தமிழ் மக்களுக்கு மாற்று கொள்கைகளும் புதிய தலைமையும் இன்றைய அவசிய தேவை!

லங்கையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவானதுடன், ஆட்சி மாற்றமும் (வலிந்து திணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை ஆட்சி) ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தை பெரிதும் விரும்பியவர்கள் உள்நாட்டு பிற்போக்கு சக்திகள் மட்டுமின்றி அவர்களது சர்வதேச எஜமானர்களும் (இந்தியாவும் அதற்குள் உள்ளடக்கம்) கூட என்பதில் சந்தேகமில்லை.


இவர்களைத் தவிர உண்மையாக நாட்டை நேசிப்பவர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள் எனப்படுவோரில் ஒரு சிறு பகுதியினரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பினர் என்பதில் சந்தேகமில்லை. முன்னையவர்களை விட இவர்கள்தான் தாம் எதிர்பார்த்ததிற்கு மாறாக இந்த அரசாங்கம் செல்வதையிட்டு கவலைப்படுபவர்களாகவும், கவலைக்கு உரியவர்களாகவும் உள்ளனர். அரசியல் அனுபவம், வரலாற்றுப் பட்டறிவு, நிலைமைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற காரணங்களால் இவர்கள் விட்ட தவறை இட்டு தற்பொழுது கவலைப்பட்டு பிரயோசனமில்லை. அவர்களாகவே பட்டு படித்து உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்.
புதிய அரசாங்கம் நாட்டை தேசிய நலன்களுக்கு எதிராகவும், மக்கள் நலன்களுக்கு எதிராகவும் கொண்டு செல்கின்றது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், இந்த மாற்றத்தை செய்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு இருந்த ஜனநாயக உரிமையையும், அதை அவர்கள் எவ்விதமான பயமுறுத்தலோ அல்லது அழுத்தங்களோ இல்லாமல் பிரயோகிப்பதற்கு இருந்த சூழ்நிலையையும், அதை அவர்கள் பிரயோகித்த துணிவையும் மெச்சத்தான் வேண்டும்.
இன்று மட்டுமின்றி, நாடு சுதந்திரம் பெற்ற 1948 பெப்ருவரி 4ஆம் திகதி முதல் நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்கள் பல தடவைகள் ஆட்சி மாற்றங்களைச் செய்து வந்திருக்கின்றனர். பதவியில் இருந்த அரசாங்கங்களைப் பொறுத்தவரையிலும் கூட, ஒருமுறை ஜே.ஆர்.ஜெயவர்த்தன கருத்துக் கணிப்பு என்ற மோசடி மூலம் தனது அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஜனநாயக விரோதமாக நீடித்ததை தவிர, வேறு எந்த அரசாங்கமும் தேர்தலை ஒத்தி வைத்தது கிடையாது.

அதுமட்டுமல்லாமல், நாட்டின் பழம் பெரும் பிரதான ஆளும் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் மாத்திரமின்றி, தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஜே.வி.பி, கெல உருமய, சரத் பொன்சேகாவின் கட்சி போன்ற புதிய கட்சிகள் உருவாகும் சூழலும், அவையும் மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு பெறும் சூழலும் இருந்திருக்கிறது.
அதேபோல, ஆரம்ப காலத்தில் தேசிய ரீதியில் ஐ.தே.கவுடனும், பிராந்திய ரீதியில் தமிழரசுக் கட்சியுடனும் கைகோர்த்திருந்த முஸ்லிம் மக்கள், பின்னர் தமக்கென தனித்துவமான கட்சியாக முஸ்லிம் காங்கிரசையும், பின்னர் வேறு பல கட்சிகளையும் உருவாக்கும் சூழலும் இருந்திருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் மிக நீண்ட காலம் ‘மலையகத்தின் முடிசூடா மன்னன்’ என வர்ணிக்கப்பட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்திருந்த மலையகத் தமிழ் மக்கள், பின்னர் மலையக மக்கள் முன்னணி உட்பட வேறு பல அரசியல் கட்சிகளை உருவாக்கி, அவையும் அவர்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் சூழலும் இருந்திருக்கிறது.

சிங்கள – முஸ்லிம் – மலையக மக்கள் மத்தியில் நிலவுகின்ற இந்த அரசியல் சூழ்நிலைகள் சந்தேகமின்றி அவர்கள் மத்தியில் நிலவுகின்ற ஜனநாயகம், பன்மைத்துவம் என்பனவற்றின் வெளிப்பாடுகளாகும்.
இதேவேளையில் இலங்கையில் சிங்கள மக்களுக்கு நிகரான பாரம்பரியங்கள் உள்ளவர்கள் என்றும், இன்னும் சொல்லப் போனால் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடிகள்’ என்று சொல்லிக் கொண்டு (மக்கள் அல்ல தலைமைதான் அப்படிச் சொல்வதுண்டு) வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் மத்திலும் இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து அரசியல் தலைமைகள் இருந்து வருகின்றன. ஆனால் அந்த தலைமையில் ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, தலைமையின் பாரம்பரியம் மாறாத ஒன்றாகவே என்றும் இருந்து வருகிறது.

தலைமைப் பாரம்பரியம் எனும் போது அதன் கொள்கைகளே இங்கு குறிப்பிடப்படுகின்றன. அந்தக் கொள்கைகள் தொடர்ந்து பின்வருமாறு இருக்கின்றன:
சிங்கள எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு தமிழ் இனவாதம், நாட்டு பிரிவினைவாதம், பிற்போக்கு ஐ.தே.கவுடன் இரகசிய கூட்டு, ஏகாதிபத்திய – பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு ஆதரவு, இவைதான் அவை.

அவர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை சாத்வீகரீதியாகச் செய்தார்கள். பின்னர் சாத்வீகம் பலனளிக்காது என்று சொல்லி ஆயுதம் தாங்கிய வன்முறை பாதையை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இரண்டிலும் தோல்விதான் ஏற்பட்டதே தவிர, ஒரு அங்குலம் தானும் முன்னோக்கி அவர்களது வண்டி நகரவில்லை. இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் வந்துள்ள அவர்கள், தமக்கு விருப்பமான ஐ.தே.க பதவியில் இருப்பதால் அதனுடன் கூடிக்குலாவிக் கொண்டு, ‘சர்வதேசம்’ எனும் ஏகாதிபத்திய சக்திகள் தமது பிரச்சினையை வந்து தீர்த்து வைக்க வேண்டுமென்று தவம் கிடக்கிறார்கள்.
which way
அவர்களுடைய கொள்கைகள் தமிழ் மக்களின் விமோசனத்துக்கு வழி வகுக்கமாட்டா என்பது ஒருபுறமிருக்க, இங்கு அகிம்சையா அல்லது ஆயுதப் போராட்டமா என்பதோ, அல்லது இன்னொரு வார்த்தையில் சொன்னால் மெதுவாக போவதா அல்லது வேகமாக போவதா என்பது அல்ல வெற்றி தோல்வியை தீர்மானக்கும் அடிப்படை பிரச்சினை. முதலில் பார்க்க வேண்டியது, சரியான பாதையில் போகின்றோமா என்பதையே. உதாரணமாக காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் முதலில் சரியான இலக்கை நோக்கி நிற்க வேண்டும். அதை விடுத்து காங்கேசன்துறை நோக்கி நின்று கொண்டு எவ்வளவுதான் முயன்றாலும் கொழும்பை சென்றடைய முடியாது. (இந்த கருத்து தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின் உபயம்)
எனவே, இங்கு பிரச்சினை என்னவென்றல், சரியான இலக்கை நோக்கி நிற்கிறோமா என்பதே. தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியான தோல்விக்கு அடிப்படை காரணம் அவர்கள் எப்பொழுதும் பிழையான திசை நோக்கி நிற்பதே. அதாவது அவர்களின் கொள்கைகள் தொடர்ந்து தவறாகவே இருந்து வந்துள்ளன.

இலங்கையின் சனத்தொகையில் 74 வீதம் சிங்கள மக்கள். அவர்களது ஆதரவு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் முதலில் உணர வேண்டும். அதற்கு இனவாதம் ஒருபோதும் உதவாது. இரண்டாவது, இலங்கையில் தனிநாட்டு பிரிவினைவாதம் என்பது ஒருபோதும் சாத்தியப்படாது. எனவே அது வெற்றி பெறாது. அதையும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பேச்சுவார்த்தை மூலமும், பெரும்பான்மை மக்களின் ஆதரவை வென்றெடுப்பதின் மூலமுமே இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகாண முடியும் என்பதை தமிழ் தலைமை உணர வேண்டும். இதுதான் இங்குள்ள யதார்த்த நிலையும், நடைமுறை சாத்தியமான வழிமுறையும்.
இந்த அணுகுமுறையை இன்றுள்ள 65 வருட பாரம்பரியமுள்ள தமிழ் தலைமை செய்யும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் 1947 பொதுத் தேர்தலில் இருந்து தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி இன்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என பெயர்கள் மாறினாலும், அவைகளின் இனவாத, பிற்போக்கு கொள்கைகளில் மாற்றம் வரவில்லை. இடையில் 20 வருடங்கள் புலிகள் கோலோச்சினாலும் அவர்களின் கொள்கைகளும் இந்த தலைமைகளின் கொள்கைகளாத்தான் இருந்தது. வழிமுறையில் மட்டும்தான் வித்தியாசம் இருந்தது. அதுவும் தோல்வியைத்தான் தழுவியது.

இருந்தும் ‘சுற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்’ என்பது போல தமிழ் மக்கள் வேறு எந்த மாற்றுத் தலைமையையும் ஆதரிக்காது இந்த தவறான தலைமைகளையே ஆதரித்து வந்துள்ளனர். இங்குதான் இலங்கையின் மற்றைய இனங்களான சிங்கள, முஸ்லிம், மலையக மக்களிலிருந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வேறுபடுகிறார்கள். தமிழ் மக்களின் இந்த மாறா நிலையியல்வாதம் அவர்களது இரத்தத்துடனும் மரபுடனும் ஊறியதா அல்லது பழக்க தோசமா என்பது புரியாத புதிராக இருக்கிறது. உலகில் இவர்கள் மட்டும் ஏன் மற்றைய இனங்களைவிட எல்லா விடயங்களிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பது உயிரியல் விஞ்ஞானிகளுக்கும், மானிடவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் உரியது. இருந்தாலும் இந்த வழிமுறை அவர்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் மாற்று கொள்கைகளையும், மாற்று தலைமைகளையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியம்.

இலங்கையில் ஜனவரி 8ஆம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தியதில் தமிழ் மக்களுக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது என தமிழ் மக்கள் மார் தட்டுவதை காணக்கூடியதாக உள்ளது. சரி, அதை ஒரு கதைக்கு ஒத்துக் கொள்ளுவோம். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய புகழுக்குரிய நீங்கள், உங்கள் விடயத்தில் மட்டும் எந்தவித பயனையும் பெறாத போதும் ஒரே தலைமையையே ஏன் 65 வருடங்களாக தொடர்ந்து வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் மாற்றம் ஆகாதா? இப்பொழுது உள்ள தமிழ் அரசியல் தலைமையால் பயன் ஏதும் இல்லை என்பது தெளிவாகிவிட்டதால், ஒருமுறை தன்னும் இன்றுள்ள கையாலாகாத தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைக்கு பதிலாக வேறொரு மாற்ற தமிழ் தலைமையையும், மாற்று கொள்கைகளையும் ஆதரித்தால் என்ன?

எனவே, பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழ் மக்களே, இம்முறையாவது மாற்று அணியை வெற்றிபெற வைத்து வேறொரு வழிமுறையையும் பரீட்சித்துப் பாருங்கள். அதைவிடுத்து சற்றிச் சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள் நின்று ஆகப்போவது எதுவுமில்லை. எமது இந்த வேண்டுகோளை சற்று பாரதூரமாக சிந்தியுங்கள், ஆக்கபூர்வமாக செயலாற்றுங்கள்.

Source: VAANAVIL 54_2015



No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...