவாதம் நடைமுறைவாதத்திடம் தோல்வியுறுகிறது” 
                                                               (டானி ஸ்ட்ரோன்- Danny Stron)


இன்று காலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் இடம் பெறுகிறது.. இந்தத் தேர்தல் உலகின் பார்வையை இலங்கை மீது குவியச் செய்திருக்கிறது. மேற்குலக சக்திகளும் , அவர்களின் உந்துதலுடன் இயங்கும் உள்நாட்டு தேசியக் கட்சிகளும் , தமிழ்த்  தேசியவாதிகளும் , பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் மஹிந்த கவிழ்க்கப்பட்டுப் போனார் என்று அசந்திருந்த வேளையில் மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளாராக அதுவும் பிரதமர் வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுகிறார் என்ற செய்தி ஒரு அதிர்ச்சியை அவரின் எதிரிகளுக்கு  ஏற்படுத்திய வேளையில் சில தினங்களுக்கு முன்னர் தந்திரோபாயமாக பிரதமர் பதவிக்கு மஹிந்த தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் வகையில்  ஜனாதிபதியே சுதந்திரக் கூட்டமைப்பினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவர் என்ற வகையில் மஹிந்தவுக்கு  ஆதரவான இரண்டு அமைப்பின் செயலாளர்களையும் பதவி நீக்கம் செய்ததுடன் அவர்கள் செயற்படாதவாறு மாவட்ட நீதிமன்ற ஆணையைப் பெற்று பிரதமராக மஹிந்த நியமிக்கப்படமாட்டார் என்ற உறுதியையும்  வாக்களர்களுக்கு வழங்கியுள்ளார். 

ஆனால் ஜனாதிபதி  சட்டப்படி கட்சியின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பதவி நீக்கமும் , பதவி வழங்கலும்  செய்யாமல் தனிச்சையாக முடிவு எடுத்தது செல்லுபடியாகுமா என்பது  அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் சட்டம் தொடர்பான ஒரு விடயம், அதுபற்றிய சர்ச்சைகள் தேர்தல் முடிந்த கையேடு ஆரம்பிக்கப்படும் என்று நம்பலாம் !. 

ஆனாலும் சுவாரசியமாக இந்தத் தேர்தலில் எல்லா தேர்தல் தொகுதிகளிலும் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் , அதிலும் மிக மிகக் குறிப்பாக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் யாவரும் , தங்களின் தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தாங்களே போட்டியிடுவது போல ஜமாய்க்கிறார்கள்.  அவர்களின் ஒரே கோசம் நல்லாட்சிக்கும்  இன சௌஜன்யத்துக்கும் மஹிந்த எதிரானவர் என்பதால் அவர்  தோற்கடிக்கப்படல்  வேண்டும் என்பதே.!. 

முஸ்லிம் அரசியல் வாதிகளும் சில சிங்கள ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளர்களைப் போல தங்களின் தொகுதிகளில் "ஒண்டிக்கு ஒண்டியா வாரீயா" என்று மகிந்தவை அழைக்காமல் , மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பதையே தங்களின் அரசியல் பிரதிக்கினையாக  வரிந்து  கொண்டு , அவ்வாறு செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் "வாஜிபான " (கட்டாய ) கடமை, என்றும் , மகிந்தவை தோற்கடிக்க அதிகாலை நேரத் தொழுகையை(முஸ்லிம்களின் அதிகாலை இறை வணக்கமான சுபஹுத் தொழுகையை) நிறைவேற்றிய பின்னர் தேர்தலில் மகிந்தவை தோற்கடிக்க மேலதிக தொழுகைகளைப் புரிந்து வாக்களிக்க செல்லுமாறு கோரிக்கை விடுப்பதையும் பல்வேறுபட்ட இஸ்லாமிய மத சம்பந்தமான கோட்பாடுகளை சொல்லி தங்களின் அரசியலை மதமாக்கம்  செய்வதையும் , மகிந்தவை தோற்கடிக்க  செய்வது ஒரு புனிதப்போர் என்ற வகையிலும் பிரச்சாரங்கள் எடுக்கப்படுகின்றன. இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணியில் இது பெரிய சமாச்சாரமே இல்லைதான். மதத்துக்கு அப்பால் உணர்வூட்டும் அரசியல் என்பது இஸ்லாமிய ஆட்சி வரலாற்றின் அங்கமாகவே இருந்திருக்கிறது. இஸ்லாமிய ஆட்சியாளர்களான இரண்டாவது மூன்றாவது நான்காவது கலீபாக்கள் (அரச தலைவர்கள்) கொலை செய்யப்பட்டது ஒருபுறம் இருக்க மூன்றாவது கலீபா  சூழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட மக்கள் புரட்சியினால் கொல்லப்பட்டவராயிற்றே!  . அரசியலிலும் "அறிவுக்கு வேலை கொடு" என்றால் முஸ்லிம்கள் என்ன கேட்கவா போகிறார்கள். !    

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ்  தவிசாளருமான சேகு தாவூத் பசீர் தனது வியூகங்களை கிடப்பில் போடவில்லை மாறாக மௌலானா தெரிவு செய்யப்படுவதை மானசீகமாக விரும்பாமல் அவர்  "அரசியல் தியானத்தில்" இருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் ஹாபீசும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவதை முன்னிட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டவர் , அமைச்சராக வர வேண்டும் என்று கனவு கண்டவர். ஆனால் "சாணக்கிய தலைவர் " என்று சொல்லப்படுகின்ற  ஹக்கீம் தனக்கு வேட்டு  வைத்துவிட்டார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல்  சிப்லி பாரூக்குக்கு வாக்களிக்க ஊக்குவிப்பதாக செய்திகள் சொல்கின்றன. மௌலான தமிழ் வாக்குகளை முன்னரைப்போல் பெற முடியாது, அதேவேளை பசீர்  சேகு தாவூத்,  ஈரோஸ் இயக்க ஆதரவுத் தமிழ் வாக்குகளை வழக்கமாக பெறுபவர், இம்முறை அவர் அந்த வாக்குகளை , தானில்லாத -தான் போட்டியிடாத - முஸ்லிம்  காங்கிரசுக்கு    வழங்க சொல்லமுடியாது என்பது ஒரு புறம் இருக்க , அவர் சொல்லியும் தமிழ் மக்கள் முஸ்லிம்  காங்கிரசுக்கு வழங்க  மாட்டார்கள்.  

இந்த நிலையில் ஏறாவூரின் வாக்குகளை நம்பும் மௌலானா இறுதிக் கம்பத்தை தொட முடியாது , அதோ போலவே அவருடன்  போட்டியிடும் ஏனையோரும் தோல்வியைத் தழுவ நேரிடும். .இறுதி   போட்டியானது அமீர் அலிக்கும் , ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலே உள்ளது., அதிலும் காத்தான்குடியில் அதிக வாக்குகளும் கல்குடா தேர்தல் தொகுதியிலும் ஏறாவூர் நகரத்திலும் , ஏனைய மட்டக்களப்பு  மாவட்டத்தை சேர்ந்த  புறநகர் கிராமங்களிலும் ஹிஸ்புல்லா பெறுகின்ற வாக்குகள் மூலமும் மொத்தத்தில் ஹிஸ்புல்லாவே  வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் புலப்படுகின்றன. கட்சி அடிப்படையில் அமீர் அலியும் ஐக்கிய தேசிய கட்சிக்கான மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளை பெற்று ஹிஸ்புல்லாவுடன் அல்லது ஹிஸ்புல்லாவையும் தாண்டி செல்ல எத்தனிப்பதையும் அவதானிக்க முடிகிறது . எது எப்படியோ  தனிப்பட்ட தகவல் சேகரிப்புகள் ஹிஸ்புல்லாவே வெற்றி பெற வாய்ப்புண்டு  என்பதை சுட்டிக் காட்டுகின்றன!    

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...